இலவசத் திட்டங்கள்

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்
 
       “கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
       உண்பதூ மின்றிக் கெடும்.‍‍‍”  
 

என்ற வள்ளுவன் வார்த்தைகளுக்கிணங்க, உதவியாகச் செயல்படும் இலவசத்திட்டங்களைக் கண்டு பொறாமை கொண்டால், அது உணவுக்கும் உடைக்கும் கூட, அவனைச் சார்ந்திருப்போரையும் வழியின்றிச் செய்திடும்.எனினும், நல்லதொரு ஆய்வு, எந்தத்திட்ட‌த்தையும் இன்றைய காலகட்டமின்றி, பிற்கால சந்ததியினருக்கும் நன்மை கிடைக்குமா – வளர்ச்சிக்கு வழிகோளுமா என்ற வினாக்களுடன் மேற்கொண்டால், அதன் மூலம் சிறப்பான எண்ணங்கள் பிரதிபலிக்கும்.
 
வள்ளுவனே சொல்வது போல்,
 
                  “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
                   பெற்றான் பொருள்வைப் பழி”
 
அரிய தேவை – பசி என்று வந்தோரின் தேவையைத்  தீர்த்து வைப்பது, பிற்கால சேமிப்புக் கருவூலமாகக் கருதலாம். ஆனாலும் அவற்றின் நன்மை தீமைகளை அலசுதல்தான் சிறப்பு.

வாழ எண்ணி “இயலா நிலையால்”, “இல்லாமையால் தவிப்போர்க்கும்””துணையின்றி இருப்போர்க்கும்”, “கதியற்றிருப்போர்க்கும்”, “உழைத்தும் உருப்பட வ்ழியின்றி தடுமாறுவோர்க்கும்” உதவவும், ஆதரிக்கவும், வாழ வைக்கும் பண்போடு செயபட நினைப்பதுதான், ‘இலவசத்திட்டங்கள்’ என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது 

இலவசத் திட்டங்களின் பலனைப் பெறுவோறும் சீரிய உழைப்பளர்கள்தான், அவர்கள் எவரும் உழைக்க மறுப்பவர்களோ, உழைப்பை உதாசீனப்படுத்துபவர்களோ இல்லை என்ற கருத்தும் பரப்பட்டு வருகின்றது. “தலைமுறை பலவாக உழைத்து வாழும் குடும்பங்களில், ஒவ்வொரு வகையில் அவர்தம் வாழ்வில் மகிழ்ச்சி விளையவும், ஓய்வில் ஊற்சாகம் தோன்றவும், அவர்களது உழைப்பு நிறைவான பலன்களை விளைவிக்கவும் ஏதுவாகவே இலவசத்திட்ட்ங்கள் இருக்கின்றன” என்றதோர் கருத்தை, பண்பாளர்கள் சிலர் சொல்வதும் நம் காதுகளில் விழுகின்றது.

ந‌மது ஆய்வு, அவை உண்மையா என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய நிலயில் உள்ளது.

தேவைமிகு இலவசத் திட்டங்கள்:
 
1.’நல்ல விதை கிடைக்காது ‘வறண்ட’ நிலம் பார்க்கும் விவசாயி – அந்த விதை வாங்கும் வசதியற்ற நிலையில் கவலை கொள்ளும் ஏழை வேளாண் தொழிலின் நம்பிக்கை – விதை கிடைத்து பயிராக்கி அதன் பலனைப் பெறப்போகும் பல்வேறு மக்கள்’, என்கின்ற போது, அம்மாதிரி எந்த இலவசத்திட்டத்தையும் குறை சொல்லவோ, மாற்றுக்கருத்துக் கொள்ளவோ எவருக்கும் மனம் வருமா?. இலவச விதை என்பதை நினைத்துப் பாருங்கள். புதிய  விதைகளால் கிடைக்கும் நல்ல மகசூல் உணவுப்பற்றாக்குறைதீர வழிவகுக்குமன்றோ?
 
2.உரமின்றி விளைச்சல் பாதிக்கின்றதே என்று வாடும் விவசாயிக்கு இலவசமோ, மானியமோ எதுவாகவோ, உரம் போன்றவை கொடுத்து ஊக்குவிக்கும் இலவசத்திட்டத்தின் பலன் பற்றி மட்டுமே எண்ண எவருக்கும் மனம் வருமன்றோ?
 
3.நல்ல திறமையும் – உழைப்பும் இருந்தும் தரமான தேவையான நூல் கிடைக்காமல் வாடும், கைத்தறித்தொழிளாளிக்குத் தரும் இலவசத்திட்டத்தைப் பாராட்டாமல் இருப்போமாகில், நாம் வருங்கால சந்ததியினரை நல்ல ஆடையின்றிக் காணத் தயாராகி வருகிறோம் என்றல்லவா எண்ணம் கொள்ள வேண்டி வரும்.
 
4.வளரும் பருவத்தில் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆவலோடு உழைக்கும், ஏழைக்கு, அவர் மக்கள் எளிதாக இரவில் படிக்க இலவச மின்சாரம் தருவது, எதிகால சந்ததியினருக்குத் தரும் உற்சாகமும்,  நாட்டுக்குத் தரும் வளர்ச்சிப் பணி என்ற கருத்தில் மாற்றமுண்டோ?
 
5.காய்ந்த வயிறோடு படிக்க எண்ண்மிருந்தும், பசி மயக்கத்தால் படிப்பை விட்டுவிட்டு கூலித்தொழிலாளியாகப் போகவுள்ள மாணாக்கர்களுக்கு இலவச மதிய ஊணவு என்ற இலவசத் திட்டம்பற்றி கனவுத்திட்டம் என்ற்றல்லவோ சொல்லவெண்டும்?
 
6.வாடிய பயிருக்காக‌ உருகிய வள்ளளார் வாழ்ந்த நாடு இது. நீரின்றி வாடும் பயிருக்கு வாழ்வாதாரம் பெருகும் என்று நினைக்கின்ற நாட்டில் – எந்த இலவசத்திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை மெச்சவும், உதவவும் நடைமுறைப்படுத்த – நல்வழிப்படுத்த ஒற்றுமையுடன் செயல் படுவது அன்றோ, இலவசத்திட்டங்களின் வெற்றிக்கு வழிகோளும். “இலவச நீர் ஆதாரம் என்ற திட்டம்” யாரவது தீட்டுவார்களா?.
 
மேற்குறிப்பிட்ட இலவசத்திட்டங்கள் “உழைப்போர்க்கும் – நாட்டின் வாழ்வாதாரத்திற்குத் தேவைக்கும்” என்று கருதப்படுபவை எனலாம்.
 
7. குடிசைகூட இல்லாமல், மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து நனைந்தும் அல்லல் படுவோர், தங்கள் வாழ்வில் சற்றாவது ஆறுதலான இருப்பிடத்தில் குழைந்தைகளுடன் வாழ்ந்து, குழந்தைகளின் பிற்கால வாழ்விற்கு ஒரு வசதியை எற்படுத்தி, அவர்களின் வாழ்வில் வளத்தைப் பெறுவதற்கு இலவச வீட்டுத்திட்டம் வழிவகுக்கலாம்.
                                         “இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
                                          பெருமை பிறங்கிற் றுலகு”

என்று வள்ளுவர் வாய் நிறையச் சொல்லுவதைப் போல், நன்மை எது, தீமை எது என்று பாராமல்  எந்த இலவசத் திட்ட‌த்தையும் கொணர்பவர்கள்  பெருமைகுரியவர்கள்.
 
8.இலவச மருத்துவத் திட்டத்தின் பலன் தெரிவதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். மருத்துவமனைகளின் அதிகக் கட்டணங்கள், அணுக முடியாத மருத்துவர்களைக் கலந்து கொண்டு நோயின் தன்மை பற்றி அறியும் வாய்ப்பு இன்மை, புதுப்புதுப் பரிசோதனைகளின் “ஆளுமை”, ஆரோக்கியமற்ற உணவு வகைகளால் எளிதில் ஆட்கொள்ளும் நோயின் தாக்கம், இன்னும் தெளிவற்றுக் கிடக்கும் பற்பல சீற்றங்களால் அல்லல் படும் உண்மையான ஏழை மக்கள் பலன் அடைவார்களே என்று மனம் குளிர நினையாதோர் உண்டோ?

கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு எய்துவத்ற்கு முன்னும் பின்னுமாக ஆறு மாதங்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை அளிப்பது, அவர்களின் வயிற்றில் வளரும் சிசு, ஊனமொ, உடல்/மூளை வளர்ச்சிகுறையோ எதுவும் எய்தாமல், நோய் எதிப்பு சக்தி பெற்று நோய் நொடி வராமல் தடுக்க இந்த உதவி சிறப்பாக இருக்கும் என்ற கருத்தில் எவருக்கும் மாற்ற‌ம் இருக்காது என்று சிறப்பாக எண்ணலாம்.

இலவச 108 ஆம்புலன்ஸ் திட்டம் என்பதை மனதாற வரவேற்பதில் தவறில்லையே.
 
இந்த எட்டுத் திட்டங்களும் திறமையாகச் செயல்படுத்தப்படின், நிழலான வாழ்வு நிஜமாக மாற நல்ல வாய்ப்பாக அமையும். ஏழைகளின் வாழ்வில் சற்றுப் பூரிப்பும், வருங்கால‌ சந்ததியினருக்கு வளரும் வாய்ப்பாகவும் அமையும்.
 
கவுரத்திற்காகவும், பிரசாரத்திற்காகவும் செயல்படுத்தும்பொது சற்று நசுங்கும் இலவசத்  திட்டங்களாக அமைந்துவிடுகின்றன. கையூட்டு எதிபார்த்தல், தெரிந்தவர் – தெரியாதவர் பாகுபாடு இவையெல்லாம் திட்டத்திற்கு சீர்கேட்டை ஏற்படுத்துவதுபோல் அமைகின்றன. அரசியல்வாதிகளின் ஆதிக்கம், அவர்களின் ஆதங்கம் இவையெல்லாம் திட்டத்தின் முழுமையை நிலைகுலைய வைக்கின்றன.
 
பாதிப்பை நல்கும் இலவச திட்டங்கள்:
 
  1.ஊரின் பொதுவில், ஊராட்சியின் பங்களிப்பில், மன்றங்களில், சபை கூடுமிடங்களில், நூலகங்களில், இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி இருப்பின், அது பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
 
அதை விடுத்து, குடிசைகளுக்குத் தரும் வண்ணத்தொலைக் காட்சிப்பெட்டிகள் பற்பல வளத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைகின்றன. படிக்கும் மாணாக்கர் பற்றி எந்தக் கவலயும் இன்றி, சிறார்கள் “சிறிய” குடிசையில் சத்தமாக “அழவைக்கும்” கதைகளையே கொண்ட சீரியல்களைப் பார்த்துக் கொண்டு, வேலை நேரத்தை மறந்து மாய்வதைப் பார்க்கும்போது, இந்தத் திட்டம் தேவையா எனக் கேள்வி எழுகிறது. தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவுடன், அதனை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் “குடி”காரர்களாக மாறிக்கொண்டிருப்போரைக் காணும்போது கண்கள் கலங்குகின்றன.
 
தெரிந்தெடுக்கப்பட்ட சிலருக்கும், வசதிமிக்க சிலருக்கும் இத்திட்டத்தின் பலன் சென்றடைகிறது என்னும்போது சற்று மனத்தின் நெருடல் அதிகரிக்கின்றது.
 
2.முதியோர்க்கு அரசு தரும் மாதாந்திர வருவாய் பற்றிப் புகழ நினைத்தால், அதன் சீர்கேடுகள், நாட்டின் மானத்தையெ விலைபேசும் அளவில் உள்ளது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அஞ்சல் துறையைச் சார்ந்தோரை சி.பி.ஐ என்னும் மத்திய கண்காணிப்புத் துறை, இந்த முதியோர் இலவச பண பட்டுவாக்களில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதைக் கண்டுபிடித்து, சுற்றி வளைத்தது.
 
 இறந்தவர் இன்னும் இத்திட்டத்தின் பலனை அனுபவிக்கிறார் என்ற செய்தி, நம்மை நம்ப‌ மறுக்கிறது. நன்மைகளோடு, சீர்கேடுகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் “வயதானோர்க்கு” குடியிருப்பு கட்டி உதவிடுதல் நலம் எனத் தோன்றும்.
 
3.இலவச பம்ப்செட் திட்டம் என்பதை உளமாற வரவேற்க மனம் விரும்புகிறது. ஆனால், இலவச மின்சாரத்திற்கே  அடிக்கடி தொல்லை தரும் அதிகாரிகளால், தேவையான விவசாயிக்கு, தேவையான போழ்தில், பழுது (அடிக்கடி) வராத பப்செட் தர இயலுமா என்ற கேள்விகுறி, இத்திட்டத்தின்பால் உள்ள ஆர்வத்தை சீர்குலைக்கிறது. இது, வீண் பிரச்சாரத்திட்டம் என்று சிலர் சொல்வது உண்மையாகிவிடுமோ என அச்சப்பட வைக்கின்றது. இருக்கின்ற விவசாயிக்கே மின்சாரம் இல்லை, இதனிடையே இலவச மின்சாரமா? – பெரிய கேள்விதான். 
 
4,மாணாக்கர்களுக்கான இலவச பஸ் பாஸ் என்பதும், வரவேற்கத்தக்கதுபோல் இருக்கிறதென்றாலும், அதில் மலிந்து நிற்கும் சீர்கேடுகள், வெறுப்பைத் த‌ருகின்றன. “பஸ் பாஸ்” என்பதற்குப் பதில், கல்விக்கூடத்தில் சில வசதிகளைத் தந்து, மாணாக்கர்களை வகுப்புக்கு வரவழைக்கலாம். மாணவர்களுக்கு பயன்படுகிறது என்பதைவிட, அவர்கள் நேரத்தை செலவிடக்கூட பஸ்பாஸ் உதவுகிறது என்பது நெஞ்சேய் சூடாக்கும் செய்தி.
 
இலவச சீருடை, இலவச சைக்கிள், இலவச நோட்டுப் புத்தகங்கள் போன்றவை மேற்பார்வைக்கு சிறப்பாகத் தென்பட்டாலும், உழைத்து வாழ நினப்போரை கூர்மழுங்கவைக்கும் போக்குகளாக அமைகின்றன.
 5.கியாஸ் அடுப்பு இணைப்புடன் வழங்குவது, எரிபொருளாக விறகு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழல் செம்மைய்றவும் தாய்மார்கள் அடுப்பு ஊதும் தொல்லை தவிர்த்திடவும் உதவும் திட்டம் என்று விளம்பரப்படுத்துவது ஊண்மையிலேயே நியாயமா என்ற கேள்விதான் எழுகிறது. எத்துணை குடிசைவாழ் உழைப்பாளிகள் கியாஸ் ஊதி அடுப்புப் பற்றவைத்து இன்புறுகிறார்கள் என்று கணக்கிட்டால், கிடைக்கும் பதில், “வெறுமையை” உமிழ்வதாக அமைகிறது.

6.”திருமண உதவித்தொகையாகத்தரும் 25000 ரூபாய், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணுக்கு வாழ்வு கிடைக்கவும், பெற்றோரின் பெருக்கவலையை மாற்றவுமே உதவுகிறது. அந்த உதவி, மறைமுகமாக‍ த்ற்கொலைகளையும், ஏக்கத்தையும் தவிக்கிறது”., என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அந்தப்பெண்ணுக்கு உழைக்கும் எண்ணத்தை உருவாக்கி வேலையளிக்கும் திட்டம் அமைத்தால், த்ற்கொலை, ஏமாற்றம் எதுவும் நிகழாது என்பதல்லவோ உண்மை;
7.மாற்றுத் திறனாளிகட்கும் (உடல் ஊனமுற்றோருக்கும்), விதவைகளுக்கும் வழங்கும் இலவசத் திட்டம், அவர்களின் அன்றாட உணவுக்கு உதவுகிறது என்ற வீண் பிரசாரத்தை, அது முற்றிலும் தவறு, இன்றைய மாறுத்திறனாளிகள் தங்களாளும் பயனுள்ள பணிகளைச் செய்ய முடியும் என்று எண்ணுகிறார்கள். இந்த சொற்ப உதவி,  சோறு போடுமா என்று அவர்கள் கேட்பதை தெளிவாக உணரமுடிகிறது. 

8.விதைவைகட்குத் தரும் பணம்: மகன் அல்லது மகள் தயவில் வாழ்ந்து கொண்டு, அந்த மகன்/மகள் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டுப் பணம் பெறும் திட்டம் என்றல்லவோ இதனைச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த உண்மையை மறுப்பதற்கில்லை. 

 இலவச வேட்டி, படவை, தைப்பொங்கலுக்குப் பொங்கல் பொருட்கள் எல்லாம் உழைப்பின் வலிமையைச் சோதிப்பதாகத்தானே அமையும்.

முன்னேற்றம் காண முன்மாதிரி முயற்சி:

வளம் மிகுந்த நாட்டில், வளத்தைப் பெருக்கும் திட்டங்கள், தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டங்கள், தனி மனித வருவாயை வளர்க்கும் திட்டங்கள், வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்கள், உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற நிலை, ஒவ்வொருவருக்கும் ‘வேலை’ என்றில்லாவிட்டலும் – வீட்டில் ஒருவருக்குப் பணி என்னும் திட்டம்,பெண்களுக்குத் தனித்திட்டமிட்ட வேலை வாய்ப்பு என்பது போன்றவைதான் “பின்னால் நிகழும்” மோசமான விளைவுகளுக்குத் தீர்வாக இருக்கும். அதனை விடுத்து, பற்பல கோடிகளை வீணான, பிரச்சாரத் திட்டங்களுக்கு இரைத்தால், வளர்ச்சிக்கு ஒதுக்க அதிக பணம் இருக்காது. எவ்வளவுதான், கடன் பெற்றுத் திட்டமிட்டாலும், தேவையான வளர்ச்சித்திட்டங்களை நமது வருவாய் இன்றி நிறைவேற்ற இயலாது. தற்போது வரும் அந்நியச் செலவாணி வருவாய் நிரந்திரமல்ல.

ஒரு பேரழிவை, ஒரு சுனாமியைத் தாங்கும் சக்தி நம்மிடம் இல்லை. பல இலவசத்திட்டங்கள் அந்த சக்தியைத் தந்துவிட முடியாது. அதற்குத் தேவை உழைப்பு. அந்த உழைப்பால் கிடக்கும் முன்னேற்றமே, நமது சக்தியை மேம்படுத்தும்.
 
ஆர்வம் எழுந்த நமது இளஞர்கள், இன்று பல நாடுகளில் அந்த நாட்டு இளைஞர்களுக்கு சவாளாக விளங்குவதைக் காணுகிறோம். அவர்களை முன்மாதியாகக் கொண்டு, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு, புதிய குழைந்தைகளுக்கு ஊக்கமும், வசதியும் தரும் திட்டங்களே வளர்ச்சிக்கு சாத்தியமாக அமையும்.
 
தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி போன்றவற்றிற்கு எவ்வளவு, எம்மாதிரி செலவிட்டாலும், அது நாட்டின் எதிகாலத்தைச் செழுமையாக செதுக்குவதாக அமையும். அதுவின்றி தேவையற்ற சில இலவசத்திட்டங்கள், தனிமனிதர்களின் புகழ்பரப்பவும், சோம்பலை வளர்க்கவும், சிலருக்குத் தனிப்பட்ட வருவாயை ஏற்படுத்தவும், இலவசத் திட்டத்தை நோக்கிச்  செல்ல நேரத்தை வீணாக்கவும்,  இளைஞர்களை  இலவசக் கனவில் சுழன்றாடவைக்கவும், சிறார்களுக்கு இப்போதே இலவசம் பற்றிய தவறான எண்ணம் வளரவும், பெண்கள் தவறான நோக்கில் இந்த இலவசத் திட்டங்களுக்காக பொழுதை வீ ணாகச் செலவிடவும் பல சமயங்களில் அமைந்து விடுகிறது.
 
சில இலவசத் திட்டங்கள் வியாபாரிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவதை கண்கூடாகக் காண்கிறோம்.  ஏழை எளியோரைச்   சென்றடைவதைவிட, வியாபார நோக்கோடு செய்படுவோர்க்கு வாய்ப்புக் கொடுப்பதுபோல் அமைந்துவிடுகிறது.  இலவசத்திட்டம் தீட்டுவதைவிட, அதற்கு மிகுதியாக  விளம்பரம் செய்வதும், விழாவைத்து அதன் செலவை திட்டச்செலவைக்காட்டிலும் அதிகமாகச் செய்வதும் கூசச்செய்யும் வழிகளாகும். பல வல்லுனர்கள் சொவதுபோல், விவசாய நாடான, இந்த நாட்டில் விவசாய வளர்ச்சிக்கான வழிவகை கண்டு, நல்ல உழைப்பைத்த்ருவோரைக்  கொண்டு வேலை வாய்ப்பைத் தந்து, எழுச்சிமிகு உழைப்பளர்களைஉருவாக்குவதே பல இலவசத் திட்டங்களுக்கு மாற்றாக அமையும்.  
 
எனினும் நமது மக்கள் கடும்  உழைப்பாளர்கள். அவர்களின் உழைப்பை “நல்ல”  இலவசத் திட்டங்களோடு ஊக்கப்படுத்தினால், இனிமை மலர்ந்த, எழுச்சி மிகுந்த சமுதாயமாக நாம் நிற்போம்

M. A . Ramamoorthy

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s