பசுமை கட்டடக்கலையியல் – அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்

*முகவுரை*

இயற்கை – மனிதனுக்கு வழங்கியிருக்கும் செல்வங்கள் மகத்தானவை. தனக்கு அள்ளிக் கொடுத்த இயற்கைக்கு மனிதன் நன்றிக்கடனாக திரும்பச் செலுத்துவது அல்லது செலுத்தியது என்ன? இயற்கையோடு இயைந்து வாழ்ந்து தான் வாழும் பூமியை வளமாக வைத்திருக்க வேண்டிய மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கைக்கு எதிரான வன்முறைகளில் திரும்பி விட்டான் – நாகரிகம் என்ற பெயரில்.

மனிதன் நாகரிக வளர்ச்சி (civilisation) தான் இயற்கைக்கு எதிரான முதல் கல். இந்த நாகரிக வளர்ச்சி இயல்பானதாக, இயற்கைக்கு முரண்பட்டதாக அமையாமல் இருந்திருந்தால் மனிதனின் முயற்சிகளும் அறிவுத்திறனும் அவனது செயல்பாட்டிற்குத் துணை நின்றிருக்கக் கூடும். ஆனால், தனது சுயநலப் பாய்ச்சலில் மனிதன் முதலில் செய்தது அடர் வனங்களை அழித்து புதிய நகரங்களை உருவாக்கியதுதான்.

முன்னொரு காலத்தில் பசுமைப்புரட்சி செய்து விளைச்சலைப் பெருக்கினார்கள். வேளாண்மையில் புரட்சியாகப் பார்க்கப்பட்ட இந்த செயல் காரணமாக விளைச்சல் பெருகியது ஆனால் மண்ணின் வளம் வேதிப்பொருட்கள் கலந்த உரங்களால் தொடர்ந்து தனது வீரியத்தை இழக்கத் துவங்கியதென்கிறார்கள்.

அடர் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கியதால் இயற்கையின் சுழற்சிமுறையில் ஏற்பட்ட அதீத மாற்றங்கள் ஓசோன் அடுக்குகளில் ஓட்டைகளை உருவாக்கின. இதன் காரணமாகப் பூமியின் வெப்பநிலை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் சொன்னாலும் அதற்குக் காரணமானவர்களின் அலட்சியம் தொடர்ந்தே வருகிறது.

ஆனால், உலக வெம்மையின் காரணமாக தட்ப வெப்ப நிலைகள் உலகம் முழுவதும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி வருவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான இயற்கைச் சீற்றங்களும் இன்றைக்கு மனிதனுக்குள் சிறு அசைவையேனும் ஏற்படுத்தியிருக்கிறதென்பதை முற்றாக மறுப்பதற்கில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு கரியமில வாயுவின் வெளியேற்றத்தைத் தவிர்க்க விஞ்ஞான ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதையெடுத்தாலும் அது பசுமை(Green) யோடு தொடர்புடையதாக, மறுசுழற்சிக்கு(re-cycling) உட்படுத்தப்பட்டதாக இருகக் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மனிதனின் அன்றாட உபயோகங்களில் இருக்கும் எல்லா பொருட்களிலும் இந்தப் பசுமைத் திட்டம் இடம் பெற வேண்டுமென்ற முனைப்பு இப்போதுதான் சிறுபொறியாகத் துவங்கியிருக்கிறது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதற்கு முன்பாகவேனும் விழித்துக்கொண்டாக வேண்டிய கட்டாய நிலைக்கு மனித குலம் தள்ளப்பட்டிருக்கிறதென்பதே உண்மை.

எனவே, எரிபொருள் சேமிப்பு, நீர் விரயமின்மை, காடுகளைப் பாதுகாத்தல், தொழிற்சாலைக் கழிவுகளை குறைத்தல் என்று பல்வேறு துறைகளிலும் இவை பய்ன்பாட்டிற்கு வரத் துவங்கியிருக்கின்றன. எரி எண்ணெயில் (petrol) இயங்காமல் அதிக புகைவெளியிடாத மின்கலங்களைக் (battery) கொண்டு இயங்கும் சீருந்துகளைத் தயாரிப்பதில் சீருந்து தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதை இதன் ஒரு பக்கமாக
நம்மால் அணுக முடியும்.

அந்த வகையில் உலகின் மிகப்புராதனமான கலையென்ற வகையில் பசுமைக்கு வழிவகை செய்யும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது இன்றைய கட்ட்டவியலாளர்களின் முன்னாலிருக்கும் அறைகூவல்.மாறி வரும் புதிய பசுமை உலகிற்கேற்ப கட்டடக் கலையியலிலும் தொழில்நுட்பத்தைப் புகுத்தி இயற்கையோடிணைந்த அதிக எரிபொருள் செலவு வைக்காத, வருங்காலத்திற்கான சேமிப்புகளை உருவாக்கக் கூடிய கட்டடங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகிவிட்டது.

*பசுமைக் கட்டடங்களும் புதிய தொழில் நுட்பங்களும் (Green Buildings and new
technologies) *

’க்ரீன் பில்டிங்’ எனப்படும் பசுமை கட்டடங்கள் வலியுறுத்துவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, எரிபொருள், நீர் உள்ளிட்ட இயற்கை தரும் சக்திகளைச் சிக்கனமாக உபயோகிப்பதெப்படி என்பது குறித்த விழிப்புணர்வையே. கூடவே எரிசக்தி விரயத்தைத் தவிர்த்து மிச்சப்படுத்துவது எப்படி என்பதனையும் சமீபத்தில் துபாயில் மிகச் சிறந்த சக்தி சேமிப்பிற்கான உச்சபட்ச அளவான பிளாட்டினம் சான்றிதழை ஜெபல் அலியில் இயங்கும் கட்டடம் பெற்றிருக்கிறது. எஸாப் என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பாளர் (Architect) என்ற முறையில் எனக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது.

விசயம் இது குறித்தல்ல. இம்மாதிரியான சான்றிதழ் பெறுவதற்குக் கடுமையான விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் உருவாக்கப்படும் கழிவுகளை அகற்றுவதில் தொடங்கி, மழை நீர் சேகரிப்பு, சீருந்துகளுக்குப் பதிலாகப் பேருந்துகள் நிறுத்த இடமளிப்பது கட்டடம் உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பது கட்டடம் குளிரூட்டப் பயன்படுத்தும் எரிசக்தி, அந்த எரிசக்தி மூலம் சுற்றுச்சூழலுக்கு உண்டாகும் கேடுகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

வழக்கமான கட்டடங்களில் நிறுவப்படும் குளிர்மிகள் ( Chillers) அறைகளைக் குளிரூட்டும். குறிப்பிட்டவெப்பநிலைக்கு காற்று பதப்பட்டதும் குளிர்மி தன் பணியை நிறுத்தி விடும். சிறிது நேரத்தில் அறையில் மீண்டும் வெப்பநிலை கூடும்போது மீண்டும் குளிரூட்டும் பணி துவங்கும். இதனால் எரிசக்தி (மின்சாரம்) உபயோகம் அதிகமாகும் ஆனால் அப்படியில்லாமல் மொத்த கட்டடத்தையுமே குளிர்வித்தால்?? இந்த அடிப்படையில்தான் ‘தெர்மோடெக்’ (Thermodeck) என்ற தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் அறைக்குள் அல்லது கட்டடத்துக்குள் வழங்கப்படும் பதப்படுத்த காற்று (conditioned air) அதே வெப்பநிலையில் தொடரும்படியாக கட்டடத்தின் வெப்பநிலை இழப்பு (heat loss) தவிர்க்கப்படுகிறது இதற்காகக் கட்டடத்தின் வெளிப்புறச் சுவர்கள் வெப்பத் தடுப்பான்கள் ( Insulated
walls) கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. வெப்ப இழப்பு பெருமளவு தடுக்கப்படுவதால் அறையின் வெப்பநிலை சமச்சீராகப் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு சமச்சீராகப் பாதுகாக்கப்படுவதற்காக கட்டடத்தின் கூரையை (roof) வழக்கமான வலிமையூட்டப்பட்ட கற்காரை (reinforced concrete) தளமாக இல்லாமல் உள்ளீடற்ற தளம் (hollow core slab) மூலமாக அமைக்க வேண்டும் இந்த உள்ளீடற்ற தளங்கள் எளிதில் நிறுவப்படக் கூடியவை. முன்னரே தயாரிக்கப்பட்டு( pre-cast) பாரம்தூக்கிகள் ( cranes) மூலமாக எடுத்து விரைந்து அடுக்கப்படக் கூடியவை.

இந்த உள்ளீடற்ற தளத்தில் உள்ளீடற்ற பகுதிகள் (hollow spaces) வழியாக குளிர்காற்று செலுத்தப்படுகிறது இந்தக் குளிர்காற்றுதான் தளத்தைக் குளிரூட்டுகிறது இவ்வாறு குளிரூட்டப்படும் தளம் நன்றாகக் குளிர்ந்த பின் அந்தக் குளிர்மையை அறைக்குள் கடத்துகிறது. இதன் மூலம் அறையில் குளிர்மை பரவுகிறது. இவ்வாறு பரப்பப்படும் குளிர் வெப்ப இழப்பைச் சந்திக்க விடாமல், முன்னரே சொன்னது போன்ற வெப்பத்தடுப்பான்களால் செய்யப்பட்ட சுவர்கள் இருப்பதால் அறையில் குளிர்மை நிலைநிறுத்தப்படுகிறது எனவே குளிர்மி முழுநேரமும் இயங்க அவசியமில்லாமல் போகிறது. இதன் காரணமாக இந்தக் குளிர்மிகளை இயக்கத் தேவைப்படும் மின்சாரம் வழமையான குளிர்மிகளுக்குத் தேவையானதை விட 60% குறைவாகவே அவசியமாகிறது.

இந்த அடிப்படையில் உள்ளீடற்ற தளத்தைக் குளிர்விக்கும் பணியில் சாதாரண குளிர்மிகளுக்குப் பதிலாக புதிய மாற்று என்ற வகையில் சூரிய ஒளி (solar power) மூலம் நீரைக் கொதிக்க வைத்து அதனை வாயு கலந்த வேதியியல் கலவை மூலமாகக் குளிரூட்டும் புதிய உத்தி அறிமுகம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் கட்டடத்தை முழுமையாகக் குளிர்விக்க மட்டும் நான்கு நாட்கள் முழுமையாக இயங்கிய குளிர்மி அதன் பின்னர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே இயங்குமளவுக்கு எரிபொருள் சிக்கனம் அதாவது கிட்டத்தட்ட 75% மின்சாரத் தேவை குறைந்து விடுகிறது.

இது ஒரு புறமிருக்க மின்சாரத் தேவைகளைக் குறைக்க மின்சாரத்தில் இயங்காமல் இயற்கையான காற்றிலேயே இயங்கும் வாயுவெளியேற்று விசிறி (exhaust fan)கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. இத்தகைய விசிறிகள் காற்றின் ஈரத்தன்மையை(humidity) வெளியேற்ற கிடங்குகளில் (warehouse) மிகவும் அவசியம்.

இதைப் போன்றே குறைந்த மின்சாரத்தில் ஒளிவிடும் உயர்சக்தி கொண்ட விளக்குகளும் (low energy bulbs) புழக்கத்திற்கு வரத்துவங்கி விட்டன. கழிப்பறைகளில் வீணாகும் நீரை மறுசுழற்சி (re-cycling) முறையில் சுத்தப்படுத்தி அவற்றை தோட்டங்களைப் பராமரிக்கச் செய்யும் பழக்கமும் மெல்லத் தலைப்படுகிறது இதன் மூலம் தோட்டப் பராமரிப்பிற்காக மட்டும் விரயமாக்கப்படும் நீரின் தேவை முற்றாக இல்லாமல் செய்ய இயலும்.

இவ்வாறே தண்ணீர் அனாவசியமாக வீணாவதைக் குறைக்க புதிய முறைகளும் புதிய தொழில்நுட்பங்களும் மெல்லத் தலைதூக்கத் துவங்குகின்றன. கழிப்பறைகளில் குறிப்பாக ஆண்களின் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க வசதியான பீங்கான் கோப்பைகளைப் பார்த்திருக்கக் கூடும் (Urinals) ஒவ்வொருமுறை ஒருவர் சிறுநீர் கழித்ததும் அதை உடனே சுத்தம் செய்ய குறிப்பிட்ட அளவு நீர் செலவிடப்படுகிறது இது ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் லிட்டர் என்று கணக்கிலெடுக்கப்படுகிறது. ஒரு அலுவலகத்தில் இது போன்று மூன்று இருந்தால் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லிட்டர் நீர் சிறுநீரோடு கலந்து வீணாகப் போகிறது.இது ஒரு அலுவலகத்தில் மட்டும் சேகரிக்கப்படும் நீரின் அளவென்றால் ஒரு நகரம் முழுக்க சேமிக்கப்படும் நீரின் அளவை சற்று யோசித்துப் பாருங்கள். இப்படி பல கோடி லிட்டர் நீர்
விரயமாக்கப்படுவதைத் தடுக்க இப்போது நீர் இல்லாமலேயே கோப்பைகளைக் கழுவி சுத்தமாக்கும் புதிய கோப்பைகள் புழக்கத்திற்கு வரத் துவங்கியிருக்கின்றன.

ஒரு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் இந்தக் கோப்பைகளில் தீங்கு தராத இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்காத எளிய வேதிப்பொருள்கொண்ட அடைப்பான் ஒன்று பொருத்தப்பட்டாலே போதும் அதுவே கழிவுநீர்க்குழாயின் அடைப்புகளை அகற்றும் பொருளாகவும் செயல்படுவதால் பணியாளர்களுக்குத் தலைவலியும் மிச்சம். ஆனால் முக்கியமான கேள்வி ஒன்று எழும். சிறுநீர் கழித்து விட்டு அந்த இடம் கழுவப்படாமல் இருக்குமேயானால் உள்ளே நுழைபவர்களை அது மூர்ச்சையடையச் செய்து விடாதா என்ற கேள்விதானே அது?

அப்படி நிகழ வாய்ப்பில்லை ஏனெனில் சிறுநீரில் இருந்து வரும் துர்நாற்றமென்பது சிறுநீர் காற்றோடும் நீரோடும் கலப்பதால் அம்மோனியா ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் உருவாக்கம் பெறும்போது ஏற்படுவது. இங்கே சிறுநீர் நீரோடு கலக்க வாய்ப்பில்லாததால் அந்த சிக்கல் இல்லை அது போன்றே பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களின் சுகமான இருப்பிடமாக இருப்பது சிறுநீர் மற்றும் நீர் கலந்த பீங்கான் கோப்பைகள். நீரில்லாததால் பாக்டீரியாக்களும் இல்லை.

மட்டுமில்லாமல் சிறுநீர் கழித்ததும் நீர் வைத்து அலச வேண்டுமென்றால் அதற்கும் மின்சாரச் செலவு ஏற்படும் அந்தச் செலவும் இங்கே தடுக்கப்படுகிறதென்பதால் அதுவும் எரிசக்தி சேமிப்பாகவே கணக்கிலெடுக்கப்படுகிறது.

ஆக, எரிசக்தியையும் நீரையும் சேமிக்கும் பணியில் புதிய நுட்பங்களும் புதிய வசதிகளும் உட்படுத்தப்பட்டு கட்டடங்கள் புதிய பரிமாணங்களுக்குள்ளாகும் நிலை வந்திருக்கிறது (என்றாலும் மாண்புமிகு ஆற்காடு வீராசாமியைப்போல மிகச் சிறந்த எரிபொருள் சேமிப்பாளரை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காதென்பது வேறு விசயம்)

*நம் நாட்டில் பசுமைக் கட்டடங்கள்*

மேலை நாடுகளில் பசுமைக் கட்டடங்கள் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் வேளையில் இந்தப் பசுமைக் கட்டடங்களைக் குறித்த வரம்புகள் நமது தாயகத்தில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அடுத்த முப்பதாண்டுகளில் 15 கோடி பேர் ( நமது மக்கள்தொகையில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர்) நகரங்களை நோக்கி நகர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாயின், ஏற்கெனவே பிதுங்கி வழியும் நகரங்கள்
அங்கு வசிப்பவர்களுக்கும் புதிதாக வரவிருப்பவர்களுக்குமான அடிப்ப்டை கட்டுமான வசதிகளை (infra structures) மேம்படுத்த வேண்டியிருக்கும் – மனித வாழ்க்கைச் சூழலை (human ecology) பாதிக்காத வண்ணம்.

இவ்வாறு நிகழும்போது அனைவருக்கும் நீர், மின்சாரம், கழிவுகளை அகற்ற கட்டமைப்பு, சாலைகள், பாலங்கள் என்று கட்டவியலாளர்களின் மீது இந்த சமூகச் சுமை ஏற்றப்படுவது தவிர்க்க இயலாதது
இந்த இடத்தில்தான் பசுமை கட்டடம் என்ற கரு(concept) சற்றே மாறுபடுகிறது. மேலை நாடுகளில் பின்பற்றப்படும் பசுமை கட்டடங்களுக்கான அதே அடிப்படையைத்தான் இந்தியாவிலும் மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயற்கையானது.

காரணம் இன்று மேலை நாடுகள் நடைமுறைப்படுத்தும் பசுமை கட்டடங்களுக்கான விதிமுறைகள் ஏற்கெனவே 90 விழுக்காடு நகரமயமாக்கப்பட்ட சூழல்களின் அடிப்ப்டையில் உருவானவை. பெரும்பாலான மேலைநாடுகளில் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிய குடியேற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டன.எனவே அந்நாடுகளில் நிறைந்து விட்ட மனிதர்களுக்காக அடுக்ககங்களும்(apartments) , விரிவான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் பாலங்களும் சீருந்து நிறுத்துமிடங்களுமாகப் பெரும்பாலான நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற மேலை நாடுகளில் தட்ப வெப்பமும் இந்தியாவோடு ஒப்பிடும்போது மிக மிக வேறுபட்டவையாகவே இருக்கின்றன. மேலை நாடுகளில் கடும் குளிரும், கடும் வெப்பமும் இயல்பானவை. இவற்றை சமாளிக்கும் விதமாகவே காற்றுப்பதனி(air conditioner)களும், அறை வெம்மையூட்டி (room heaters) களும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், பெரும்பான்மையான இந்தியப் பகுதிகளில் இத்தகைய கடுமையான வெப்பநிலைகள் இல்லையென்றே சொல்லலாம். கோடை காலத்தில் மின் விசிறியும், குளிர் காலத்தில் கம்பளியுமே கூடப் போதுமானதென்ற நிலையே இங்கிருக்கிறது. எனவே, மேலை நாடுகளில் பின்பற்றப்படும் அதே விதிகள்தான் இங்கும்
தேவை என்ற நிலையிலிருந்து நாம் மீண்டாக வேண்டும்.

பசுமை கட்டடங்களுக்கான விதிமுறைகளை அப்படியே மேலைநாடுகளின் விதிப்படி ஒற்றியெடுக்காமல் இந்தியாவின் தனித்தன்மைக்கேற்றவாறு அதனுடைய வரம்புகளை அமைக்க வேண்டும். அதற்கு முழுமையான நில உபயோகம் குறித்த திட்டம் (land planning) மற்றும் விழிப்புணர்வு வேண்டும். நகரமயமாக்குதலைத் தவிர்த்து ஏராளமான நிலப்பரப்பு இருக்கும் கிராமங்களின் அருகிலேயே விரிவான சிறுநகரங்களை (satellite cities) உருவாக்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நில உபயோகத்தைச் சரிவர நிர்வாகம் செய்யாமலேயே பல குழப்பங்களும் நிகழ்கின்றன. உதாரணமாக புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்போதே அதனைச் சுற்றிலும் அமைக்கப்பட வேண்டிய கட்டுமானங்களுக்கான நிலமும் சேர்த்தே உருவாக்கப்படுவதில்லை. இதன் காரணமாக தொழிற்பேட்டைகளைச் சுற்றியுள்ள தனியார் நிலங்களின் விலை மதிப்பு ஊகத்தின் அடிப்ப்டையில் ஊதிப் பெரிதாக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்ப்பதற்காகவே நில உபயோகம் குறித்த விழிப்புணர்வும், நகரமயமாக்குதல் குறித்த திறந்த அணுகுமுறையும் உருவாக்கப்பட வேண்டும்.

சிமெண்டு போன்ற வேதிக்கலவைகளின் உபயோகத்தைக் குறைப்பதே கூட பசுமை கட்டடங்களுக்கு வழிவகுக்கும். குறுக்குவெட்டாகக் காற்றோட்டம் (Cross ventilation) இருக்கும்படியான கட்டடங்களை வடிவமைப்பதன் மூலம் இயற்கையான காற்றோட்டம் வருவதற்கான வழிமுறைகளைச் செய்ய முடியும். அதிக உயரமுள்ள கட்டடங்களைக் கட்டுவதன் மூலம் மேலும் மேலும் கற்காரை காடுகள் (concrete
jungles) உருவாகுமே தவிர பசுமைக் கட்டடங்கள் உருவாக முடியாது.

பசுமையான கட்டடங்கள் அமைவதற்கு நாம் மீண்டும் சற்று பின்னோக்கி நகர்ந்துதானாக வேண்டும். ஆரம்ப காலத்தில் கட்டடங்கள் செய்ய உபயோகிக்கப்பட்ட கருங்கல், சுண்ணாம்பு, ஓடுகள், மூங்கில்கள் ஆகியவைகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.அதாவது வேதிக்கலவைகளற்ற இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டே கட்டடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இத்தகைய கட்டடங்கள் அதிக உயரம் கொண்டவையாக இல்லாமல் பளுதாங்கும் சுவர்களால் (load bearing walls) உருவாக்கப்படுவதாகவே இருக்கும் என்பதால் இத்தகைய கட்டடங்கள் படுக்கை நிலை
விரிவாக்கமாகவே (horizontal expansion) நிகழும். ஆனால், நகர மயமாக்கலில் நிலத்தின் உபயோகம் பெரும்பாலும் வணிகரீதியாக மட்டுமே தீர்மானிக்கப்படுவதால் செங்குத்தான விரிவாக்கம் (vertical expansion) நிகழவே வாய்ப்புகள் அதிகம். அதிக உயரமான கட்டடங்கள் என்பது பசுமை கட்ட்டங்கள் என்ற கருவிற்கே உலை வைப்பவையும் கூட என்று சொல்லலாம். ஆனால் நகரமயமாக்கலில் செங்குத்தான விரிவாக்கங்களான அடுக்கங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்பதால் உருவாக்கப்படும் கட்டடங்களிலாவது அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது கட்டடவியலாளர்களின் அடிப்ப்டைக் கடமையாகிறது.

நீர் விரயத்தைத் தவிர்க்க மெதுவாக ஒழுகும் குழாய்களை (low flow pipes) கழிப்பறைகளில் நிறுவுவதன் மூலமும் குறுக்குவெட்டாகக் காற்று உலாவருவது போன்ற யன்னலகளை அமைக்கும் வடிவமைப்பின் மூலமும், ஒவ்வொரு அடுக்ககத்திலும் மழைநீர் சேகரிப்பிற்கான கிணறுகளை அமைப்பதின் மூலமும், வேதிக்கலவைகள் தவிர்த்த சாந்து(plastering) மூலம் சுவர்களை அலங்கரிப்பதன் மூலமாகவும் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்த வேண்டும்.

*முடிவுரை*

அளவுக்கதிகமாக மின்சாரம் உபயோகிப்பது, நீரை விரயம் செய்வது, கழிவுநீரை தெருக்களில் தேங்க வைப்பது, மழை நீரை சேகரிக்காமல் இருப்பது காடுகளைக் கணக்கில்லாமல் அழிப்பது போன்ற எல்லா செயல்களுமே பசுமைச் சூழலுக்கு எதிரானவையே.

இன்றைக்கும் எல்லா மனிதருக்குள்ளும் இயறகையோடியைந்து வாழும் ஏக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால் அதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்த சிந்தனையும் அதனை நோக்கிய முனைப்பான செயல்பாடுகளும்தான் இன்னமும் உருவாகவில்லை. இந்நிலை மாறி பசுமையான பூமி உருவாகும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை?

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், பசுமை கட்டடக்கலையியல். Bookmark the permalink.

One Response to பசுமை கட்டடக்கலையியல் – அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    பசுமைக்கட்டட விழிப்புணர்வின் முன்னோடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s