எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் ?

பிரிவு : அரசியல் / சமூகம் ( அச )

தலைப்பு :  எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் ?

            

      சாதிப்பிரிவுகள் இந்த நாட்டின் இயற்கைப் பிரிவுகளைப் போன்றவை. காடு – மலை – நாடு – கடல் என்பன எப்படி உலகில் எல்லை வகுக்கப்பட்டுள்ளனவோ அப்படிப் படைக்கப் பட்டவைதான் சாதிப் பிரிவுகளும். அவற்றிற்குக் கட்டுப்பாடுகள் உண்டே தவிர உண்மையில் ஒடுக்கப் பட்ட உணர்வுகள் இல்லை. அவ்வுணர்வுகளை உருவாக்கியவன் மனிதன் தான். தன்னை உயர்த்திக் கொள்ள, தன் தகுதிகளை வெளீப்படுத்த, தன்னைத் தலைவனாக்கிக் கொள்ள அவன் கையாண்ட வழி முறைகளே, சாதிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழி வகுத்தன. 

            

     அரசியல் தெரிந்தவன் அரசனாகவும், ஆன்மீகம் அறிந்தவன் அந்தணனாகவும், வளர்தொழில் கை வந்தவன் வணிகனாகவும், வேளாண்தொழில் புரிபவன் வேளாளனாகவும் அமைந்தது தான் ஆதிச் சமுதாயம். இதில் உயர்வு தாழ்வு கற்பிக்கப் படவில்லை. கற்றறிந்தவன் மேலோனாகவும், கல்வி அறிவு இல்லாதவன் கீழோனாகவும் கருதப்பட்ட காலம் தான்  பண்டைக் காலம். இந்த வரைமுறை காலந்தோறும் வளர்ந்து, தொடர்ந்து உருமாறிய போது தான் சாதிகளுக்குள் கட்டுப்பாட்டு உணர்வுகள் உருமாறி ஒடுக்க உணர்வுகளாகத் தோன்ற ஆரம்பித்தன. 

  

                 மன்னராட்சிக் காலத்தில் ஒரு குடைக்கீழ் நாடு அரசாளப்பட்டது. அப்போதும் சாதியின் பெயரால் இவன் கற்கக் கூடாது – இவன் கோவில் பூசை செய்யக் கூடாது – இவன் அமைச்சியல் புரியக் கூடாது – இவன் மேடைகளில் அமரக் கூடாது என்பதை, கலாச்சார முலாம் பூசி ஒடுக்கி ஆளும் உணர்வை சட்ட திட்டங்களாக வகுத்து, அவற்றை மக்கள் மீறாமல் இருக்க வேதம் ஆக்கினர். ஆனால் வேதம் என்பது மனிதனைத் துன்பத்தில் இருந்து கை தூக்கி விடுவது. அதற்குப் பயன்படும் தூய்மையான அறிவே தெய்வம் என்பதை உணர்த்த மக்களுக்குக் கல்வி அறிவு தேவைப்பட்டது. அந்நிலையில் அறியாமையை அகற்றி அறிவு வழி காட்டிய ஆன்றோர் உயர்ந்தோரென மதிக்கப் பட்டனர். கல்வி அறிவு பெற இயலாத குடி மக்கள் ஒடுங்கினர். அறியாமை மிகுந்த பாமரன் அடிமட்டத்திலேயே நின்றான்.

          
    

               அன்பு வாழ்க்கை, அறவாழ்க்கை வாழ வேண்டும் என்றவள்ளுவனும் தான் கண்ட சமுதாயத்தில – கற்றவன், ஆற்றல் மிக்கவன், அரசாளத் தெரிந்தவன், ஆண்மை உடையவன், அடக்கமுடையவன், ஒழுக்கமுடையவன், அன்புடையவன், பொறாமையற்றவன், சினங்கொள்ளாதவன், உண்மை உரைப்பவன், உயிர்களைக் கொல்லாதவன் என்று மக்களை வகைப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இப்பண்புகள் மேலோங்கி இருப்பவன் உயர்ந்தோனாகவும், அவை இல்லாதவன் தாழ்ந்தோனாகவும் கருதப்பட்டான். ஒடுக்கப் பட்ட உணர்வுகள் அப்போது சாதியின் பெயரால் தோன்றத் துவங்கின. 

  

                  வீரமுரசறைந்த  விவேகானந்தர் “பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறுகள் செய்கிறான்” என்று அறிவுறுத்திய போது, சாதி சமயங்களற்ற ஒரு சமுதாயத்தைக் காண வேண்டும் என்ற துடிப்போடு செயல் பட்டார்.  இவர் கல்வி என்பது மனிதனை, அறவழிக்கு அழைத்துச் சென்று அவனை வாழ வைப்பதாக இருக்க வேண்டும் என்றார். அவனுக்கு வாழும் வழியைக் காட்டக் கூடியதாய் ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று சிந்தனை செய்தார். கட்டுப்பாடுகளால் அடக்கப் பட்ட மக்களைத் தட்டி எழுப்பிய விவேகானந்தர், ஒழுக்கத்தால் உயர்ந்தோர்களை கல்வி வழி காட்டிகள் என்றார். அதை அறியாத மக்களை வழி வகை தேடுபவர்கள் என்று காட்டி இருக்கிறார். இவை எல்லாம் அம்மக்களை முன்னேற்றுவதற்காக வகுக்கப்பட்ட பாதைகள். மக்கள் பாதை விதிகளூக்கு கட்டுப்பட வேண்டுமே தவிர பாதை விலகிச் செல்லக் கூடாதென்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.  

    

                 இந்தியாவின் இதயம் சிற்றூர்களில் வாழ்கிறது என்றகாந்தியடிகள் அடிமைப் பட்ட மக்களை உரிமை வாழ்வு பெறுவதற்காகப் போராட்ட முறைகளில் ஈடுபட வைத்தார். உரிமைக்கு முதற்படி, தடைகளைத் தகர்ப்பதுதான் என்று சமுதாயத்திற்கு எடுத்துரைத்தார். அவரது போராட்ட முறைகள் எல்லாம் மக்களை நெஞ்சு நிமிரச் செய்தன. ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழும் கூட்டமைப்புத் தான் சமுதாயம். அந்தச் சமுதாயம் உரிமை பெற்று உயர வேண்டும் எனறால் அதற்காக அமைக்கப்படும் சட்ட திட்டங்களைப் பின் பற்ற வேண்டும். அவை அடக்கு முறையைப் போல்,  முதலில் தோன்றும். ஆனால் அவை அடக்கு முறையன்று. ஒரு போராட்ட அமைப்பு திட்டமிட்டு வழி வகுக்கும் போது, அங்கு ஒரே ஒரு தலைமையும், அதன் கீழ் பல கிளைகளும் அமைவது இயல்பு. அந்த மரபுதான் ஒரு காலத்தில் மதம் – இனம் – சாதி என்ற பெயரால் தீண்டாமைக்கு வழி வகுக்கத் தொடங்கியது. அந்தத் தீண்டாமையைப் போக்கவே காந்தியடிகளைப் போன்ற தலைவர்கள் உருவாகினர். அவர்களின் போராட்டங்கள் சாதிகளின் ஒடுக்கப் பட்ட உணர்வுகளைத் தகற்க உதவின. 

    

                ஒரு நூற்றாண்டு வாழ்ந்த உயர்ந்த தலைவர்  பெரியார். அவர் சமுதாய மாற்றத்திற்காக, மறுமலர்ச்சிக்காகப் போராடிய புரட்சியாளர். மூட நம்பிக்கைகளைச் சாடிய பகுத்தறிவுப் பகலவன். அறியாமை மிக்க மக்கட் சமுதாயத்தை மாற்ற, மன்றாடியில் இருந்து மாபெரும் மேடைக்கு வந்தவர்.  ஈ வெ இராமசாமி நாயக்கர் என்று சாதிப் பெயரை தன் பெயரோடு  வைத்திருந்தாலும், சாதித்துக் காட்டியவர். வைக்கம் வீரரென்று போராடி மக்களை விழித்தெழச் செய்தவர். நகர் மன்றத் தலைவராய் நடு நிலையில் பணியாற்றி, மக்கள் நலம் கண்டவர்.  சமுதாய ஒழுக்கத்திற்காக கள்ளிறக்கும் தன் தென்னந்தோப்புகளைத் துறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய உரிமைக்காக ஓயாமல் போராடி, சமுதாயத்தை உயர்த்தியவர். இவரது வாழ்க்கை நமக்குக் காட்டுவது – மக்களின் வாழ்க்கை முறைக்கு ஆள்பவர்கள் வகுக்கும் கட்டுப்பாடுகள் அவர்களை ஒடுக்கியதையே ! அதை உணர்த்த இவர் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்தார் மக்களிடையே ! ஒடுக்கப்பட்டோர் அடக்கு முறைகளை எதிர்த்துப் போராட வலிமை பெற்றது பெரியாரைப் போன்றோரது சிந்தனைகளால் தான்.

             
    

                சாதியின் பெயரால் மக்கள் சதிராடப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்தவன்  பாரதி. பாதி வயதில் பாருலகைக் கடந்தாலும், வீதிக்கொரு சாதி இருப்பதைச் சாடாமல் சாடிச் சென்றவன். சாதிச் சின்னங்களான பூணுலைத் தானே அறுத்தெறிந்தவன். குடுமியினை வெட்டினான். மீசையினை வளர்த்தான். ஒடுக்கப்பட்ட குலத்தாரைத் தான் கைப்பிடித்து வீதி வழி நடத்திச் சென்றான். நம்பிக்கையை ஊட்டினான். மக்கள் சாதியக் கட்டுப்பாடுகளைப் பின் பற்றிய போது, ஒரு சாரர், அடக்கி ஒடுக்கி ஆளப்பட்டிருக்கின்றனர். அந்த நிலை சமுதாயத்தில் ஒரு கட்டுக் கோப்பைக் கொண்டு வரும் என்று அக்கால மக்கள் நினைத்திருக்கின்றார்கள்.  ஆனால் அதற்கு மாறாக, மக்கள் அடக்கப் பட்டதைத்தான் வரலாறு காட்டுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். அதுவும் அடிமட்டத்தில் இருந்து மாற வேண்டும் என்றெண்ணீய பாரதி, பாப்பாவுக்கு அறிவுரை கூறுவது போல் கூறினான். அதுவும் வளர்ந்தவனுக்குக் கூறினால் அவன் கேட்காமல் விட்டு விடுவானோ என்று,  இளமையிலேயே இக்கருத்தை மனத்தில் விதைத்து விட்டால் சமுதாயம் வளமாக வாழும் என எண்ணினான். “சாதிகள் இல்லையடி பாப்பா ! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ! நீதி உயர்ந்த மதி கல்வி ! அறிவு நிறைய உடையவர்கள் மேலோர் ! ” என்றான். நிலத்தின் விதை பூமியை உடைத்து மேலெழுவது போல் சமுதாயம் கட்டுப்பாடுகளில் இருந்து வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்றான் பாரதி. 

    

                பாரதிக்குப் பின் வந்த  பாரதி தாசன், இருட்டறையில் உள்ளதடா உலகம் ! சாதி இருக்கிறதென்பானும் உள்ளானே ! என்று தடுப்பாற்றலை வெளிப்படுத்தும் வேகத்தில் பொங்கி எழுந்து முழங்கினான். சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதை ! நமக்கெல்லாம் உயிரின் வாதை ! என்று அடக்கு முறையை அவிழ்த்தெரிய அறை கூவினான். அன்பால் சமுதாயத்தை வளைக்கலாம், தன்னலம் கருதாத பொது நலத்தால் மக்களைத் தன் பால் ஈர்க்கலாம் என்று வழி காட்டினான். தன் வீடு – சோறு – சம்பாத்தியம் – தானுண்டு என்றிருப்பவன் கடுகு போன்ற உள்ளம் படைத்தவன். இந்தக் குள்ள மனிதர்களால் சமுதாயம் உயராது !  வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி உள்ள தடைகளைத் தாண்டு ! விண்ணைத் தொடும் அன்பால் கோட்டைச் சுவர்களை வளை ! நானும் ஒரு மனிதன் தான்  என்பதை உணர்த்து ! புவியை நடத்து ! பொதுவில் நடத்து ! என்று தனி உடைமைச் சமுதாயத்தைச் சாடினான்.  மக்கள் ஒடுக்கப் பட்டது கட்டுப் பாடுகளால் தான் -அந்தத் தடையைத் தகர்த்து விடு ! என்று பாவேந்தன் புதியதோர் உலகு செய்தான்.        

      
  

                   இன்றையச் சமுதாயம் இயந்திரங்களோடு போராடி வருகிறது. அதனால் மனிதத்தை மறந்து விட்டது. உணர்வுகளால் பிரித்தாளப் படுகின்ற ஒரு உலகினை உருவாக்குவதில் முன்னேறிய நாடு – பின் தங்கிய நாடு என்ற விதி விலக்கெல்லாம் இல்லாமல் வினையாற்றுகின்றது. வீதிகளை வடிவமைப்பதில் காட்டப்படும் வேகத்தைக் கூட சமுதாயத்திற்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை அமைத்துத் தருவதில் காட்டப்படுவதில்லை. இனத்தால் ஆயுதத்தைக் கையில் எடுத்து, மக்கள் சமுதாயம் தலை எடுத்து விடாமல் தடுப்பதில் ஒரு உலகப் போரையே உருவாக்குகின்ற மனப்பான்மை இச்சமுதாயத்தில் மலிந்து வருகிறது. 

  

                  இன்றைக்குக் கல்வி வாய்ப்புகள் – வேலை வாய்ப்புகள் என எல்லாமே இட ஒதுக்கீடின் அடிப்படையில் அமைகிறது. அதில் பின் தங்கிய சமூகம் முன்னேறிய சமூகம் என்ற பாகுபாடுகள் விதிகளைத் தூக்கி எறிந்து விட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வுரிமை வேண்டும் என்று வாதாடிய சட்ட மேதை அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டு வர மூச்சுள்ள வரை போராடினார். ஆனாலும் நாட்டின் எங்கோ ஒர் மூலையில் மக்கள் நடமாட உரிமை இல்லாமல் – இயற்கை விளையுளை விலையாக்க முடியாமல் – பல்கலைக் கழகங்களின் படிகளைக் கூடப் பார்க்காதவர்களாய் – உடல் உழைப்பை அடுத்தவர்க்கு உரிமையாக்கி, நாட்டின் நலத்தைக் காக்க முடியாதவர்களாய் நடமாடுவதைக் காணூம் போது ஒடுக்க உணர்வுகள் தலை முறை தாண்டியும் இரத்தத்தில் உறைந்து விட்டதைத்தான்  காண முடிகிறது. 

    

                இனம், மொழி என்ற பாகுபாட்டைக் காட்டி, நாடு எல்லை என்ற வேறுபாட்டை விதைத்து மக்களை வேட்டையாடி வருவதும் இன்றையச் சமுதாயமே ! இதில் மக்கள் நிகழ் காலத்தைத் தொலைத்து விட்டு வருங்காலத்தைத் தேடுபவர்களாய் ஆகி விட்டனர். மனம் விட்டுப் பேசவும், வாய் விட்டுச் சிரிக்கவும், நடை முறை வாழ்க்கையில் வழி இல்லாதவர்களாய் ஆகி விட்டனர். அறியாதவர்களாய், தெரியாதவர்களாய் இருந்த காலத்தில் கூட தனி மனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் பெரிதும் போற்றப்பட்டன. அதனால் தான் கீழ் மக்கள் மேல் மக்கள் என்ற பிரிவு இருந்த போதும் கூட, மக்கள் மக்களாய் மதிக்கப்பட்டனர். ஆனால் இன்று மனத்தைக் கிளறி, மானத்தை விற்கின்ற நெறிமுறைகளை சர்வ சாதாரணமாய் நினைக்கின்ற ஒரு சமுதாயம் உருவாகி விட்டது. வாழ்க்கை வசதிகள் பெருகிய இக்காலத்தில் வழி வகை தெரியாத ஒரு சமுதாயத்தை தன்னலத்திற்காக உருவாக்குகின்ற நிலை ஏற்பட்டு விட்டது. பல்வேறு துறைகளிலும் இதனைத் தான் காண்கின்றோம். இவை எல்லாம் எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வுகள் கொண்டதற்கான அகச் சான்றுகள். புறச் சான்றுகளோ புன்னகை பூக்கின்றன. ஒரு பொது உடமைச் சமுதாயம் மலர்ந்தால் தான் புரையோடிய ஒடுக்க உணர்வுகள் மறையும் !  புத்துலகம் தோன்றும் !

-MEYYAMMAI CHIDAMBARAM (Selvi Shankar)

Advertisements
This entry was posted in எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன் ?. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s