இலவச திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – சிவகுமார்

வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக உருவாக்கப்பட்டவையே இலவச திட்டங்கள். அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள் மற்றும் இடஒதுக்கீடுகள் போன்றவையும் இலவச திட்டத்தின் வேறு வடிவங்களே. இத்திட்டங்கள் ஏதோ இந்தியாவில் மட்டுமே அல்லது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் இலவச திட்டங்கள் வழக்கில் உள்ளன. அங்குதான் வேலை வாய்ப்பற்றோருக்கு, முதியோருக்கு என இலவச திட்டங்கள் முதலில் அறிமுகமாயின. இன்னும் சொல்லப் போனால், வேளாண்மைக்கு இந்தியாவை விட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்தான் சலுகைகளும், மானியங்களும் வாரி வழங்கப்படுகின்றன.

நாட்டின் முதுகெலும்பாகவும், மனிதனுக்கு ஜீவாதாரமாகவும் விளங்கும் விவசாயம், அரசு வழங்கும் சலுகைகளாலும், மானியங்களாலும் இன்று உயிர் பிழைத்திருக்கிறது. இலவச மின்சாரம், விதை, உரம் முதல் டிராக்டர் வாங்குவது வரை என அனைத்திற்கும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டாலும் விவசாயத்தால் தொழில்துறையுடன் போட்டியிட முடியவில்லை. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையை நம்பியே உள்ள விவசாயம், லாபம் தரும் தொழிலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாததால் நகரம் நோக்கிய மக்களின் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில், சலுகைகளும், மானியங்களும் இல்லாத விவசாயத்தை கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாது. நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் மலிவு விலை அரிசி, நாட்டில் பசிப்பிணியைப் போக்கி பட்டினிச் சாவுகளை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

காமராஜரின் மதிய உணவுத்திட்டம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. உண்மையில், மிகவும் பின்தங்கிய மக்களில் பலர் தங்களது குழந்தைகளை மதிய உணவுக்காகவே பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். இன்றைய சத்துணவுத் திட்டம் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டத்தின் பரிணாம வளர்ச்சியே. இதைப் பின்பற்றியே, கல்வி உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடைகள் என பல்வேறு திட்டங்கள் மாணவர்களை பள்ளிகளை நோக்கி ஈர்க்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லையென்றால், சமூகத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகள் எட்டாக்கனியாகவே இருந்திருக்கும்.

பேய், சாத்தான் போன்ற மூடநம்பிக்கைகளை ஓட்டியதில் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இன்று ஒரு குழந்தை திடீரென மூச்சு, பேச்சின்றி அமைதியாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுகிறது. யாரும் முதலில் சாமியார்களிடம் செல்வதில்லை. அதிர்ச்சியால் ஏற்படும் மனப்பிறழ்வு, பயம் போன்ற போபியாக்களுக்குக் கூட மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடத் தொடங்கியிருப்பது அது கட்டணமில்லா சேவை என்பதால்தான். இன்று அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களால் அப்பல்லோ போன்ற உயர்தர மருத்துவமனைகளில் ஏழைகளும் சிகிச்சை பெறுவது சாத்தியமாகியுள்ளது.

இன்று பெரும்பாலானோரின் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பது இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம். இத்திட்டம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி வருவதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. நமது குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டியிருப்பதைக் கூட நமக்கு திரிஷா ஞாபகப்படுத்த வேண்டியுள்ள இன்றைய விளம்பர உலகில், அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி மிகவும் அவசியம். இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற நலத்திட்டங்களையும், விவசாயம் மற்றும் தொழில்துறை சார்ந்த ஆலோசனைகளையும், செயல் விளக்கங்களையும் படிக்காத பாமரன் மனதிலும் பசுமரத்தாணி போல் தொலைக்காட்சி பதிய வைக்கிறது. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி ஊழல்களையும், முறைகேடுகளையும் தொலைக்காட்சி மக்களிடத்திலே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஊழலுக்கு எதிராக மக்களை திசைதிருப்புவதில் தொலைக்காட்சி சிறப்பான இடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் மட்டுமே லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் என்பது திண்ணம்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகைகள், திருமண உதவித் தொகை போன்றவற்றால்தான் பெண்சிசுக் கொலை கணிசமாகக் குறைந்துள்ளது. கல்வி பெற உதவித்தொகை, மக்கள் பிரதிநிதித்துவத்தில் இடஒதுக்கீடு போன்றவற்றால் பெண்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. உடல் ஊனமுற்றோரின் உள்ளம் ஊனமுறாமல் அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளச் செய்பவை அரசின் மறுவாழ்வுத் திட்டங்களே. இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் பலனடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேநேரத்தில், இதுபோன்ற கட்டுப்பாடற்ற இலவச திட்டங்களுக்கு அரசின் பெரும்பகுதி நிதி செலவாகிவிடுவதால் சாலை, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்க முடிவதில்லை. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முடங்கும் அபாயம் உள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அள்ளி வழங்கும் தமிழக அரசு, அதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம், இத்திட்டத்தை பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால், கல்வி, மருத்துவம் போன்றவற்றை தனியார் வசம் ஒப்படைத்துள்ள அரசு, சமூகத்தை சீரழிக்கும் மதுவிற்பனையை தாமே முன்னின்று நடத்துவது வேதனை தருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நலிவடைந்த பிரிவினரிடம் கம்யூனிசம் செல்வாக்கு பெறுவதைத் தடுக்கவே இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கம்யூனிச நாடுகளில் கல்வி, மருத்துவம் போன்றவை இலவசமாக அளிக்கப்பட்டாலும், தகுதிக்கேற்ப அனைவரிடமும் கட்டாய வேலை வாங்கப்படுவதால் அதனை இலவசமாகக் கருத முடியாது. ஆனால், முதலாளித்துவமோ தான் வளர பிறரை பலி கேட்கிறது. பத்து பேரின் உழைப்பைச் சுரண்டினால் ஒருவன் லட்சாதிபதியாகலாம். பல நூறு பேரின் உழைப்பைச் சுரண்டுபவன் கோடீஸ்வரன். பல ஆயிரம் பேரின் உழைப்பைக் கொள்ளையடித்தால்தான் ஒருவர் அம்பானியாகலாம். முதலாளித்துவத்தால் சமூகத்தில் உருவாகும் ஏற்றத்தாழ்வுகளால், முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, நலிவடைந்த பிரிவினரை சமாதானப்படுத்த இலவசங்களை வழங்குவதைத் தொடரவே செய்யும்.

“எங்கள் நாட்டில் பணக்காரர்களே இல்லை. ஏனெனில் இங்கு ஏழைகளே இல்லை” என்ற வள்ளலாரின் வாக்கு நிறைவேறும் வரை இலவச திட்டங்களைத் தவிர்க்க இயலாது.

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s