அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் – ஆர் எம் சிவகுமார்

குறிப்பு சட்டகம்:-
அ. முன்னுரை
ஆ. முதன்மை காரணிகள்
இ. காரணிகள் – காரணங்கள், சிக்கல்கள், தீர்வுகள்,
ஈ.முடிவுரை

அ. முன்னுரை:-

ஐம்பெரும் பூதங்களில் காற்றும், நீரும், நிலமும் உயிரினங்களின் வாழ்விற்கு அடிப்படை

“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” -குறள்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீரின் அருமையை உணர்ந்ததால்தான் செந்தாப்போதார் நீரின்றி உலகமே இல்லை என்றுஎழுதியுள்ளார், பூமியில் 70 சதவிகிதம் பரப்பைக்கொண்டது நீர் என்று புவியியலும், அனைத்து உயிரினிங்களின் தொடக்கம் நீர் என்றுஉயிரியலும், மனித நாகரிகத்தின் தொட்டில் என்று வரலாறும், இரண்டு பங்கு ஹைட்ரஜன் அணுவும், ஒரு பங்கு ஆக்சிஜன் அணுவும்
சேர்ந்துதான் நீர் என்று வேதியியலும், நிறமும் மணமும் அற்ற தெளிவான திரவம் தான் நீர் என்று அகராதியும் உயிரைப் படைக்க, காக்க, அழிக்க வல்லதுநீர் என்று தத்துவமும் கூறினாலும் இந்த நூற்றாண்டில் உலக நாடுகளுக்கு இடையே, ஏன் மனித சமுதாயத்திற்குள்ளே பிளவைஏற்படுத்தப்போவது நீர் என்பதே நிதர்சனமான உண்மை, மனித சமுதாயத்திற்கு கிடைத்த, விலைமதிப்பில்லாத, இயற்கை வளமான நீர்”தனிமனித சொத்து அல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயம் மட்டுமில்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான சொத்து (COMMUNITY RESOURCE)” என்ற கருத்தினை மக்கள் மனங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன், என் விருப்பம் ஈடேறுமாயின் இக்கட்டுரைக்கும், தமிழ்வெளிபதிவுக்கும் கிடைத்த வெற்றியாக கருதலாம், நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் இயற்கை வளங்களை வருங்கால சந்ததியருக்கும் மாசுபடாமல் விட்டுச் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.

பூமியில் கிடைக்க கூடிய நீரில் 0,5 சதவிகிதம் மட்டுமே மனிதன் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது, இதன் அளவும் தற்சமயம் குறையத் துவங்கிஉள்ளது, இதனால் தான் நீரை அடிப்படை உரிமையாக்கி உள்ளனர், உருகவே நாட்டினர். 2004 அக்டோபர் 31-ம் தேதி இதற்கான சட்டம்இயற்றப்பட்டதால் இதை நினைவு கூறும் வகையில் Blue October Movement என்று உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. மனித குலத்திற்குஉள்ள நீர் ஆதாரங்களில் நிலத்தடி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே நிலத்தடிநீரை பராமரித்து, நியாயமாக பங்கிட்டு பயன்படுத்தப்படுவதுஇத்தருணத்தில் அவசியமான ஒன்றாகும். நீர்வள ஆதாரமும், பயன்பாடும் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது என்பதையும் கவனத்தில்வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆ.முதன்மை காரணிகள்:-

I. பெருகிவரும் மக்கள் தொகை (EVER INCREASING POPULATION)

II. காடுகளை அழித்தல் (DEFORESTATION)

III. வேளாண்மை வளர்ச்சி (AGRICULTURAL GROWTH)

IV.நகர்மயமாதல் (URBANIZATION)

I. பெருகிவரும் மக்கள் தொகை (EVER INCREASING POPULATION)

மக்கள் தொகை பெருக்கத்தின் வளர்ச்சி குறைந்தாலும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவது அச்சுறுத்தலான விஷயம்தான் சென்றநூற்றாண்டின் இறுதியில் 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 2050-ம் ஆண்டில் 1000 கோடியாக உயர வாய்ப்புள்ளது, உலகில் உள்ளவளங்களின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதால் நிலம், நீர், காற்று, உணவு ஆகிய அடிப்படை தேவைகளுக்கு போட்டி அதிகரித்து தனிமனிதனுக்கு கிடைக்கும் வளங்களின் பங்கு எனவே மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

உலகில் நீர் பயன்பாடு 1900-களில் இருந்ததைக் காட்டிலும் பத்துமடங்கு அதிகரித்துள்ளது எனவும் 2020-ம் ஆண்டில் உலகில் நீர் பற்றாக்குறைபாதிக்கக் கூடிய அளவில் இருக்கும் எனவும் UNESCO கூறுகிறது, தற்சமயம் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் நீர்பற்றாக்குறையின்ாலும், தரமான குடிநீர் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். உறிஞ்சப்படும் நிலத்தடிநீர் திறனற்ற முறையில் பயன்படுத்தப்படுவது துரதிஷ்டவசமானது. இதன் விளைவுகள் பயிர் இழப்பு, உணவு பற்றாக்குறை மற்றும் அதிக அளவில் நோய் பரவுதல்ஆகும். ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்நிலைகக்கு காரணமாகிறான். தார்மீகப் பொறுப்புள்ள எவரும் இந்த நிலையை மாற்ற முன்வரவேண்டும்.

விழிப்புணர்வு:-

எடுக்க எடுக்க ஊறிக்கொண்டிருப்பதற்கு நிலத்தடி நீர் ஒரு அட்சய பாத்திரமல்ல என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். நீரின் அருமையைபற்றியும் நீரை சேமிப்பதின் அவசியத்தைப்பற்றியும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் படி, விலை மதிப்பில்லாத, மிகஅரிதான இயற்கை வளமான, நீர் வளத்தைப் பற்றிய மக்களின் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவது, உடனடியாக
தொடங்கப்படவேண்டும், இது ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

நீர்த்தணிக்கை:-

நாம் பயன்படுத்தும் நீரின் அளவைக்கணக்கிட்டு செலவிடுவது இன்றியமையாதது, ஒரு மனிதனின் அன்றாட நீர்த்தேவை கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

குடிக்க – 5 லிட்டர்
சமைக்க – 5 லிட்டர்
குளிக்க – 55 லிட்டர்
துவைக்க – 20 லிட்டர்
பாத்திரம் கழுவ – 10 லிட்டர்
தரை துடைக்க – 10 லிட்டர்
கழிவறைக்கு – 30 லிட்டர்

இந்த அளவினை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் வள ஆதார அமைப்புப் பிரிவு அளித்துள்ளது, இந்த அளவுக்கு மிகாமல்தேவைக்கேற்ப பயன்படுத்தி நீரை சேமியுங்கள்.

*தேவையில்லாமல் குழாய்கள் மூலம் நீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். உடைந்த ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரிசெய்யப்படவேண்டும்.

*நகர்ப்புறங்களில் பாதாள சாக்கடை மூலம் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து வாகனங்கள் கழுவுதல்,தீயணைப்புத் துறை, புல் பண்ணை போன்ற இதர உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம்.

*பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் கட்டுவதற்காக முன்னோர்கள் ஏற்படுத்தியநீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், மழைநீர் சேமிக்கப்படாமல் வழிந்தோடி வீணாகிவிடுகிறது. நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு அகற்றி அவை அழியாமல் பாதுகாக்க அரசுகள் முன்வரவேண்டும்.

*வீடுகளில் குளியலறை, சமையலறை மற்றும் தோட்டங்களில் மிகச்சிக்கனமாக நீரைப்பயன்படுத்தி சேமிக்கலாம்.

மிக அடிப்படையாக நமது செயல்பாடுகளில் உடனடி மாற்றம் அவசியமாகிறது. நீரின் மதிப்பை பிரதிபலிக்கும் முறையில் நீருக்குமுக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இதே வாழ்க்கை தரத்தை வருஙகால சந்ததியினருக்குவிட்டுச்செல்ல வேண்டுமானால் நீரை பாதுகாத்து சேமிக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

காரணி:-
# பெருகி வரும் மக்கள் தொகை

அடிப்படைக் காரணங்கள்:-
# மக்களின் அறியாமை
# நீரின் அருமை தெரியாமை

சிக்கல்கள்:-

# உணவு, உடை இருப்பிடத்திற்கான தேவை அதிகரிப்பு
# இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல்,

தீர்வுகள்:-

# மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல்.
# நீருக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பளித்தல்.
# விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
# நீர்த்தணிக்கை.

II. காடுகளை அழித்தல் (DEFORESTATION)

இயற்கை வளங்கள் நீடித்து நிலைக்க ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம்
அதாவது மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் மக்கள் தொகை பெருக்கமும், வாழ்க்கைத் தர உயர்வும் இன்று இயற்கை வளங்களை சூறையாடி
வருகின்றன. இந்தியாவில் 19 சதவிகித பரப்பிலும், தமிழ்நாட்டில் 16 சதவிகித பரப்பிலும் காடுகள் உள்ளன. விவசாயத்திற்காகவும், தொழிற்சாலைகளுக்காவும் , விறகுக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நீர் பிடிப்புத்திறன் குறைந்து நிலம் வளமிழந்து தரிசாக மாறிவருகிறது. எனவே காடுகளை அழிப்பதை நிறுத்தி காடுகளை செம்மைப்படுத்த வேண்டும், மேகங்களை கவர்ந்து மழையாக பொழியச்செய்யும் சக்தி காடுகளுக்கு உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள தானியப்பயிர்களின்இலைப்பரப்பைக்காட்டிலும், ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள காடுகளின் இலைப்பரப்பு பல மடங்கு அதிகமாக இருப்பதால் ஆவியாகி வெளியேறும்நீரின் அளவும் அதிகமாக இருக்கும். இவ்வாறு ஆவியாகும் நீர் மேலே சென்று உயரே செல்லும் மேகங்களுக்கு நீரைச்
செறிவூட்டிமழையைப்பொழியச் செய்யும். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படை இதுதான் காடுகளில் மழை பெய்யும்போது இலைச்சருகுகள் , மக்குகள் அதிக நீரை பிடித்து வைத்துக்கொள்கின்றன. மழைநீரை அறுவடை செய்யும் களங்களாக உள்ள காடுகளைபராமரித்தால்தான் மழைநீர் சேமிக்கப்பட்டு பல மாதங்களுக்கு ஊறும் ஊற்றுக்களாக மாறி நல்ல பலன் கொடுக்கும். இதில் ஒரு பகுதி நீர்நிலத்தடியில் புகுந்து நீர்வளத்தை பெருக்குகிறது. எனவே காடுகளின் பரப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். இதைவலியுறுத்தவே நம் முன்னோர்கள் ஒருவன் எத்தனை மரம் வளர்க்க வேண்டும் என்பதை சீவக சிந்தாமணியில் மிக அழகாகசொல்லியிருக்கின்றனர்.

ஓர் அரசு ஆலும் வேம்பும் ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம் மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை பெருகு மாஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும் அவர்க்கில்லை நரகம் தானே.

காரணி:-
# காடுகளை அழித்தல்

அடிப்படைக் காரணங்கள்:-
# தொழிற்சாலைகள், வீடுகள் கட்ட
# விறகுக்காக

சிக்கல்கள்:-
# மழையளவு குறைகிறது.
# நீர் பிடிப்புத்திறன் குறைகிறது.
# நிலம் வளமிழந்து தரிசாகிறது.
தீர்வுகள்:-
# காடுகள் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
# காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும்.

III. வேளாண்மை வளர்ச்சி (AGRICULTURAL GROWTH)

2050-ஆம் ஆண்டில் உணவுத் தேவை இப்போதைய அளவைக்காட்டிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உணவுத்தேவை அதிகரிக்கும் போது பயிர் சாகுபடிக்கான நீரின அளவும் அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இறைக்கும்நீரில் 70 சதவிகிதம் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. வளரும் நாடுகளில் இது இன்னும் அதிகம். சில நாடுகளின்
மானியத்திட்டங்களும்நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. குறைந்து வரும் விளைநிலப் பரப்பினைக் கொண்டு, பெருகி வரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் பலபோக சாகுபடி முறைகளை கையாளவேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக பெறப்படும் மழையின் அளவும், காலமும், கணிக்க முடியாத நிலை (ERRATIC)அதாவது மிகக் குறைந்த அல்லது மிக அதிக மழையளவு, பருவத்திற்கு முன்னரோ அல்லது பருவம் கடந்த பின்போ பெய்யும் மழை, ஓரிருநாட்களில் ஒரு பருவத்திற்கான மொத்த மழையும் பெய்து வெள்ளம் ஏற்படுதல் ஆகியவை ஏற்பட்டு “வேளாண்மை ஒரு சூதாட்டம்” என்னும்அவலநிலை தொடர்கிறது. இதன் விளைவாக மழையை நம்புவதை தவிர்த்து நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்பவரே வெற்றி பெறமுடியும் என்ற நிலை ஏற்படுகிறது.

நிச்சயமற்ற பருவ மழையினை கண்ட நம் முன்னோர் ஆண்டு முழுவதும் நீர் கிடைத்திட நீர் நிலைகளை உருவாக்கி நீரை சேமித்தனர். ஆனால்இன்று பல்வேறு காரணங்களால் நீர்நிலைகளும், வரத்துவாரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு. ஏரி. குளங்களில் மிகக் குறைந்த நீரே சேமிக்கப்படுகிறது.பாசனத்தேவையை ஈடுகட்ட நிலத்தடி நீரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பழங்கால சாகுபடி முறையை கைவிட்டு நவீன
தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகள் முன்வராததும் நியாயமான நீர்ப்பயன்பாட்டிற்கு தடையாக உள்ளது. குறைந்த நீரை பயன்படுத்தி ஒருஅலகு நீரிலும், நிலத்திலும் உற்பத்தியாகும் உணவுப்பொருளின் எடையளவை உயரத்துவதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கானவழிமுறைகள் சில ……

இராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறை:-

” நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய என ஆளும் வேந்தே” – புறநானூறு.

நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய வகையில் கிடைக்க ஆவண செய்ய வேண்டியது அரசின் கடமை
என்பது அதன் பொருள். அதற்கு நெல் பயிரின் உற்பத்தி திறனை பெருக்கி, நெல் பயிரிடும் பரப்பைச் சுருக்கி மாற்றுப்பயிர் பயிரிட விவசாயிகள் முன் வரவேண்டும். பழங்கால நெல் சாகுபடியில் நெற்பயிர் உறிஞ்சி எடுக்கும் நீரைக்காட்டிலும் மூன்று பங்கு நீர் வீணாகிறது, எனவே காய்ச்சலும், பாய்ச்சலும் என்ற முறையில் பாசனம் அளித்து, 50 சதவிகிதம் நீர்த்தேவையை குறைத்திட அறிமுகப்படுத்தப்பட்ட சாகுபடி முறைதான் இராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையாகும்.இம்முறையை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு ஏக்கர் நெல் பயிரிட தேவையான நீரைக்கொண்டு இரண்டு ஏக்கர் வரை நெல் பயிரிடலாம். செலவு குறைவதோடு விளைச்சலும் 50 சதவிகிதம் அதிகரிக்கிறது.

மாற்றுப்பயிர் சாகுபடி:-

பாசனப்பயிர்களில் நெற்பயிருக்கு 1200 மில்லிமீட்டரும், மக்காச்சோளம், சோளம், கம்பு முதலிய சிறு தானியப்பயிர்களுக்கு 500 மி,மீட்டரும்நிலக்கடலைக்கு மில்லிமீட்டரும், எள் , பயறு வகைகளுக்கு 300 மில்லிமீட்டரும் நீர் செலவாகிறது. நெல், கரும்பு. வாழை, தென்னை ஆகியபயிர்கள் அதிக நீரை விரும்புபவை, பனைமரங்கள் பாசனமின்றி வளருபவை, எனவே நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் அதிக நீர் விரும்பும்பயிர்களை தவிர்த்திட வேண்டும்.

” உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்பார்கள். ஆனால் நீர்க்ணக்கை பார்க்க வேண்டியதுஅவசியம். ஒரு ஏக்கர் நெல் பயிரிட தேவையான நீரைக்கொண்டு 2.5 ஏக்கர் மக்காச்சோளம், நிலக்கடலை ஆகிய பயிர்களும் 3 ஏக்கர் பயறு வகைபயிர்களும் பயிரிடலாம். மாற்றுப்பயிர்களுக்கு வயதும் குறைவு. சிரமங்களும் குறைவு. லாபமும் அதிகம் எனவே மாற்றுப்பயிர் சாகுபடிக்குவிவசாயிகள்
மாறவேண்டும்.

சொட்டு நீர்ப்பாசனம்:-

நீரைச் சிக்கனப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நவீன் தொழில் நுட்பங்களில் முதன்மையானது சொட்டு நீர் பாசனம், மற்ற பாசனமுறைகளைப்போல் அல்லாமல் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதியில் நீர் கொடுக்கப்படுவதால் நீர்க்கசிவு, ஆவியாதல் போன்ற இழப்புஇல்லாமல் 50 சதவிகிதம் நீர் சேமிக்கப்படுகிறது. மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் இச்சமயத்தில் குறைந்த நேரமே கிடைக்கும்
மின்சாரம்மற்றும் குறைந்த அளவு பாசன நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் செய்யலாம். எல்லா விதமான மண் தன்மைக்கும், நில அமைப்புக்கும்ஏற்றது. பண்ணைத்தொழிலாளர்கள் கிடைப்பது அரிதான இன்றைய சூழ்நிலையில் சொட்டு நீர்ப்பாசனம் ஒரு வரப்பிரசாதம்.

துல்லிய பண்ணையம்:-

சமீபகாலமாக விவசாயிகளிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் நவீன் தொழில் நுட்பம் துல்லிய பண்ணையம் ஆகும். பாசன நீரோடுநுண்ணிய குழாய்கள் வழியே முழுதாக நீரில் கரையும் உரங்களை அளிப்பது இதன் சிறப்பு. அதிக நீரை விரும்பும் கரும்பு. வாழைகாய்கறிப்பயிர்களுக்கு மிகவும் உகந்தது,
50 சதவிகிதம் வரை கூடுதல் மகசூல் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகளின் சாதனை தமிழகத்தில் வேளாண்மைத் துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் துல்லிய பண்ணைய சாகுபடி முறையினைகடைப்பிடிப்பது நலம்.

மழை நீர் சேகரிப்பு :-

மழை நீரின் தூய்மையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து மழை பெய்யும் இட்ங்களில் வீணாகாமல் நீரை சேமிக்க வேண்டும். பருவமழையின் போது உட்செல்லும் நீரை விட உறிஞ்சப்படும் நீர் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.இதனால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு அதிக ஆழத்தில் குழாய்க்கிணறுகள் அமைக்கின்றன. இதனால் அருகில் உள்ளகிணறுகள் வற்றிவிடுவதோடு கடலோரப்பகுதிகளில் உப்பு நீர் ஊடுருவல் நடைபெறுகிறது. இந்நிலையை மாற்றிட மழைநீர் சேகரிப்பு அவசியம்.மழைநீர் சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு தரமும் மேம்படும் எனவே ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும்,பண்ணையிலும், மழைநீர் சேகரிப்பதை தலையாய கடமையாக கொள்ள வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு முறைகள்:-

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கசிவு நீர்க்குழிகள், திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் குழாய்க்கிணறுகள் மூலம் சேமிக்கலாம்.

பண்ணைகளில் நீர் சேகரிப்பு:-

பண்ணைகளில் மழை நீரை சிறுகச் சிறுகச் சேமிக்க பல்வேறு முறைகள் உள்ளன. பயிர் இல்லாத தருணங்களில் கோடை உழவு செய்தல்பண்ணைக்குட்டை, கசிவு நீர் குட்டை அமைத்தல் நீரோடைகளின் குறுக்கே சிறு தடுப்பு அணைகள் ஆகியவை சிலமுறைகளாகும்.

தானிய சேமிப்பு:-

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த தானியத்தை அது உணவாக உட்கொள்ளப்படும் வரை அதன் தரம் மற்றும் எடை குறையாமல்பாதுகாப்பது அவசியம். இல்லையென்றால் அதன் உற்பத்திக்கு நாம் செலவிட்ட இடுபொருட்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போலஆகிவிடும். பாதுகர்க்கப்பட்ட ஒவ்வொரு தானியமும் உற்பத்திக்குச் சமமே என்பதை அனைவரும் உணர வேண்டும். சேமிக்கப்பட்டதானியத்தின் அளவுக்கு உற்பத்தி செய்ய தேவைப்படும் பாசன நீரும் சேமிக்கப்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்க்னி எனவே தானியசேமிப்பில் கவனம் செலுத்தினால் தானியங்களோடு நீரும் சேமிக்கப்படும்.

காரணி:-
#பெருகிவரும் உணவுத் தேவையை சமாளிக்க வளர்நது வரும் வேளாண்மை.

அடிப்படைக்காரணங்கள்:-
#உணவுத் தேவை அதிகரிக்கப்பதால் பயிர் சாகுபடி பரப்பு அதிகமாகி நீர்த்தேவை அதிகமாகிறது.

#பழங்கால சாகுபடி முறைகளை பின்பற்றுதல்.

#மழைநீர் சேகரிக்கப்படாமல் அதிக அளவு நிலத்தடி நீரை உறிஞ்சி திறனற்ற முறையில் பயன்படுத்துதல்.

சிக்கல்கள்:-

#உட்புகும் நீரை விட அதிக அளவில் நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகும்.

#உணவு பற்றாக்குறை மற்றும் உணவு பணவீக்கம் ஏற்படும் அபாயம்.

தீர்வுகள்:-
குறைந்த பாசன நீரைக்கொண்டு நவீன சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்தல்

# மாற்றுப்பயிர் சாகுபடி
# மழைநீர் சேகரிப்பு
# தானிய சேமிப்பு

IV.நகர்மயமாதல் (URBANIZATION)

வேலைவாய்ப்பு கல்வி மற்றும் தொழில் வாய்ப்பகளுக்காக கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து
நகரங்களில் வாழ்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டில் இந்திய
மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த நகரத்திலும் 24×7 மணிநேரமும் நீர் கிடைப்பதில்லை 65 சதவிகித நகரமக்கள் நீர்பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர், நகரங்களில் நீர்ப்பயன்பாடு 60 சதவிகிதம் என்றால்வீணாவது 40 சதவிகிதம் இந்த நீர் பிரச்சணைக்கு காரணம் நீர்வள நிர்வாகமே அன்றி நீர்வள ஆதாரம் இல்லை. நகரங்களில் நீர்த்தேவைக்கு 72-99சதவிகிதம் வரை நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 24 மணி நேரமும் நீர் கிடைக்கும் போது
இந்தியாவில் 5-6 மணிநேரமே கிடைக்கிறது. நீர் நிர்வாகத்தில் 90 சதவிகிதம் நிதிச்செலவு நீர் விநியோகத்திற்கே ஆகின்றது. எனவே நகரங்களில் சிக்கன நீர்பயன்பாட்டிற்கு திட்டமிடுதல் அவசியம்.

காரணி:-
#நகர்மயமாதல்

அடிப்படைக்காரணிகள்:-
#கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்தல்

சிக்கல்கள்:-
# நகரங்களில் நீர்த்தட்டுப்பாடு

# பாதுகாப்பற்ற குடிநீர்

# குடிநீருக்கு அதிக விலை

தீர்வுகள்:-
# கிராமங்களில் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கி மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்க வேண்டும்.

# நீர் விநியோகத்திட்டங்களை செம்மைப்படுத்துதல்,

ஈ.முடிவுரை:-

கணிக்க முடியாத மழையளவு, வறட்சி, வெள்ளம் ஆகியவற்றின் மூலம் உலக வெப்பமயமாதலின் விளைவுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்கும் போது ஏற்படும் கூடுதல் நீர்த்தேவையை நிலம், நீர், பயிர் இவற்றின்உற்பத்தி திறனை உயர்த்துவதால் மட்டுமே ஈடுகட்ட இயலும். நிலத்தடி நீர் என்ற சொல்லுக்கு தனிப்பட பொருள்
கொள்வதைக்காட்டிலும்கவனத்துடன் கையாள வேண்டிய நீர்வள ஆதாரம் என்று பொதுப்பட பொருள் கொள்வதே சாலச்சிறந்தது. எனவே மிக அரிதான நீர்வளத்தைசேமிப்பது.. நியாயமாக பங்கிடுவது, திறனுள்ள முறையில் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பது ஆகியவற்றில் மனித சமுதாயம் அக்கறையுடன் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான இயற்கை வளமானநீர்வளத்தை நம் சந்ததியினருக்கு மாசற்றதாக விட்டுச்செல்ல சமுதாய பொறுப்புள்ள ஒவ்வொரு மனிதனும் உறுதிகொள்ள வேண்டும்.

சமுதாய பொறுப்புள்ளவரா நீங்கள்?

Advertisements
This entry was posted in 2010, அறிவியல், நிலத்தடி நீர் சிக்கல்களும் அறிவியல் தீர்வும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s