இந்தியகூட்டமைப்பில் தமிழரின் நிலை-அறிவழகன்

மனித இனம் கடந்துவந்த பாதை மிகநீளமானதாகவும், கடும்நெருக்கடிகள் நிரம்பியதாகவும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.ஆதிமனிதன் தனது நிலையான இருப்பிட வாழ்க்கையைக் குகைகளிலும், ஆற்றுப்படுகைகளிலும் தொடங்கியபோது ,இயற்கை அவனது பாதுகாப்பான வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கிக்கொண்டே இருந்தது மட்டுமன்றி அவனது இருப்பை மிகக் கடினமானதாகவும் மாற்றி இருந்தது. மழை,வெயில்,மாற்று உயிர்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள்,பேரழிவுகள் இவற்றை எல்லாம் கடந்து மனிதன் வரலாற்றில் நீண்ட தொலைவைக் கடந்துவந்திருக்கிறான்,அரண்களை அமைத்துக்கொண்டும், அறிவாற்றலைப் பயன்படுத்தியும், உயிர் வாழ்க்கையின் ஆதாரங்களை சேகரித்துக்கொண்டும் இன்றைய நவீனமனிதன் ஒருபாதுகாப்பான ஆளுமை நிறைந்த உயிராக மாற்றம் அடைந்திருக்கிறான், எல்லா உயிர்களையும்விடத் தான் உயர்ந்த பண்புகளையும், தகுதிகளையும் பெற்று இருப்பதாக மனிதன் தன்னை உருவகப்படுத்திக்கொண்டு இயற்கையின் ஒருபகுதியாக இருக்கவேண்டிய நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இயற்கையை அதன் ஒழுங்குகளைக் கட்டுப்படுத்துகிற ஆற்றலாக மாறிஇருக்கிறான், இத்தகைய மாற்றம் இரண்டு வெளிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது, புறக்காரணிகளால் உண்டாகிற தன்னிச்சையான மாற்றங்கள்,தனிமனித மனத்தின் அகவெளிகளில் நிகழ்கிற நுண்ணிய மாற்றங்கள்.இவை இரண்டும் இணைந்து இன்றைய நவீனமனிதனின் இருப்பாக மாறிஇருக்கிறது, தனிமனித மனதின் ஆளுமை வேகமே இன்றைய நவீன உலகின் சிறப்பாகவும், அதே வேளையில் கடும் சிக்கலாகவும் மாறிஇருக்கிறது.

மனிதமனத்தின் இருகூறுகள்:

மனிதமனம் தன்னுடைய இருப்பு,தனது இருப்புக்கான வாய்ப்புகள்,தன்னைப் பற்றிய மேன்மையான உருவகம், இவற்றின் அடிப்படையில் உரிமைகளை நோக்கியும்,உரிமைகளுக்கான போராட்டங்களை நோக்கியும் உந்தித்தள்ளப்படுகிறது,நிலம் மற்றும் நிலம் சார்ந்த பொருட்களே தனிமனித இயல்பை மட்டுமன்றிச் சமூக மனநிலையையும் மாற்றி அமைக்கும் வல்லமைகொண்ட கருவிகளாகிறது. நிலமும்,அது சார்ந்த விளைபொருட்களும் தனிமனிதனின் அவன்சார்ந்த குடும்பத்தின் வசிப்பிட மற்றும் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதுடன் அவனுடைய இருப்பை ஒரு பாதுகாப்பான சூழலுக்குள் கொண்டுவரும் காரணியாக இருப்பதால் தன்னிச்சையாக மனிதமனம் நிலஉரிமை நோக்கிய அல்லது பொருள் உரிமை நோக்கிய ஒரு பயணத்தைத் தேர்வுசெய்து சமூகத்தையும், இனக்குழுக்களையும் உருவாக்கிக்கொண்டது,தனிமனித மனத்தின் தேவைகள் நிறைவுபெற்று விஞ்சிய பொழுதில் இரண்டு வேறுவிதமான மனநிலை தோற்றம்பெறுகிறது, ஏகபோக உரிமைகளை நோக்கிய மனநிலை பொருள்குவிப்பு,நிலஉடமை,மேலாதிக்கமனநிலை,ஏனைய உயிர்களை அழுத்தி தனது தேவைகளை எளிதாக்கும் முயற்சி என்று ஒருபகுதியும், சமஉரிமை,பகிர்தல்,உழைப்பும் அதற்கேற்ற பயனும் பெறுதல் என்கிற முற்றிலும் மாறுப்பட்ட இன்னொரு பகுதியும் கோட்பாடுகளாகவும், சமூக மனநிலை சார்ந்த இயக்கமாகவும் மாறி வளர்ச்சிஅடைகின்றன.ஏற்றதாழ்வுகளும்,வர்க்கபேதங்களும் பொருள்இருப்பு,மற்றும் நிலஉரிமை அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டே உலகெங்கும் பரவத்துவங்கியது.

சமூகத்தின்ஒருங்கிணைவும், தேசியத்தோற்றமும்:

தனக்கும், தன்னைச்சார்ந்து இயங்குகிற குடும்பத்திற்கும் விஞ்சிய உணவு மற்றும் பொருட்தேவைகள் வளரத்து வங்கிய மனிதக்குழுக்களின் ஆவலை நிறைவுசெய்து வரைமுறைகளும், திட்டமிடுதலுமான ஒரு வாழ்க்கை முறையை மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தன, ஒரேமாதிரியான உணவுமுறைகளையும்,பழக்கவழக்கங்களையும் கொண்ட மனிதன் தனது இயல்புணர்வுகளை வெளிப்படுத்தவும், தொடர்புகொள்ளவும் குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளை அடையாளப்படுத்திக்கொள்கிறான்,அடையாளம் செய்யப்பட்டஒலிக்குறிப்புகளைத் தொடர்ச்சியாக மனிதன் கையாளத் துவங்கியபோது ஒத்திசைவான அந்த ஓசைக்குறிப்புகள் மொழியாக மாற்றம்கொள்ளத்துவங்குகின்றன, ஒரேமாதிரியான ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்தத் துவங்கிய மனிதக்குழுக்களின் அடையாளம் இனமாக அடையாளம்பெறத்துவங்கியது, இத்தகைய இனக்குழுக்கள் பல்கிப்பெருகியபோது மனிதர்களுக்கு இடையிலான தொலைவும், இடைவெளியும்,பிரிவும் வரிவடிவத்தின் தேவையை உருவாக்கியது,வரிவடிவங்கள் தொலைவில் இருக்கிற இன்னொரு மனிதனோடு இணைப்பையும், உறவுநிலைகளை வலுப்படுத்தும் மூலமாகவும் மாற்றம்பெறுகிறது.ஆதிமனிதன் தனது காட்டு வாழ்க்கைமுறைகளில் இருந்து நாகரீக முறைகளுக்குள் காலடிவைக்க வரிவடிவங்களும், அதன் விளைபொருளான மொழியும் பேராற்றல் மிகுந்த கருவியாக மாற்றம் கண்டது. ஆதிமனிதனின் கருவியாக இருந்தமொழி, கால ஓட்டத்தில் சமூக இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலாக மாறிப்போனதை நமக்குள் இருக்கிற ஆதிமனிதன் இன்றளவும் வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

மொழியும், மனிதனும்:

மொழி மனிதனை அடையாளம் செய்தது,மொழி மனித மனங்களை உழவுசெய்து பண்படுத்தியது,மொழி மனித மனத்தை மிகப்பெரிய எழுச்சியுறச் செய்து வரலாற்றின் பாதை முழுவதையும் அடைத்துக்கொண்டு தனதாக்கியது. மனித மனத்தின் தேவைகளை உணர்த்துகிற உடனடி ஊடகமாக மொழி மாற்றம் அடைந்தது, மனித இயல்புணர்வுகளுக்குத் தேவையான பொருளைப் போலவே மனிதமனதின் அகநுட்பத் தேவையாக மொழிமாற்றம்கண்டது, நாகரீக உலகில் தனி மனிதனிடத்தில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு மொழியின் பேராற்றல் இனம்காணப்பட்டது. குழுக்களாகவும்,இனங்களாகவும் இணைந்துகிடந்த மனித உயிர்களை தேசியத்தை நோக்கியும்,ஆட்சி அதிகாரங்களை நோக்கியும் மொழிவழி நடத்தியது,மொழியின் வழியாக மனிதன் ஏனைய மனிதக்குழுக்களின் பண்புகளை,அவர்களின் அறிவாற்றலை,அவர்களின் தொழில்நுட்பங்களை,அவர்களின் அறிவாற்றலை,உடல்திறனை, நிலப்பரப்புகளை, பொருள் ஈட்டுதிறன்களை இப்படி எல்லாவற்றையும் அறிந்துகொள்ளத் துவங்கினான். வேற்று மனிதக்குழுக்களை ஆளும்திறனை,போரிடும் வல்லமையை இன்னும் பலவற்றை மொழியின் வழியாக அறிந்துகொண்டு மனிதன் பயணித்த போது தன்னிச்சையாக தேசியம் என்கிற எல்லைகளைக் கண்டடைகிறான்,பின்பு வெவ்வேறு மொழிகளைப்பேசுகிற மனிதக்குழுக்களை ஒற்றைக்குடையில் கொண்டுவருகிற நிலைவரை தேசியம் என்கிற கோட்பாடு வலுப்பெற்று ஒற்றைத்தேசியம் என்கிற பொருளாதார அடிப்படை சார்ந்த வடிவத்தை மனிதஇனத்தின் பகுதியாக அகமனம் பெற்றுக்கொள்ளத்துடிக்கிறது.

இருவேறுபட்ட தனிமனி தமனநிலையும், அதன் மூலமாக உருவாக்கம்பெற்ற கோட்பாடுகளுமே இன்றைய நவீன உலகின் போக்கைமுடிவுசெய்கின்றன. ஒன்று ஏகபோக உரிமைகளை நோக்கிப்பயணம் செய்கிறமனிதமனமும், அதன் சமூகஇயக்கமும்,இன்னொன்று சமஉரிமைகளை நோக்கிப்பயணம் செய்கிற மனிதமனமும் அதன் சமூகஇயக்கமும். உலகவரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் இவ்விரண்டு மனிதமனங்களுக்கு இடையிலான போராட்டங்களே பெரும்பங்குவகிக்கின்றன.மனிதமனதின் போக்கு மொழியின் வழியாகவும், கலை,கலாச்சார இயக்கங்களின் ழியாகவும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஏகபோகச் சிந்தனைகளால் வடிவமைக்கப்பட்ட மனிதமனதின் ஊடாக வெளிப்பட்ட சமூகஇயக்கம், தங்களுக்கான சட்டதிட்டங்களை,கொள்கைகளை வகுத்துக்கொண்டபோது குறிப்பிட்ட இனக்குழுக்களின்,மொழிக்குழுக்களின் தேவைகளை நிறைவு செய்துகொண்டு சொகுசான, உடல் உழைப்புக் குறைந்த வாழ்க்கை முறையைத் தனக்குக் கிடைக்குமாறுமனிதன் வடிவமைத்துக்கொண்டான், மொழியை அதற்கான கருவியாகவும் அவன்பயன்படுத்திக்கொண்டான். வர்க்கப்பிரிவுகளும்,சாதிப்பிரிவுகளும்,முரண்களும் இத்தகைய ஏகபோகச் சிந்தனை வடிவங்களின் விளைபொருட்களாயின. மதம், மனிதக்குழுக்களின் உருவாக்கமாகவோ, விளைபொருளாகவோ இல்லாமல் மனிதமனதின் அகவுணர்வுத் தேவைகளுக்கான ஒரு வடிகாலாகவே தோற்றம் பெற்று வளரத்துவங்கியது,ஏகபோகச் சிந்தனை வடிவங்களின் உள்ளீடுகளை மதங்களுக்குள் செலுத்தி மனித இனத்தின் முதலாளி வர்க்கம் உடல் உழைப்பையும், பொருள் உற்பத்தியையும் உறிஞ்சிக்குடிக்கத் துவங்கியது.தொழிற்புரட்சிக் காலகட்டத்தின் பின்னர் உருவகம்பெற்ற எந்த ஒரு புதிய மதத்தின் தோற்றமும்,ஏற்கனவே உருவாக்கி வளர்ச்சி அடைந்திருந்த மதமொன்றின் கிளையாகவோ, திருத்தம் செய்யப்பட்ட இயக்கமாகவோ இருப்பதை வைத்து நாம் அதனை உறுதி செய்துகொள்ளமுடியும்.

தமிழினத்தின்அடையாளம்:

உலகின் ஏனைய மொழிவாரித் தேசியங்களில் காணக்கிடைக்கிற பொருள் மற்றும் வணிக அடையாளங்களை நவீனத் தமிழ்தேசியம் பெற்றிருக்கவில்லை, ஆங்கிலமொழித் தேசியங்களின் மிகப்பெரிய அடையாளமாகப் பொருள்ஈட்டலும், மேலாதிக்க உணர்வும் கண்டறியப்பட்டதைப் போலத் தமிழ்த்தேசிய அடையாளங்கள் நிலைகொண்டிருக்கவில்லை,மாறாக சமஉரிமை நோக்கோடு கூடிய பல்வேறு இலக்கியச்சுட்டல்களை, பதிவுகளை, கலை கலாச்சார வெளிப்பாடுகளைக் கொண்டதாகவே தொழிற்புரட்சிக்கு முந்தைய தமிழ் இனக்குழு மற்றும் நிலப்பரப்பு அடையாளம் காணப்பெறுகிறது.பண்டைத் தமிழ்மரபுகளின் கூறுகளை வரலாற்று இயக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தும்போது சோழமன்னர்களின் இயக்கம் பெரிய அளவில் ஏகபோக உரிமைகளுக்கான படையெடுப்புகளை, ஆளுமை வீரியத்தைக் கொண்டதாக அறியப்படுகிறது,வேறெந்த அரசுகளும்,காலமும் தமிழ்மக்களின் அரசியல் வெளிகளில் ஏகபோகத்தை நோக்கிய மிகவேகமான நகர்வை மேற்கொண்டதாகத் தெரியவில்லை, தனது தேவைகளுக்கு அதிகமான உணவை, பொருளை,நிலங்களை, உரிமைகளை பகிர்ந்து வாழ்தலே அறம்சார்ந்த நலவாழ்க்கை முறை என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழ்மொழி பேசும் இனக்குழுக்கள் ஆசியப்பரப்பில்அறியப்படுகிறார்கள், இதற்கான மொழிவழியிலான சான்றுகளை,வரலாற்றுப் பதிவுகளை நாம் சங்ககாலம் தொடங்கி இன்றைய நவீனத் தமிழ்இலக்கியம் வரையில் அறிந்துகொள்ள இயலும்.தனியான மிகநுட்பமான அகவுணர்வுக் குறியீடுகள் கொண்ட முதிர்ந்த,நெகிழ்வான வாழ்க்கை முறைகளை தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்தார்கள், பல்வேறு புறக்காரணிகள் இப்படியான ஒரு சமூக மனநிலையை சிதைவுறச்செய்தன, மாற்று இனக்குழுக்களின் அதிகாரக் கைப்பற்றல், நில ஆக்கிரமிப்பால் நிகழ்ந்த உழைப்புச்சுரண்டல், சிலை வழிபாட்டுமுறை, மத நம்பிக்கைகளின் தீவிரத்தன்மை, ஏகபோக உரிமைகளை நல்லறமாகச் சித்தரித்த குருகுலக்கல்விமுறைகள், பொருள் ஈட்டுதலின்போதான பண்பாட்டுச் சிதைவுகள்,அறிவுத்தளங்களில் நிகழ்ந்த வன்முறை போன்றவை தமிழ் இனக்குழுக்களின் சிதைவுக்கான இன்றியமையாத சிலகாரணிகள்.இத்தகைய புறக்காரணிகள் உலக இயக்கத்தின் அடிநாதமாக இருந்து சமூகமனதை மாற்றி அமைக்கத்துவங்கின, தேசிய எழுச்சிபோன்ற சமூகமனதின் தேடல்கள் இல்லாத தமிழ்ச்சமூகத்தின் இருப்பில் வெவ்வேறு புறக்காரணிகள் உள்ளீடு செய்த தற்காலிக எழுச்சிநிலை மட்டுமே கண்டறியப்படுகிறது, இன்றைய நவீனத்தமிழ் இளைஞனிடத்தில் காணப்படுகிற இந்திய தேசிய எழுச்சிநிலைதான் தமிழ்மொழி பேசுகிற இனக்குழுவின் மிகத்தீவிரமான மனஎழுச்சிநிலையாக அடையாளம் காணப்படுகிறது.அதேவேளை இந்த எழுச்சிநிலை சில நன்மைகளை வழங்கியது என்கிற பொதுவான கருத்தியலைத் தாண்டி தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு சிக்கல் மிகுந்த வாழ்க்கை முறைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பதை நாம் புதியதலைமுறைக்கு உணர்த்தவேண்டியது அவசியமானதாகிறது. காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய தமிழ் மக்களின் வாழ்க்கைநிலை பல்வேறு கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது, வர்ணக்கோட்பாடுகள் மிகத்தீவிரமாக உள்நுழையத் துவங்கி சமூகமனத்தின் நிலைப்பாடுகளை மிகப்பெரிய சீரழிவிற்குள் கொண்டுசென்றது மட்டுமன்றி, ஆதிக்குடிகளை அடிமைகளாகவும், இடம்பெயர்ந்த மாற்று இனக்குழுக்களை உயர்வானவர்கலாகவும் சித்தரித்த வரலாற்று,இலக்கியப்பிழைகள் மிகவேகமாக சமூகவெளிகளில் பரவத்துவங்கிஇருந்தன, சாதீய அடக்குமுறைகளும், வாழ்க்கை முறையும் வர்க்கபேதத்தின் மாற்று வடிவமாக வளரத்துவங்கிஇருந்தது,இவற்றை எதிர்த்து ஒலிக்கத் துவங்கிய குரல்களின் தொகுப்பு இயக்கங்கள்,ஒட்டுமொத்தக் காலனிஆதிக்கத்துக்கு எதிரான பெரும் கூச்சலில் கரைந்துபோயிருந்தன.காந்தியம் போன்ற இந்திய இந்தியதேசக் கட்டமைப்பை வலிமையுறச் செய்யும் முதலாளித்துவத்தின் கரங்கள்,மேலாதிக்க ஆற்றல் நிரம்பிஇருந்த, ஏவல் அடிமைகளின் கரங்களாக மாற்றம்கண்டிருந்தன, வெகுநுட்பமாகவும்,வேறுவழியின்றியும் காலனி ஆதிக்க எதிர்ப்புநிலை அரசியல் தேசியஎழுச்சியாக மாற்றம் கனத்துவங்கியது. பல்வேறு மொழிக்குழுக்கள், இனக்குழுக்கள்,பண்பாட்டு விழுமியங்கள் ஒற்றைக்குடையில் அடைக்கப்பட்டு விடுதலை முத்திரைகுத்தப்பட்டன, இந்திய யூனியனுக்குள் ஒரே இரவில் தனித்தனியான குழுக்கள் சிறையடைக்கப்பட்டன, இலங்கைத் தீவில் நிலைகொண்டிருந்த மூன்று வெவ்வேறு தேசியஇனங்கள் ஒரே மூட்டையாகக்கட்டப்பட்டன.

திராவிடஇயக்கங்களின் தோற்றம்:

காலனி ஆதிக்க எதிர்ப்பு எழுச்சிநிலை ஒரே இரவில் தேசிய எழுச்சியாகப் புத்துருவம் கொண்டது மட்டுமன்றி,சிக்கலான அரசியல்,பொருளாதாரம், பண்பாட்டு அடிப்படை மரபுகளைத் தகர்த்து எறிந்தது, தன்னெழுச்சியும், அறிவாற்றலும் நிரம்பி இருந்த தமிழ்மொழி பேசும் மக்களின் மீது வர்ணம், வர்க்கம் தவிர்த்த ஒரு புதிய தேசிய உளவியல் போர்தொடுக்கப்பட்டு இரண்டு மூன்று பதின்ஆண்டுகளில் வெற்றியும்காணப்பட்டது. தொடர்புகள்அற்றவரலாற்றுநிகழ்வுகளையும்,பயன்கள் இல்லாத கருத்தியல் இயக்கங்களையும் தமிழ்ச்சமூகம் தனக்குள் உள்ளீடு செய்துகொள்ளப் பழகியது.முதலாளித்துவத்தின் சின்னங்களாகப் புதிய தமிழ்ச்சமூகம் உருவாக்கம் பெறத்துவங்கியது .தாய்மொழி சிதைக்கப்படுவதைக் கண்டு நகைக்கும் இனமாகவும், ஆன்மீகத்தின் வாயிலில் உறைந்து போன சமூகஇயக்கமாகவும், நவீன முதலாளிகளின் பண்ணை அடிமைகளாகவும், அரசியல் விழிப்புணர்வு அற்ற மந்தை மனப்போக்குடன் கூலித்தொழில் வாய்ப்புகளைப் பெருமையாக எண்ணுகிற புதியதலைமுறைத் தமிழர்கள் உருமாற்றமடைந்தார்கள், கருத்தியல்விடுதலையையும், சுய எழுச்சிகொள்கிற கல்விமுறையும் மட்டுறுக்கப்பட்ட மந்த மானநிலைக்குத் தமிழர்கள் மாறி இருந்த நிலையில் திராவிட இயக்கங்களின் தேவைஉருவானது.

திராவிட இயக்கங்களின் வருகை தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியாகவே துவக்கம்கொண்டது, மூர்க்கமான, வெகுதீவிரமான எதிர்ப்பு இயக்கங்கங்களின் குவிக்கப்பட்ட தமிழ்மக்களின் சமஉரிமை மனித மனத்தின்வெளிப்பாடு “தந்தைபெரியார்”, பெரியாரின் காலகட்டத்தில் நிகழ்ந்த தீவிரமான போராட்டங்களும், இயக்கங்களும் நீர்த்துப்போயிருந்த தமிழ்மக்களின் பண்பாட்டு, அரசியல் விழுதுகளைச் சீரமைக்கத் துவங்கிஇருந்தன. ஒடுக்கப்பட்டு அடிமை மனநிலையில் இருந்த ஆதித்தமிழனின் தொடர்ச்சியில் அவனது அகவெளியில் ஒரு புதியநம்பிக்கையை, விடுதலை பெற்ற சமஉரிமை வாழ்க்கை முறை பற்றிய கனவுகளைத் “தந்தைபெரியார்” உயிர் கொள்ளச்செய்தார், கருத்தியல் உள்ளீடுகளை ஊடகங்களின் வாயிலாக அவர் முடுக்கிவிட்டிருந்தார், மாற்று மதங்களைப் பற்றிய பாதைகளைத் தேர்வுசெய்த “அயோத்திதாசப்பண்டிதர்” போன்றவர்களின் இயக்கத்தை விடவும் நம்பிக்கைவாய்ந்த, வீரியம் மிகுந்த வெகுமக்களின் இயக்கமாகப் பெரியாரின் திராவிட இயக்கம் இருந்ததற்கு அவரது மூர்க்கமான போராட்டகுணமும், எளிமையும் காரணமாக அமைந்தன. காலனிஆதிக்க விடுதலைக்குப் பின்னரான அரசியல் இயக்கங்கள் அத்தகைய ஒரு எழுச்சிமிகுந்த பயணத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தொய்வடையச் செய்தன.மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட குறைவான பயனற்ற அதிகாரவரம்புகளும், நடுவண் அரசின் மேலாதிக்க நிலைப்பாடும் தமிழ் இனக்குழுவின் அரசியல் அடையாளமாக மாற்றம் காணவேண்டிய,திராவிட இயக்கங்களின் அடிப்படையை வீழ்த்தி முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன, தொடர்ச்சியான தனிப்புகழ்சிகளையும்,மேலாதிக்க மனநிலையையும் இந்திய தேசிய எழுச்சி இடம் இருந்து கற்றுக்கொண்ட தமிழக அரசியல் இயக்கங்கள் முடியாட்சி மாதிரியான எந்தக் கருத்தியல் தெளிவும் இல்லாத நீர்ப்புநிலையை நோக்கி மீண்டும் தங்கள் பயணத்தை எதிர்த்திசையில் செய்யத்துவங்கின. பெரியாருக்குப் பின்னரான திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இவற்றின் தொடர்ச்சியும் விளைபொருளுமான தலித்மக்களின் இயக்கங்களாகிய புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவையும் கூடத் தனிமனித வழிபாடுகளையும், சுவரெழுத்துப் புரட்சிகளையும் நோக்கித் தங்களைத் திசை திருப்பிக்கொண்டுவிட்டன, அடுத்த தலைமுறை இளைஞர்களின் சிந்தனைத்திறனையும்,அறிவாற்றலையும் மேம்படுத்தும்எந்த ஒரு திட்டங்களையும் முன்னெடுக்காத இவ்வியக்கங்களின் பயணம் இலவசங்களில் முடங்கிவிட்டது மட்டுமன்றி இலவச மனநிலையில் மக்களையும் முடக்கியது.

ஈழப்போரும், அதன் தாக்கமும்:

இப்படியான ஒரு சிக்கலான காலகட்டத்தில் தமிழர்களின் புதிய நம்பிக்கையாகவும், புரட்சியாகவும் அடையாளம் காணப்பட்டது ஈழத்தமிழ்மக்களின் அறுபது ஆண்டுகாலப் போராட்டம், சமஉரிமை மனநிலையையும், சுயமரியாதையையும் மையப்படுத்தி நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈழப்போர் தமிழர்களின் வரலாற்று மரபுகளை மீண்டுமொருமுறை மீள்கட்டுமானம்செய்தது, அறப்போரட்டங்களில் துவங்கி, ஆயுதப்போராட்டங்களில் எழுச்சியும் அடையாளமும்பெற்று,நிகழ்காலத்தின் மிகப்பெரும் மனிதப்பேரழிவைச் சந்தித்த பின்னரும் மாற்று வழிகளில் தஞ்சம்அடைந்து உலகெங்கும் புதியதலைமுறைத் தமிழ்இளைஞர்களின் உள்ளங்களில் புதியமாற்றங்களை ஈழப்போர் உண்டாக்கிஇருக்கிறது, ஈழப்போராட்டமே தமிழர்களின் தனித்துவமான சமஉரிமை மனநிலையையும், அரசியல்,கலை,கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் தக்கவைத்துக்கொள்ள எஞ்சிஇருக்கும் ஒரேஆயுதமாகும், தந்தைசெல்வாவின் அறப்போராட்டங்கள் சிங்களப் பேராதிக்கவாதிகளால் அலட்சியம் செய்யப்பட்டபோது காலத்தின் தேவையாகவும் வழிமுறையாகவும் உணரப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அளப்பரிய உயிர்வீழ்ச்சியையும், படைவலிமை இழப்பையும் உண்டாக்கி இருந்தாலும் நவீன உலகின் ஒற்றை மயமாக்கப்படும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மூர்க்கமான எதிரியாக அடையாளம்காணப்பட்டது, பல்வேறு முதலாளித்துவத் தேசியங்கள், ஒரு “மாதிரிவடிவமாக” உருவகம் பெற்று நிலை கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தின் இருப்பை முழுமூச்சாக எதிர்க்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைச்சாளரசந்தைப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கொடுக்கும் இந்தியதேசியமும்,அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கும் பொதுவுடமைப் போர்வையிலான ஏகபோக உரிமைக்கோட்பாட்டுக்கு மிகஅருகில் இருக்கும் சீனமும் இந்த மாதிரித் தமிழ்தேசிய அமைப்பை தங்களின் மண்டல இயக்கங்களுக்கு நிகழ்ந்த உறுத்தலாகப் பார்க்கத்துவங்கின, உலக முதலாளித்துவத்தின் முகவர்களும், மொழிவழித் தேசிய இனங்களின் எதிரிகளும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்தப் போரை இலங்கை என்கிற பன்னாட்டு அடிமை அரசாங்கம் நடத்த வழிவகுத்தன, ஒரு ஆதிக்குடியின் வில், அம்புப் போருக்கு எதிரான பன்னாட்டு முதலாளித்துவம் நடத்திய போர் ஈழப்போர். சில தவறான கோட்பாட்டு வழிமுறைகளும், அரசியல் நெகிழ்வற்ற இறுக்கமும் ஈழ ஆயுதப்போரை வீழ்த்திவிட்டன என்றாலும், வீழ்த்தவே முடியாத அளவுக்கு ஒருஅ ரசியல் விழிப்புணர்வையும், கோட்பாட்டு வெளிச்சத்தையும் அந்தப் பேரழிவில் இருந்துதான் நாம் கற்றுக்கொண்டோம்.

தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பேரொளியை தமிழ் மக்களிடத்தில் கையளித்தது ஒற்றை மனிதனின் விடுதலை வேட்கையும், அவனது மரபுப் படையணிகளும்.பிரபாகரன் என்கிற அந்தத் தனிமனிதனின் வாழ்க்கையை கடந்த முப்பதாண்டு கால ஈழப்போரின் எந்தப்பகுதியில் இருந்தும் பிரிக்க இயலாது. ஆயுதப்போரின் வீழ்ச்சி ஒரு மிகப்பெரிய தொய்வுநிலையை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மட்டுமன்றி உலகத் தமிழ்மக்களின் அகவெளிகளிலும் உண்டாக்கி இருக்கிறது, ஆயினும், தமிழினம் இவ்வாறான பல்வேறு நேரடித்தாக்குதல்களை, பண்பாட்டுத்தாக்குதலை, பொருளாதார, அரசியல் தாக்குதல்களை கடந்த காலங்களில் சந்தித்தே வந்திருக்கிறது, பல்வேறு புறக்காரணிகளையும், அகச்சிக்கல்களையும் கடந்து தனது மரபுப் பண்பாட்டுக் கூறுகளையும்,மொழிவன்மையையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்தே வந்திருக்கிறது, ஈழப்போர் இனி அறிவுத்தளங்களிலும், அரசியல்தளங்களிலும் முழுவேகத்தோடு நடைபெற்றாக வேண்டிய அழுத்தம் உலக இயக்கத்தில் படிந்துகிடக்கிறது, ஈழப்போரின் வெற்றி தோல்வி என்பது சம உரிமை மனநிலை கொண்ட நவீன மனிதனுக்கும், ஏகபோக உரிமை மனநிலை கொண்ட முதலாளித்துவ மனிதனுக்கும் இடையிலான போரின் வெற்றி தோல்வியை முடிவுசெய்யும். சமூக விலங்கான மனிதனின் இருப்புக்கான போராட்டம்தானே வாழ்க்கை, நாம் நல்லிருப்பை நோக்கி நம்பிக்கையோடு போரிடுவோம், ஏனென்றால் அறமே இறுதியில் வெல்லும்.

Advertisements
This entry was posted in இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை, மணற்கேணி 2010. Bookmark the permalink.

One Response to இந்தியகூட்டமைப்பில் தமிழரின் நிலை-அறிவழகன்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    தலைப்புக்கும் எழுதப் பட்ட விஷ்யத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்தியக் கூட்டமைப்பில் தமிழரின் நிலை பற்றி எழுதுவதை விட்டு விட்டு இலங்கை கூட்டமைப்பில் தமிழரின் நிலை என்று எழுதப் ப்ட்டது போல் தெரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s