இலவசத் திட்டங்கள்

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்
முன்னுரை

இலவசம் என்று சொன்னால் தான் ஒரு பொருளை வாங்குவதற்கு முதலில் வருகிறார்கள். சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து அணியும் காலணி வரை எல்லாவற்றிலும் தள்ளுபடி, இலவசம் இவை இரண்டை மட்டுமே மக்களால் முதலில் எதிர்ப்பாக்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில் இலவச திட்டம் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டவைகளில் நன்மை, தீமை இவை இரண்டும் அடங்கும்.
இலவசத் திட்டம் மக்கள் பார்வையில்

இலவசமாக கொடுக்கப்படும் பொருளின் தரம் குறைவாக இருக்கும் என்பது ஒருசாரார் கருத்து. ஆனால் இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ம்க்கள் பயனடைகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட தமிழகத்தில், அரசு வாயிலாக இலவசமாக வரும் பொருளை வாங்குவது கௌரவக் குறைவு என்று எண்ணி இலவசங்களை தவிர்த்திடும் ஒருவித மக்களும், தங்களிடம் தேவைக்கு அதிகமான பணம் இருந்தும், இலவசமாக வருவதை ஏன் விட வேண்டும் என்று எண்ணி கூச்சப்படாமல் இத்திட்டத்தின்கீழ் பயனளியும் இன்னொரு வித மக்களும்கூட வாழ்கின்றனர்.

தமிழ்-வழி கல்வி

இலவசத் திட்டத்தின் கீழ் கல்வித்துறையில் அமலாக்கிய திட்டம் “தமிழ் வழி கல்வி” – தமிழ்-வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை. தமிழை மேம்ப்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். மன்னர் வாழ்ந்த பண்டைய காலங்களில் கல்வி பயிலும் குருகுலத்தில் கூட குருதட்சணை என்ற வழக்கத்தை மேற்கொண்டதனால் தான் கல்வியும் மற்ற திறன்களும் மாணவர்களிடம் மேலோங்கி நின்றது. பணம் கொடுத்து படித்தால் தான் படிக்கும் படிப்பின் மீது பயமும் ஆர்வமும் விருப்பமும் வரும், இல்லையெனில் ‘பிறகு படித்துக்கொள்ளலாம் இப்பொழுது அதற்கு என்ன அவசரம’ என்ற எண்ணம் தான் வரும்.

இலவச படிப்பு, இலவச தேர்வு, இலவச சீருடை, இலவச புத்தகம் – இப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வருவதன் மூலமாக மட்டும் தமிழை வளர்த்திட முடியாது என்பது அறிஞர்களின் கருத்து, இலவசத்தின் மேல் ஆசைப்பட்டு கற்க வேண்டிய மொழியல்ல தமிழ். அவ்வாறு கற்கவும் முடியாது என்பது உண்மை தான்.

தீர்வு காணா பிர்ச்சணை

தமிழகத்தில் தீர்வு காணாமல் இருக்கும் பிரச்சணைகள் – வறுமை வேலையில்லாமை என்னும் இவை இரண்டு தான். தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து கொண்டுவரும் இக்காலங்களில் போட்டிகளின் விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. உலக மக்களோடு போட்டியிடும் அளவிற்கு தத்தம் தரத்தை உயர்த்திககொள்வதில்தான் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட இவ்வுலகத்தில் அவர்களோடு போட்டியிடும் அளவிற்கு தாமான கல்வியும் பயிற்சியும்
வழங்குவதே இவ்விரு பிரச்சனைகளின் தீர்வாகும.

பெண்கள் முன்னேற்றத்தில் – இலவசத்திட்டம்

காலம்காலமாக பெண்களுக்கென முன்னுரிமை அளிப்பது என்பது வழக்கமான ஒன்று. ஏழை மக்களின் திருமணம் உதவி திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவும் வண்ணம் இருப்பது உண்மை தான். கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, பள்ளி கல்லூரிகளில் உதவிதொகை வழங்குவது, சுய உதவி குழுவின் மூலம் வங்கிக்கடன் வழங்குவது போன்றவைகள் பெண் இனத்தவர்க்கென ஒதுக்கப்பட்ட சலுகைகள் ஆகும். இப்படிப்பட்ட சலுகைகள் பெண் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுபவை.
வளங்கள் வளம் பெற

தமிழக அரசின் ஒட்டுமொத்த பற்றாக்குறை பத்தாயிரம் கோடி, 2009 – 2010 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை போன்ற துறைகளில் விவசாய வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு மட்டும் 5,236 கோடி ரூபாயாகும்.
1 நீர் நில வளத்துறை : 533 கோடி.
2 நீதித்துறை : 378 கோடி.
3 பள்ளி கல்வி : 9,147 கோடி.
4 உயர் கல்வி : 1,463 கோடி.

இவையனைத்தும், இத்துறையின் கீழ் பணியாற்றும் மக்களின் வாழ்வு நலன் கருதியும், இத்துறையினால் முன்னேறும் நாட்டின் வளர்ச்சி நலன் கருதியும் இயக்கப்படுபவையாகும்.
உழைத்து சம்பாதிக்க வேண்டுமா?

கீழ்த்தட்டு மக்கள் வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு வர அழைத்தாலும் அதனை அலட்சியப்படுத்திவிடும் நிலை இன்று நிலவுகிறது. வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் தங்களது அன்றாட தேவையை பூர்த்தி செய்யவே வேலைக்கு சென்று சம்பாதித்தனர். ஆனால், இலவச திட்டத்தின் மூலம் மக்களின் அன்றாட தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவு, சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது தான். வேலைக்கே செல்லாமல் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு, வீட்டிலேயே உறங்கி, சலித்துவிட்டால் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் திரைப்படங்கள் பார்த்துவிட்டு, தினமும் உழைக்கமால் தூங்கி தூங்கி எழுந்திருப்பான். நோய் ஏதேனும் வந்துவிட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இலவசமாக சிகிச்சை பெற்று, ஓய்வெடுப்பான். மனைவி பிள்ளை பெற்றால் ரூ 6,000 உதவி தொகை இலவச சிகிச்சையுடன், பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்துணவு இலவசம், பாலர் பள்ளியில் படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவு இலவசம், பாடப்புத்தகம் இலவசம், பள்ளி செல்ல பேருந்து கட்டணம் இலவசம், அதுமட்டுமின்றி மிதிவண்டியும் இலவசம், பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை ரூ 25,000 இலவசம், ஒரு சவரன் தாலியுடன் திருமண செலவும் இலவசம், தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்திதாளில் விளம்பரமும் இலவசம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் இதை கதை தொடரும் அவளின் வாழ்க்கையிலும். இவ்வளவு சலுகைகளும் இலவசங்களும் வழங்கினால் ஒருவன் ஏன் உழைக்க வேண்டும். ஒருவனின் வாழ்க்கையின் அனறாட தேவைகள் பூர்த்தியாகும்போது அவன் ஏன் உழைக்க வேண்டும் யாருக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தலைத்தோங்கி நிற்கும். இந்நிலை மாறவேண்டுமானால்,
“தமிழர்களே…
விழித்தெழுங்கள்
உழைத்திடுங்கள்
இலவசத்தை வெறுத்திடுங்கள் அழித்திடுங்கள்
தமிழகத்தை தரணியில் உயர்த்திடுங்கள்” – என்பது ஒருசாரர் கருத்து.
வேலையில்லாமையை ஒழிப்போம்

மக்கள் நலன் கருதி எவ்வளவோ திட்டங்கள் கொண்டுவந்தாலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதில்லை. இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கினால் நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். பின்பு தத்தம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வேகமும், மென்மேலும் உழைக்க வேண்டும் என்ற விவேகமும் கூடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். இதன் விளைவு, நாட்டின் பற்றாக்குறை, வறுமை நீங்கக்கூடும் என்பது அனைவரும் அறந்ததே.
“பசி என்று வருபவனுக்கு ஒரு நேர உணவிற்கு மட்டும் வழிகாட்டாமல்,
அவன் வாழ்நாள் முழுக்க உணவு உண்ண நல்ல வேலை வாங்கித்தருவதே சிறந்தது.”
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாண்ப பெரிது.” – என்பது வள்ளுவர் வாக்கு.
நாடு முன்னேற நல்ல மாற்றங்கள் தேவை

இலவசத் திட்டங்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களையும் சமமக்களாக எண்ணி இயக்கப்படுகிறது. துமிழகத்திலுள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இனிதாக துவங்கி இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கிராம பகுதிகளில் குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

கரும்பு கொள்முதல் டன் ஒன்றுக்கு ரூ 2,000 ஆக உயர்வு, வட்டியில்லா பயிர்க்கடன், அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து, 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பு, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மிளகு, சீரகம், சோம்பு இறக்குமதி, சர்க்கரைக்கு வரி விலக்கு, ஜரிகை மீதான கொள்முதல் ம்றறும் விற்பனை வரிவலக்கு என பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதும்டடுமின்றி ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்க்கு 10 கோடி ரூபாய் செலவில் இலவச “டிஷ்னரி” வழங்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
வறுமையை ஒழிக்கும் இலவசம் வேண்டும்

மக்களுக்கு இலவசத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு, அரிசி கொடுத்து விட்டால் வறுமை ஒழிந்து விடாது. அவர்களின் வருமானத்திற்கு வழி செய்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.

இலவசத் திட்டங்களால் சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என்பது ஒரு சாரார் கருத்து. தாழ்த்தபட்டவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பல கிராமங்களில் வீடு, விவசாய நிலம், சுடுகாடு கூடஇல்லாத நிலையிலும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கல்வியும் நிலமும் வழங்கி அந்த கிராமங்களை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும். இலவச அரிசிக்கு பதிலாக இலவச விவசாய நிலங்கள் அளிப்பது நன்று. தமிழகத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளிகள் போதிய ஆசிரியர் இல்லாமல் சீர்க்கெட்டு போய் உள்ளன. இதுபோல் உண்டு உறைவிட பள்ளிகளும் செயல் இழந்துவிட்டன.

இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கம் வாய்ப்பு-வசதியற்றோர்க்கும் துணையற்றவர்க்கும் கதியற்றவர்க்கும் பயன்படவே இலவசம். அவர்கள் உழைக்காதவர்களோ, உழைக்க மறுப்புவர்களோ, உழவையும் உழைப்பையும் இழிவாக எணணுபவர்களோ அல்ல. தலைமுறை பலவாக உழைத்து வாழும் குடும்பங்களில் ஒவ்வொரு வகையில் அவர்தம் வாழ்வில் மகிழ்ச்சி விளையவும், ஓய்வில் உற்சாகம் தோன்றவும், அவர்களது உழைப்பு நிறைவான பலன் விலைவிக்கவும் ஏதுவாகவே இலவசங்கள் அளிக்கப்படுகின்றன. தக்க காரணகாரிய விளக்கமின்றி இலவசங்கள் வழங்கப்படவில்லை. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஏழை வீட்டினர் பொழுதுப்போக்கிற்;கும், பொது அறிவு வளர்ச்சிக்கும் பயன்பட.
தாய்மார்களுக்கு உதவும் இலவசங்கள்

எரிவாயு அடுப்பு இணைப்புடன் வழங்குவது, எரிபொருளாக விறகு பயன் படுவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் செம்மையாகவும், தாய்மார்கள் அடுப்பூதும் தொல்லை தவிர்த்திடவும் உதவுகிறது. கருவுற்ற தாய்மார்கள் மகப்பேறு எய்துவதற்கு முன்னும் பின்னுமாக 6 மாதங்களுக்கு ரூ 6,000 உதவித்தொகை அளிப்பது, அவர்கள் வயிற்றில் வளரும் சிசு, ஊனமோ உடல், மூளை வளர்ச்சி குறையோ எய்தாமல் நோய் நொடி வாராது தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதற்காக.

திருமண உதவித்தொகை ரூ 25,000 ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வயது வந்து பெண்ணிற்கு வாழ்வு கிடைக்கவும், பெற்றோரின் பெருங்கவலையை மாற்றவுமே அது மறைமுகமாக தற்கொலைகளையும், ஏக்கத்தையும் தவிர்க்கிறது. முதியவர்களுக்கும், விதவைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கும் உதவித்தொகைகள் அவர்களின் அன்றாட உணவுக்கு உதவும்.

யாருக்கிந்த இலவசத் திட்டம்

இந்த இலவசங்கள் மூன்று வேளையும் இலைவிரித்து உணவருந்தி, அஜீரணத்திற்கு மருந்து சாப்பிடும் வர்க்கத்தார்களுக்கு செய்யும் தானம், தருமம் போன்ற முறையைச் சேர்ந்தது அல்ல. அதனால் இது சோம்போறிகளுக்கு என்ற ஏற்பட்ட திட்டமுமல்ல, சோம்பேறியாக வாழ்வதற்கு வழிசெய்யும் திட்டமும் அல்ல. கரம் தேய உழைத்து தனது அன்றாட தேவையை பூர்த்தி செய்து தத்தம் மனைவி மக்களை காப்பாற்ற போராடும் தமிழருக்கே இந்த இலவச-திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் கல்வி சேவை

அங்கன்வாடியில் சேய்களுக்கும், பள்ளிகளில் மாணவர்களுக்கும் சத்துணவு வாரம் 5 முடடை அல்லது வாழைப்பழம் ஆகியவை இலவசமாக வழங்குவது வருங்காலத் தலைமுறை நோய் நொடிக்கும் பெரும் பிணிக்கும் ஆளாகாமல் வாழச் செய்வதற்காக. முதியோர்களுக்கு இலவச வேட்டி, புடவை அந்த ஏழைகளின் மானம் காத்திட, சமுதாயத்தில் அவர்கள் தன்மானத்துடன் உலவ தரப்படுவது.

படிக்கும் மாணவ-மாணவியருக்கு பள்ளிக்கட்டணம் இல்லை. புத்தகமும் இலவசம், தேர்வுக் கட்டணமும் இல்லை, இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம், ஆதிதிராவிட பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக தங்கிப்படிக்க விடுதிகள் ஏற்படுத்துவது அடித்தட்டு மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவே.
உயிர் காக்கும் மருத்துவ உதவி

பொது மக்கள் உயர்தர சிகிச்சை பெற வழிசெய்ய வேண்டி கலைஞர் உயர்சிகிச்சை உயிர் காப்பீட்டுத்திட்டம் 1 ¾ கோடி குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிக்சசைக்கு உதவி பெறலாம். தமிழ் நாடெங்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 386 வண்டிகள் ஓடுகின்றன. எந்த ஊரெனினும் மக்கள் ஆம்புலன்சை அழைத்தவுடனே வந்து, அவசர சிகிச்சை கிடைக்க கட்டணமில்லாமல் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் 108 அர்ச்சனை செய்பவர்க்கு ஆண்டவனே வந்து உதவுவது போன்று 108 ஆம்புலன்ஸ் வண்டி வருவதாகக் குறிப்பிட்டு மகிழ்கின்றனர்.

அனைவருக்கும் தைப்பொங்கலுக்கு பொங்கல் பொருள்கள் யாவும் இலவசமாக வழங்கப்பட்டது. தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் இன்பம் வாய்த்திட வேண்டும், முன்வர வேண்டும்

பொதுவாக மக்கள் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் திட்டங்களை அரசியல் பாகுபாடின்றி ஒருமித்து நிறைவேற்ற கட்சிகள் இயல்பாக முன்வர வேண்டும். இலவச கல்வி வேண்டாம், குறைந்த கட்டணத்தில் கல்வி வேண்டும் என்னும் நிலை வரவேண்டும். தட்சணைக் கொடுத்து பயின்றால் தான் கல்விக்கும் பெருமை அதை கற்போருக்கும் பெருமை.

மனதை மயக்கும் இலவசத் திட்டம்

தமிழகத்தின் வரலாற்றில் எபோதும் இல்லாத அளவிற்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனை தட்டிவிட்டால் தட்டில் சோறு என்று கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்துவிட்டது, காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள்தான். இதை தவறென்று யாரும் கூறவில்லை.

இலவச கண்சிகிச்சை முகாம், இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டம், சிறப்பு நாட்களில் இலவசமாக உணவளிக்கும் திட்டம், ஏழை பெண் திருமணத்திற்காக ரூ 10,000 வழங்கும் திட்டம், இலவச கல்வி, இலவச உயர்கல்வி, திராவிடர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவிதிட்டம், ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம், உயர்க்கல்விக்காக வங்கியில் வட்டி இல்லாக்கடன் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் மக்களின் வாழ்ககைத்தரம் முன்பைவிட சற்றே உயர்ந்து நிற்கின்றது.

மனிதனின் அன்றாட வாழ்வில் மருத்துவ செலவு தான் கூடிக்கொண்டே போகிறது. அப்படிப்பட்ட இந்த நிலையில், தமிழகத்தில் காணும் இலவச மருத்துவ திட்டம் மக்களுக்கு பயனள்ளதாக இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 4 ஆண்டில் சுமார் ரூ 1,100 கோடி அதிகமான மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ரூ 600 கோடி நவீன மருத்துவ கருவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

ஏழைமக்களின் முன்னேற்றத்திற்காக இயக்கப்படும் திட்டமாகத்தான் இவையனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால், இத்திட்டங்களால் ஏழைமக்கள் ம்டடுமின்றி அனைவரும பயன் பெறுகின்றனர் என்பது உண்மை தான். இப்படிப்பட்ட இலவசத் திட்டங்களால் வரும் சலுகைகளை பெற்றாக வேண்டிய மக்கள் உள்ளவரை இவ்விதமாக உதவிகளை செய்து தான் ஆக வேண்டும். நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

-DEEPIKA G

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s