பழந்தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

கண்ணீர்த் திவலைகளாய் இரு முலைகள் என்று பார்க்கும் பெண்ணியப் பார்வை கொண்ட குட்டி ரேவதி போலல்லாது பழந்தமிழ் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் அண்ணாந்துஏந்திய வனமுலை(பாலை10), வனைந்து ஏந்து இளமுலை(பாலை 29), நல் அக வன முலை(பாலை 33), ஏர் இள வனமுலை(குறிஞ்சி 160), வண்டற் பாலை வனமுலை(நெய்தல் 191), குலவு முலை(மருதம் 350), குறுந்தொகையில் அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை(71), உறுத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில்(276), இன்னுறழ் இளமுலை(314), வீங்கு முலை(344), ஐங்குறுநூற்றில் காதற் குழவிக்கு ஊறுமுலை(92), தும்பை மாலை இளமுலை(127), அகநாநூற்றில் ஆகவனமுலை அரும்பிய(6), முலை முகம் செய்தன முள்ளெயிறு இலங்கின(7), தேம்கொள் மென் முலை(26) இப்படியாகவும் பத்துப்பாட்டில், குவி முகிழ் இளமுலை(முருகு 35) ஈரக்கும் இடை போஆ ஏர் இள வனமுலை(பொருந 36) அணிமுலை(சிறுபாண்2) கவை முலை(பெரும்பாண் 358) வீங்கு முலை கடுப்ப(நெடுநெல் 120) முகிழ் முலை(பட்டின 296) வனை புனை எழில் முலை(மலை படு 57) எனவும் பெண் உறுப்பு சார்ந்த வர்ணனைகள் நமக்கு பழந்தமிழ் இலக்கியச் சூழலில் மிக இயல்பானவை. ஆனால் கல்லாடம் கூறும் பருத்த முலை, ஒடுக்குமுறையின் குரூரத்தையும் ஒடுக்கப்பட்டோரின் எதார்த்தத்தையும் ஒரு சேரப்பார்த்தால் சாதி ஆதிக்க ஆணாதிக்கச் சீழ் ஒழுகுவதை உணர முடியும். பெண்ணில் முலைகள் அளவற்று பருத்திருந்தன. எவ்வாறெனில், கீழ்மக்களுக்கு கல்வி கற்பித்தால் எவ்வாறு குற்றங்கள் பெருகுமோ அவ்வாறு பெரிதாகப் பருந்த்திருந்தன என்கிறது அந்நூல். ஒரு உவமை சொல்லும்போது கூட ஒடுக்குமுறையின் உக்கிரம் கொப்பளிக்கச் சொல்லப்படுவதை சான்று காட்டவே இம்மேற்கோள் இங்கு எடுத்தாளப்பட்டது.

கீழ் இருத்தப்பட்ட மக்களின் குரல்கள் பழந்தமிழ் இலக்கியத்தின் பெருமளவு புலப்படாது இருந்தபோதும் அங்கங்கே அவர்களின் வாழ்நிலை பற்றிய பதிவுகள் தென்படுகின்றன. உத்திரநல்லூர் நங்கையின் வரிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

ஒருபனை இரண்டு பாளை
ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறினவினில் அறிந்தபேர்க்கு
அதுவுங்கள் இதுவுங்கள்ளே
பறையனை இகழ்வதேனோ
பாய்ச்சலூர்ப் பதிகத்தாரே!

என்று பாய்ச்சலூர் பதிகத்துள் கேட்கும் கேள்வி இன்று பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பெ,சண்முகத்தின் கேள்வியோடு கால நீட்சி பெறுகிறது. பக்கத்து தெருக்காரனை தொடாதே தள்ளி நில் என்று சொல்லிவிட்டு உலகம் முழுவதையும் பார்த்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசுவது எவ்வகையில் நியாயம் என்று அவர் கேட்கிறார். இவை சற்றே பிற்காலத்தய தமிழ்ச் சமூகப் போக்கை அடையாளப் படுத்துபவை. பழந்தமிழ் இலக்கியப் பதிவுகள் நமக்கு முன்னர் பலமுறை சொல்லப்பட்டு புழங்கப்பட்ட புலையன் தொடுதீம்பால்(தீம்பால் இனிமையான சுவையுடைய பாலானது புலையன் தொட்டதால் எப்படி தரங்கெட்டது என்பதான பொருளில்) மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை(புற 335) என்பன போன்றவற்றை நாம் அறிவோம். எனவே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது வெட்ககரமானது; வேதனையானது என்று முழங்கும் பெ.சண்முகம் கேள்விக்கு என்ன பதிலை யார் தர முடியும்?

சங்க இலக்கியத்தை தமிழின் கருத்துக் கருவூலமாக பார்ப்பது பொதுவான பார்வையாக உள்ளது. தினைப் பின்புல நிலவியல் கண்ணோட்டமும் சூழியல் மற்றும் வானவியல் கண்ணோட்டங்களும் இயற்கையோடு இயைந்த அறிவியல் கண்ணோட்டமும் கொண்ட பதிவுகள் குறிப்பாக பெருவாரியான தன்மைநவிற்சி பதிவுகள் பழங்கால தமிழ்ச்சூழலை, தமிழர் தகவை, அறிவாற்றலை, பண்பாட்டு விழுமியங்களைப் பேசவல்லன என்பதில் யாருக்கும் எந்தவித மறுப்பும் இருக்காது. ஆனால் சங்க இலக்கிய ஆய்வுகளை அணுகினோமானால் பெரும்பாலும் விதந்தோதும் போக்கும் பாராட்டு வகை திறனாய்வும் அகச்சார்பும் மேலோங்கியிருக்கக் காணலாம். பழந்தமிழ்ச் சங்க இலக்கியம் குறித்த சமகாலப் பார்வை தமிழை தமிழ்ச்சூழலை பண்டுதொட்டு உணர்ச்சிப் பூர்வமாக அணுகியதால் கட்டமைக்கப்பட்டது எனலாம். சங்க காலம் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடிய, கடவுள்களே கூட பாவலராக பா புனைந்த காலமாக முன்னோர் சொல் பொன்னே போல் போற்றும் மரபாக எவ்வித விமர்சனமும் அற்று சொல்லப்பட்டு வருகிறது. உயர்வு நவிற்சியும் அதீத தற்காமமும் உணர்ச்சி மயமான தன்னியல்பு அழுத்தமும் காரணமாக கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னால் வாள் எப்படித் தோன்றியிருக்கமுடியும் என்ற கேள்வியற்று, கற்காலத்திற்கு பின்தான் உலோக காலம் என்ற காலவரிசை உணர்வற்று கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்னும் பழம்பெருமை பேசுவது; களப்பிரர் காலம் இருண்ட காலம் என தட்டையாக சமயவாதிகளால் சமய சந்தர்ப்பம் கருதி உண்மை வளைக்கப்பட்டு புனைவுக்கு ஆட்பட்டது என இந்த போக்குகளை கோ.கேசவன், நா,வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, இ.முத்தையா, ந.வேலுச்சாமி, ராஜ் கெளதமன், ஆ.சிவசுப்பிரமணியம், ஆ.தனஞ்செயன், கேப்டன் கலியப்பெருமாள் போன்றவர்கள் விமர்சனப்போக்கோடு வேறுபட்ட பார்வையோடு பழந்தமிழ் இலக்கியத்தை அணுகியதை மணம்கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் சங்க இலக்கியம் பற்றிய வேறுபட்ட பார்வையை முன்வைத்த அண்ணாவின் மேற்கோள் கீழ்க்கண்டவாறு புலப்படுகிறது

சங்க காலம் பற்றிய அறிஞர் அண்ணாவின் படப்பிடிப்பு ஆரிய வைதீஅ பண்பாட்டிற்கு எதிரான திராவிட சிந்தனையை முன்வைக்கிறது. எனது வாதத்திற்கு துணையாக அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை, தொல்காப்பியம் ஆகியவற்றை சாட்சிக்கு அழைக்கிறேன். இக்காலத்தில் உளவும் நாசத்தை விளைவிக்கும் நம்பிக்கைகளை அக்காலத்தில் எப்படிக் காணமுடியும்? அகநானூறு புறநானூறுகளில் எந்த தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக்கிளம்பும் பொழுது படைகிளம்பும் முன் பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்று எங்கேயாவது பாடல் உண்டோ? அல்லது படை கிளம்பி எதிரிகளுடன் போராடும் பொழுதாவது வர்ணாஸ்திரம், வாயுவாஸ்திரம், மோகனாஸ்திரம் அக்கினியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியதாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்லமுடியுமா? என்று கேட்பதோடு திராவிட மன்னர்கள் தர்மராஜன் போல் நாட்டை சூதாட்டத்தில் தோற்றதில்லை. அரிச்சந்திரன் போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை. திராவிடக் கவிஞர்கள் அதலசுதள பாதாளமென்னும் பொய்யுரைகள் எழுதியதில்லை. திராவிடர் உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை. உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை. சூது, சூழ்ச்சிகளை ஆயுதமாகக் கொண்டதில்லை. சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர் என்று ஆணித்தரமாக கூறுகிறார் அண்ணா.

எனவே வேதகாலத்தை, வடமொழி இலக்கியம் போன்ற வைதீக நெறிகளுக்கு தொண்டூழியம் செய்த காலத்தைப் போலல்லாமல் தமிழர் அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர் என்று திராவிட இயக்கம் பார்க்க விளிம்புநிலை ஆய்வுகளோ திராவிடர்களுக்குள்ளும் உட்புகுந்த வேதவைதீக பண்பாட்டு நடவடிக்கைகளால் அடிநிலை மக்கள் சாதியப் படிநிலையின் கீழ்இருத்தப்பட்டநிலை குறித்துப் பேசுகின்றன. எனவே சமூகத்தின் விளிம்பில் ஆதிக்கப்படிநிலையில் கடைகோடியில் ஒடுக்கப்பட்டோராய் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் குறித்தும் அக்கறையோடு பழந்தமிழ் இலக்கிய வாசிப்பு நிகழ வேண்டியுள்ளது. சங்க காலத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள் வறுமையில் உழன்ற பாணர் மரபினர் தொடர்ந்து புலவர், காதற்பரத்தை, சேரிப்பரத்தையர், விதவைப் பெண்டிர் போன்றவர்களும் கல்வி மறுக்கப்பட்ட உழவர்கள், பறையடிக்கும் பறையர்கள், தோல் வேலையும் சுடுகாடு காத்தலும் செய்யும் இழிசினர்கள், கொடிய வறுமையில் வாடிய எயினர் எயிற்றியர், அடிமைகள், ஏவிய வேலைகளைச் செய்யும் ஏவலர்கள், கொண்டி மகளிர் இவர்களைப் பற்றிய ஆய்வாக பழந்தமிழ்ச்சங்க இலக்கியம் வாசிக்கப்படவேண்டியுள்ளது.

துடியெறியும் புலைய
எறிகோல் கொல்லும் இழிசின (புறம் 287) எனத் தொடர்ந்து

கைவினை மக்கள் (குறுந்தொகை 309) உழவர் (நற் 60, குறுந் 10) நெல் அரிபவர்கள்(நற் 400, 275, 350) கடைசியர் (புறம் 61) வேளாண் வினைஞர், குறுந்தொழுவர்கள், ஏவல் மகளிர், அடியோர்கள் இப்படி நிலமற்றவர்களாக, கல்வியற்றவர்களாக, வறுமையுடையவர்களாக விளிம்பு நிலை மக்கள் காணப்படுகின்றனர். இவர்களோடு கல்லா மக்களாக வேட்டுவரும் காணவரும் சேர்ந்துகொள்கின்றனர். எனவே வளமான ஏழடுக்கு மாளிகை, பருவத்திற்கு ஒன்றாக குடியிருக்க கட்டி வாழ்ந்த செல்வமிகு தமிழர்கள் இருந்த காலத்தில்தான் சுரைக்கொடி படர்ந்த குடிசைகளில் பசியால் கதறும் பச்சிளம் குழந்தைகளுக்கு முலைப்பலுக்கு பதிலாக உதிரம் ஒழுகும் அளவு வறுமை பீடித்தவர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் சங்க இலக்கியம் காட்டுகிறது. பொற்குவளையில் நீர் அருந்தியோரும் பொன் அணியால் பறவை விரட்டியோரும் இருந்த சமூகத்தில்தான் கொடிய வறுமையில் உழன்றோரும் கஞ்சிகுடிப்பதற்கில்லாரும் வாழ்ந்தனர். ஒரு பக்கம் அடுபசி உழந்த இரும்பேர் ஒக்கலைக் காண்கிறோம். இன்னொரு பக்கம் தொல்பசி அறியா துலங்கா இருக்கையினரையும் பார்க்கிறோம்.

தூங்குபவன் எழும்வரையில் அவன் உணரமுடியாத வகையில் அவனிடமிருந்து இரத்தத்தைக் குடிப்பதற்காக அட்டை உறிஞ்சுவது மாதிரி மிருதுவாகவும் வழியில்லாமலும் வரிவசூலிக்கவேண்டும் என்கிறது மகாபாரதம். பழந்தமிழ் சமூகத்தில் குடிமை என்னும் நிலவரி தவிர தறியிறை, செக்கிறை, மனையிறை, அங்காடிப்பாட்டம், தட்டாரப்பாட்டம், இடைப்பாட்டம், வண்ணாரப்பாறை, கண்ணாலக் காணம், சேக்காணம், ஓடக்கூலி, நீர்க்கூலி, நாடுகாவல், மகமை, மல்லாயிமகமை, நாட்டக் காணிக்கை, அரசு பேறு பாண்மை, பண்டவெட்டி, சபாவிநியோகம் போன்ற வரிகள் பிற்காலத்திற்போல இல்லாவிட்டாலிம் சங்க காலத்தில் வரிவாங்குவது கொடுமையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக யானைபுக்க புலம்போல வரன்முறை இல்லாது வரிகொளாது நெறியறிந்து இறைகொள்ளவேண்டும் என பிசிராந்தையார் பக்குவமாக வரிவாங்க வேண்டியதன் தன்மையை புறம் 184ம் பாடலில் எடுத்துக்கூறுகிறார். இது நாம் அறிந்ததே. இதைப்போல வெள்ளைக்குடி நாகனாரும் வறுமைக்காலத்து வரிவசூல் நடவடிக்கை குறித்து மன்னருக்கு அறிவுறுத்தும் பாங்கோடு பாட்டாளிகள் பக்கம் நின்றதைப் பரவலாகக் காணமுடிகிறது.

மலைகளிலே வாழும் குறவர்களிடம் கூட, மலைபடுபொருள்களை வரியாக அச்சுறுத்திப்பெற்றான் மன்னன் நன்னன் என்பது

பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங் குறும் பெறிந்தகானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்திறை
சான்மென்

என்ற அடிகளால் புலனாகும்.

அடுத்ததாக, ஆடை அணிதல் குறித்த பதிவுகளை காணலாம்

நோக்கு நுலைகல்லா நுண்மைய
பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை
நெய்யும் அளவிற்கு…

மீன் வலை காய்ந்த நிழலைப்போல மெல்லிய ஆடை மற்றும் மோதிரத்தில் மடித்துவைத்துவிடக்கூடிய பட்டாடை என பல நுட்பமான ஆடைவடிவமைப்பு சிறப்புமைகள் இருந்தபோதிலும் சங்ககாலத்து பெருநர்ஆற்றுப்படையில் புலவர் தம் ஆடைகுறித்துக் கூறுவது மிக விநோதமானது. ஈரும் பேனும் கூடிக்குலாவி என் உடையில் அரசுபுரிகிறது. அது வேர்வையில் நனைந்து நாற்றமடிக்கிறது. என் உடை வேறு நூல்கள் நுழைந்திருக்கிற தையல் போட்ட கிழிந்த கந்தை என்பதை

ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வெற்றிழை நுழைந்த
துன்னல் சிதார்(பொரு 80-82)
என்று ஒடுக்கப்பட்ட வாழ்வின் வறுமை படம்பிடிக்கப்படுகிரது.

பிரபுக்களையும், அரசர்களையும் தவிர மற்ற ஆண்கள் இரண்டே துணிதான் அணிந்தனர்.(இடையில் ஒரு துணி, தலையில் ஒரு துணி; பெண்கள் இடையில் மட்டுமே துணியணிந்திருந்தனர் என்கிறார் கேசவன் (Inscription No.75/1900))

சாதாரண கீழ்நிலை மக்கள் வைக்கோல் வேய்ந்த சிறுகுடிகளில் வாழ்ந்தனர்(அகம் 87, பட்ட்ன80), வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து கருமையாகி வருவதை உவமை நயம்பட சங்க பனுவல் விளக்குவதைக் காணலாம்.

பருவ வானத்துப் படுமழை கடுப்ப
கருவை வேய்ந்த கவின்குடிச் சீ’றூர்(பொ.பா 190-91)

போலவே வறுமையில் வாடியமை குறித்தும் புறம்(68,139,159,164,196, 210, 211, 266, 375, 376, 378) மற்றும் சிறுபானாற்றுப்படையில் பல அடிகள் ஊர் ஊராக வள்ளல்தேடி வறுமைப் போக்குதல் குறித்தும் பேசுகிறது. பசியால் தின்னப்பட்ட வாட்டமுற்ற முடக்கம் கொண்ட பல வரிகளை உடைய குடல் குளிரும்படி சோற்றை அரசனிடம் எதிர்பார்த்தல் குறித்து புறநானூற்றின் 209, 370, 150, 160 போன்ற பாடல்கள் பரக்கப் பேசுகின்றன.

மேலும் உணவைக் கண்டிராத வாயைக் குறிப்பிட எட்டா நாள் நிலவை உவமை கூறும்

எண்ணாட்டிங்கள் வடிவிற்றாகி
அண்ணாவில்லை அமைவருவறுவாய்

என்ற அடிகளும் நோக்கத் தக்கன.

அடுத்து எப்படிப்பட்ட வறுமை நிலை துரத்த, இவர் சுரங்களைக் கடந்து சென்றார் என அறிந்தால் அன்பு, பெருமை, சிறுமை என்பதெல்லாம் எழுத்துக்கெழுத்து வாய்ச்சவடால் என்பது புலப்படும்.

புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர் முது சுவர்க் கனச்சிதலரித்த
பூமிபூத்த புழற் காளமாம்பி
ஓல்கு பசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க்குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து,

சில நாட்களுக்கு முன்புதான் குட்டிபோட்ட நாய், தன் குட்டியை மெல்லிய குரலில் அழைக்கும் அளவுக்குப் புன்மை உடைய வீடு அப்பாணன் வீடு. அவர் வீட்டுக் கூரையின் மூங்கில்கள்  எல்லாம் கட்டுக்கள் இற்று விழுந்துகொண்டிருக்கின்றன. அவர் வீட்டுப் பழய சுவர்களில் கறையான் கூட்டம் அரித்துக் குவித்த புழுதிக் குவியல்களாக உள்ளன. அவற்றில் காளான் பூத்திருக்கின்றன. வருத்தம் தந்த பசியாலே பாணன் மகள் ஒடுங்கிய இடையோடும் வளையல் அணிந்த கையோடும் குப்பையில் கேட்பாரற்று முளைத்த வேளைக் கீரையை உப்பில்லாமல்(அதற்கும் வழி இல்லாமல்) வேக வைக்கிறாள். பிறகு என்ன செய்கிறாள்? வறுமை கூறுவது இயல்பு என்று அறியாதவனாகிய அவள், தங்கள் குடும்பத்தை ஊர் கேலி செய்யுமே என்று, உள்ளே நடப்பது வெளியே தெரியக்கூடாது என அஞ்சித் தலைவாயிலை அடைத்துக்கொண்டு நின்றிருக்கிறாள். இப்படிப்பட்ட காட்சிகளை நிறையக் கொண்டிலங்கும் சங்க காலத்தைப் பொற்காலம் என்பதா? வறுமையை உண்டாக்கிவிட்டு, அதே வறுமையை நீக்குவது போல நடவடிக்கை மேற்கொண்ட முதலாளித்துவ தர்பார்கள் என்பதா? என்று பேசுகிறார் ந.வேலுச்சாமி. இவ்விதம் உணவு, உடை, உறையுள் என அடிப்படைத் தேவை ரீதியாக விளிம்பில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தவர்கள் கொந்தளித்து விடக் கூடாது என்பதற்காகவே செல்வத்தின் பயனே ஈதல் என்பதாக ஈகைத் திறம் பரவலாகப் பேசப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம்.

மகளிர் நிலை குறித்து ஆயப்புகுந்தால் அங்கும் ஆதிக்கத்தின் கோரமுகம் நமக்குத் தென்படுகிறது. துவக்கப்பத்தியில் சொன்னதைப்போலவே உறுப்பு வர்ணனைகளும் பாலியல் நுகர்வு சாதனமாக பெண்ணைப் பாவைக்கும் போக்கும் சங்ககால கட்டத்தில் தொடங்கிவிட்டதைப் பார்க்கிறோம். மேலாதிக்கத் தலைவியின் காதலுக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்யும் தோழி என்றைக்காவது காதலித்திருக்கிறாளா? என்று கேட்கும் வைரமுத்துவின் கேள்வி மிக நியாயமானது. இதைப்போல தலைவியின் மூன்று நாள் மாதவிலக்குக் காலத்தைக்கூட கூடிமுயங்க வாய்ப்பற்ற கொடுங்காகமாக கருதி தலைவன் பரத்தைச் சேரி நோக்கிப் பொவதும் பரத்தையரின் பாடுகளும் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவாகியுள்ளது மிகுதி.

வடவைதீக பண்பாட்டில் உள்ளபடி சிசுமணமோ இன்னபிற பெண் ஒடுக்கு முறைகளோ சங்கத் தமிழகத்தில் இல்லையெனும்படி வைதீகப்பண்பாடு கொடுங்கோன்மை மிக்கதாக விளங்கியிருப்பதைக் காணமுடியும். உதாரணமாக பிரம்மகர்த்தி தோஷம் பற்றிய மனுஸ்மிருதியின்(ராமானுஜர் உரை) படப்பிடிப்பு இவ்வாறு உள்ளது.

இந்திரனுக்கு பிரம்மஹர்த்தி தோஷம் கிடைத்ததும் அவனுடைய உடம்பு அழுகி நாறுகிறது. பூமியிடம் கெஞ்சி தன்னுடைய தோஷத்தைக் கொஞ்சம் கொடுக்கிறான். உடனே பூமியில் வறட்சி வந்துவிடுகிறது. மரம், செடி, கொடிகளிடம் இறைஞ்சி தன் தோஷத்தின் ஒரு பகுதியைக் கொடுக்கிறான். மரங்களில் பால் பிசின் உண்டாகிறது. மீதியைப் பெண்களிடம் கெஞ்சிக் கொடுக்கிறான் பெண்களுக்கு மாதவிடாய் உண்டாகிவிடுகிறது.

பெண் எக்குலத்தில் பிறந்தாலும் பிரம்மஹர்த்தி தோஷத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டதால் அவள் தாழ்குலத்திற்குச் சமானமானவள். எந்த இன பெண்ணுக்கும் சொர்க்கம் செல்ல வாய்ப்பில்லை. எட்டு வயதுக்குள் பெண்னிற்கு கன்னிகாதானம் செய்து கொடுத்துவிடவேண்டும். அப்படி பூப்படையும் காலம்வரை செய்யாதிருப்பது குற்றத்திற்குரிய தண்டனை. உலக வரலாற்றில் கண்டறியப்படாத கேட்டறியாத கொடூரம் இதுவாகத்தான் இருக்க முடியும். அதாவது பூப்படைவதற்கு முன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்காத தந்தை அப்பெண்ணின் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் மாதவிடாயை பருக வேண்டும் அல்லது பிராமணனுக்கு கொழுத்த பசுவை தானமாகக் கொடுக்கவேண்டும். இப்படிப்பட்ட கொடிய பண்பாட்டுக் கூறுகள் தமிழ்ச்சங்ககாலத்தில் பார்க்க முடியாது. சங்க பெண்டிற் ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி என கற்ற பெண்கல் முற்காலத்திலேயே இருந்தனர் என்கிற பதிவையும் பார்க்க முடிகிறது. ஆனால் வைதீக பண்பாட்டின் தாக்கம் காரணமாக விதவை போன்ற சொல்லாடல்களும் வாழ்முறையும் தமிழ்ச் சமூகத்திற்குள் வந்துவிட்டன.

பெண்ணை பாலியல் நுகர்வு பண்டமாக பார்க்கப்பட்டது எனபதிலிருந்து தலைமக்களில் உள்ள பெண்களும் சர் கீழோர் என பகுக்கப்பட்டோரில் உள்ள பெண்களும் சரி யாரும் தப்பமுடியவில்லை. முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை என்பதாகட்டும் சொல் எதிர்கொள்ளல்(201 நற்) என்பதாகட்டும், மறுமொழிபெயர்த்தல் ஆற்றாள்(206 நற்) உயிரைவிட நானம்தான் பெண்ணுக்குச் சிறந்தது(17 நற்) என்பதாகட்டும், நினைத்த/காதலித்த பெண்ணை அடையமுடியாத ஆண் மடலேறுவதாக மிரட்டிப் பணியவைப்பதாகட்டும், பெண் இவ்வாறான களங்களில் இரண்டாம்தரமாக நடத்தப்பட்டதை சான்றுகள் காட்டுகின்றன. பெண்ணினது நீர்ச்சுழி போன்ற கொப்பூழ், பரந்த அல்குல், பருத்த கொங்கைகள் என வருணித்துத் தள்ளிய புலமை அறம் எத்தகையது என நாம் அறிவோம். காதற் பரத்தையர், காமக் கிழத்தியர், வரியலர், துடியர், கேடியர் இப்படிப் பலரும் மன்னர் மயப்பட்ட சங்க பனுவல்களுக்கிடையே பேசுபொருளாக வந்துபோகிறார்களேயொழிய முதன்மைப் பதிவுகளாக எங்கும் இடம்பெறவில்லை. வைதீக ஆரியப் பண்பாடு x பூர்வ தமிழ்ப்பண்பாடு, இனக்குழு பண்பாடு x அரசுருவாக்க உடைமைச் சமூகப் பண்பாடு மற்றும் வென்றெடுத்தல்(over coming) x பணிந்து அடங்குதல்(submission) இவற்றுக் கிடையேயான பண்பாடு போன்ற இடையீடுகள், ஆய்வ்ய்க்குட்படுத்தவேண்டும்.

தொடக்கத்தில் தொழில் அடிப்படை சமூகப் பகுப்பு என்னுமாறு சமநில சச்சதுர நிலையிலிருந்து எனுமாரு வருணாசிரம ஏனிப்படி நிலை உருவாக்கம் பற்றி கேப்டன் கலியப்பெருமாள் தமது தமிழர் உண்மை வரலாற்றில் பேசுகிறார். இக்காலகட்டம்தான் பார்ப்புக்கன்றி பணிபு அறிதலிலேயே எனும் குறள் ஒலிக்கத் துவங்கியது எனலாம். தானம் பற்றிப் பேசுகிறபோது அரச ஈகை வரிசையறிந்து பரிசல் வழங்குதல் முதலியன மேல்தட்டு சார்ந்து நிகழ்ந்திருப்பதைக் காணலாம். தானம் வழங்குவோரும் பெறுவோரும் நீர்சொறிந்து கொடுத்தனர் பெற்றனர். நீர் தீட்டுக் கழிப்பதற்கானது என்பதை இங்கு கருதவேண்டும்.

தலையில் குடுமி வைத்தார்கள்(ஐங் 202) (ஏனைய தமிழர்கள் கூந்தல் வளர்த்தார்கள்) காவிக் கல்லால் தோய்த்துக் காவியூட்டப்பட்ட ஆடையை அணிந்து(மு.பா) கையில் குடைபிடித்து, பிடரியில் உறிஞ்சும் கரகமும், முக்கோலும் அசைந்தாடப் பார்ப்பனப் புரோகிதர்கள் பயணம் செய்தார்கள்(கலி 9) உலகிலுள்ள மக்களை விடத் தாங்களே புலன் அழுக்கு இல்லாதவர்கள் என்ற கட்டுக்கதையைப் பரப்பினார்கள்(புற 126). இந்தச் சுத்தக் கொள்கையைத் தங்களது உயரிய கொள்கையாக நிலை நாட்டினார்கள். பிறர் நீராடிய ஆற்றில் குளிப்பதையும், சடங்கு செய்வதையும் தவிர்த்தார்கள். புதுவெள்ளத்தில் தமிழ்மக்கள் புதுப்புனலாட்டம் என்ற விழாவைக் கொண்டாடியபோது, அந்த வெள்ளத்தில் அவர்கள் கலந்த நறுமணப் பொருள்களாலும், கள்ளாலும் கலங்கலாக ஆனதால் அதில் நீராடவும் இல்லை; வாயைக்கூடக் கொப்பளிக்கவில்லை(பரி6, பரி.திர2) என்று ராஜ் கெளதமன் கூறுகிறார்.

இதிலிருந்துதான் உனக்கும் எனக்கும் ஸ்நானப்பிரார்த்திக்கூட இல்லை என்கிற இன்று வரை புழங்கும் வழக்காற்றுச் சொல் பிறந்திருக்கிறது எனலாம். தானம் பற்றிய வணிக மயமான சூழலில்தான் அறவிலை வணிகன் என்ற சொல் உருவாக்கம் பெற்றிருக்கிறது எனலாம்.

சண்டித்தனம் செய்யும் மாடுகளையும் பெண்களையும் கொண்டி, கொண்டி மாடு என இழித்துப் பேசும் சமகால வழக்கத்தின் மூலவேராக கொண்டி மகளிர் கருத்துருவாக்கம் இருந்துள்ளது என்பதைக் காண்கிறோம். போரில் தோற்கடிக்கப்பட்ட நாட்டுப் பெண்களை கொண்டி மகளிர் எனப் பிடித்து வந்ததும் அவர்களை அடக்கி ஒடுக்கியதும் காரணமாகவே பின்னர் தமிழகத்தில் அடிமைமுறை உருவாக மூல விசையாக இருந்தது என்பது ஆ.சிவசுப்பிரமணியம் கூற்றாக உள்ளது.

சமுதாயத் தொழில் பிரிவினையில் உடல் உழைப்பைத் தந்து 
உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு எந்த உரிமையும் இல்லை.
அன்னாராயினும் இழிந்தோர்க்கு இல்லை.

என்று பறைசாற்றுகிறது தொல்காப்பியம். இழிந்தோர் என்பவர் பிறப்பால் அடிமைகளாக இருந்தவர்.

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனார் புலவர் (தொ.பொ.அக 25)

என்னும் அகத்திணையியற் சூத்திரமும் கூறுகிறது.

இவர்களது பணி தங்களது எஜமானர்களுக்கு அடிமைத் தொழில்புரிவது ஒன்றே. இவர்களுக்கு காப்பியங்கள் உருவாக்கப்பட்டால் இவர்களை முக்கியப்பாத்திரங்களாக வைக்கக்கூடாது. அடிமைகள் என்றும் இழிந்தோர் என்றும் வினைவலர் என்றும். ஏவல் மரபினர் என்றும் தொல்காப்பியம் உடைமையாளருக்காக உழைக்கம் அடிமட்டத்து உழைப்பாளிகாலுக்கு பெயர்கள் சூட்டியுள்ளது. இவர்க்ள் மேலே கூறிய நால்வகையான உடைமை உள்ள பிரிவினருக்காக உழைப்பவர்கள். இவர்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று கே.முத்தையா கூறுகிறார்.(தமிழ் இலக்கியங்கள் கூறும் தத்துவப் போராட்டங்கள்) சங்க இலக்கியம் எழுத்தெண்ணி ஆயப்பட்டதை போல பலநிலைகளில் இன்றைக்கு ஆய்வுக்குட்பட்டிருக்கிறது. வளவன் ஏவா வான ஊர்தி முதல் மயிற் குறை கருவி வரை விதந்தோதப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் மூக்குத்தி, சங்க இலக்கியத்தில் பாக்குவெட்டி, சங்க இலக்கியத்தில் அகப்பைச்சட்டி என சலிப்பு தட்டும் விதத்தில் தொகுப்பாய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றுள் ஆரிய வரவுக்கு முந்தைய பூர்வ தமிழ்க் கலைஞர்களாகப் பரிமளித்த கூத்தர், பாணர், பொருநர், விரலியர், இழிசனர், புலயர், கணிகையர், கடைசியர், தொழுவர் என பல நிலைகளில் ஆய்வுகள் பெரிய அளவுக்கு நிகழ்ந்துவிடவில்லை என்பதை நோக்கவேண்டியிருக்கிறது.

கால்நடைகளும், நெல்விவசாயமும் அன்று வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் குறித்தன. இந்த வளர்ச்சி பெற்ற சமூகப் பகுதியில் உடலால் உழைத்துப் பிழைத்த ஆயர்களும், உழவர்களும் காதல் பாடல்களுக்குரிய மாந்தர்களாகப் பாடப்படவில்லை. மாறாக வயலுக்கு உரிமை பூண்டவர்களும் கால்நடைகளுக்குச் சொந்தக்காரர்களும், போர்த்தலைவர்களும், தேரில் சென்ற செல்வந்தர்களும், மாடங்களில் வாழ்ந்தவர்களும் தலைவன், தலைவியராகப் பாடப்பட்டார்கள். அரசர்களும் அரசிகளும் காதல் தலைவன், தலைவியராகப் பாடப்பட்டார்கள்.(முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை) தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் கூறப்பட்ட விதிகள் பலவற்றுக்குப் பொருத்தமாகப் பலபாடல்கள் கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்பது சிக்கலும் குழப்பமுமாக இருக்கிரது. வடக்கிலிருந்து வந்த வைதீக, வைதீகமல்லாத பண்பாட்டுக்காரர்களால் அப்போதே தமிழ் வரலாறு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. பாடல்களைத் தொகுத்து தேர்வு செய்த, தணிக்கை செய்த சான்றோர்கள் தத்தம் கொள்கைக்கு ஏற்றபடி தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள் என்றும், செல்வர்வீட்டுப் பெண் பிரசவமானபோது, அவளைத் தீட்டுக்காலம் வரை படுக்க வைப்பதற்கான கட்டிலைப் பின்னியவனும் இழிசினன் என்று பழிக்கப்பட்டான். ஊசியால் தோல்வாரைக்கொண்டு இவன் கட்டில் பின்னியதே இதற்குக் காரணம்(புற.82). தோல்வார் என்று பாட்டில் குறிக்கவில்லை. உரை எழுதிய வைதீகரே குறித்துள்ளார். இதனை விட்டுப்விட்டுப் பார்த்தாலும் கூட சேவைப்பணி புரிபவன், குறிப்பாக பிரசவத் தீட்டோடு தொடர்பு கொள்பவன் என்பதற்காக இழிவானவனாகக் கருதப்பட்டது தெரிகிறது. ஊராரின் அழுக்காடையோடு சம்மந்தப்படுபவள் புலைத்தீ; பிரசவத் தீட்டோடு
சம்மந்தப்படுபவன் இழிந்தவன். இப்படி இவர்கள் பழிக்கப்பட்டதற்கான ஒரே அடிப்படை அசுத்தம் என்ற தீட்டுத்தான். அசுத்தத்தைப் பார்ப்பன வைதீகம் தீட்டு என்று சடங்குமயமாக்கியுள்ளது. மக்களில் ஒரு பிரிவினரைச் செய்யும் தொழிலால் இழிந்தவர்கள் என்று ஆக்கியதில் பார்ப்பன வைதீகத்திற்கு முழுப்பொறுப்பு உண்டு. இந்தக் குற்றச் செயலுக்குப் பார்ப்பனக் கருத்தியலே பொறுப்பேற்க வேண்டுமமென்றும் பேராசிரியர் ராஜ் கெளதமன் தமது தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு என்ற நூலில் ஆய்கிறார்.

சங்க காலத்தின் வாழ்க்கை முறைப்பறிய பல தரவுகள் துலங்கமாக சங்க இலக்கியம்தான் தருகிறது. இனக்குழு வாழ்விலிருந்து அரசுருவாக்க நிலைப்பட்ட சமூகப் படப்பிடிப்பே பழந்தமிழ் சங்க இலக்கியம் என மொழியப்பட்டுள்ளது. ஆனால் மன்னர்கள் தொகுப்பித்தமையாலும் தொகுத்தவர்களின் மற்றும் தொகுப்பித்தவர்களின் சமய, வர்க்க சார்பு மேலாதிக்கம் காரணமாகவும் பல இடைச்செருகல்களும், புறக்கணிப்புகளும், பதிப்பாதிசிரியர்/உரையாசிரியர் ஆகியோரது அரசியலாலும் தீயிட்டு எரித்ததில் ஆற்றலுடன் எரியாமல் நின்றவை நீரிட்டு அழித்தபோது எதிர்த்து நீந்தியவை என்ரு அனல்வாதம், புனல்வாதம் என்கிற கதையாடல்களில் போக்கடிக்கப்பட்டு அழித்தொழிப்புக்குள்ளான என பதிவுகள் போக கிடைத்துள்ளவைப் பற்றிய – அவர்ருக்குள் இருந்தே பழந்தமிழ் சமூகம் குறித்த பிம்பத்தை கட்டமைக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் மயிலை சீனி வேங்கடசாமியின் பொற்காலங்களும் இருண்ட காலங்களும் குறித்த மறு ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தில் அதிர்வுகளை உண்டாக்கின. தொடர்ந்து பொ.வேல்சாமி போன்றோர் இந்த தலத்திலிருந்து இயங்கி வருகிறார்கள். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகமாக பார்க்கப்பட்டமையால் மன்னர் மயப்பட்ட தமிழ்ச்சமூகச் சித்திரமே பலராலும் தீட்டப்பட்டுள்ளது. மக்கள் மயப்பட்ட குறிப்பாக அடித்தட்டு மக்கள் மயப்பட்ட பழந்தமிழ்ச் சமூகம் எத்தகையது என்பதற்கான தரவுகள் நடுநிலையோடு ஆயப்பட்டால் மெள்னங்கள் உடைபடக்கூடும்.

சங்க இலக்கியத்தை புதிய நோக்கில் காணும் சிலரிடம் தற்சாப்பு கொண்டு கூட்டுதல் காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. வலிமையான தரவுகளுடனும் நம்பகத்தன்மையுடனும் ஆய்வு நிகழும்போது அறிவுசார் சமூகம் எளிதாகவே ஏற்பிசைவை வழங்கும்.

இப்படி கல்வியால், பொருளால், பாலால் ஒதுக்கப்பட்ட மக்கள் குறித்தான பதிவுகள் சங்க இலக்கியத்துக்குள் காணப்பட்டிருப்பதை காய்தல் உவத்தலின்றி ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்த்தவேண்டியுள்ளது. எனவே பைந்தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் குறித்த ஆய்வுகளை மெளனத்தை உடைத்து நம்பகத்தோடு நிகழ்த்தவேண்டும்.
அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்.

Advertisements
This entry was posted in இலக்கியம், மணற்கேணி 2010. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s