இலவசத்திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்-நன்மை தீமைகள்

இலவசத்திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்-நன்மை தீமைகள்
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் – என்கிற கணீர்க் குரல் மனதுக்குள் ஒலிக்க இந்த பகிர்வையும் மனதளவிலான எனது புரிதல்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.அரச கால ஆட்சிகளில் கை நிறைய பொற்காசுகளை (பொற்கிழிகள்,கழஞ்சுகள் ) அளித்தும் இறையிலி நிலங்கள்,நிவேதனங்களை அளித்தும் அரசர்கள் தன் வெண்கொற்றக் கொடையின் புகழொளியை வையத்துக்குப் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு பெரிய அரசனாயினும் அவன் கீழ்வரும் வளங்கள் யாவற்றையும் துய்த்துவிட இயலாது என்பதால் இப்படி பல வகைகளிலும் தந்து உவந்து மகிழவேண்டியது தவிர்க்க இயலாததே.
மன்னராட்சிக் காலம் முடிந்த இன்றைய நிலையில் மக்களுக்காக மக்களுடைய மக்களாட்சி தலையெடுத்த பின் பரிபாலன முறை முற்றாக மாறுபட்ட ஒரு வீச்சினை அடைந்துவிட்டது. அரசு என்கிற சொல் இப்போது ஓரிரு சர்வாதிகார ஆட்சிநாடுகளைத் தவிர்த்து குடியரசு என்ற பொருளிலேயே இங்கு பயிலப்படுவதாகவும் அமைந்துவிடுகிறது. பற்பல நோக்கிலும் இந்த இலவசத் திட்டங்கள் என்பதை நாம் பார்க்கலாம்: உலகு தழுவிய அளவிலும் பரிசீலிக்கலாம் எனுமிடத்து ஒரு சிற்றலகாக இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டை காட்சி அலகாக எடுத்துக்கொள்ளுதல் தரவு நிலையிலும் உறவு நிலையிலும் எனக்கு ஏதுவாக இருக்கிறது. சமுதாயத்தின் எந்தப் படி நிலையில் இருக்கிறவரும் ஒரு சிறிதாவது இலவசத்தின் பயனைத் துய்க்கிறார் என்பது தமிழ்நாட்டு வாழ்முறையாக இருக்கிறது. ஒரு விதத்தில் உலகம் மானுடர்கள் துய்ப்பதற்கே எனும் கருதுகோள் கொண்டு நோக்கினால் இலவசம் ஒரு இயல்பே எனும் எண்ணத்தை சுலபமாக அடையலாம்.
தமிழ்நாட்டின் போக்கில் என்று சொல்வதை விட வளரச்சிப் போக்கில் தவிர்க்க இயலாமல் பாராட்டுக்குட்பட்ட முதலாவது இலவசத்திட்டம் என்றால் பெருந்தலைவர் கு.காமராஜ் அவர்கள் கொண்டுவந்த இலவச மதிய உணவுத் திட்டத்துக்கு பெரும்பான்மையோரின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கிறது. இத்தனைக்கும் அமெரிக்காவில் வெட்டியாக கடலில் கொட்டிய கோதுமையை இரவல் வாங்கி இங்கேயுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்தார். அவர் ஏற்றிய கல்வி தீபத்தின் பலன் பல மட்டங்களைச் சென்றடைந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது.அவருக்கு எதிர்க் கட்சிக்காரர்களான தி.மு,.க பாணியில் சொல்லப்போனால் கூட ,’மனசாட்சியுள்ளோர் மறுக்கமுடியாது.’
இந்தத் திட்டத்தினால்தான் அந்த அமெரிக்கக் கோதுமையோடு சேர்ந்து பார்த்தீனியமும் கலந்து வந்துவிட்டது என்கிற வாதமும் உண்டு. ஆனால் சமுதாயத்தில் பரவிவிட்ட நச்சுச் செடிக்கும் அவற்றின் கனிகளுக்கும் நிச்சயமாக இந்த இலவசத்திட்டம் காரணமாக இருந்திருக்கமுடியாது.
பெரிய அளவில் இலவசங்களை எதிர்பார்க்கும் மனநிலை தமிழ் மனங்களில் தொண்ணூறுகள் வரையும் கூட உருவாகியிருக்கவில்லை. கஞ்சித் தொட்டி உட்பட வறுமையை தமிழகம் அனுபவித்தபோதும் உயிர் தரித்தலுக்காக உணவின் மீது வேட்புறும் எண்ணம் இருந்ததேயன்றி அரசு ஏதேனும் இலவசத்தை அறிவிக்கும் என ஏங்குகிறவர்களாக அவர்கள் இல்லை.மனங்களின் வரையறைக்குள்ளேயே ஒரு கோட்பாட்டுக் கருவாக அந்த எண்ணம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் பதவியேற்ற சி.என்.அண்ணாதுரை முதன்முதலில் லாட்டரிச் சீட்டைக் கொண்டுவந்தார்.இது இலவசத்தில் படாது என்றாலும் லட்சாதிபதிக் கனவை அதிர்ஷ்டக் கனவை தமிழ் மனதில் கொண்டுசேர்த்தது எனலாம். ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம் என்கிற இந்த சீட்டு திரையரங்க கவுன்டர்கர்களில் விற்கப்பட்டன என்பது இன்று நாற்பது வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்குத் தெரியாத செய்தியாகும்.
அதி நிச்சயமாகவே இலவசமாகத் தரவேண்டிய நிர்ப்பந்தமான தேவை ஒன்று சமூகத்தில் எழுந்தது. அதுதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்கிற வசதி. ஒரு வகையில் அவர்களிடம் மின்கட்டணம் மட்டும் வசூலிக்கப் படுவதாக இருந்தால் இன்னும் பலர் அத்தொழில் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு முயல்வார்கள் அல்லது விவசாயத் தொழில் இன்னும் சில ஒழுங்குகளை நோக்கியும் – நீர் மேலாண்மை உள்ளிட்ட ஆதாயவழிகள் நோக்கியும் பயணிக்கும். இந்திய விவசாயம் உண்மையில் தனித்த வரைவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஆகியனவற்றைக் கோருகிறது.
வேறு எந்த ஒன்றுக்கும் இல்லாதபடி விவசாய மின்சாரத்தின் இலவசக் கோரிக்கைக்காகத்தான் துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகள் ஆகியனவற்றை தமிழகம் கண்டது. இத்தனைக்கும் உழவு மின்சாரத்துக்கு அரசு விதித்திருந்தது யூனிட்டுக்கு பத்துப்பைசா என்கிற அளவே ஆகும். திட்டமில்லாமையால் பெறுகிற நஷ்டக் கணக்கினூடே இன்றளவும் பலர் விவசாயத்தில் இறங்கியிருப்பது அல்லது இருப்பது என்பதில் இலவச மின்சாரம் முக்கியக் காரணியாக இருக்கிறது என்கிற அளவில் அது தவிர்க்க முடியாததும் ஆகும். அரசியல் அதாவது ஆட்சி அரசியல் நோக்கிலும் மின்சாரமோட்டார்களுக்கு ஆண்டுக்கு ஐநூறு விதித்துவிட்டு மக்கள் மத்தியில் ஜெயலலிதா மதிப்பிழந்தது கண்கூடு. பிறகு அவர் விவசாயிகளுக்கு பண விடை அனுப்புகிறேன் என்று கிளம்பியதை எழுதினால் இந்தக் கட்டுரை வெறுமனே தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையிலானதாகத் தோற்றம் பெற்றுவிடும்.
ஆனால் இங்கு பதிவு செய்யவேண்டிய ஒரு செய்தி உளது. எங்கள் வீட்டுக்கு வந்த மணி ஆர்டர் தாத்தாவின் பெயருக்கு வந்திருந்தது. தாத்தா இறந்தது 1995-இல். இன்றளவும் எங்கள் மின் இணைப்பு அவரது பெயரில்தான் இருக்கிறது. தமிழகத்தின் விவசாய லட்சணத்திற்கும் அரசாங்கக் கோப்புகளுக்கும் இடையிலான தொடர்பு அனேகமாக இப்படித்தான். அதனால்தான் பாரிய ஏற்பாடுகள் ஏதேனும் இல்லாவிட்டால் உழவர்கள் மாதாமாதம் மானியம் வழங்கினால்கூட நட்டத்திற்கு விவசாயம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதே நிஜம்.
எம்.ஜி.ஆரின் சத்துணவுக்கு முன்பாகப் பேசப் படவேண்டிய மக்கள் மறந்த சங்கதி ஒன்றுண்டு. இலவச பயோரியா பல்பொடி. அதில் விரல் கொண்டு நீங்கள் தீற்றினால் பற்களுக்கு நடுவில் வொயிட் சிமெண்டை இழுகினாற்போல வெண்சாந்துக் கோடு ஒன்று கிடைக்கும். பல் துலக்கி முடித்தபின் வாய் கொப்புளித்தால் இனிப்பும் காரமுமான சுவை ஒன்று வாயில் துலங்கும். அது தமிழ்ச் சமூகம் அதுவரை அறியாதது. நாயுருவியின் வெப்பமோ ஆலம் விழுதின் துவர்ப்போ வேம்பின் கசப்போ அல்ல அது. பணக்காரர்கள் தேய்த்துவந்த கோல்கேட்டின் சுவையுமல்ல அது.
‘தமிழ்ச் சமூகம் இதுவரை பல்லே துலக்கியதில்லையா… புரட்சித்தலைவர் ஏன் இப்படி மக்களை அவமானப் படுத்தவேண்டும்?’ என்று யாராவது கேட்டாலும் அது மிக சுவாரசியாமான காலகட்டத்தில் அறிவித்த நிகழ்வு என்றே சொல்லவேண்டும். இன்றளவும் கூட இதர ஆரோக்கியம் போலவே பற்களின் ஆரோக்கியத்திலும் தமிழகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சொற்களின் ஆரோக்கியமோ சொல்லத்தேவையில்லை.
யோசித்துப்பாருங்கள் இப்போது பற்பொடி என்கிற வகையினமே ஏறக்குறைய அற்றுப் போய்விட்டது. தாக்குப் பிடிக்கிற ‘கோபாலை’ நாம் பாராட்டவேண்டும். சந்தைகள் கூடும் கிராமத்து உணவகங்களில் இன்னும் பொடிகள் தரித்திருக்கின்றன.கோல்கேட்டின் பொடி விற்பனை மெதுமெதுவாக பசையை நோக்கித் திரும்பியகாலம் அது. (பிராண்டாகக் குறிப்பிடுகிறேன் என என்னவேண்டாம். சிகரெட் என்றால் கத்திரி, சோப்பு என்றால் லைப்பாய்,பிளேடு என்றால் பனாமா என மிகச் சில கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்திய காலம் அது)
நவீனத்தின் எதோ ஒரு கூறு (சகலகலா வல்லவன்களும் பாயும் புலிகளும் சமூகத்தில் ஊடுறுவ தோது பார்த்த தருணமாயுமிருக்கலாம்) இயற்கையிலிருந்து தமிழ் வாழ்வைத் தள்ளிக்கொண்டிருந்தகட்டம். வேப்பங்குச்சியில் துலக்க சிறார்கள் விருப்பமாயில்லை. அவற்றை பலவந்தப் படுத்தும் துணிவை பெற்றோர்களும் இழந்திருந்தனர்.பசையும் துலக்குவானும் வாங்கித் தர பொருளாதார ஏதுவும் இல்லாதிருந்த பல குடும்பங்களில் இந்த பயோரியா போய் உட்கார்ந்தது.மசக்கைப் பெண்களுக்கும் மிக இஷ்டமான ருசியில் அது இருந்திருக்கவேண்டும்.
இரண்டு வயதுக் குழந்தைகளுக்கும் டூத் பிரஷ் வந்துவிட்ட இந்தக் காலத்தை எம்.ஜி.ஆர் துரிதப்படுத்தினார் என்றே கூறவேண்டும்.
இலவச சீருடைகளும் காலணிகளும் அரசாங்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு என்றொரு அறிவிப்பு வந்து செயலாக்கமும் பெற்றது. அதில் நடைபெற்ற ஊழல்களைப் பற்றிப்பேசக் களைப்பாக இருக்கிறது.
‘’ஏங்க போட்டுக்கறதுக்கு செருப்பு கூட இல்லாமலா இருப்பாங்க?’’ என்று சிலர் கேட்கக்கூடும். ‘’இப்ப கம்ப்யூட்டர் இல்லாம எந்த வீடு இருக்கு சொல்லுங்க?’’ என வினா எழுப்பும் பற்பலரை வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று என்னுடன் வந்தால் எண்பது விழுக்காடு குழந்தைகள் வெறும்பாதத்துடன் உலவும் தமிழக ஆரம்பப் பாடசாலைகளைக் காட்டுகிறேன். உலகம் நாம் நினைப்பதை விடப் பெரியது. நம் கற்பனைக்கும் எட்டாதபடி வறியதும்தான்,
அந்தக் காலணிகள் ‘குழந்தைகள் அடிக்கிற அடிக்கு ஒரு மாதம் மட்டுமே தாங்கக் கூடியதாக இருந்தன. சட்டைகளின் அளவுகள் டவுசர்களின் அளவுகள் அவர்களை மேலும் குழந்தைகளாகவோ அல்லது தாத்தாக்களாகவோ ஆக்கின.
அப்படி சீருடை மற்றும் காலணி அறிவித்த தருணம் மற்றுமொரு மறுமலர்ச்சிக் காலமாயுமிருந்தது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் முளைத்து முஸ்தீபு கொண்டதும் இதே பருவங்களில்தான். அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஆற்றுப்படுத்த முயலும் வசீகர வார்த்தையாய் இப்படியான திட்டங்கள் இருந்தன. இதில் காலாண்டுத் தேர்வை ஒட்டி குழந்தைகளுக்கு வந்து சேர்கிற பாடப்புத்தகங்களும் அடக்கம்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் – கொள்ளையே அடிக்கிறார்கள் எனும் பேச்சையும்தாண்டி குழந்தைகளை பெற்றோர்கள் அங்கேயே கொண்டு சேர்க்கிற ஆவலையொட்டி ஒரு கேள்வி உண்டு. தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையிலான சம்பள விகிதத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அதிகமான சம்பளம் வாங்குகிற ஓரு ஆசானிடத்தில்தானே தன் குழந்தை படிப்பதை ஒரு பெற்றோர் விரும்பவேண்டும். மாதாமாதம் ஃபீஸ்கள் கட்டி குறைவான சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிடத்தே குழந்தையை அனுப்பும் விதமாகத்தான் நிலைமை இருக்கிறது. இரண்டாம் வகுப்புக்கு பாடம் போதிக்கிற அரசு ஆசிரியரின் சம்பளம் பதினைந்தாயிரத்துக்கும் அதிகம். வெறும் எண்ணூறு ரூபாய் (அதிர்ச்சியடைந்தால் ஆளைக் கூட்டிவந்து காட்டிவிடுவேன்) சம்பளத்துக்கு தனியாரில் வேலை செய்கிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அங்கே வருடம் எண்ணாயிரம் செலவு செய்து இரண்டாம் வகுப்பைக் கடைத்தேறுகிற குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இது அமைப்பு சார்ந்து வேளாண்மை போலவே மறு சீரமைப்புக்கு உட்பட்ட வகைமை. ஆயினும் இங்கு பொருட்படுத்தத் தக்க கருதுகோள் என்னவெனில் இலவசம் என்பது தமிழருக்குக் குழந்தை நிலையிலிருந்தே கிடைத்துவிடுகிறது.பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு இலவசத்தைப் பயன்படுத்திக்கொள்ள இங்கு மக்கள் மனதில் தயக்கம் இருக்கிறது. நிலைமை அப்படி இருக்கிறது. அரசு கல்வியை மறுக்கிற ஒருவர் அரசு இலவசத் தொலைக் காட்சியை மறுப்பதில்லை.
அரசின் குழந்தை அல்லது மாணவர் சார்ந்த திட்டங்கள் இங்ஙனமிருக்க எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை மக்கள் மனதில் புடம் போட்ட நிகழ்வாக அமைந்ததுதான் சத்துணவுத்திட்டம். ஒரு வகையிம் மதிய உணவுத் திட்டத்தின் நீட்சியாக இது அறியப்பட்டாலும் கோதுமை மற்றும் புழுத்த அரிசியிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக ஒரு புதிய திட்டத்தின் பொலிவோடு மக்கள் மனதில் வேரூன்றியது. மகத்தான வரவேற்பைப் பெற்ற இது. மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் மகிழ்வையளித்தது. நிச்சயம் ஏழைகளின் வீட்டு சாப்பாட்டைவிட நன்றாக இருந்தது. ஃடிபன் பாக்ஸ் (சோத்துப் போசி) கொண்டு செல்லும் அவலத்திலிருந்தும் மாணவர்களைக் காப்பாற்றியது.
ஒரு தலை ராகம் படத்தில் ரூபா கல்லூரிக்கு சாப்பாடு கொண்டுபோனாரே தவிர சங்கர் கொண்டுசெல்லவில்லை.சந்திர சேகர் வீட்டிலும்கூடச் சாப்பிட்டதற்கான தடயங்கள் இல்லை.மொத்தத்தில் அந்தக் காலங்களின் திரைப்படங்களிலும் கூட கல்லூரி மாணவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் ‘பட்டம் பறக்கட்டும்’ என அலைந்தார்களே தவிர கல்லூரிக்குச் சாப்பாடு கொண்டுபோகும் பழக்கத்தை கைக்கொண்டிருக்கவில்லை.
சத்துணவிற்குப் பெயர் கொடுப்பது என்பது பின்னால் கிடைக்கக் கூடிய சலுகைகளை உத்தேசித்து ஏழ்மை நிலை அறிவிப்பாகவும் பல மாணவர்களிடம் செயல் பட்டது என்பதும் கண்கூடு. தங்களது வளர்ப்பினால் நிகழ்ந்த மேட்டிமை காரணமாக சத்துணவு சாப்பிடுவோரை ஏளனமாகப் பலர் பார்த்தார்கள் என்பது உட்கிடை. ஏகதேசமாக சத்துணவு என்பது தலித் மாணவர்களுக்கானது என்கிற பார்வையே இருந்தது. அப்போது தலித் என்கிற சொல்லாக்கமும் அப்போது உருவாகியிருக்கவில்லை. அரிசன மாணவர்கள் அவ்வளவே.
என் நண்பர் ஒருவர் சத்துணவு அமைப்பாளராக இருந்தார். அட்டெண்டென்சில் சேர்ந்த அளவுக்கு சாப்பிட ஆள் சேரவில்லை.மீந்த அரிசியை மூட்டை கட்டிவைத்திருந்தார். இன்ஸ்பெக்சனுக்கு வந்தவர்கள் ‘’மொத்தத்துக்கு ஒரு கணக்கு கொடுத்துவிட்டு இத வீட்டுல கொண்டு போய்ப் போடுங்க ‘’ என்றார்கள். இப்படிக் கணக்கு எழுதுவதெல்லாம் நம்மால் ஆவதில்லை என்று அன்றைக்கே வேலையை ரிசைன் செய்துவிட்டார் அவர். அவர் வேலை செய்த பள்ளி இருபோகம் நெல் விளைகிற நதிக்கரையிலிருந்தது. அரசின் பல திட்டங்கள் வட்டாரம் மற்றும் வாழ்வு நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப் படுவதாயிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதற்கு கிராமப் பஞ்சாயத்துகள் சிந்தித்துச் செயல் படுவதான வலுவான உள்க்கட்டுமானம் இருக்கவேண்டும்.சட்டத்தில் அதற்கு இடமிருந்தாலும் சட்டகத்தில் இடமில்லை.
சத்துணவுத்திட்டத்தை எம்.ஜி.ஆரும் இருக்கிற மேடையில் அன்னைதெரசா ‘’நியூட்ரீசியஸ் ஃபூட் ஈஸ் வெரி குட் ‘’ என்று பாராட்ட அது அன்றைக்கு மேடையில் தமிழ்ச்செம்மொழியில் ‘’இந்த சத்துணவுத் திட்டம் என்பது மன்னாதி மன்னனின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கக்கல்’’ என்று மொழி பெயர்க்கப் பட்டு மாளாத கைதட்டல் கிடைத்தது.
சத்துணவு பெரிய மாறுதல்களுக்கு உட்படாமல் சிலகாலம் நடந்த பிறகு அதில் புரட்சிகரங்களை கருணாநிது கொண்டு வந்து வாரத்துக்கு ஒரு முட்டையில் தொடங்கி தினந்தோறும் முட்டை என்கிற அளவில் வந்து நிற்கிறது. தமிழ் மாணாக்கர்களுக்குத் தேவைப்படுகிற போஷாக்குதான் இதுவும். முட்டையை மறுக்கிறவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படும் என்பது மாற்று ஏற்பாடு.
முட்டை என்றதுமே நாமக்கல் மாவட்டம் நினைவுக்கு வந்து ‘’நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் முட்டையும் போடுவார்கள் நூற்றுக்கு நூறும் போடுவார்கள் ’’என்பது நினைவுக்கு வருகிறது. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் அந்த மாவட்டத்தின் சம்பாத்தியத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் காலச்சுவடு இதழ் ஒன்றில் விலா வாரியாக எழுதியுள்ளார். இத் தகவல் மீண்டும் அரசின் கல்விக்கொள்கையைச் சாடுகிறது என்பதால் அதைத் தவிர்த்து வேறொரு தகவலை பதிவு செய்தல் நலம். பல ஊர்களில் சத்துணவுக்காக மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டிருப்பது அலுமினியத்தட்டுகள்தாம். ஒருவேளை இந்த 2010 கால கட்டத்திலும் அலுமினியத்தைத் தவிர்த்து எவர்சில்வர் வழங்குவது பொருட்படுத்தத் தக்க செலவா என்று தெரியவில்லை. நான் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் மனநிலையைக் கணக்கில் கொள்ளுகிறேன். ஒருவேளை உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அளவில் எவர்சில்வரை விட அலுமினியம் நன்மை பயக்கக் கூடியது என யாராவது சொன்னால் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவனாயிருக்கிறேன்.
சத்துணவைப் போலவே பிறிதொரு செயல்பாடாக ‘பால் வாடிக’ளில் வழங்கப்படுகிற சத்து மாவின் சேவை பற்றிக் குறிப்பிடவேண்டும்.இணை உணவு என்றும் அது வழங்கப்படுகிறது. கிராமங்களில் ‘பஞ்சந் தாங்கி உருண்டை’ என்கிற பெயராலும் அழைக்கப்படுகிறது. கிராம ஆஸ்பத்திரிகள் மற்றும் ஊட்டச் சத்துப் பணியாளர்கள் ஆகியோரின் இணைப்பில் இந்த சத்துமாவு உள்ளிட்ட வகைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்து ஏழைக் கர்ப்பிணிகள் இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் இரண்டும் பெண்களாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா இருபதாயிரம் காசோலையாகக் கொடுத்து குழந்தைகள் பெயரிலேயே வைப்பு நிதியாகச் சேகரமாகிறது. சேமிப்பு என்பதே தொடுவான் கனவாக இருக்கும் பல குடும்பங்களுக்கு இப்படித் தம் மழலைகள் பெயரில் சேமிப்பு என்பது ஊக்கமும் மனத்திண்மையும் ஆக்கமும் தருகிற செயலேயாகும்.பாரதத்திலும் தமிழ்நாட்டிலும் இந்த அளவுக்குக் கிடைத்தாலே போதும் தெய்வகாடாட்சத்தால் வாழ்ந்துவிட்டுப் போய்விடுவோம் என்கிற அளவிலும் நினைப்பிலும் நூறுநூறாயிரம் குடும்பத்தினர் இருப்பதுதான் நிஜமான நிலையாகும்.
இப்படி மக்களை மகிழ்ச்சிப் படுத்துகிற இன்னொரு திட்டம்தான் உயர்நிலைப் பள்ளி முடித்த மாணவியருக்கு இலவச சைக்கிள் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மறைமுகமானதும் முக்கியமானதுமான ஒரு பலனைச் சொல்லவேண்டுமென்றால் பெண்கள் சைக்கிள் ஓட்டிப் பழகுவதைச் சொல்லவேண்டும். அமைப்பில் உள்ள நிலையை ஒட்டி இன்றளவும்கூட ஆண்கள் அளவு பெண்கள் நீச்சல் பழகியவர்கள் இல்லை என்பதனை நாம் அறிவோம். மிதிவண்டி ஓட்டுதலும் நீச்சலும் மானுட குலத்தின் அத்யாவசியத் தேவைகள் அல்லவா?…. ஆனால் இன்றைய நகர்மயமாகும் சூழலில் ஆண் குழந்தைகளே கூட நீச்சல் பழகுவது அரிதாகிவருவது கண்கூடும் வருந்தத்தக்கதும் ஆகும். எப்படியானபோதும் பெண்கள் சைக்கிள் விடுவதென்பது அவர்களது தன்னம்பிக்கையை இம்மி அளவாவது மேலேற்றும் நடவடிக்கை என நாம் புரிந்துகொள்ளலாம்.
அதேபோல மிக நலிவுற்றோர் பயனடையும் பிறிதொரு திட்டமாக எட்டாவது படித்த பெண்களுக்கு திருமணத்துக்கான நிதி உதவி என்பதையும் குறிப்பிடலாம். இப்படி நான் பாராட்டுகிற திட்டங்களை , ‘என்னத்துக்கு இலவசத் திட்டங்கள். அவர்களை மேடேற்றிவிட்டால் அவர்களாக அதைச் செய்து கொள்ளமாட்டார்களா?’ என்கிற ஊடுபாவன நீரோட்டத்தினூடே படிப்பது அலுப்புதரும். நானும் அவ்வகையில் சிந்திக்காமலில்லை. ஆனால் மாநிலத்தின் இருப்பு அவ்விதத்தில் இல்லை என்பதை கண்கொண்டு கண்டு வருகிறேன் என்பதால் பாரபட்சமின்றி சிலதை பாராட்டியும் ஆகவேண்டியதாக இருக்கிறது.
உதாரணமாக வாழ வசிக்க வீடின்றி எவ்வளவோ குடும்பங்கள் .அவர்களுக்கு உடனடியாக வேண்டியது ஒழுகாத கூரை. இனி இப்போதைக்கு முதலிலிருந்து தொடங்கி அவர்களை முழுவளம் உள்ளவர்களாக ஆக்கி சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளும் திராணியை அவர்களுக்குத் தரமுடியாது. குறிப்பாக அந்தக் குடும்பத் தலைமைத் தம்பதிகளை விடவும் அவர்களது குழந்தைகளுக்கு அவசியம் கூரை. அதி நிச்சயமாகவும் வீடில்லாதோராயினும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் உழைப்பைச் செலவிட்டுக்கொண்டிருப்பவர்கள் என்பதால் இலவசமோ கருணையோ எதோ ஒரு பெயரால் வீடு கிடைப்பதை ஒப்புக்கொள்ளவேண்டியதுதான். இலவச வீடு மற்றும் வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் (சிமெண்ட் மற்றும் தரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் அழிமதிக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும்) கருணாநிதி அரசு மற்றெல்லா அரசுகளை விட வேகமாகச் செயல்பட்டதை மறுப்பதற்கில்லை.
கண்ணொளி திட்டம் போன்ற யாரும் யோசிக்காத சில வேலைகளை திரு,மு,கருணாநிதி முன்னெடுத்து தமிழகத்தில் செயல்படுத்தினார். உண்மையில் இலவச வீடுகள் திட்டத்தில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒலிக்கும் குரல் கருதத்தக்கது. அரசு ஒரு மெத்தைக் கூரை வீட்டுக்காக நிர்ணயிக்கும் இப்போதைய தொகை எழுபத்தி ஐந்தாயிரம் மட்டுமே ஆகும். அதுவும் வீட்டுக்காரர் கட்டிடத்தை படிப்படியாக மேலெழுப்பி கட்டங்கள் தோறும் புகைப்படங்கள் காட்டி பகுதிபகுதியாகப் பணத்தைப் பெறவேண்டும். நல்லவேளையாக சமத்துவ புரத்தில் வீடு பெறுவோருக்கு இந்தச் சிரமம் இல்லை.
கம்யூனிஸ்டுகள் என்ன சொல்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் மூன்றரை லட்சம் செலவிலாவது வீடு கட்டித்தாருங்கள் என்று. வீடுகட்டுதல் அல்லது வீட்டில் வாழ்தலில் பரிச்சயமுள்ள, சமூக விலைவாசி பற்றிப் புரிதல் உள்ள ஒருவர் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்ளவே செய்வார். ஏனெனில் வீடு என்பது கால் நீட்டிப் படுத்துக்கொள்ள மட்டும் அல்லவே…. கொஞ்சம் புழங்குவதற்கும் இடமும் வேண்டும் அல்லவா.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கூடுதலாக இன்னும் ஒரு அறை இருந்தால் தேவலை என எப்போதாவது தோன்றவே செய்யும் – லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
இங்கே. சமீபத்திய நகைச்சுவை என்னவென்றால் தலை நகரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடு ஒதுக்கித் தருகிறேன் என்று முதல்வர் பேசியதுதான். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதோ அனாதையாக ஊர் மடங்களில் உண்டுறங்கி வாழ்ந்துவிட்டு வந்தவர்கள் என்பதான தோற்றத்தை அவரது கூற்று ஏற்படுத்தியது. நீர்ப் பாய்ச்சலை காய்ந்த நிலங்களுக்கு அளிக்கலாமே தவிர கடலுக்கு அல்ல.
தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பில் விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் எனபதும் உண்டு. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் இரண்டு விதமான பயன்களை நான் யூகிக்கிறேன். ஒன்று பாடாவதியான பல இயந்திரங்களின் மூலம் உண்டாகும் மின் இழப்பைத் தவிர்க்கலாம். இதில் தலையாய தேவை என்னவென்றால் அரசு விநியோகிக்கும் இயந்திரங்கள் தரமானதாக இருக்கவேண்டும். இதில் கூடுதலாக விளையும் இன்னொரு பலன் என்னவென்றால் இதைச் சாக்கிட்டு மின் இணைப்புகள் இப்போது நடப்பில் உயிரோடு இருப்பவர்களின் பெயருக்கு மாறும் என்பதுதான். இறந்து போனவர்களுக்கு மணி ஆர்டர் பெறும் அவலம் இனி நடைபெறக் கூடாது.
புது இயந்திரம் தரும்போது பழைய மோட்டார்களை அரசு எடுத்துக்கொள்ளுமா தெரியவில்லை. இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதில் அப்படி நடக்கவில்ல.
இலவசத் திட்டங்களிலேயே அதிகம் பேசப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் ஒரு வகையில் தி.மு.க அரியனையில் ஏற உதவி புரிந்ததும்கூட இத்திட்டம்தான். கருணாநிதி இலவச தொலைக்காட்சி வழங்குகிறேன் என அறிக்கை விட்டபோது ஜெயலலிதா வீடுகள்தோறும் இலவச கணினிகளை வழங்குகிறேன் என அறிக்கையிட்டார். மக்கள் , யாருக்கு வேண்டும் கணினி எங்களுக்கு வேண்டியது தொலைக்காட்சிதான் என்று வாக்குகள் மூலம் கருத்துத் தெரிவித்துவிட்டார்கள்.
மக்கள் வாழ்க்கைக்கு உண்மையில் தொலைக்காட்சி அத்யாவசியமோ அல்லது இன்றியமையாத ஒரு சாதனமோ கிடையாது. ஆனால், இன்றிமையாதது போலத் தோற்றமளிக்கும் வல்லமை உடையது.கருணாநிதி அதை மிகச் சரியாக நாடி(ப்) பிடித்தார்.
இலவசத் தொலைக்காட்சி மூலம் அவர் மக்களுக்கு என்ன கொண்டுசேர்ப்பார் என்பதற்கு ’மானாடமயிலாட’ ஒரு சாட்சி.இலவசத் தொலைக் காட்சி வழங்குகிற அரசால் மிகச் சுலபமாக அனைத்து சேனல்களையும் இலவசமாகத் தரும் கம்பி இணைப்பையும் (கேபிள் கனெக்சன்) வழங்கியிருக்க முடியும். அரசு கேபிள் கனெக்சன் என்கிற திட்டம் கிடப்பில்தான் கிடக்கிறது இன்னும். விளம்பரத் துறைகளின் மிகப்பெரும் வீச்சும் உள்த்திட்டமும் மக்களிடம் காசு பெற்றுக்கொள்ளாமலே கூட தங்கள் பொருட்களை அவர்களுக்கு அறியவும் நுகரவும் தரச் சித்தமான நிலையில்தான் இருக்கிறது.
இலவச தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததும் ஒருவேளை அந்தப் பார்வையாளர் வீட்டில் மின் இணைப்பு இல்லாத பட்சத்தில் மின் இணைப்புக் கிடைக்கிறது. உபரி நிகழ்வாக இங்கு நடப்பது என்னவென்றால் தொலைக் காட்சிப் பெட்டி கூடத்தில் அமர்ந்தபின் அடுத்து நடக்கிற காரியம் கேபிள் கனெக்சன் வாங்குவதுதான். கேபிள் கனெக்சன் என்பது இப்போது டிடிஹெச் –தான் இப்போதைய நிலவரத்தில். அதுவும் சன் கேபிள் நெட் வொர்க்.
குறைந்த பட்சம் மாதம் நூறு ரூபாய் இல்லாமல் தொலைக்காட்சியைத் துய்க்கமுடியாது.( வத்தலக்குண்டு அருகில் உள்ள தற்சமயம் நான் போய்வருகிற மாமனார் வீட்டிலுள்ள தொலைப்பெட்டியில் ஜெயா மற்றும் விஜய் டி.வி ஒலிபரப்புக்கள் கிடைப்பதில்லை. இதற்கு எங்கே போய் முறையிடுவது என்றும் தெரியாது. மாதம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு சூர்யாதி ஆதித்தர்களுக்கு அடிமையாக இருக்கவேண்டியதுதான்.)
இலவசமாக அரசு அளிக்கிற அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒலிபரப்பினூடே கோபுர இலச்சினையைக் காட்டுகிற இந்தத் தொலைக்காட்சிகள் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிடப்படுகிறது பொதுமக்களால். அவர்கள் அதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதும் உண்டு.
சரி ஒரு மதிப்புக்கு இரண்டாயிரம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். சாட்டிலைட் செலவினங்கள் இதரரோரு பகிர்வு போக ஒவ்வொரு இலவசத் தொலைக்காட்சியும் சன் குழுமத்துக்கு (2000 ரூ எனக்கொண்டால்) மாதம் மூன்று வட்டி சம்பாதித்துக் கொடுக்கிறது. இது எப்படி இருக்கு?
உண்மையில் இப்படியான எண்ணம் எனக்குத் தோன்றியபோது இப்படி எல்லாம் சிந்திக்கிற அளவுக்கு என்மனம் பாழ்பட்டுவிட்டதா என்றுதான் தோன்றியது. ஆனாலும் என்ன செய்வது மனிதன் சூழ்நிலைக்கு உட்பட்டுத்தான் சிந்திக்கிறான். இலவசத் தொலைக் காட்சி பெற்றுள்ள வீட்டில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி என்னவாக இருக்கிறார். குழந்தைத் தொழிலாளராக இருக்கிறாரா பள்ளி செல்கிறாரா என்பது போன்ற ஆய்வுக்கெல்லாம் இடமில்லாமல் மக்களை மொத்தமாக மயக்கத்தில் ஆழ்த்திய திட்டம் இது.
தமிழர் திருநாளாம் பொங்கலை ஒட்டி (திரு.மு.கருணா நிதிக்கு அதுதான் தமிழ்ப் புத்தாண்டு) இலவச வேட்டி சேலைகள். என் அனுபவத்தில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்ட அதனினும் சிறந்த துணிகள் இதுவரை வந்ததில்லை என்றுதான் சொல்வேன். நெசவாளிகளுக்கு பயன் தரும் திட்டம் அது. பெறுகிறவர்களுக்கும் பயனுள்ள திட்டம் அது. அதில் கூட மீட்டருக்கு ஐம்பது காசு ஒரு ரூபாய் என நெசவாளரிடம் கமிசன் அடிப்பதாகத்தான் பேச்சு.
பொங்கலை ஒட்டி சர்க்கைரைப் பொங்கலுக்காக இலவசமாக பச்சரிசி முதல் முந்திரி வரையான ஒரு பத்துப்பதிமூனு வகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரேசன் கடைகளைப் பொறுத்தவரை எனது அனுபவம் என்னவென்றால் அங்கே காத்து நிற்பது குறைந்தது அரை நாள் உழைப்பையாவது கோருகிற ஒரு செயலாகும். ஒரு அரை நாளில் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிற நிலையில் மக்கள் இருந்தால் சர்க்கரைப் பொங்கலுக்கான பொருளை எல்லாம் வரிசையில் நின்று பெறும் நிலைமை இருக்காது. நாளாம் நாளாம் திருநாளில் கூட முண்டியடித்து முப்பத்தைந்தே ரூபாய் பெறுமானமுள்ள அந்தச் சாமான்களை மக்கள் வாங்கும் காட்சி கவலையையும் கண்ணீரையும் ஒருசேர அதிகரிக்கிறது.
அரசு ஏற்பாடு செய்யும் விழாக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இஸ்திரிப்பெட்டி,மூன்று சக்கர சைக்க்கிள்கள் வழங்குவது தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வு மொத்தத்துக்குமான சேம ஏற்பாட்டினை நல்ல வண்ணம் ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால் அது பற்றிய புரிதலும் அக்கறையும் சமீபத்தில் எழுந்திருப்பதற்கான கூறுகள் தெரிகின்றன. ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என அறியப்படுவதே கூட அப்படியான சமிக்ஞைதான்.
சமீபத்தில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. வைபவத்தில் என் எச் எம் கன்வெர்ட்டர் குறுந்தகடுகளை இலவசமாக முறையாக (பயனுள்ல வகையில்) வழங்கலாம் என எடுத்துப்போன நியூ ஹாரிசான் மீடியா (கிழக்குப் பதிப்பகம்) பத்ரி சேஷாத்ரி மாநாட்டுப் பந்தலில் அவை பறந்து போன (ஏறக்குறைய களவு போன) வேகத்தை தனது வலைப் பூவில் பதிவு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் அவை பயன்பட்டாலாவாது பரவாயில்லையே என அங்கலாய்த்திருக்கிறார்.
அந்த நிகழ்வானது ஒரு நோய்க்கூறாக இலவசம் என்பது தமிழர் மனங்களைப் பிடித்தாட்டுகிறது, ஆட்கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதை பலபல பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கல் பேரைச் சொல்லி அபகரித்துப்போனது அன்றாடங்காய்ச்சிகள் அல்ல. சமுதாயத்தில் மரியாதை நிலையில் உள்ளவர்களும் ஐந்திலக்கம் சம்பளம் வாங்கிகிற அலுவலர்களும்.
இந்தக் கட்டுரைக்கு உசாத்துணை நூற்பட்டியலையோ மற்றல்லது தரவு விவரங்களையோ – இலவச இணைப்பாகத் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.பெரிய ஒரு மாநிலத்தில் இதுகாறும் நான் கற்றவையும் கண்டவையுமே இந்தப் பதிவின் சாட்சியாகவும் மனசாட்சியாகவும் இருக்கின்றன.
இலவசத்திட்டங்களில் பல திட்டங்களைப்போலவே சாதக பாதகங்கள் உள்ளன. இருப்பினும் இலவசத் திட்டங்களை இவ்வளவு மிகையாகக் கொண்டாடும் ஒரு மனநிலை என்பது இனத்தின், சமூகத்தின் இயல்பான தன்னெழுச்சியை கட்டாயம் பாதிக்கவே செய்யும்.
மக்களிடம் கவனமும் ஆர்வமும் பெற்ற திட்டமாக இப்போது எழுந்திருப்பது உயிர்காக்கும் உயர் சிகிச்சைத் திட்டம். சாமான்யருக்குக் கிட்டாத சில செலவின வகைச் சிகிச்சைகளை இதன் மூலம் மேற்கொள்ள இயலும். ஆனால் ஒரு லட்சிய அரசாங்கத்தின் ஆகப்பெரிய இரண்டு கடமைகள் என்னவெனில் அனைவருக்கும் முற்றான இலவச மருத்துவமும் கல்வியுமே. கத்தார் போன்ற நாடுகளில் இது நடப்பிலுள்ளது.
மருத்துவம் இலவசம் எனும்போதே முற்காப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளும் மக்கள் மருத்துவமனை வாயிலையே மிதிக்க அவசியப் படாத ஒரு வாழ்வுச் செம்மையும் ஒழுங்கும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பெருகிவிடும்.ஆரோக்யம் பாலபாடமாகிவிடும்.
கல்வி என்பதும் சமமாகவும் அனைவருக்கும் பொதுவானதாகவுமான நிலையில் இலவசமாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மண்வெட்டித் தொழிலாளியின் மகனும் மாவட்ட ஆட்சித் தலைமையரின் மகனும் படிப்பது ஒரே பள்ளியில் என்று யோசித்துப் பாருங்கள்…. அப்போது விரியும் செறிவான ஒரு கனவுலகம்.
–sivakumar seerangarayan.

Advertisements
This entry was posted in இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள். Bookmark the permalink.

One Response to இலவசத்திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்-நன்மை தீமைகள்

  1. chandrasekhar R சொல்கிறார்:

    நல்ல அலசல். ஆனால் சரியான தீர்வு சொல்லப்ப்டவில்லை.

    அரசாங்கம் கொடுப்பது அத்தனை மக்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இப்படித்தான் டிவி இல்லாதவருக்கு இலவச டிவி கொடுக்க ஆரம்பித்து கடைசியில் அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்கப் பட வேண்டியதாயிற்று. வீடு என்பதும் அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும், ஆனால் முடியுமா?
    இலவசத்தை தவிர்த்து அதில் செலுத்தும் அக்கறையை லஞ்சத்தை ஒழிக்க காட்டலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s