காற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்! – கல்யாண்குமார்

முத்தமிழோடு நான்காவதாகச் சேர்ந்திருக்கிறது, நமது கணினித் தமிழ். எனது தந்தையார் அரசு அதிகாரியாக இருந்தவர். எனது பள்ளியின் விடுமுறை நாட்களில் அவரது அலுவலகத்திற்குப் போவது வழக்கம். அங்கே ஒரு மூலையில் தமிழ் டைப்ரைட்டரில் வேகமாக அடித்துக் கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதுக்காரரைப் பார்கிறபோது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். 247 எழுத்துக்களையும் இந்த சின்ன டைப்ரைட்டரில் எப்படி புகுத்தினார்கள்? எவ்வளவு நாட்கள் அதற்குப் பிடித்திருக்கும்? இதை எத்தனை நாள் இவர் கற்றுக் கொண்டிருப்பார் என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழும். பின்னர் கணினி வந்தபோதும் அதில் தமிழ் சாஃப்ட்வேர்களை நிறுவி, தமிழுக்குப் பெருமை சேர்ந்தனர் கணினி வல்லுனர்கள். ஆங்கில எழுத்துக்களை அடித்தால் திரையில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியபோது தமிழின் இன்னொரு வளர்ச்சி நம் கண்முன்னே விரிந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கான முகம்தெரியாத தமிழ்க் கலைஞர்களுக்கு நாம் மானசீகமாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்!

”கம்யூட்டரில் தமிழா?” என்று ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தவர்களே அதிர்ந்துதான் போனார்கள். ஒருமுறை கதை விவாதத்திற்காக தமிழ்ப்பட இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, கம்யூட்டர் மீது எல்லோருக்கும் இருக்கும் பிரமிப்பு அவரையும் விட்டு அகலாமல் இருந்ததை உணர முடிந்தது. அவரை நான் சந்தித்தபோது திரைக்கதை வசனம் உட்பட முழுப்படத்தின் எழுத்து வேலைகளையும் இதில் செய்தால் வேலை சுலபமாக முடியும் என்பதை எடுத்துச் சொன்ன போது ஆரம்பத்தில் அவர் அதை நம்பவில்லை. பின்னர் நானே அவருக்கு தமிழ் எழுத்துக்களை அவரது கம்ப்யூட்டரில் பதிவு செய்து ஒருசில வேலைகளை கணினித் தமிழில் அடித்துக் கொடுத்தபோது வியந்து போனார். இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எனக்கு இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே வருத்தப்பட்டுக் கொண்டார். கம்ப்யூட்டர் என்பது நாம் பதிவு செய்யும் விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் சாதாரண டைப்ரைட்டர்தான் என்பதை அவருக்கு விளக்கி சொன்னேன். இதுவரை ஆங்கிலத்தை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருக்கும் இது, இனி தமிழையும் சேமித்து வைக்கும் என்று எடுத்துச் சொன்னேன்.

இப்போதெல்லாம் அவர் திரைக்கதை வசனம் என்றில்லை, தன் உலக நாயக ஹீரோ வெளிநாட்டில் இருந்தால் அவரோடு கணினித் தமிழில்தான் உரையாடுகிறார். அவரது உதவியாளர்கள் அனைவரையும் கம்யூட்டர் அறிவை வளர்த்துக் கொள்ளச் சொன்னதோடு அனைத்து திட்டமிடல்களையும் தமிழுக்கு மாற்றி அமைத்திருக்கிறார். அவரது ’தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் சப் டைட்டிலில் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும் வசனங்களுக்கு தமிழில் வார்த்தைகள் அமைக்கும் பணியை அவரது அலுவலக கணினியிலேயே வெகுசுலபமாக சீக்கிரமாகவே அமைத்துக் கொண்டார். (முன்பெல்லாம் இதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும்)

தமிழில் கணினித் தமிழை அதிகமாக பயன்படுத்தியவர் எழுத்தாளர் அமரர் சுஜாதாதான் எனலாம். அவரால் இத்தனை படைப்புகளை வெற்றிகரமாக அமைத்திட இந்த கணினித் தமிழும் ஒரு காரணம் என்று நான் அடித்துச் சொல்வேன். ஒரு பேடையும் பேப்பரையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலங்கள் இத்தனை அரிய விஷயங்களை அவரால் கொடுத்திருக்கவே முடியாது.

திரு.கமல்ஹாசன் கூட அவரது கணினியில் தமிழ்வழிச் செயல்களில்தான் தன் படத்திற்காக ஸ்கிரிப்டை அமைக்கிறார். அதற்கென ஒரு உதவியாளரை நியமித்திருக்கிறார். சில நேரங்களில் அவரேகூட அதிவேகமாக கணினித் தமிழில் தன் கவிதைகளையும் காட்சிகளுக்கான வடிவமைப்பையும் வசனத்தையும் தமிழில் உள்ளிடுகிறார். அவரோடு தசாவதாரத்தின் திரைக்கதை பணிகளில் ஈடுபட்டது ஒரு சுவராஸ்யமான அனுபவம். ஹாலிவுட்டில் உபயோகப்படுத்தும் மூவி மேஜிக் என்கிற ஸ்கிரிப்ட் ரைட்டரோடு தமிழை அவர் இணைசேர்த்திருக்கும் விதமே அலாதியானது. தசாவதாரம் திரைக்கதை வசனம் புத்தக வடிவில் வெளிவரும்போது நீங்களும் அதன் தனித்துவத்தை நேரடியான உணரலாம். இயக்குனர் ஷங்கருக்கும் எழுத்தாளர் சுஜாதாவிற்கும் இடையே நேரடியான உரையாடல்களை விடவும் கணினித் தமிழ் பரிமாற்றங்களே அதிகம் என்பது நான் அறிந்த ஒன்று.

இப்படி, ஒரு அறைக்குள் மட்டுமே வித்தைகள் என்றில்லை. இன்று நமது கணினித் தமிழ் ஆகாயக் காற்றலையில் அழகாக பவனி வருகிறது. இமெயிலில் தமிழ்; வலைத்தளங்களில் தமிழ்; வலைபூக்களில் தமிழ், கூகுளில் தமிழ், ஃபேஸ்புக்கில் தமிழ், சுவிட்டரில் தமிழ் என்று அதன் வீச்சு நீண்டு கொண்டே போகிறது. ஆங்கிலம் தெரிந்தால்தான் கணினியைத் தொடமுடியும் என்கிற அச்சுறுத்தலை இந்தக் கணினித் தமிழ் உடைத்தெறிந்திருக்கிறது. உலமெல்லாம் வாழும் தமிழ் இதயங்களை இந்தக் கணினித் தமிழ் இனணத்து வைத்து அழகு பார்க்கிறது. முகம் அறியாத எத்தனையோ தமிழ் நண்பர்களை இதுதான் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

வலைப்பக்கங்களில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக தங்கள் எண்ணங்களை தமிழ் வழியாக பதிவு செய்வதைப் பார்க்கும்போது மெல்லத் தமிழ் இனி வாழும் என்று சொல்வதைவிட ‘வேகமெடுத்து தமிழ் இனி வெல்லும்’ என்றே சொல்லத் தோன்றுகிறது. மீடியாவின் ஒரு பகுதியாகவே ஆகிப் போயின வலைப்பக்கங்கள். தமிழிலேயே உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி; தகவல்களை சக தமிழர்களோடு பகிர்ந்து கொள்ளுதல்; யார் வேண்டுமானாலும் தங்களுக்கென அழகு தமிழில் வலைப்பூக்களை வடிவமைத்துக் கொள்ளும் எளிமையான தொழில் நுட்பம் – இப்படி தமிழர்களுக்கு எல்லாமுமாகச் சேர்ந்து கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமே.

கிடைத்த இந்த நல்வாய்ப்பினை அனைத்துத் தமிழர்களும் பயன்பெறும் வகையில் – நல்லனவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் – இந்த கணினித் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே இதனை ப் பயன்படுத்திவிட்டு தூக்கிக் கடாசிவிடக்கூடாது. அல்லது பரஸ்பரமாகவோ, ஒரு குழுவாகவோ இணைந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள இதையொரு ஆயுதமாகப் பயன்படுத்துதலையும் தவிர்த்திடல் வேண்டும். வலைப்பக்கங்களில் சாதி மத மோதல்களுக்கு கணினித்தமிழ் உபயோகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அடிக்கடி கவனிக்க முடிகிறது. இது அன்பான உள்ளங்களை இணைத்திடும் பாலமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அடிதடிக்கு வித்திடும் ஆணிவேராக இருக்கக் கூடாது என்பதில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கிற தமிழர்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்கிற அரிய வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிக செலவு செய்து பேசிக் கொண்டிருந்த தொலைபேசிச் சிக்கல்களை இந்தக் கணினித் தமிழ் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இ-மெயில்கள் இப்போது உருமாறி, ஒருவருக்கொருவர் தூதுவிட்டுக் கொள்ளும் மயில்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. நியூஸிலாந்தில் வசிக்கும் துளசி கோபாலும் சென்னையில் வசிக்கும் இந்தக் கல்யாண்குமாரும் மெயில்களை மயில்கள் என்றுதான் அழைக்கிறோம். இந்த அழகு மயில் உலகம் முழுக்க சிறகு விரித்துப் பறக்கட்டும். இந்த அரிய கண்டுபிடிப்பில் கணினித் தமிழ் இன்னும் புதுப்புது வளர்ச்சிகளையும் பலவிதமான வடிவங்களையும் பெறும் என்பதில் துளியும் ஐயமில்லை. கணினித் தமிழ் என்று ஒரு புள்ளி வைத்தாயிற்று; இது முற்றுப் புள்ளியில்லை. கோலத்திற்கான முதல் புள்ளி. இனி அழகாய் கோலமிடுதல் அவரவர் கைகளில்!

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், காற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s