இலவசத்திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் -இரா. கீதாகுமாரி

முன்னுரை:

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!” என்று சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். தமிழனின் இன்றைய நிலை, அவன் தலை நிமிரக் காரணமாய் இருக்கிறதா?இல்லை, தலை குனிவைத் தருகிறதா? சிந்திக்க வேண்டியது தமிழனின் கடமை.

இலவசம் எங்கிருந்து?

தமிழ் இனம் தன்மானம் மிக்க இனம் என்று நெஞ்சு நிமிர்த்துச் சொல்லலாம். காரணம், அடுத்தவர்க்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதே பண்பாடு என்று சொல்லிக் கொடுத்துவிட்டு, அதே சமயம் இன்னொரு புறம் இரந்து வாழ்வது தவறு என்றும் எடுத்துச் சொன்னதும் தமிழ் பண்பாடுதான்.

பண்பாடு-பண்படு:

பரந்து கிடக்கும் நம் இந்தியத் திருநாட்டின் பெருமைக்குக் காரணம் இந்த தேசத்தின் பண்பாடுதான். இந்தியா என்றால், அதன் பெருமைக்குப் பெருமை சேர்ப்பது தேசத்தின் உயிராகப் பின்னிப் பிணைந்துவிட்ட இந்த நாட்டின் பண்பாடு. பிச்சை எடுத்துதான் ஒருவன் உயிர் வாழவேண்டுமென்றால் இந்த உலகத்தை இயற்றிய இறைவன் அழிந்து போகட்டும் என்று வள்ளூவரே கொதித்துப் போய்ச் சொல்கிறார்.

பிச்சை எடுத்து வாழ்வது தவறு என்பது வள்ளுவரின் எண்ணமானால், இலவசமாய் எதனைப் பெறுவதும் அவருக்கு உடன்பாடில்லாதது என்பது தெளிவாகிறது. ஏனெனில் இலவசமாய்ப் பெறுவதும் பிச்சை எடுப்பதும் ஒருவகையில் ஒன்றுதானே?!

இதுதான் இந்தியப் பண்பாடு எனில், முற்காலத்தில் வழங்கிய சில உன்னதப் பொன்மொழிகள் நம்மை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தவே செய்கின்றன. எடுத்துக் காட்டாக, “கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!” என்றார்களே, கல்விக்காக பிச்சை எடுப்பதுகூட சரி என்கிறதா நம் முந்தையர் இலக்கியம்? இப்படி இரண்டு பட்ட செய்திகள் வந்ததால்தான் தமிழன் அதிகமாகவே குழம்பிப் போகின்றான்.

இலவசம் – நன்மையா? தீமையா?

நன்மைகள்: இலவச திட்டங்கள் நம் தமிழ் மாநில மக்களை மட்டுமே மையப்படுத்தி செயலாக்கப்படுவதுபோலத் தோன்றுகின்றன. வெறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இங்குதான் இலவசத் திட்டங்கள் மிக அதிகம் என்று எண்ணத் தோன்று கிறது. தெரிந்த அளவில், ‘மதிய உணவுத் திட்டத்தில்’ தொடங்கி ‘இலவச பல்பொடி, ‘இலவசக் காலணி’ என்று வளர்ச்சி அடைந்து இன்று ‘இலவச தொலைக்காட்சி’ வரை இலவசம் வளர்ந்துவிட்டது. சத்துணவுத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முட்டை, வாழைப் பழம் என வந்துவிட்டது கண்டு, உண்மை உழைப்பை விரும்பும் ஒரு கவிஞர் பின் வருவதுபோலக் கவிதை எழுதினார்.

“கல்விக்கூடங்களெல்லாம்
சத்துணவுக் கூடங்களாகி வருவதால்
இனி உருவாகிறவர்களெல்லாம்
சர்.சி.வி.ராமன்களல்ல…
சாப்பாட்டு ராமன்களே!” என்றார்.

நாடும் இலவசத்திட்டமும்:

ஒருநாடு பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடாக இருக்கலாம்., அதற்காக இலவசத்திட்டங்கள் அதிகமாக அங்கு அறிவிப்பது அந்த மக்களின் உழைப்பிற்கும் ஆசைக்கும் விடுக்கப்படுகிற சவாலாக அமைந்துவிடும். பொருளாதாரத் தாழ்வும் ஒரு பொருள் கிடைக்காது என்கிற நிலை இருக்கிறபோதும்தான் அந்த நாட்டு மக்களுக்குப் போராட வேண்டும் என்கிற வெறி தோன்றும். வறுமையை வெல்ல இலட்சிய வேட்கை தோன்றும். அப்போதுதான் தனிமனிதன் மட்டுமின்றி, மொத்த நாடும் முன்னேறும் என்பது திண்ணம்.

எல்லாரும் மேம்பட என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட இனம் மட்டுமின்றி எல்லாரும் மேம்பட அரசு ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது நல்லது? அதைத்தான் சொல்கிறது பின் வரும் கவியரசு கண்ணதாசன் இயற்றிய திரைப்பாடல்,

“எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
வல்லான் பொருள் குவிக்க்கும் தனியுடைமை நீங்கி
வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடமை!”

ஆம். பொதுவுடமைச் சித்தாந்தம் ஒன்றுதான் எல்லாரையும் மேம்படுத்தும் அற வழியாகும். அதைத்தவிர்த்து உழைப்பவன் உழைப்பைச் சுரண்டுவதோ அவர்களைச் சோம்பேறியாக்குவதோ அழகல்ல. இலவசத் திட்டங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்கிவிடும். அது மட்டுமன்றி நாட்டுப் பற்று குறையும். நாட்டுப் பற்றும், நம்பிக்கையும் குறைந்தால் அது, பிற்காலத்தில் வன்முறைக்கு வித்திட்டுவிடும். உள்நாட்டுக் கலவரங்கள் தோன்றிட இடமளிக்கும். அதன் விளைவாக நாட்டில் அமைதியின்மை ஏற்படும். அதைப் பயன் படுத்திக் கொண்டு அந்நாட்டின்மீது அந்நியப் படை எடுப்புகள் நிகழவும் ஏதுவாக அமைந்து விடும். இவை அச்சுறுத்தல் அல்ல… நிகழப்போகிற நிதர்சன உண்மையும் கூடத்தான்.

விவசாயிகளும் இலவசத் திட்டங்களும்: பெரும்பாலும் விவசாயிகள் நிறைந்த நாடு இந்தியா. ஒருகாலத்தில் இந்த நாட்டில் விவசாயம்தான் முதன்மைத் தொழிலாக இருந்தது. இன்று சூழல் அப்படியல்ல. கணினி மயமாக உலகம் மாறிவருகிற சூழலில் விவசாயம் இரண்டாம்தரத் தொழிலாகிவருகிறது. என்வே விவசாயிகளை மையப்படுத்தி அமலாக்கப்பட்ட இலவச மின்சாரம் இலவச இடுபொருள்கள் உரங்கள் இவை எல்லாமே இன்றைக்குத் தேவைதானா என்ற கேள்வியும் எழவே செய்கின்றன.

பொதுவான கருத்து:

பொதுவாகச் சொல்வதென்றால், இலவசங்கள் மனித சமூகத்தின்மீது களங்கம் கற்பிக்கக்கூடியவை. மனித இனத்திற்கே இழிவாகக் கருதப் படக்கூடியது. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்கிற விவசாயிகளுக்குமட்டும் இலவசங்கள் பயன் தரலாம். ஆனால் அது ஒருகாலத்தில் சரி. இப்போதைய சூழலில் இலவசங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்தின் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக அமையக்கூடியதுதான்.

சங்ககாலமும் இலவச எதிர்ப்பும்:

தமிழர் பண்பாட்டிற்கும் இந்திய கலாச்சாரத்தின் பிடிப்பிற்கும் ஆணி வேராக இருப்பது சங்க கால இலக்கியங்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். சங்க காலப் புலவர்கள் தாம் வறுமையில் உழன்றபோதும் இலவசமாக எதனையும் அரசர்களிடமிருந்தோ அல்லது புரவலர்களிடமிருந்தோ எதனையும் இலவசமாகப் பெறுவதில் விருப்பமில்லாதவர்கள் என்பதை பல்வேறு படைப்புகள் சான்று பகர்கின்றன. எடுத்துக் காட்டாக,

“ஈ என இரத்தல் இழிந்தன்று
ஈயேன் எனல் அதனினும் இழிந்தன்று!”

என்னும் பாடல் மூலமாக அறியமுடிகிறது. அதனால் அன்று தொடங்கி இன்று வரை சிலர்மட்டுமே இலவசங்களில் விருப்பம் உள்ளவர்களாகவும், பலர் மான உணர்வுக்குக் கட்டுப்பட்டு இலவசங்களை எதிர்த்தார்கள் என்பதும் அறிய முடிகிறதல்லவா?

முடிவாகச் சொல்வது என்ன?

முடிவாகச் சொல்வது என்றால், எல்லா வகையிலும் சிந்தித்துப் பார்த்தால், இலவசத் திட்டங்களால் அதிக அளவில் நன்மை பயப்பதாக இல்லை. நாட்டின் தற்காலச் சூழலை மட்டுமே கணக்கில் கொண்டு முடிவுக்கு வருவதைவிட, எதிர்காலத் தலைமுறையை அவர்களின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு நினைத்துப் பார்க்கையில் அரசுகள் இலவசத்திட்டங்களை அறிமுகப் படுத்துவதும் அமலாக்குவதும் தேர்தல் என்கிற ஒன்றைக் கருத்தில் கொண்டே தவிர, அவர்களின் மேன்மையை எண்ணியல்ல என்பதால், இலவசத் திட்டங்கள், வளர்ந்துவரும் அனைத்துத் தரப்பு மக்களின் தற்கால வளர்ச்சி நிலையைக் கருதி தேவையற்றவையே அவை தீமையையே அதிகம் விளைவிக்கின்றன என்று உறுதியாகச் சொல்லலாம்.

****************

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

One Response to இலவசத்திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் -இரா. கீதாகுமாரி

 1. chandrasekhar R சொல்கிறார்:

  //“கல்விக்கூடங்களெல்லாம்
  சத்துணவுக் கூடங்களாகி வருவதால்
  இனி உருவாகிறவர்களெல்லாம்
  சர்.சி.வி.ராமன்களல்ல…
  சாப்பாட்டு ராமன்களே!” என்றார்.//
  அருமையான உதாரணம்.
  பரவாயில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s