இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – தணிகை சலம்

தற்போது அயலுறவுத் துறை மத்திய அமைச்சராய் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு பேட்டியில் இராஜாஜி எனப்படும் இராசகோபாலாச்சாரியார்தான் முதன்முதலில் பள்ளிப்பிள்ளைகளுக்கு இலவச உணவளிக்கும் திட்டம் கொண்டுவந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இலவச மதிய உணவளிக்கும் திட்டம் பள்ளிப் பிள்ளைகளுக்கு கல்விக்கு கண் கொடுத்த காமராசரால் கொண்டுவரப்பட்டது. அன்று அது தேவையாயிருந்தது.

எம்.ஜி.ஆர் தனது ஆயுள் காலத்திற்குள் ஏதாவது செய்ய வேண்டும் – இந்த ஊழல் அரசு முறைகளில் ஏதுமே நம்மால்கூட ஏழைகளுக்குக்கூட  செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மதிய உணவுத் திட்டத்தையே சத்துணவாக்கி ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனாதைகளுக்கும்; முதியவர்களுக்கும் என்று அதை விரிவுபடுத்தினார். கலைஞர் தனது அந்திமக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தையே இன்னும் விரிவாக்கி ஒரு நாளைக்கு ஒரு முட்டை; முட்டை சாப்பிடாத சைவக் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுங்கள் என்று மாற்று ஏற்பாட்டுடன் திட்டத்தை அனைவருக்கும் பெரிது படுத்தினார். இதுவே இலவசத்திட்டங்கள் தமிழகத்தில் வேரூன்ற அடிப்படை.அவ்வப்போது தேர்தலுக்கு தேர்தல் கட்சிகள் செய்யும் பணமழை பொழிவதும்; வாக்குகளை விலைக்கு வாங்குவதும் இந்த கணக்கில் வராது.

புத்தகம்;நோட்டுப் புத்தகம்; சைக்கிள்; பேருந்து கட்டணமின்மை;தொலைக்காட்சிப் பெட்டி;இலவச எரிவாயு அடுப்பு; இலவச எரிவாயு இணைப்பு; வீடு கட்ட நிலம்; கூரை வீட்டுக்குப் பதிலாக கான்கிரீட் சிமென்ட் வீடுகள்;விவசாயிகளுக்கு இலவச நீர்; மின்சாரம்; மோட்டார்;நெசவாளிகளுக்கும் இலவச மின்சாரம்; நியாயவிலை கார்டுதாரர் அனைவருக்கும் பொங்கல் இலவச வேட்டி; சேலை; பொங்கல் பச்சரிசி;வெல்லம் அடங்கிய பல பொருள் பை;தாலிக்குத் தங்கம்; பெண்குழந்தை பிறந்தால் – சிலர் பிறந்த நாட்களில் தங்க மோதிரம்;பெண்களின் திருமணத்துக்கு;பிரசவத்துக்கு; பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு; இப்படி சொல்லச் சொல்ல எல்லாம் இலவசம்.

இவை எல்லாம் என்ன மாறுதல் தமிழர் வாழ்வில் விளைத்திருக்கும் என்பதைவிட ஆட்சியாளர்கள் தங்கள் வசம் ஆட்சியை வைத்திருக்க பொதுப் பணத்தை எடுத்து சூறையிடலாகும். எல்லாவற்றையும் விடஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது ஆந்திராவுக்கு அன்றாடம் கடத்தப்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி; தமிழக காவலரை புகைவண்டி நிலையத்திலேயே ரவுடிகள் தாக்கி விரட்டுமளவு மாற்றியுள்ளது.

நன்மை:

108 நல்ல சேவை புரிகிறது.மருத்துவமனை; தீ அணைப்பு; காவல்துறை மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து நல்ல பணி புரிவதாக ஏழை மக்களுக்கு அவசியத் தேவையாக அரசின் சேவையில் எனக்கும் பிடித்திருக்கிறது. இது தமிழகத்தின் அத்தியாவசிய; அவசரகால தவிர்க்கமுடியா சேவைகளுள் குறிப்பிடத்தக்கதும்; தலையாய சேவையாகும் எனவே இது தேவைதான்.

தீமைகள்:
பொதுவாக எதுவும் இலவசமாக கொடுத்தால் அது அதன் பயன்பாட்டிலிருந்து குறைந்த மதிப்பே பெறுகிறது என்பதுதான் பொருளாதார அறிவியல் பார்வை. ஒரு தேசம் எல்லாவற்றையும் – கல்வி,வீடு; நிலம்; குடிநீர்; மருத்துவம்; தொழில் போன்றவற்றை பொது உடமையக்கி செயல்பட்டு கொள்கை அடிப்படையில்  சமத்துவப் பங்கிடல் என்பது வேறு.

ஒரு கடனுதவி அளித்தாலும் அந்தக் கடன் அவர்கள் என்ன காரணத்திற்காக பெறுகிறார்களோ அந்தக் காரணம்பற்றியே அதைப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிக்காவிட்டால் அந்தக் கடன் தவறாகப் பயன்படுத்தப்படுவதுடன் அது வாராக் கடனாகும். எந்தக் குறிக்கோளுக்காக அளிக்கப்படுகிறதோ அந்த குறிக்கோள்- அதாவது மக்கள் அந்த திட்டத்தை பயன்படுத்தி மேம்பாடு அடைவதும் தடைபடும். நாட்டுக்கும் நஷ்டம் மக்களுக்கும் கேடு. நிலை அப்படி இருக்க எதை எடுத்தாலும் இலவசமாக அளிப்பது எனும்போது விளையும் நிகழ்வுகள் மக்களை நாட்டை இழிவுபடுத்தி இழிநிலைக்கே இட்டுச் செல்லும்.

தொலைக்காட்சிப் பெட்டிகள்:

1. சில மின் இணைப்பில்லா கிராமங்களில்கூட வழங்கப்பட்டுள்ளன. கேட்டால் மின் இணைப்பே அங்கு வராதா? என விவாதிக்கலாம். மின் இணைப்பிற்க்காக போராடி மக்கள் வரும்போது அதை அளிப்பதில்  ஆர்வம் காட்டாத அரசு இலவச  தொலைக்காட்சிப் பெட்டிகளை மட்டும் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவானேன் என்பதுவே நமது கேள்வி.
2.தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கியவுடன் 1500ரூபாய்க்கு விற்று விட்டு  உடனே குடித்தவர்களும் உண்டு.
3.சில பெட்டிகள் தரம்தாழ்ந்த அவசரத்தயாரிப்பால் பயனின்றி சில நாட்களிலேயே பழுதாகி எடுத்தெறிய முடியாக் குப்பைகளாகி சில வீட்டு மூலைகளை அலங்காரம் செய்கின்றன இன்று.
4. மிகப்பெரும் பணக்காரக் கனவான்கள் கூட இலவசமாக தொலைக் காட்சிப் பெட்டிகளைப் பெற்றிருக்கின்றனர்.

பெண் கல்வி; திருமணம்:-

இந்த நிதி உதவி உண்மையிலேயே சில பொருத்தமான ஏழை எளியவர்களுக்கு பயன்பட்டபோதும் நிறைய தரகு- கமிஷன் – அடிப்படையில் நிறைய இடைத்தரகர்களுக்கும்; வாழ்வின் பொருளாதாரத் தரம் உயர்ந்தோர்க்கும்; கட்சிக்காரர்களுக்கும்தான் அதிகம் பயனாகிறது. அலுவலகரீதியாக இலஞ்சமும்; ஊழலும் தலைவிரித்து ஆடுவதால் இந்தச் சலுகைக்கு இவ்வளவு கட்டணம் என மறைமுக இலஞ்சம் வசூலிக்கப்படுகிறது.

முதியோர், அனாதை, ஊனமுற்றோர் உதவிகள்:
இலஞ்சமும், கமிஷனும், தபால்கார ஊழலும் இல்லாது கிடைத்தால், உண்மையாகவே இலக்கு நோக்கிச் சேர்ந்தால் இது நல்ல திட்டம்தான்.
கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:

அரசின் சுகாதாரத் துறையும், நோய்தடுப்புத் துறையும் சரியாகப் பணிபுரிந்தால் இவை தேவை இல்லைதான். நிறைய அன்றாட வாழ்வில் நோய், பிணி, போன்றவற்றிடமிருந்து விலகி – சில வியாதிகளை உள்ளடக்காமல் மருத்துவமனைகளுக்கு சார்பாக விளங்குகிறது. தற்போது மருத்துவமனைகளும் அரசிடமிருந்து பணம் வரவில்லை எனவே இத் திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கமுடியாது எனக் கூறி வருவது கவனத்தில் கொள்ளவேண்டியது.

அரசு மருத்துவமனைகள்:

நிர்வாக மேலாண்மை செய்பவரைப் பொறுத்திருந்தாலும்; பொதுவாகவே ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே போக்குவரத்து; பதிவுத் துறைகளுக்கு அடுத்து இத்துறை ஊழலில் தலைசிறந்து விளங்குகிறது.

முட்டை:

பாதிப் பாதி முட்டைதான் வழங்கப்படுவதாகவும்; சத்துணவு அமைப்பாளர்முதல் தலைமை ஆசிரியர் கல்வி அலுவலர்கள் மாவட்டத் தலைமை கல்வி அலுவலர் வரை எனப் பலரிடமு இந்த ஊழல் செல்வதாக உள்ளது.

அரசுப் பள்ளிகள்:

பல அரசின் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பல இடங்களில் போதிய அளவில் மாணவசேர்க்கைகள் இல்லாமலேயே (சென்னை மாநாகராட்சியில்நடந்தது போல) எண்ணிக்கைகளைக் கூட்டி எல்லாவகையிலும் கணக்கு காண்பிக்கப் படுகிறது.

இலவச மின்சாரம்:

பெரிதும் துஷ்பிரயோகப் படுத்தப்படும் திட்டம். வாக்கு வங்கியைக் குறிவைத்தே கைத்தறி; விசைத்தறி என விவசாயிகளுக்கு மட்டும் இருந்தது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மின் இலாகா; நஷ்டம்; மின் பற்றாக்குறை; 1 அலகு மின்சாரத் தயாரிப்புக்கு ரூ6க்கும் மேல்  ஆகிறது என்றும் தனியாரிடமிருந்து எல்லாம் விலைக்கு வாங்கி ஏன் இப்படி விரயப் படுத்த வேண்டும்? நெசவாளர் வீடுகளில் மின் அடுப்புகள், எல்லாம் மின் சாதனங்கள், தறி நெய்கிறாரோ இல்லையோ மின்சாரம் உபயோகிக்கிறார் நீர் சுடவைப்பது உட்பட. விவசாயத்திற்கு எவ்வளவுநாள் இலவசமாகவே கொடுக்கமுடியும்? எல்லாமே தவறான  அரசின் கொள்கை முடிவுகள். வாக்கு வாங்கவேண்டுமே எங்கே நமக்கு அரசுப் பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற கட்சிகளும், அரசுத் திட்டங்களும். எல்லாமே இலவசம் என்றாலும் ஏன் விவசாயி தொழிலை விட்டு விட்டு பின்னலாடைத் தொழிலுக்கும், மற்ற கூலித் தொழிலும் செய்ய ஓடுகிறான்?உணவு, உடை, வீடு , கல்வி, திருவிழாப் பரிசுகள், மருத்துவம் எல்லாம் இலவசம் என்றாலும் எதிர்பார்த்தபடி ஏன் மக்களிடம் முன்னேற்றமில்லை? ஏன் எனில் மீதியாகும்  எல்லா காசையும் – சிறுகச் சிறுக கொடுத்தவை யாவற்றையும் அள்ளி வழித்து மதுக் கடைகள் வழியே உறிஞ்சிக் குடித்து விடுகிறது அரசாங்கமும் – பெரு முதலாளிகள் குழுவும்.

எல்லாவற்றையும் இலவசமாக தரும் அரசாங்கம்; மதுவைமட்டும் ஏன் இலவசமாகத் தருவதில்லை.( தேர்தல் நேரம் தவிர). கள்ள மது விற்றாலோ, கள் இறக்கினாலோ கடும் தண்டனை விதிக்கக் காரணமென்ன? மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர், வருவாய், கலால் துறை எல்லாம் மது விற்பனை செய்வதற்காகவே இந்திய நிர்வாக சேவை – ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ், இன்ன பிற படிப்புகள் படித்து மக்கள் சேவைப் பணிக்கு வந்திருக்கிறார்கள் – வெட்கக் கேடு. நாங்கள் குடிகாரர்களைத் திருத்த முனையும்போது ஒரு விளக்கப் படத்தில் ஒரு பானையில் அவனுடைய வருமானம், சேமிப்பு, உடை, உணவு, உறையுள் செலவு எல்லாம் போட அந்தப் பானையின் அடியில் ஒரு துளை மது, ஒரு துளை புகைப்பது, ஒரு துளை பழைய கால இறப்பு, திருமண, விழாக்காலச் செலவுகள் ஆகிய  துளைகள் வழியே அவனுடைய குடும்ப வருமானம் யாவும் போய்க்கொண்டே இருக்கும். வயிற்றுப் போக்குடையவன் எதைப் போட்டாலும் சரியான மருத்துவம் பார்க்காவிட்டால் நிற்காது கீழே கழிவது போல. மதுவே எல்லாப் பாவங்களுக்கும் அடிப்படை என்ற காந்தி தேசத்தில் நாளும் கொலைகள், திருட்டு, கொள்ளை எல்லாம் நடக்க மதுவே, போதையே காரணம்.

அரசும் கட்சிகளும் மக்கள் நலத்திட்டங்கள் என்ற பேரிலும். சாலை, பாலங்கள், இன்னபிற அரசின் உரிமம், ஏலம் போன்றவற்றை எல்லாம் ஆக்ரமித்து முறைகேடான பணத்தை வெளிநாட்டிலும், ஸ்விஸ்வங்கியிலும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் வைத்துக்கொண்டது போக மீதமுள்ளதுடன் பெரிய பணமுதலைகள், ஆலைமுதலாளிகள், கல்லூரி, தனியார் பள்ளிக் கல்வி நிறுவனங்கள், பெரு வணிகர்கள், ஒப்பந்ததாரர்கள், பஸ் கம்பெனி முதலாளிகள் யாவரிடமும் தேர்தல் நிதி பெற்று பதவிக்கு மறுபடியும் அமர வாக்குகளை விலை கொடுத்தும், மது பான விருந்து அளித்தும், பிரியாணிக்காக – தொகுதியின் ஆடு, கோழி கால்நடை அழித்தும் என்ன என்ன அநியாயம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து  குற்ற வழிகளில் சிறிது  வாக்குகளை அதிகம் பெற்று  பதவியில் ஆட்சியில் அமர எல்லாமே செய்ய இந்த இலவச திட்டங்களை ஒரு உபாயமாகப் பயன்படுத்துகின்றன. சில குடும்பங்களில் தாத்தா தாலிக்குத் தங்கம் தந்தாரே, திருமணச் செலவுக்குத் தந்தாரே, படிக்கப் பணவுதவி தருகிறாரே, மிதிவண்டி 1க்கு 2ஆக (2 பெண்கள்)1 வாரம்கூட வண்டி ஓடவில்லை. தந்தாரே, குழந்தைப் பிறக்கவும் கொடுக்கிறாரே என வாக்குரிமையை  வாங்குவதை வாங்கிக் கொண்டு விற்றுவிடுகின்றனர்
இவர்களால் எந்த மக்கள் பிரதிநிதிகளை தட்டிக் கேட்க முடியும்? எனவே கீழ்த்தட்டு மக்களை குறிவைத்தே இந்த அரசு, அரசியல் இலவச நாடகங்கள் அரங்கேறிவருகின்றன. அவர்கள்தான் வாக்குச் சாவடி சென்று  தங்களது வாக்குகளை அளிப்பவராகவும் ஜனநாயகத்தை சாவடிப்பவராகவும், அரசியல்வாதிகளை மன்னாராக்குபவராகவும் இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அறம், நீதி, ஏதுமில்லாத ஒழுக்கமில்லாத மனிதத் தொகைதான் மதுவுக்காக எதுவும் செய்யத் தயாராய் இருக்கிறார்களே. போதாக்குறைக்கு அரசு ஊழியர், போதையில்கூட பணி நேரத்தில்கூட இருக்கும் அற்புதமான அரசு ஊழியர் யாவரும் சலுகையின் பக்கமே  ஏன் எனில் மக்கள் தஙக்ள் சலுகையை இவர்கள் விரல் நுனியில் அல்லவா பெறவேண்டியுள்ளது. எனவே இவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்வு. 1. இந்த அரசை தக்கவைத்துக் கொள்ள தங்களால் இயன்றதைச் செய்வது 2. மக்கள் நலச் சலுகை அளிக்க ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் இவ்வளவு என்று சுறண்டுவது எனவே அரசு என்ன திட்டம் கொணர்ந்தாலும் அமல்படுத்துவது இவர்கள்தானே? எனவே இவர்கள் காட்டில் அடைமழை.
மேலும் இவர்கள் விரும்பும் அரசானால் பரவாயில்லை இஷ்டப்படி வேலை செய்யலாம். சம்பளத்துக்கு சம்பளம், கிம்பளத்துக்கு கிம்பளம், அக விலைப் படி, முக்காப் படி, ஒரு படி, அரைக்காசு  உத்யோகம் ஆனாலும் அரசு உத்யோகம் அதற்குத்தானே வேண்டும்?

மொத்தத்தில் தன்மானத்துடன் வாக்கு உரிமையை பயன்படுத்தி கடமையைச் செய்து உரிமைக்காகப் போராடும் குடிமக்களை இலவசத்திட்டம் மற்றும் மதுவின்மூலம்  பிச்சைக்காரர்களைவிட கேவலமாக புழுத்த புழுக்களாக, சேற்றில் உழலும் பிராணிகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.- அரசும் இதன் இலவசத்திட்டங்களும்.இதன் விளைவு மக்களாட்சி அடுத்த பரிமாணத்திற்கு இட்டுச் செல்லப்படுவதைவிட மன்னராட்சிக்கு பின்னோக்கி இட்டுச்செல்கின்றன. வன்முறைகளும்;குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.அஹிம்ஸை மார்க்கம் முடிந்து போய் தீவிரவாதம்- செஞ்சேனைப் படைகளிடம் குழப்பமன இளைஞர்கள் சென்று சேர்தலும் நிகழ்கின்றன.

  சரியான அரசும், கொள்கைகளும்;  செயல்பாடுகளும் கொண்டிருந்தால் அரசுக்கு இலவசத்திட்டம் ஏதும் தேவையில்லை. பள்ளிக் கல்வி; மருத்துவம் போன்றவற்றோடு நிறுத்திக் கொள்ளலாம். அல்லது யாவற்றையும்  பொது அல்லது  சமப்பகிர்வு செய்யலாம். ஒருபுறம் குடிநீரை கிடைக்காது தனியார் மூலம் விற்றுக் கொண்டு கழிப்பறைகளுக்குக் கூட சுகாதாரமின்றி தனியார் மூலம் ரூ 2 வசூலித்துக் கொண்டு (  அரிசி ரூ1க்கு; கழிப்பிடக் கட்டணம் ரூ 2க்கு)   என்ன நிர்வாகம் இதெல்லாம்?
கல்வியின் அருமை எல்லோர்க்கும் தெரிந்து 50 ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. எல்லா பெற்றோரும் தமது பிள்ளைகளைபடிக்கவைப்பது பற்றி கவனத்தில் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தாங்களாகவே படிக்க வைக்கவும் போக்குவரத்து செய்யவும்; உணவளித்துக் கொள்ளவும்; ஆடை எடுத்துக் கொள்ளவும் முடியும்.மது பானத்துக்கு செய்யும் எலவில் புத்தகம் வாங்கிக் கொடுக்க முடியாதா?
பொதுவாகவே மக்களின் முதுகெலும்பை வளைத்து மனிதத்தன்மையற்ற எதையும் கேட்பாரற்றவராக மது அடிமைகளாக இலவச அடிமைகளக மாற்றிவிட்டுள்ளது அரசு. ஒரு காலத்தில் தன்மானத்திலும் சுய கௌவரவத்திலும் தலைசிறந்தவனாயிருந்த தமிழன் இன்று இலவசமாக  எதையுமே எதிர்பார்க்கிறான் மனைவியைக் கூட.

வியாபாரத்திலும் வணிகத்திலும் ஒரு குப்பை வாங்கினால் இன்னொரு குப்பை இலவசம் என்பதற்காகவே தேவையில்லாத குப்பைகளை எல்லாம் வாங்கி குப்பைமலையாகத் தன் வீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறாள் தமிழ்ப் பெண்மணி. குனிந்து நிமிர்ந்தால் கூட்டிப் பெருக்கினால், மாவு அரத்தால், அம்மி அரைத்தால், துணி துவைத்தால் கை வலி, கால் வலி என்று  மருத்துவருக்கு சென்று கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறாள் நடுத்தர வர்க்கத்துப் பெண்மணி. அடுத்து ஒரு  திருமணம் செய்தால் இன்னொன்று இலவசம் என்று ஆள் மாற்றிக் கொள்ளும் கலாச்சாரம் நோக்கி மதுபானக் குடிகள், படைகள் அடுத்தவர் வீட்டில் அனுமதியின்றி நுழைந்து கொண்டிருக்கின்றன –  எல்லாம் இலவசம் செய்யும் சேவை தரும் பாடம்.

இந்தப் பெண்களை இந்த நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தைப் பார்த்துவிட்டு உழைக்கும் வர்க்கமும் மண்ணில் கை வைக்காமல், கஷ்டப்பட்டு எந்தத் தொழிலும் செய்யாமல் அப்படி  செய்தாலும் எப்படி ஏமாற்றலாம் என்றத் திட்டமிட்டபடி காலை 10மணிக்கு கட்டட  பணிக்கு வந்து மாலை 5 மணிக்கு சம்பளம் 500 ரூபாயுடன் கை கழுவி சேலைத்துணிமணியில் மண் படாமல் போய்விடலாம் என்று மனப் பாங்குடன் மனப்பால் குடித்துக் கொண்டு வேலை செய்யும்  வீட்டினரின் செலவிலேயே 2 வேளை தேநீரை  இலவசமாக க் குடித்துவிட்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாது சரியான வேலையும் செய்யாமல் பண்பு கெட்டு நாசமாகி விட்டது உழக்கும் வர்க்கம்.

விவசாயம்  இனி தமிழ்நாட்டில் செழிக்க வழி இல்லை. மண்ணை நம்பிய காலமும் போச்சு; ஏமாற்றியே வாழ்ந்துவிடலாம் என்ற காலம் வரலாச்சு. வந்தாச்சு. கேட்டால் எல்லாவற்றுக்கும் சங்கம், நேர்மைக்கோ பங்கம்; பெருங்காயம் வெங்காயம்.

கடைசியாக ஒரு வரி:- இலவசத்திட்டம் மனிதனை பிச்சைக்காரனாக்கியதோடு வீரியவிதைகளை, அசல்விதைகளை, பூவாத் தாவரங்களாக மற்றி காயடித்துவிட்டன. தானியமணி இல்லாமல் பதர்களாகி எங்கெங்கும்… கேட்பாரின்றி அரசும் அரசியலும் தங்க.

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

One Response to இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – தணிகை சலம்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    //இதன் விளைவு மக்களாட்சி அடுத்த பரிமாணத்திற்கு இட்டுச் செல்லப்படுவதைவிட மன்னராட்சிக்கு பின்னோக்கி இட்டுச்செல்கின்றன. //
    அரசு அதிகாரிகளை பிரபுக்களாக்கி மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் மன்னராட்சி மெதுவாக தலை எடுக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s