அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளும், அறிவியல் தீர்வும் – ப சுந்தரமூர்த்தி

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் யாரை மனதில் வைத்து இப்படி பாட்டெழுதினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இன்றைய காலச்சூழலுக்கும் நமது தலைப்பிற்கும் இந்த வரிகள் மிகவும் பொருந்தக்கூடியவை. முதல் மற்றும் இரண்டாம் உல்கப்போர்கள் அரசியல் காழ்புணர்ச்சிகளால் வந்தவை என்றால், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரப்போகிறது என அறிஞர்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள். இதற்கு கட்டியம் கூறும் விதமாக பல நாடுகளில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். இந்தியாவின் தென்மாநிலங்களைப் பாருங்கள். அங்கே தண்ணீரை அடிப்படையாக வைத்தே அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பூமிப் பந்தின் முக்கால் வாசி பாகம் தண்ணீரால் சூழப்பட்ட போதும் அதில் ப்யன்பாட்டிற்கு உகந்த நிலையில் இருப்பது வெறும் நான்கு சதவீதம் மட்டுமே என்பது அறிவியல் உண்மை. கடல் நீர், ஆற்று நீர், ஏரி நீர் அல்லது மழை நீர் எதுவாக இருந்தாலும், இன்றைய சூழலில் மனிதனின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் நிலத்தடி நீர் ஆதாரம் தான் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் மற்ற நீர் ஆதாரங்களை விட நிலத்தடி நீரின் சிறப்பம்சம் என்னவென்றால், நிலத்தடி நீரை மட்டுமே மனிதன் நேரடியாக அருந்தும் தகுதி உடையதாக இருக்கிறது. ஆனால் மற்ற நீர் ஆதாரங்களை நாம் அவ்வாறு பயன்படுத்தினால் வரக்கூடிய சிக்கல்கள் என்னவென்று நமக்கு நன்கு தெரியும். வளர்ந்த நாடுகள் கடல்நீரை குடிநீராக மாற்ற கோடிகளை இறைத்து தீர்வுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பாலின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 15 ஆகும். ஆனால் அதே தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் சுத்திகரிகப்பட்ட தண்ணீர் புட்டியின் விலையும் ரூபாய் 15 தான். ஆக பாலும், தண்ணீரும் இங்கே சரிசமமாக வியாபாரம் செய்யப்படுகிறது. ஒருபக்கம் நிலத்தடி நீரை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசுகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் மக்களை அந்த போராட்டங்கள் சென்றடைந்ததா என்பது வெறும் கேள்விகுறி. அதேநேரம் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி, அதை சந்தைப்படுத்தி கோடிகளில் புரளும் குடிநீர் கொள்ளயர்களும் இங்கே கொடிகட்டி தான் பறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வைத்தே நிலத்தடி நீரை பெருக்க நிதி ஆதாரங்களை தேடலாம் என்பது எனது முதல் யோசனையாக எடுத்து கொள்ளுங்கள். அதாவது முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். சரி முதலில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் இந்த உலகம் சந்திக்கவிருக்கும் குறித்துப் பார்ப்போம்.

பிரச்சனைகள்

1.குடிநீர் பற்றாக்குறை
2.கடல்நீர் ஊடுருவல்
3.தண்ணீர் வழி நோய்கள்
4.பொது அமைதிக்கு பங்கம்

குடிநீர் பற்றாக்குறை

நிலத்திலிருந்து தொடர்ந்து தண்ணீரை உறிஞ்சி கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு சமமான நீர் நிலத்தில் சேமிக்கப்படுவதில்லை என்பதும் நமக்கு தெரியும். ஆழ்குழாய் கிணறுகளின் அறிமுகத்திற்கு பிறகு நிலத்தடி நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதோடு சேர்த்து சிமிட்டி வழி கட்டிடங்களும் பரந்து விரிந்து வளர்ந்து வருவதால், இயற்கையாக நமக்கு கிடைக்கும் மழை நீர் கூட, நிலத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்து நேராக ஆற்றோடு கலந்து கடலுக்கு சென்றுவிடுகிறது. நமதுவசாயிகளும், நவீன விவசாயம், என்ற பெயரில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வாரி இறைக்கிறார்கள். இதுவும் போதாது என்று தொழிற்சாலைகளும், தண்ணீர் வியாபாரிகளும் நிலத்தடி நீரை காசாக்கி கொழிக்கிறார்கள். ஆக ஒருபுறம் வேகமாககுறையும், நிலத்தடி நீர், மறுபுறம் போதிய மழை பொழிந்தும், நீரை உறிஞ்ச வழியின்றி நிற்கும் நிலங்கள். ஆக நிச்சயமாக அடுத்த பத்தாண்டுகளில் இந்த உலகம் ஒரு மாபெரும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க போவது மட்டும் உறுதி.

கடல்நீர் ஊடுருவல்

நிலத்தடி நீர் மட்டம் அருகி வருவதால், கடல்நீர் இயல்பாகவே நிலப்பகுதியின் ஆழத்தில் ஊடுருவல் செய்கின்றன. இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், கடற்கரை ஓரங்களில் மட்டுமின்றி, அதை தாண்டியும் உப்புநீர் ஊடுருவி, பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களை பாழ்படுத்தி விடும் சூழல் இன்று எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கையாகவே நடக்கும் இத்தகைய மாற்றம், நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள ஒருவகை புற்றுநோய் எனக் இதை கூறலாம். இவ்வாறு கடல்நீர் ஊடுருவல் நிலப்பகுதிகளில் அரங்கேறும் பட்சத்தில் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, தண்ணீரால் கூட மனித இனம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கலாம்.

3.தண்ணீர்வழி நோய்கள்

தற்போது இருக்கும் குறைந்தபட்ச நிலத்தடி நீரும் வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது. பெருவாரியான நாடுகளில் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரோடு கலப்பதால், அதை பயன்படுத்தும் மக்களுக்கு சரும நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் நலிவுகளுக்கு தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பெரிய காரணமாக அமைந்து விடுகின்றன. தொழிற்சாலை கழிவுகள் ஆற்றுநீரோடு கலந்து குளம், குட்டைகளில் தேங்குவதால், ரசாயன படிமங்களும் நிலத்தடி நீரோடு கலந்து , பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் அடியோடு பாதிக்கப்பட்டு காங்காலமாக கிடைக்கும் நிலத்தடி நீரைக் கூடப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

4.பொது அமைதிக்கு பங்கம்

தண்ணீர் தொடர்பான பிரச்சனைகள் உலகம் முழுவதும் புகைந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் நாடுகளின் எல்லைகளை கடந்து, மாநிலங்களில் கூட பொது அமைதி சீர்குலைவிற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தியாவும், அதன் தமிழ்நாடு மாநிலமும் தான். இந்தியா தனது தனது அண்டை நாடுகளுடன் தண்ணீர் தகராறு வைத்திருந்தால், தமிழகம் தனது அண்டை மாநிலங்கள் அனைத்துடனும் தண்ணீர் தொடர்பான தகராறுகளை வைத்திருக்கின்றது. இத்தகைய நிகழ்வுகளை ஒரு முன்னோட்டமாக கொண்டாலே, ஏன் தண்ணீரை அடிப்படையாக வைத்து மற்றுமொரு உலகப் போர் எழாது? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தீர்வுகள்

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த குறிப்பிட்ட ஒரு அறிவியல் தீர்வை தேடுவதைவிட, இயல்பான ஒரு தீர்வை தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதன்படி தமிழகத்தில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த திட்டம். ஆனால் அது பெரு வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு வீட்டின் கூரை மீதும் விழும் மழை நீரை அப்படியே கவர்ந்து நிலத்தில் சேமிப்பது தான் தமிழக அரசு மேற்கொண்ட திட்டம். ஆனால் அரசின் மெத்தனம், மக்களின் ஆர்வமின்மை ஆகியவை கூட்டாக சேர்ந்து இத்திட்டத்தை படுகொலை செய்துவிட்ட.ன. ஆனாலும் இத்திட்டத்தை உலகம் மீண்டும் உயிர்ப்பித்தால், நிலத்தடி நீர் சேகரிப்பில் ஒரு புரட்சியை உருவாக்கலாம்.

அடுத்ததாக நீர்வழிகளை இடைமறித்து நீலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது. இது எப்படி சாத்தியப்படும் எனப் பார்க்கலாம். அதாவது இயல்பான நீரோட்டத்தை கொண்ட ஆறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது ஒருபக்கம் இருந்தாலும், ஆறுகளில் குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஆற்றில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக ஒரு ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் ஓடக்கூடிய (உதா: காவிரி, வைகை) ஆறுகளில் இத்திட்டதை செயல்படுத்தினால் மிகச் சிறந்த பலனை அளிக்கும் என்பது எனது நம்பிக்கை. இத்திட்டத்தை காட்டாறுகளில் செயல்படுத்துவதன் மூலம், மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி தண்ணீரில், குறிப்பிடதக்க அளவு நீரை பகுதியை நிச்சயம் சேமிக்க முடியும்.

மூன்றாவதாக அரசின் புறம்போக்கு நிலங்களை நிலத்தடி நீரை சேமிக்கும் கிடங்குகளாக மாற்றலாம். இதன்மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாற்ற முடியும். ஆனால் சிறிய நாடுகளில் இத்திட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பரப்பளவில் பெருத்த நாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்துவது பெரிய காரியமில்லை. இத்திட்டத்தின் மூலம் பல புதிய குளங்கள் வெட்டப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அரசே முன்னின்று சேமிக்க முடியும். தனியாரையும் இத்திட்டத்தில் பங்கேற்க அழைக்கலாம்.

நான்காவதாக நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்தும் தொழிற்சாலை அதிபர்களை கொண்டு, உலக நிலத்தடி நீர் பாதுகாப்பு நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீரை பெருக்குவதற்கான நிதி ஆதாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த நிதியை கொண்டு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க, சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும்.

அத்துடன் காலங்காலமாக பேசப்பட்டும், சில இடங்களில் செயல்படுத்தப்பட்டும் வரும் ஆறுகளை இணைப்பது, விவசாயத்திற்கு சொட்டுநீர் பாசனம் செய்வது போன்றவையும் பயன்தரக்கூடிய திட்டங்கள் தான். அவற்றையும் தொடர்ந்து நடைமுறைபடுத்துவது நன்மையே பயக்கும். என்னதான் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வந்துவிட்டாலும், இவையெல்லாம கோடிகளை விழுங்கி, சொற்ப அளவில் நமக்கு பயனளிக்கும் திட்டங்கள். ஆனால் பைசா செலவில்லாமல் இயற்கையே நமக்கு அருட்கொடை அளிக்கும் திட்டம் தான் மழை நீர் மூலம் நிலத்தடி நீரை பெருக்குவது. ஆனால் அதனை பெறுவதற்கு உரிய வாய்ப்புகளை தொலைத்து விட்டு, இன்று அடைபட்டு கிடக்கும் வழிகளை கண்டுபிடிக்க தேடிக் கொண்டிருக்கிறோம். நோய் வந்துவிட்டால், அதனை குணப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டு. அதன்படி நிலத்தடி நீரை பெருக்க் தேவையான, தீர்வு என்ற ம்ருந்தை தற்போது தேடுகிறோம். கூடவே உலகம் தனது இயற்கை வளத்தை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறது. காரணம் அதன் தேவை அதிகரித்து விட்டது, இருப்பு குறைந்து விட்டது.பெட்ரோலிய வளம் எப்படி முடியும் தருவாயில் உள்ளதோ, அதேபோல் நிலத்தடி நீரும் அருகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் இந்த உலகம் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளும். நன்றி.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s