மெல்லத் தமிழ் இனி வாழும் – புலவர் க.இளமதி

முன்னுரை

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ
ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னே ரிலாத தமிழ்

மலையிடடைத்தோன்றி மனத்திருள் போக்கும் தமிழும், உலகிருள் போக்கும் சூரியனும் என்னென்றும் நிலைத்திருக்கும்.

தமிழின் பெருமைகள்
கடவுள் தலைவராக இருந்து வளர்த்தது தமிழ்
கடவுள் நெற்றிக் கண்ணைத் திறந்த போதும்
கலங்காது நின்று வென்றது தமிழ்
கடவுளுக்கு அறிவுரை பகன்றது தமிழ்
கடவுளை அடியார்களுடன் பேச வைத்தது தமிழ்
கடவுளை அடியார்களின் பின்னே வரவழைத்தது தமிழ்
கல்லும் மண்ணும் தோன்று முன் தோன்றியது தமிழ்
சொல்லும் போதே சோர்வை நீக்கும் தமிழ்

காலந்தோறும் இலக்கியங்கள்

தமிழ் மொழியில் இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே செழித்து வளர்ந்து விளங்கியது. இரண்டாயிரம் ஆண்டுகள் என்பது மிகப் பின் தள்ளிப் போடப்படும் ஒரு கால எல்லையே அன்றைய இலக்கியங்களை நாம் சங்க இலக்கியம் என்னும் பெயரால் அழைக்கிறோம்.
எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், அவற்றை ஒட்டியும் அடுத்தும் எழுந்து சிலம்பு, குறள் போன்ற நூல்களும் ஓர் இனம் எனக்கொள்ளத் தக்க வகையில் அமைந்துள்ளன. பாட்டின் வகை, பொருளின் தன்மை ஆகியவை அந்நூல்களில் காணப்பெறும் முறை தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. உண்மைக்கு நிரம்ப இடமும், மதிப்பும் கொடுத்து அளவான கற்பனையைக் கலந்து சுருங்கிய சொற்களால் அந்த இலக்கியச் செல்வங்கள் அமைந்துள்ளன.

‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள்”;

அறத்தின் பேராட்சிக்கு அடிப்படையாகும்.

‘ தொட்டனைத் தூறும் மணற்கேணி ! மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு.”

உலக இன்பம்

உலகில் உள்ளோர் அனைவரும் அன்பால், அறிவால், அறத்தால் ஒன்றே என்று முழங்கியவர் தமிழ்த்தாய். வேற்றுமைகள் வேரோடு சாய்ந்து, போரே இல்லாமல் ஓய்ந்து பசியும், பிணியும் நீங்கி வளமும் வாழ்வும் அமைந்து, அன்பால், அறிவால், பண்பால் இணைந்து ‘ஒரே உலகமாக விளங்க வேண்டும் என்பது தான் தமிழ்த்தாயின் கனவு. அந்த இன்பக் கனவைச் செயலாக்குவதற்குத் தோன்றியவையே தமிழ் நூல்கள்.
ஒளவையாருடைய நீதி நூல்கள் பலவாயினும் அவற்றுள்ளும் ‘ஆத்திச்சூடி” என்னும் நூலே மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ‘அறம் செய விரும்பு” ‘ஆறுவது சினம்” என வரி வரியாக வாக்கியங்கள் அமைந்துள்ள முறையானது பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோரையும் கவர்ந்துள்ளது. பெரும்புலவர் பலர் ஆத்திசூடிக்கு உரை எழுதியுள்ளார்கள். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ஆத்திசூடிக்கு உரை இயற்றி அதனைத்தாம் வெளியிட்ட ‘பால பாடம்” என்னும் நூலில் சேர்த்துள்ளார். நம் பாரதியாரும் அதனை அடியொற்றி புதிய ஆத்திசூடி இயற்றியுள்ளார்.

டாக்டர் கால்டுவெல், போப் வீரமாமுனிவர் போன்றவர்கள் செய்த தமிழ்த் தொண்டுகளால் தமிழ்மொழி பெற்ற பயன் பெரிது. சிறுகதை, நாடகம், உரைநடை, முதலிய துறைகளில் இலக்கியம் படைக்கலாம் என்று வழிகாட்டினார். அவ்வழியில் தமிழ்ப்பயிர் வளர்ப்போம் இன்று பலராக உள்ளனர்.

மறுமலர்ச்சிக் காலம்

19, 20ம் நூற்றாண்டுகளில் தான் மற்ற நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களே மக்களை தன்வயப்படுத்தின. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எல்லா மக்களின் நன்மைக்காக உயிர்த்துடிப்புள்ள எளிய நடையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் தோன்றின.

மறுமலர்ச்சிக் கவிஞர்கள்

இந்த நல்ல தொண்டினைத் தொடங்கி வைத்த பெருமை பெருங்கவிஞர் பாரதியாருக்கு உண்டு. இவரின் கவிதைகள், பூவசைத்து பனி உதிர்த்து, தேன் சிந்தத் தவழ்ந்து வரும் இளந்தென்றலாகவும், காற்றை ஊதி, கடலைக் கலக்கி மலையைத் தகர்த்த வரும் சண்ட மாருதப் புயலாகவும் விளங்கின. சின்னஞ்சிறு சொற்களிலே சிந்து தவழும் நடையிலே நாட்டுப்பற்றைத் தருகிறான்.

‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” என்று

பாட்டைப் புகழ்கிறான். அம்மா என்று அழைக்கும் போது பெறும் அன்னைத்தமிழ் மொழியின் உணர்வை சொல்ல இயலாது. பாரதியார் பாடல்களில் வீரமும், விவேகமும் செறிந்து காணப்படுகின்றன. புதுமை – வெறி இத்தனையும் எளிய ஆனால் இனிய மொழியில் வந்து விழுகின்றன. துரௌபதியின் கூந்தலைப் பிடித்திழுத்து துச்சாதனன் செல்லும் போது,

வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்து தராதலத்தில் போக்கியே
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

இருபதாம் நூற்றாண்டிலே நடைபெறும் இதை பாரதியார் அப்போது ஏன் நடத்தவில்லை என்று கேட்கின்றார்.

பாரதிதாசன் : இவர் பாரதியாரை விஞ்சும் வண்ணம் கவிதைகள் புனைந்துள்ளார். புரட்சிப் பாதையில் நடைபோடத் தலைப்பட்டார்.

‘செந்தமிழே உயிரே நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே”

என்று தமிழினிடத்தில் காட்டியிருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் வெளிக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணத்தை எதிர்த்து, விதவை மணத்தை ஆதரித்து ஆடவர், பெண்டிர் சமதர்மத்தை நிலை நிறுத்தி என்று எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.

தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இன்னும் இப்படிப் பலர் கவிதைக் காட்டில் இனிய மலர்களைத் தேடித் தொகுத்தளித்தவர்கள்.

மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்: நாட்டு நலனில் அக்கறையும் ஆர்வமும் உண்டு என்று காட்டிய வீரர் திரு.வி.க. அவர்கள் தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவர். வுடமொழி கலவாத தூயதமிழ்ப்பெயர் பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கொள்ள வேண்டும் என்று முழங்கி முயன்று பாடுபட்டவர் தமிழ்மலை மறைமலையடிகள் நாட்டின் பல பகுதிகளிலும் இனிய தமிழ் விருந்து படைத்த சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை.

இப்புலவர் பெருமக்களின் வழி வந்து நாட்டின் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். குவிய நலங்காட்டி தமிழர்கள் நல்லவர்களாக அன்றி வல்லவர்களாக விளங்க வழி வகுத்தவர். டாக்டர் மு.வரதராசனார் அவர் நாட்டின் முன்னேற்றம் மொழி நிலையைப் பொறுத்தே அமைகிறது என்று கூறினார்.

இதழ்த்துறையில் …

குலைமகள் கி.வா.சகந்நாதன், ‘கல்கி” ‘தேவன்” ‘அகிலன்” ‘ராஜாஜி’ நாரணதுரைக்கண்ணன், ம.பொ.சி இன்னும் பலர் மறுமலர்ச்சிக் காலத்தின் எழுத்துலகை ஆண்டவர்கள்.

அறிஞர் அண்ணா

நாடக மேடையில், திரைப்படத்தில், பேச்சுமேடையில் எங்கும் கம்பீரமான தமிழ் முக்கான நடை, கருத்துச் செறிவு, இவை இடம் பெற்றிருந்த அண்ணாவின் தொண்டினால் தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் நல்லதமிழில் பேச எழுத தலைப்பட்டனர். தடுக்கு மொழியாளரும் அடுக்குமொழி பேசத் துடித்திடச் செய்த பெருமை அவர் பேச்சுக்கு உண்டு. எழுத்து ஏற்றம் தரும் என்பதனைக் காட்டிச் சென்றார். அண்ணா அவர்கள்

கேட்டார்ப் பிணிக்கும், தகைவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்

என்ற குறளுக்கு ஏற்ப விளங்கியவர்

கவியரசர் கண்ணதாசன்:

இவர் கம்பரசத்தைத் தம் கவியாக்கி, இலக்கியச் சுவை கலந்த இனிய தமிழ்நூல்கள் பல எழுதியதுடன் திரைப்படத்துறையில் பெரிய ஏற்றத்தையும் மாற்றத்தையும் தந்தவர். இவரது அனுபவங்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொருந்துவது போல் தோன்றும். இவர் தமிழை,

‘போதிய மலை தோன்றி மதுரை நகர்கண்டு
பொழிந்த தமிழ் மன்றமே”

என்று சிறப்பிக்கின்றார். ‘கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழ் அன்னை’ என்று வீரம் செறிந்த பாடல்களையும் விவேகம் மிக்க பாடல்களையும் தந்தார்.

கலைஞர் கருணாநிதி அவர்கள்

தற்போதைய முதல்வராக விளங்கும் இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் அளவிடற்கரியன. இலக்கியத்திற்கு இனிய விளக்கங்கள் அளித்து, சொற்களிலே சொக்கவைத்து, கேட்போர், காண்போர் மனங்களை ஈர்க்கின்ற அளவுக்கு இனிய தமிழ்ப்பற்றாளர். ஆற்றொழுக்குப் போல் சலசலென இனிய பேச்சைப் பொலிந்திடும் நாவலர் தமிழ்மொழியைச் செம்மொழியாகவும், அறிவித்து செம்மொழி மாநாடு நடத்தி தமிழன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தார். கல்வித் திட்டத்தில் சமச்சீர் கல்வி கொணர்ந்தது வரவேற்கத்தகுந்தது அரசு ஊழியர்கள் தமிழிலே கையொப்பமிட ஆணை பிறப்பித்தது. அருந்தமிழை போற்றுதற்குரியதாகும். தமிழுக்கு தனிச்சிறப்பளித்து வரும் இவ்வேளையில் மெல்லத்தமிழ் இனிவாழும் என்ற நம்பிக்கைத் துளி ஒளி விடுகிறது.

நாடெங்கும் நடக்கும் செய்திகளை நாமறியத் துணை செய்யும் நாளிதழ்கள் நல்ல கையேடுகள் தொலைக்காட்சி, திரைப்பட நிகழ்வுகள், வானொலி, கணிணி, இணையம் அனைத்தும் இன்றமிழ் வளரத் துணை செய்கின்றன.

முடிவுரை :

தமிழ் என்னும் தளிரைப் பற்றென்னும் வேலிவிட்டுப் பக்குவமாய்க் காத்திட வல்லார் அரசியல் அரங்கில் மட்டும் அன்றி, பள்ளித் தலங்களில் பாதை ஓரங்களில் எங்கும் இருந்திடுகின்றனர் என்ற நல்ல நிலையை உருவாக்கியுள்ளவர் கலைஞர் கருணாநிதி.

முன்பொருநாள் முகை (மொட்டு) யாக இருந்த தமிழ் மலர் இன்று இனிய மணத்தை உலகெலாம் பரப்புகின்றது. தமிழர் நெஞ்சமெல்லாம் உவக்கின்றது.

இந்த மறுமலர்ச்சியின் மணம் வாழ்க!

இந்த புதுமுயற்சியின் தரம் வெல்க!!

பயன்படுத்திய நூல்கள் ஆசிரியர்கள்
1. பாரதியார் கவிதைகள் பாரதியார்
2. பாரதிதாசன் கவிதைகள் பாரதிதாசன்
3. திருக்குறள் திருவள்ளுவர்
4. காலம் தேடிய தமிழனின் இரா.நடராசன் அறிவியல் தமிழ் வரலாறு
5. உலகத்தமிழ் மாநாடு மலர் சென்னை 1968
6. தமிழ்நாட்டுப் பாடநூல் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 8, 10ம் வகுப்பு சென்னை.

கட்டுரைத் தொகுப்பு
புலவர் .க.இளமதி

Advertisements
This entry was posted in இலக்கியம், மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s