ஈழத் தமிழர் – நேற்று இன்று நாளை

தமிழ் மக்களின் விடுதலைக்குரல் ஒழிந்த பாடாக இல்லை, தமிழ் மக்கள் உள்ளுக்குள் வைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தங்கள் விடுதலை குறித்த சிந்தனையை முற்றிலுமாக அடக்க முடியவில்லை, இலங்கை அரச பயங்கரவாதிகளின் மிகப்பெரிய கவலை இப்போது இது ஒன்றுதான், முற்றிலுமாகத் தங்கள் கைகளில் இருந்த ஒரு போராட்டத்தின் சுமையை மிகப்பெரிய விலை கொடுத்துத் தமிழ்மக்கள் பன்னாட்டு சமூகத்திற்கும் கொஞ்சம் பகிர்ந்து அளித்திருக்கிறார்கள், இத்தகைய ஒரு சூழலில் தமிழ் மக்களின் மீதான பல்வேறு நெருக்கடிகளும், பேரின ஆதிக்கமும் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதியில் மட்டுமன்றி பரவலாகவே காணக் கிடைக்கிறது. எந்த ஒரு அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களும் இல்லாமல் மீளக் குடியேற்றம் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் இருட்டுச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்,

இப்படியான ஒரு புறச்சூழலில் வசிக்கிற தமிழ் மக்கள், அல்லது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எப்படியான அரசியலைக் கையாள வேண்டும் என்பதும், உலக அரசியலின் போக்கில் எத்தகைய உள்ளீடுகளை வழங்க வேண்டும் என்பதும் நமக்கு முன் இருக்கிற ஒரு மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம், அல்லது கடந்து வரப்போகிறோம் என்பதும் நமது விடுதலைப் பயணத்தின் போக்கைத் தீர்மானிக்கிற ஒரு பகுதியாகும். தமிழ் ஈழப் போராட்டத்தின் நிகழ்கால அரசியலை இரண்டு கூறுகளாக நம்மால் பிரித்துக் கொள்ள முடியும், ஒன்று ஒடுக்கப்படுகிற நிலவியல் எல்லைக்குள் வாழும் தமிழர்களின் அரசியல், இரண்டாவதாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களின், தாய்த் தமிழ் மக்களின், உலக இயக்கம் சார்ந்த நிலவியல் எல்லைக்குள் இல்லாத அரசியல். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதும், ஒன்றில் நிகழ்கிற எந்த நிகழ்வும் மற்றொன்றைப் பாதிக்கும் திறம் கொண்டது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. நிலவியல் எல்லைக்குள் இல்லாத தமிழ் மக்களின் போராட்ட வடிவானது எந்த ஒரு சூழலிலும், தேசியத்தின் இயங்கு எல்லைக்குள் இருக்கிற ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை அடைந்திருக்கிற மக்களின் தற்கால வாழ்க்கை நலன்களை எந்த வகையிலும் அழுத்தும் வகையில் வடிவமைக்கப்படக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தேசியத்தின் உள்நிகழ்கிற அரசியல் என்பது ஒரு போதும் வெளிப்படையாக ஒரு தனித் தமிழ் தேசத்தைச் சார்ந்து இயங்கக் கூடிய வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகிறது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நிலைகளில் தனித் தமிழ் தேசியக் கோட்பாடுகளின் மையத்தில் இருந்தே செயல்பட்டாலும், அதனால் இலங்கை என்கிற அரசமைப்பின் வழியில் சென்றே தனது இலக்குகளை அடையக் கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கிறது. பல்வேறு அழுத்தங்களின் இடையேயும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும், அதன் செயல்பாடுகளும் தமிழர்களின் நெடிய வரலாற்றுப் போரில் ஒரு மிகப்பெரும் பங்காற்ற வேண்டிய காலம் நமக்கு முன்னே இருக்கிறது. பல்வேறு அமைப்பு வழியிலான தமிழ் மக்களின் குரலை ஒருங்கிணைப்பதும், தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் இருக்கிற ஒரு அளப்பரிய பணியாகும், தமிழ் பேசுகிற இஸ்லாமிய மக்களைப் புறக்கணித்துச் செல்வதன் மூலம் மொழி வழியிலான தேசியத்தின் கூறுகள் சிதைவுற்று மத வழியிலான பிளவுகள் தேசியத்தின் வலிமையை சீர்குலைக்கும் வாய்ப்புகள் காணப்படுவதை நம்மால் மறுக்க இயலாது. மலையகத் தமிழர்களின் குரலையும், அவர்களின் நம்பிக்கையையும் எதிரொலிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும், மலையகத் தமிழ் மக்கள் ஒரு ஈடுபாடற்ற மனநிலையில் இருப்பதை தமிழ் தேசியச் சிந்தனையின் வீழ்ச்சி என்றே குறிப்பிட வேண்டும்.

உள்ளுக்குள் நிலவுகிற முரண்பாடுகள் நீக்கப்படாத எந்த ஒரு சமூகத்தின் அரசியல் வெற்றியும் சாத்தியப்பாடுகள் அற்றது என்பதை நாம் உணரத் தலைப்பட வேண்டும், இலங்கையில் நிகழும் விடுதலைப் போர் என்பது வெறும் வடகிழக்கு மக்களுக்கானது என்பது மாதிரியான பரப்புரைகளும், போலியான கற்பிதங்களும் இனி வருங்காலங்களில் பெரிய அளவு பலன் தரக்கூடியவை அல்ல, மலையகத் தமிழ் மக்களின் உளவியல் வழியான புறந்தள்ளப்பட்ட பல்வேறு சிக்கல்களின் பரிமாணம் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலானது. இவர்களின் மன உணர்வுகளைப் புறந்தள்ளி நிகழ்கிற எந்த ஒரு விடுதலை நோக்கிய பயணமும் எளிதில் அதே காரணிகளால் நீர்த்துப் போகக் கூடிய வாய்ப்பை நாம் கூர்ந்து கவனித்து அதற்கான தீர்வுகளையும் விடுதலையின் பயணத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.தொடர்ந்து ஆட்சியாளர்களின் அடிவருடிப் பிழைப்புவாத அரசியல் நடத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய தேவை ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளுக்கு இருக்கிறது. இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள், மலையகத் தமிழர் கட்சிகள் மற்றும் பரவலான உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலை குறித்துச் சிந்திக்கிற இடதுசாரிச் சிந்தனை உள்ள அரசியல் இயக்கங்கள் யாவற்றையும் ஒருங்கிணைக்கும் பணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பே செய்ய வேண்டி இருக்கிறது. அமைப்பு ரீதியான வலுவும், மக்களின் நம்பிக்கையும் இருக்கிற ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டமைப்பு இத்தகைய ஒருங்கிணைப்பில் ஈடுபடுவதே விடுதலை நோக்கிய பயணத்தில் வெற்றியை நோக்கிச் செல்கிற பாதையாகிறது. புலம் பெயர் சமூகமும், தமிழர்களின் ஏனைய பொது வெளியும் முரண்பாடுகளை விடுத்து ஒன்றிணைவது மட்டுமே விடுதலைக்கு அருகில் வரும் வழியாகிறது, விடுதலையை அவர்கள் முன்னெடுத்த போது நிகழ்ந்த தவறுகளும், அது சார்ந்த நிகழ்வுகளும் இன்று பல்வேறு இடதுசாரி இயக்கங்களால் கேள்வியாக்கப்பட்டாலும், தொடர்ச்சியான விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் இடது சாரி இயக்கங்களும் நிகழ்த்தி இருக்கிற தவறுகளாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

பிரபாகரன் என்கிற தனி மனிதனால் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல இது, மக்களின் உள்ளக் கிடக்கையில் எரிந்து கொண்டிருந்த விடுதலை ஒன்றினை நோக்கிய பயணத்தில் நிகழ்ந்த தன்னியக்கமான ஒரு தலைமைப் பகுதியே பிரபாகரன் என்கிற அடையாளம், அவரது செயல்பாடுகளில் தவறுகள் காணப்பட்டது என்று நாம் குற்றம் சுமத்தினால் அது நமது குற்றமே அன்றித் தனி மனிதக் குற்றம் அல்ல. தனது மக்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அடிமைகளாய், பேரினத்தின் கைப்பாவைகளாய் இல்லாமல் ஒரு எழுச்சி மிக்க விடுதலை பெற்ற இனமாக மாற வேண்டும் என்பது ஒன்று தான் பிரபாகரன் என்கிற தலைமைப் பண்பு விரும்பிய தமிழ்ச் சமூகத்தின் குரல் என்பதை நாம் ஒரு போதும் மறக்க இயலாது. பல்வேறு காரணங்களால் இயக்க நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றி வைக்கப்பட்டிருந்த குமரன் பத்மநாபா போன்ற மனிதர்கள் ஒரு இக்கட்டான சூழலில் சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள், சிங்கள அரசின் பல்வேறு ஒடுக்குமுறை அரசியல் வரலாற்றில் குமரன் பத்மநாதன் இன்னொரு பக்கமாக மாற்றம் பெற்றிருக்கிறார். புலிகளுக்கு எதிரான குரலாகவும், பிரபாகரனுக்கு எதிரான குரலாகவும் சிங்கள அரசினால் உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு மனிதர்களை விடுத்துப் புலிகளின் மீது விமர்சனம் செய்கிற பல்வேறு தனி மனிதர்களையும் இயக்கங்களையும் நம்மால் எல்லா நிலைகளிலும் அடையாளம் காண முடியும், இருப்பினும், கருத்தியல் வழியாகவும், அரசியல் வழியாகவும் எப்போதோ முடிவு பெற்று இருக்க வேண்டிய ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை பன்னாட்டு முகவரியாக்கியவர்கள் புலிகள் என்பதையும், கட்டுமான ரீதியான வலுவை இதற்குக் கொண்டு வந்தவர் பிரபாகரன் என்பதையும் இவர்கள் யாராலும் மறுக்க இயலாது. இப்படி மக்களின் போராகவே கடைசி வரை நிகழ்த்தப்பட்ட விடுதலைப் போர் மிக மோசமான முறையில் பல்வேறு வல்லாதிக்க அரசியல் ஆற்றல்களால் தோற்கடிக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வேளையில் இது போன்ற முரண்பாடுகள் தமிழ் மக்களின் விடுதலைப் போரில் அடுத்த கட்ட நகர்வுக்கு எந்த வகையிலும் பயன் தராது. அரசியல் படித்து விட்டுத் தான் விடுதலைப் போரைத் துவக்கி இருக்க வேண்டும் போன்ற மேதாவிலாசங்கள் நண்பர்களால் எழுப்பப்பட்டாலும் அது முரண்பாட்டு அரசியல் என்ற வகையில் மட்டுமே வரலாற்றில் புரிந்து கொள்ளப்படும், அந்த விடுதலையின் போர் ஒரு தனி மனிதனுக்காகவோ, அவனது நலன்களுக்காகவோ நடத்தப்படவில்லை, கடைசி வரையில் அது மக்கள் ஈடுபாட்டோடு இருந்த மக்களின் போராகவே இருந்தது. கடைசிக் குண்டு வன்னிப் பரப்பில் வீழ்ந்த போதும் ஒரு போராளியும் இறந்திருக்கிறான், ஒரு பொது மகனும் இறந்திருக்கிறான். ஏறத்தாழ இரண்டு லட்சம் தமிழ் மக்களை ஒரு அமைப்போ அல்லது இயக்கமோ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்கிற பொய்யை நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. தொடர்ச்சியான இத்தகைய விவாதங்களும், முரண்பாடுகளும் நம்முடைய பயணத்தைத் தொய்வடைய வைக்குமே தவிர முன்னெடுக்க எந்த வழியும் இல்லை.

இடையில் நிகழ்ந்த ஒரு அரசியல் வழியான புறக்கணிப்பு எப்படி சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பும் (I I F A) இலங்கை அரசும் இணைந்து நிகழ்த்தவிருந்த ஒரு மிகப்பெரும் மோசடியை ஒருங்கிணைந்து நிகழ்த்திய தமிழர்களின் போராட்ட அரசியலே தோல்வியுறச் செய்தது என்பதையும் நாம் உணர வேண்டும். தாய்த் தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளின் மனநிலையும், தாய்த் தமிழக மக்களின் மனநிலையும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்பட முடியாது. தமிழக மக்கள் எப்போதும் உணர்வு வழியான அன்பையும், தமிழ் ஈழ மக்களின் விடுதலையையும் நோக்கியே தங்கள் பார்வையை குவித்துக் கிடக்கிறார்கள், இந்திய தேசிய அரசியல் என்கிற பகடைக் காய்களே தமிழக அரசியல்வாதிகளை முடக்கும் ஒரே காரணி என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும், இந்திய தேசிய அரசியலை நோக்கிக் கேள்விகளை எழுப்புகிற அரசியல் இயக்கங்களையும், அமைப்புகளையும் வருங்காலத்தில் தமிழ் இளைஞர்கள் வழிநடத்துகிற அளவில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருவதையும் நாம் அனைவரும் உணர வேண்டும். தமிழக மக்களின் குரலை ஏளனம் செய்யும் சில புலம் பெயர் இளைஞர்களின் புரிதல் இன்னும் முழுமையான அரசியல் வெளிகளுக்குள் வர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்புமாகிறது. உலகின் எல்லா வாழிடங்களிலும் நிகழ்கிற போராட்ட வடிவங்கள் தாய்த் தமிழக மக்களின் ஆதரவைப் பெறுகிற போதே முழுமை அடைகிறது என்பதையும் புலம் பெயர் இளைஞர்கள் உணரத் தலைப்பட வேண்டும். அதற்கு ஒரு சிறப்பான முன்னுதாரணம் இலங்கைத் திரைப்பட விழாத் தோற்கடிப்பு. பொருளாதார வழியில் மிகப்பெரிய வீழ்ச்சியாக இல்லாவிடினும், கோட்பாட்டு ரீதியில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியாக உலக அரங்கில் அந்த விழாவின் தோல்வி எதிரொளித்ததை நம்மால் உணர முடியும்.

பல்வேறு உலக நாடுகளின் அரசியல் இயக்கங்களில் ஆளுமை செலுத்தும் அளவுக்குப் பொருளாதார மற்றும் சமூக வழியாக வெற்றி அடைந்த நமது இளைஞர்களை உருவாக்குவதும், அவர்களின் அரசியல் புரிந்துணர்வை மேம்படுத்துவதும் தமிழ்த் தேசிய அரசியலின் கொள்கை வடிப்பாளர்களால் முன்னெடுக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய கடமையாகிறது. நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் கூட்டமைப்பு, பன்னாட்டுத் தமிழ் மாணவர்களின் அமைப்புகள் ஆகியவை மிகுந்த நம்பிக்கை அளிக்கக் கூடிய சில செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் தமிழ் மக்கள் ஆதரிக்கவும், ஊக்கமளிக்கவும் அவசியம் இருக்கிறது. முரண்பாடுகள், தவறுகள், பின்னோக்கிய பார்வை இவை அனைத்தும் வரும் காலத்துக்கான பாடங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு உலக அரசியல் வழியாக தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டமைக்க வேண்டிய தேவைகளும், காரணிகளும் மிகுந்த கிடக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும், விடுதலை இயக்கங்களின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதும் அவசியமற்றது மட்டுமன்றி ஒரு பயனையும் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியே ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம், குமரன் பத்மநாதன் போன்றவர்களுக்குப் பதிலுரைகள்  வழங்க வேண்டிய நேரத்தில் வேறு பயனுள்ள திசைகளை நம்மால் கண்டறிய முடியும். தொடர்ச்சியான பரப்புரைகளும், உலகளாவிய தாக்கம் விளைவிக்கும் போராட்டங்களும் தான் நமது இன்றைய தேவையே அன்றி “யார் நல்லவர், யார் கெட்டவர்” என்கிற பட்டிமன்றங்கள் அல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக புலத்தில் வசிக்கின்ற மக்களுக்கான வாழ்வியல் ஆதாரங்களைத் திரட்டும் பணிகளில் நமது அமைப்புகள் கவனம் செலுத்துவது, புலத்தின் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள், அவர்களுக்கான மருத்துவ வசதிகள், அடிப்படை சமூக வசதிகள் இவற்றில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியதும் மிக முக்கியமான தேவை. உலகளாவிய தமிழ் அமைப்புகள் தங்களிடம் இருக்கும் நிதி ஆதாரங்களை மடை மாற்றி நேரடியாக புலத்தில் இருக்கிற சமூகத்திற்கு வழங்குவதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் தமிழ்ச் சமூகம் கவனம் செலுத்த வேண்டிய இன்றியமையாத பணிகளாகும். போரைப் பற்றியும், போரின் அவலத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது போதும் என்கிற அளவுக்கு நாம் பேசி விட்டோம், அவற்றின் நிறை குறைகள் அனைத்தையும் நாம் விவாதித்து முடித்து விட்டோம், இவற்றால் எஞ்சியது நமது மக்களின் பிணங்களும், புதைகுழிகளும் மட்டுமே என்பதை நாம் மறக்க இயலாது. இனிக் கண்காட்சிகளையும், காணொளிகளையும் பார்த்துக் கொண்டிருப்பதும் ஏற்பாடு செய்வதும் பெரிய அளவில் பயன் தராது. ஒரு புதிய தலைமுறையை வலிமையோடு கட்டமைப்பதும், உலக அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவுள்ள தலைவர்களை உருவாக்குவதும் இன்றைய தமிழ் மக்களின் தேவை. அதற்கான மூலம் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடுகளில் அடங்கி இருக்கிறது. பல்வேறு இசங்களைப் பேசுவதும், அவற்றின் கீழ் நமது மக்களின் விடுதலைப் போரை விமர்சனம் செய்வதும் இத்தனை இழப்புகளைச் சந்தித்த நமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகப் வரலாற்றில் புரிந்து கொள்ளப்படும்.

பொது உடைமை அரசியலின் ஆணிவேர் நம்முடைய இருப்பிடத்தில் இருந்தே துவங்குகிறது. பேரின ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் இருதே அதன் பயணம் புரிந்து கொள்ளப்பட வேண்டும், நமது மொழி பேசுகிற, நமது இன அடையாளமாக உலகால் அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடிய மக்களின் விடுதலைப் போராட்டத்தை விமர்சனம் செய்து நடத்துகிற எந்த அரசியலும் நீர்த்துப் போன எதிர்ப்பு அரசியல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆம், நான் பொது உடைமை அரசியலை விரும்புகிறேன், அது என் மக்களின் விடுதலைப் போராட்ட வெற்றியில் இருந்து புறப்பட வேண்டும் என்றே நம்புகிறேன். உழைக்கும் மக்களின் விடுதலைப் போராகிய தமிழீழ விடுதலையும் புரட்சியே தானன்றி, எள்ளலுக்குரியதல்ல.

நாம் இழந்தவை எல்லாம் போக நம்மிடத்தில் மிச்சமிருப்பது விடுதலை குறித்த கனவுகளும், நம்பிக்கையும் மட்டும்தான். ஆம், தமிழர்களே, நாம் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. எஞ்சி இருக்கும் வரலாற்றுப் பெருமைகளை வைத்துக் கொண்டுதான் தோல்வியின் பாடங்களில் இருந்து நமது விடுதலைப் பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஒரு விடுதலை பெற்ற தேசத்தை அடைகிற வரையில் நமது இயங்கு எல்லைகள் பொது உடைமை வழியில் பயணம் செய்ய முடியாது என்பதே உலக வரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாகும். நமது எதிரி நம்மை விடவும் வலிமையாகச் செயல்படுகிறான், உலகெங்கும் கருத்தியல் போரை நடத்தும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு நமது போராளிகளையே அவன் பயன் படுத்துகிறான், மீண்டும் மீண்டும் புலம் பெயர்ந்த மக்களைக் குறி வைத்துச் செயல்படும் இலங்கை அரச பயங்கரவாதிகளின் இயங்கு எல்லைகள் மறைமுகமாக அவர்களின் வலிமையை உணர்த்துகின்றன,

இந்தக் கருத்தியல் போரை வீழ்த்தி வெற்றி கொள்வதே விடுதலையின் தீபத்தை அணையாமல் காப்பாற்றும் வழியாகிறது, நாம் மிக வலிவோடு நம்பிக் கொண்டிருந்த, நம்பிக் கொண்டிருக்கிற தமிழர்களின் தேசியக் கனவை எதிரி தகர்க்க நினைக்கிறான், அதற்காக நம்மையே அவன் பகடைக் காயாக்க முனைகிறான் என்பதை நம் உணர வேண்டும். தொடர்ச்சியான விடுதலை குறித்த கனவுகளும், நம்பிக்கையும் மட்டுமே நமது இலக்கை நாம் அடைவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். நாம் வெற்றி பெறுவோம், நமது தலைமுறையின் குழந்தைகள் நமது போராட்ட வரலாற்றை தங்கள் வகுப்பறைகளில் படிப்பார்கள். அதுவரையில் மரணத்தை வெற்றி கொண்டு அடுத்த தலைமுறைக்கு விடுதலைப் போரின் அவசியத்தை அதற்கான அறிவைக் கொண்டு சேர்ப்பது ஒன்று தான் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் கடமையாகும். ஏனெனில் அதில் தான் நமது தனித்துவமான வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் மொழியின் சுவடுகள் இவை யாவும் ஒட்டிக் கிடக்கின்றன.

-அறிவழகன்

Advertisements
This entry was posted in ஈழத் தமிழர் நிலை நேற்று இன்று நாளை. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s