அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் – ராபர்ட் கென்னடி

இந்த உலகம் எண்ணற்ற மக்களும் உயிரினங்களும் வாழ்கின்ற வாழப்போகின்ற இடமாகவுள்ளது. நம் முன்னோர்களிடம் இருந்து வளமாகப் பெற்ற இவ்வுலகை வருங்கால நம் சந்ததியினரும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற உலகமாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை. நம் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படாததாலும், நம்மில் பலர் தெரிந்தோ தெரியமலோ செய்கின்ற தவறினாலும் இயற்கை வளங்கள் அழிதல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்தல், காடுகளை அழித்தல், நீர்நிலைகளை அழித்தல் போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் விளைநிலங்கள் வளம் குன்றுதல், நீர்வளம் குறைதல், பூமி வெப்பமடைந்து பனிமலைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்தல், பருவநிலையில் மாற்றம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன.

நமது நாட்டில் மழையும் நீர்வளமும், மழை குறைந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் விவசாய உற்பத்தி, அறுவடை பணிகள் ஆராய்ச்சிப் பணிகளைப் போல எங்கோ ஒருசில இடங்களில் மட்டுமே நடைபெறுமோ? என்ற ஐயப்பாடும் ஏற்படுகின்றது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றுப் படுகைகளில் உள்ள நிலத்தடி நீர் அளவு 15 அடியிலிருந்து 25 அடியாக தாழ்ந்து இருந்தது. இப்போது 75 அடிக்கும் கீழ் உள்ளது. 1960-61ல் கிணற்று பாசனம் மூலமாக பயிரிடப்பட்ட விளைநிலங்களின் பரப்பளவு சுமார் 215 லட்சம் ஏக்கராக இருந்தது. ஆனால் 1996 -97ல் 761 லட்சம் ஏக்கராக உயர்ந்து கடந்த 35 ஆண்டுகளில் பல மடங்காகியுள்ளன. பல இடங்களில் 1200 அடிவரைக் கூட கிணறுகள் அமைத்து நீர் இறைக்கப் படுகிறது. இந்நிலை எவ்வளவு காலங்கள் தொடர்ந்து நீடிக்கும்? தொடர்ச்சியாக நீர் கிடைக்கும் என்று என்று உறுதியாக கூற இயலாது. ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு அவை வறண்டு வெற்றிடம் தான் ஏற்படும். பன்னாட்டு நிறுவனஙகள், தொழிற்சாலைகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களும், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதற்காக நாலத்தடி நீரை விற்பதற்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் போது அங்கு மிகப்பெரிய ஏற்பட்டு அதன் காரணமாக பூமியின் சமநிலை குலைந்து நில அதிர்வு, சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் என்று நிலநூல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தின் புள்ளி விபரப்படி 1994 – 95ம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராகவும் 2005 – 06 ஆம் ஆண்டில் 50.6 இலட்சம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளது. அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயம் செய்யப்படவில்லை அல்லத் வேறு நோக்கங்களுக்காக மாற்றப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகமான மக்கள் தொகையை கொண்ட சீனாவில் விளைநிலங்களின் பரப்பளவு 100 மில்லியன் ஹெக்டேர். நமது நாட்டில் சாகுபடிக்கு ஏற்ற விளைநிலங்களின் பரப்பளவு 150 மில்லியன் ஹெக்டேர். ஆனால் விவசாய உற்பத்தியில் சீனாவை விட நாம் பின்தங்கிதான் இருக்கிறோம். முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், 2006 – ம் ஆண்டு தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஆற்றிய உரையில் 2020ல் நம் நாட்டில் விவசாய உற்பத்திக்கான நிலப்பரப்பு குறைந்து, விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விடும். ஆனால் மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும். எனவே தற்போதைய உணவு உற்பத்தியை போல இரண்டு மடங்கு அதிகரித்தாக வேண்டும். இல்லையேல் உணவு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று கூறிய கருத்தையும் மனதில் கொள்ள வேண்டும். பசுமைப்புரட்சி காலங்களில் குறுகிய கால வயதுடைய நெல்பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று போகம் பயிரிடப் பட்டது. இன்று முற்போகம் பயிரிடப்படுவதற்கான நீர் ஆதாரம் குறைவாகவுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பேராபத்துக் குறித்து உலகமே கவலைக் கொண்டுள்ள நேரத்தில் நிறைய மரங்கள் வளர்ப்பதும் ஒருவகை தீர்வாகும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். மரங்கள் வளி மண்டலத்தில் உள்ள கார்பன் – டை – ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஐனை வெளியாக்குகின்றன. பூமிக்கடியில் உள்ள கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு அவை அவை பெட்ரோல், டீசலாக வடித்து வாகனங்கள் மூலமாக எரிக்கப்பட்டும், தொழிற்சாலைகளில் வெளியாகின்ற கார்பன் – டை – ஆக்சைடு என்ற கரியமில வாயு வளி மண்டலத்தில் நிறையாமல் தடுக்கக்கூடிய பணிகளை மரங்கள் செய்துக் கொண்டிருக்கின்றன. நீர்வளம் குறைந்து காடுகள் வளர்வதும், வளர்ப்பதும் குறையும் போது மழையின் அளவும் குறைந்துவிடுவதோடல்லாமல் சுகாதாரமான காற்றைப் பெறுவதிலும் பிரச்சனைகள் எழும். தமிழ்நாட்டில் 54 சதவிகித விளைநிலங்கள் மழைநீரை நம்பித்தான் இருக்கின்றன. இதனால் முதலில் தண்ணீர் பற்றாக்குறையும், உணவு உற்பத்தி பாதிப்பால் உணவு பற்றாக்குறையும் ஏற்படும். பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளை எரிப்பதாலும் அதிக அளவில் வளிமண்டலத்தில் மாசு ஏற்படுகின்றன.

மேலும் கரியமில வாயு அதிகமான அளவில் வளிமண்டலத்தை அடைந்து ‘ஓசோன்’ படலத்தில் ஓட்டை ஏற்பட்டு, பூமி அதிவேகமாக வெப்பமடைந்து வருகிறது. பூமியின் ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும் போதும் இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் 60 லட்சம் டன் இழப்பு ஏற்படுவதாக டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார். பருவநிலையில் தற்போது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான வெப்பம் நிலவுவதும் உலகம் வெப்பம் அடைந்து வருவதற்கான அறிகுறிகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். புவியின் வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதால் வடதென் துருவங்களில் உள்ள பனிமலைகள் உருக ஆரம்பித்து கடலின் நீர்மட்டம் அதிகரித்து பூமியின் பெரும்பகுதி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நம் நாட்டில் முன்கூட்டியே கணிக்கமுடியாத அளவிற்கு பருவநிலை மாற்றங்களும் ஏற்படும். மிகுதியான வெப்பத்தால் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி தண்ணீர் பிரச்சினையும், கடல் மட்டம் உயர்வால் கடலோர பகுதிகள் அழிவையோ அல்லது சேதத்தையோ சந்திக்க நேரிடும். கடலோரப் பகுதியில் உள்ள விளைநிலங்களும் பாதிக்கப் பட்டு உற்பத்தியும் குறையும்.

இந்த உலகம் எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் கொண்டிருந்தாலும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாத பொருளாகவே தண்ணீர் உள்ளது. இந்த விசயத்தில் தண்ணீரும் தங்கமும் ஒன்று தான். ஆம்! தண்ணீரையும் தங்கத்தையும் மனிதன் உற்பத்தி செய்ய இயலாது. கடல் மற்றும் நீர் நிலைகளில் உள்ள நீர் சாரிய வெப்பத்தால் ஆவியாகி, ஆகாயத்திற்கு சென்று திரண்டு மழை பெய்கிறது. பெய்கின்ற மழைநீர் பூமியின் நிலப்பரப்பின் மீது விழுவதாலும், ஏரி, குளம், நீர்நிலைகளில் தேங்குவதாலும் பூமியால் உறிஞ்சப்பட்ட நீர் ஆதாரமே, நிலத்தடி நீர். இந்த நீரைத்தான் குடிநீருக்காவும், விவசாயத்திற்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் நிலத்தடி நீர் குறைவால் குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதால், கடல்நீரைச் சுத்திகரித்து தேவையைச் சமாளித்து வருகின்றனர். பல நாடுகளிலும் இந்தியாவிலும் கூட சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றனர். தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பல கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பபடுள்ளதாக நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு பதிவாகியுள்ளது என்ற செய்தி தமிழங்கத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தெளிவுபடுத்துகின்றது. நீர்வளம் குறைந்த நம் தமிழகத்தில் தமது தேவைக்காக கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. சில நாடுகளிலும் குடும்ப அட்டைக்கு இத்தனை லிட்டர் என்ற அளவில் தண்ணீர் வழங்கப் படுகிறது.

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோம் என்று. இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு விலை கொடுத்தாலும் குடிநீர் கிடைக்காதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500க்கு மேற்பட்ட தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து பாட்டில்கள், கேன்கள், பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீருக்காக செலவழிப்பது 7 பைசா மட்டுமே. ஆனால் ஒரு பாக்கெட் தண்ணீர் 1 முதல் 2 ரூபாய் வரையிலும் 1 லிட்டர் பாட்டில் 12 முதல் 15 ரூபாய் வரையிலும் ஒரு கேன் 23 முதல் 35 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுக்கான தேவையை மட்டும் அல்லாது குடிநீருக்கான தேவையையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், நிலப்பரப்பையும் ஏற்கெனவே சாகுபடியில் உள்ள விளைநிலத்தின் அளவையும் குறைப்பதற்கான பணிகள் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், நவீன நகரங்கள், விமான நிலையங்கள், அதிவிரைவு சாலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் 2010ம் ஆண்டு நிலவரப்படி 580 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முழு ஒப்புதலும், 150 மண்டலங்களுக்கு கொள்கை அளவில் அனுமதியும் வழங்கப்பட்டுளது. இவ்வளவு மண்டலங்களுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டால் நிலமை என்னாவது? அரசே தனியாருக்காக நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைப்பதுடன், தேவைக்கு அதிகமான அளவில் நிலங்களை கையகப்படுத்துவதால் மிகப்பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் மோசடி நடப்பதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளாங்குடி, புனவாசல், திருவையாறு, கண்டியூர், அம்மன்பேட்டை, போன்ற சிற்றூர்களில் நான்கு புறமும் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு மத்தியில் ரியல் எஸடேட்டாக மாறியுள்ள இடங்களையும் காண முடிகிறது. தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப் படுகின்றன. தமிழகத்தில் 39 ஆயிரம் ஏக்கர் ஏரிகள் இருப்பதாக இருப்பதாக கணக்கு சொல்லப்படுகிறது. அவற்றில் சில காணாமலும், தூர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டது.

உலகின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பாகம் நீரினால் சூழப்பட்ட பகுதி. இதில் 97.27 சதவிகிதம் கடல்நீர் ஆகும். 2.15 சதவிகிதம் பனிக்கட்டியாக உறைந்த பகுதி. இதுபோக மழையால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், சாலைகள், நீர் ஊற்றுகள், நீர் தேக்கங்கள், ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நீரின் அளவு 0.58 சதவிகிதம் தான். ஆக இந்த ஒரு சதவிகிதத்திற்கு குறைவான நீரைத்தான் உலகமே தனது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைக்க பெறுகின்ற குறைந்த நீர்வளமாவது பயன்பாட்டிற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா? என்றால், இல்லை என்பது தான் பதிலாக அமையும். கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் அப்பகுதியில் உள்ள உப்புநீர் ஊடுருவ, குடிப்பதற்கோ விவசாயத்திற்கோ பயன்படுத்த முடிவதில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் ஆலைகளும், திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் அமைந்த பின்னலாடை தொழிற்சாலைகளும், இன்னும் பிற தொழிற்சாலைகளும், நல்ல நீரை பயன்படுத்திக்கொண்டு கழிவுநீரை ஆற்றில் விட்டு விடுகின்றனர். கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததால் நீரில் உள்ள மோசமான இரசாயணங்கள் நிலத்தடி நீரை சென்றடைகிறது. பல தொழிற்சாலையின் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர திட கழிவுகள் ஆறுகள் நீர்நிலைகள் மற்றும் கடல்நீரிலும் கலப்பதால் மாசு ஏற்பட்டு அரியவகை உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் அனைத்துமே மாசடைந்துள்ளது.

இதில் அதிர்ச்சியளிக்கும் விசயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள அன்னையரின் தாய்ப்பாலில் கூட இரசாயண மருந்தின் விஷத்தன்மை உள்ளதாக ஜப்பானில் உள்ள எக்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். பயிர் விளைச்சலை பாதுகாக்கவும், திடக்கழிவுகளை அழிப்பதற்காகவும் நிலப்பரப்பின் மீது தெளிக்கப் படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலத்தடிநீரைச் சென்றடைகிறது. இதனால் நிலத்தடி நீரில் மாசு ஏற்பட்டு, அதை பயன்படுத்தும் நமக்கும் தீங்கு ஏற்படுகின்றது. நம் நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 5,000 கோடி புழங்குகிறது. ஓர் ஆண்டுக்கு 60,000 டன் நச்சுப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் எந்த இடத்திலும், உடலிலும் வீரியம் குறையாமல் இருக்கும். இவை தெளிக்கப்படுகின்ற எல்லா இடத்திலும் உள்ள புழு பூச்சிகளையும் அழிக்கின்றது. மழைக்காலங்களில் நீரில் கரைந்து நீர் நிலைகளை அடைந்து அங்குள்ள சிற்றுயிரினங்களையும் அழிக்கின்றது. சிற்றுயிரினங்களை உட்கொள்வதால் பறவை இனங்களும் அழிந்து விடுகின்றன. இதனால் நாம் எளிதில் காணக்கூடிய சிட்டுக்குருவி, மைனா, மணிப்புறா, செம்பருந்து போன்ற பறவை இனத்தைக் காணபதும் அரிதாகி விட்டது எனக் கூறுகின்றார் டேனியல் அவர்கள்.

அருகி வருகின்ற நிலத்தடி நீரால் உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படை விசயமாக உள்ள வாழ்விடம், உணவு, நீர், காற்று ஆகிய அனைத்திலுமே நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதற்கான காரணம் இயற்கை அல்ல. நாம் தான். இதற்கு ஆட்சியாளர்கள் மறும் அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் தொலைநோக்குச் சிந்தனை இல்லை. சுற்றுச்சூழல் மீதான மீதான அக்கறையில்லாதது, அலட்சியம் செய்வது, உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களிடம் நேர்மை இல்லாதது என பல காரணங்களை கூறலாம். எந்த ஒரு நலத்திட்ட பணிகளையும் மேற்கொள்ளும் போது அதற்கான கண்காணிப்பு குழுவையும் ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் கலாம் கூறிய கருத்தையும் மனதில் கொள்ள வேண்டும். காவிரியின் கடைமடைப்பகுதியான நாகையில் உள்ள 29 ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு சென்ற ஆண்டு ஒப்பந்தக்காரர்கள் மூலமாக சரி செய்யப்பட்டது. உடைப்புகளை அடைக்கும் பணிகள் நடந்த அதே இடங்களில், சமீபத்தில் பெய்த மழையினால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால் அந்த பணியை செய்த ஒப்பந்தக்காரர்கள், அவர்களின் பணியை ஆய்வு செய்த அதிகாரிகளின் நேர்மையை என்னவென்று சொல்வது. பயனளிக்காத பணியை செய்து, பல லட்சங்களை செலவு செய்து, பல ஆயிரங்களை ஊதியமாக பெற்று வருகின்ற நிலைதான் பெரும்பாலான இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திட்ட பணிகள், நீர் நிர்வாகத்தில் தற்காலிக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து செயல்திட்டங்கள் வகுக்கப்படுவதில்லையென குற்றம் சாட்டுகிறார் பேராசிரியர் கனகராஜ்.

பூமி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளத்தை பெருக்கவும் மரங்கள் அதிகமாக தேவைப்படுகிறது. ஆகையால் தனிநபர் வீட்டுக்கு ஒரு மரமாவது வளர்ப்பதும், அரசு காடுகளை வளர்ப்பதில் தீவிரம் காட்டுவதும் கடமை என உணர வேண்டும். இதனால் வளிமண்டலத்தில் கரியமில வாயு ஏற்படுத்துகின்ற தாக்கத்தை தவிர்த்து புவி வெப்பமடைவதை தடுத்திடலாம். இயற்கையான மழை சேகரிப்பு நிலையங்களாக உள்ள நீர்நிலைகளை பராமரித்து, நீர்வரத்துக்கான வழிகளையும் சீர்செய்தாலே ஓர் அளவிற்கு நமக்கு தேவையான நீர் கிடைக்கும். பிளாஸ்டிக் பொருட்கள் திடக்கழிவுகள் இரசாயன பொருட்கள் கொட்டப்படுகின்ற இடமாக ஆறுகளும் நீர்நிலைகளும் உள்ள நிலை முற்றிலுமாக மாறித்தான் ஆக வேண்டும். உபரிநீர் வீணாவதை தவிர்த்து சேமிப்பதற்கான ஆலோசனைகள் அறிஞர்களால் முன்பே வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை இணைக்க வேண்டிய அவசியத்தையும், ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துக் கொண்டிருக்கையில் மற்றொரு நீர்த்தேக்கம் நிரம்பாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி இவைகளை இணைத்தால் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதோடு, நீரையும் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளனர். மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், அதன் அருகில் உள்ள பவானிசாகர் அணை நிரையாமல் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

மணல்தான் தண்ணீரை சேமித்து வைக்கிறது. அதனால் ஆற்றுப் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் ஊற்றும், நிலத்தடி நீர் வளமும் ஏற்படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் நீர்வழிப்பாதைகளை சரிசெய்வதற்கான மணல் திட்டுகள் அகற்றப்படுகிறது என்ற போர்வையில் மணல் அள்ளப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அண்டை மாநிலம் கேரளத்தில் ஆற்றில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இயற்கை சுரண்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நமது நாட்டை விட நீர்வளம் குறைந்த வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இஸ்ரேல் நாட்டில் உள்ளது போன்ற சிறந்த நீர் நிர்வாகத்தை மேற்கொண்டு சொட்டு நீர்பாசன முறைகளை பரவலாக்கி பாசனத்திற்கான நீர் தேவையை குறைக்கலாம். விவசாய நிலங்கள் விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாற்றப்படுத்துவதையும் வளர்ச்சி பணிகளுக்கு, தேவைக்கு அதிகமாக நிலம் கையகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளுக்கு நிலத்தின் மீதான உரிமையை கொடுக்கக்கூடாது. விவசாயத்திற்கு ஏற்புடையதல்லாத நிலத்தையோ அல்லது தரிசு நிலங்களையோ தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தி விளைநிலங்களை பாதுகாக்கலாம்.

உணவுப் பொருட்களில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை எல்லா மண் வகைகளிலும், பருவத்திலும் பயிரிட ஏற்றதாகும். சிறுதானியங்கள், பருப்பு வகைகள் பயிர் செய்ய குறைந்த அளவே நீர் தேவைப்படும். இவற்றை பயிர் செய்ய ஊக்கப்படுத்து நீர் தேவையை குறைக்கலாம். உணவு உற்பத்தியில் ஒரே மாதிரியான விதைகள், பயிர்கள், உரங்கள் என்று பயன்படுத்தாமல் மாற்றுவிதைகள் பயிர்கள், இயற்கை உரங்கள் என பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிப்பதோடு மண்வளத்தையும் பாதுகாக்கலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வரையில் அழிவில்லாமலும் பாதுகாக்க வேண்டும்.

இயற்கையை சீரழிக்கின்ற எந்த ஒரு செயலும் ஏற்புடையதல்ல. இயற்கை பயன்படுத்த, அனுபவிக்க மட்டுமே. அழிப்பதற்காக அல்ல என்பதை நம் சிந்தனையில் நிலைநிறுத்தி அவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இயற்கையை மாசுபடுத்துகின்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. அவற்றை செய்யத் துணிவோரையும் தடுத்திட வேண்டும் சட்டம் கடுமையாக தண்டித்திடவும் வேண்டும். மரம் வளர்த்தல் மாசுக்கட்டுப்பாடு மூலமாக சுகாதாரமான காற்றைப் பெறுதல், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலமாக நீர்வளத்தை பெறுதல் நச்சுக்கழிவு, பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்தல் மூலமாக ஆரோக்கியாமான உணவு உற்பத்தியை பெறுதல் போன்ற நலனிற்காக மக்களும், அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், தன்னார்வ அமைப்புகளும், ஊடகங்களும், கடமையென உணர்ந்து செயல்படும் போது மட்டுமே பின்னால் வருகின்ற சமுதாயத்திற்கு வளமான உலகை பரிசாக அளிக்க முடியும். அரசிடம் இருந்து பொறுப்பான நலத்திட்டங்களையும் செயல்பாடுகளையும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறு அமையாது போனால் அது ஆபத்தானதாகவும் அமையும்என வல்லுநர்கள் கூறி வருவதையும் மனதில் கொள்வோம்.

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s