பசுமை கட்டடக்கலையியல் – அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான்

*முகவுரை*

இயற்கை – மனிதனுக்கு வழங்கியிருக்கும் செல்வங்கள் மகத்தானவை. தனக்கு அள்ளிக் கொடுத்த இயற்கைக்கு மனிதன் நன்றிக்கடனாக திரும்பச் செலுத்துவது அல்லது செலுத்தியது என்ன? இயற்கையோடு இயைந்து வாழ்ந்து தான் வாழும் பூமியை வளமாக வைத்திருக்க வேண்டிய மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கைக்கு எதிரான வன்முறைகளில் திரும்பி விட்டான் – நாகரிகம் என்ற பெயரில்.

மனிதன் நாகரிக வளர்ச்சி (civilisation) தான் இயற்கைக்கு எதிரான முதல் கல். இந்த நாகரிக வளர்ச்சி இயல்பானதாக, இயற்கைக்கு முரண்பட்டதாக அமையாமல் இருந்திருந்தால் மனிதனின் முயற்சிகளும் அறிவுத்திறனும் அவனது செயல்பாட்டிற்குத் துணை நின்றிருக்கக் கூடும். ஆனால், தனது சுயநலப் பாய்ச்சலில் மனிதன் முதலில் செய்தது அடர் வனங்களை அழித்து புதிய நகரங்களை உருவாக்கியதுதான்.

முன்னொரு காலத்தில் பசுமைப்புரட்சி செய்து விளைச்சலைப் பெருக்கினார்கள். வேளாண்மையில் புரட்சியாகப் பார்க்கப்பட்ட இந்த செயல் காரணமாக விளைச்சல் பெருகியது ஆனால் மண்ணின் வளம் வேதிப்பொருட்கள் கலந்த உரங்களால் தொடர்ந்து தனது வீரியத்தை இழக்கத் துவங்கியதென்கிறார்கள்.

அடர் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கியதால் இயற்கையின் சுழற்சிமுறையில் ஏற்பட்ட அதீத மாற்றங்கள் ஓசோன் அடுக்குகளில் ஓட்டைகளை உருவாக்கின. இதன் காரணமாகப் பூமியின் வெப்பநிலை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் சொன்னாலும் அதற்குக் காரணமானவர்களின் அலட்சியம் தொடர்ந்தே வருகிறது.

ஆனால், உலக வெம்மையின் காரணமாக தட்ப வெப்ப நிலைகள் உலகம் முழுவதும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி வருவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான இயற்கைச் சீற்றங்களும் இன்றைக்கு மனிதனுக்குள் சிறு அசைவையேனும் ஏற்படுத்தியிருக்கிறதென்பதை முற்றாக மறுப்பதற்கில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு கரியமில வாயுவின் வெளியேற்றத்தைத் தவிர்க்க விஞ்ஞான ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதையெடுத்தாலும் அது பசுமை(Green) யோடு தொடர்புடையதாக, மறுசுழற்சிக்கு(re-cycling) உட்படுத்தப்பட்டதாக இருகக் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மனிதனின் அன்றாட உபயோகங்களில் இருக்கும் எல்லா பொருட்களிலும் இந்தப் பசுமைத் திட்டம் இடம் பெற வேண்டுமென்ற முனைப்பு இப்போதுதான் சிறுபொறியாகத் துவங்கியிருக்கிறது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதற்கு முன்பாகவேனும் விழித்துக்கொண்டாக வேண்டிய கட்டாய நிலைக்கு மனித குலம் தள்ளப்பட்டிருக்கிறதென்பதே உண்மை.

எனவே, எரிபொருள் சேமிப்பு, நீர் விரயமின்மை, காடுகளைப் பாதுகாத்தல், தொழிற்சாலைக் கழிவுகளை குறைத்தல் என்று பல்வேறு துறைகளிலும் இவை பய்ன்பாட்டிற்கு வரத் துவங்கியிருக்கின்றன. எரி எண்ணெயில் (petrol) இயங்காமல் அதிக புகைவெளியிடாத மின்கலங்களைக் (battery) கொண்டு இயங்கும் சீருந்துகளைத் தயாரிப்பதில் சீருந்து தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவதை இதன் ஒரு பக்கமாக
நம்மால் அணுக முடியும்.

அந்த வகையில் உலகின் மிகப்புராதனமான கலையென்ற வகையில் பசுமைக்கு வழிவகை செய்யும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது இன்றைய கட்ட்டவியலாளர்களின் முன்னாலிருக்கும் அறைகூவல்.மாறி வரும் புதிய பசுமை உலகிற்கேற்ப கட்டடக் கலையியலிலும் தொழில்நுட்பத்தைப் புகுத்தி இயற்கையோடிணைந்த அதிக எரிபொருள் செலவு வைக்காத, வருங்காலத்திற்கான சேமிப்புகளை உருவாக்கக் கூடிய கட்டடங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகிவிட்டது.

*பசுமைக் கட்டடங்களும் புதிய தொழில் நுட்பங்களும் (Green Buildings and new
technologies) *

’க்ரீன் பில்டிங்’ எனப்படும் பசுமை கட்டடங்கள் வலியுறுத்துவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, எரிபொருள், நீர் உள்ளிட்ட இயற்கை தரும் சக்திகளைச் சிக்கனமாக உபயோகிப்பதெப்படி என்பது குறித்த விழிப்புணர்வையே. கூடவே எரிசக்தி விரயத்தைத் தவிர்த்து மிச்சப்படுத்துவது எப்படி என்பதனையும் சமீபத்தில் துபாயில் மிகச் சிறந்த சக்தி சேமிப்பிற்கான உச்சபட்ச அளவான பிளாட்டினம் சான்றிதழை ஜெபல் அலியில் இயங்கும் கட்டடம் பெற்றிருக்கிறது. எஸாப் என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் வடிவமைப்பாளர் (Architect) என்ற முறையில் எனக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது.

விசயம் இது குறித்தல்ல. இம்மாதிரியான சான்றிதழ் பெறுவதற்குக் கடுமையான விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் உருவாக்கப்படும் கழிவுகளை அகற்றுவதில் தொடங்கி, மழை நீர் சேகரிப்பு, சீருந்துகளுக்குப் பதிலாகப் பேருந்துகள் நிறுத்த இடமளிப்பது கட்டடம் உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பது கட்டடம் குளிரூட்டப் பயன்படுத்தும் எரிசக்தி, அந்த எரிசக்தி மூலம் சுற்றுச்சூழலுக்கு உண்டாகும் கேடுகள் இப்படி நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

வழக்கமான கட்டடங்களில் நிறுவப்படும் குளிர்மிகள் ( Chillers) அறைகளைக் குளிரூட்டும். குறிப்பிட்டவெப்பநிலைக்கு காற்று பதப்பட்டதும் குளிர்மி தன் பணியை நிறுத்தி விடும். சிறிது நேரத்தில் அறையில் மீண்டும் வெப்பநிலை கூடும்போது மீண்டும் குளிரூட்டும் பணி துவங்கும். இதனால் எரிசக்தி (மின்சாரம்) உபயோகம் அதிகமாகும் ஆனால் அப்படியில்லாமல் மொத்த கட்டடத்தையுமே குளிர்வித்தால்?? இந்த அடிப்படையில்தான் ‘தெர்மோடெக்’ (Thermodeck) என்ற தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் அறைக்குள் அல்லது கட்டடத்துக்குள் வழங்கப்படும் பதப்படுத்த காற்று (conditioned air) அதே வெப்பநிலையில் தொடரும்படியாக கட்டடத்தின் வெப்பநிலை இழப்பு (heat loss) தவிர்க்கப்படுகிறது இதற்காகக் கட்டடத்தின் வெளிப்புறச் சுவர்கள் வெப்பத் தடுப்பான்கள் ( Insulated
walls) கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. வெப்ப இழப்பு பெருமளவு தடுக்கப்படுவதால் அறையின் வெப்பநிலை சமச்சீராகப் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு சமச்சீராகப் பாதுகாக்கப்படுவதற்காக கட்டடத்தின் கூரையை (roof) வழக்கமான வலிமையூட்டப்பட்ட கற்காரை (reinforced concrete) தளமாக இல்லாமல் உள்ளீடற்ற தளம் (hollow core slab) மூலமாக அமைக்க வேண்டும் இந்த உள்ளீடற்ற தளங்கள் எளிதில் நிறுவப்படக் கூடியவை. முன்னரே தயாரிக்கப்பட்டு( pre-cast) பாரம்தூக்கிகள் ( cranes) மூலமாக எடுத்து விரைந்து அடுக்கப்படக் கூடியவை.

இந்த உள்ளீடற்ற தளத்தில் உள்ளீடற்ற பகுதிகள் (hollow spaces) வழியாக குளிர்காற்று செலுத்தப்படுகிறது இந்தக் குளிர்காற்றுதான் தளத்தைக் குளிரூட்டுகிறது இவ்வாறு குளிரூட்டப்படும் தளம் நன்றாகக் குளிர்ந்த பின் அந்தக் குளிர்மையை அறைக்குள் கடத்துகிறது. இதன் மூலம் அறையில் குளிர்மை பரவுகிறது. இவ்வாறு பரப்பப்படும் குளிர் வெப்ப இழப்பைச் சந்திக்க விடாமல், முன்னரே சொன்னது போன்ற வெப்பத்தடுப்பான்களால் செய்யப்பட்ட சுவர்கள் இருப்பதால் அறையில் குளிர்மை நிலைநிறுத்தப்படுகிறது எனவே குளிர்மி முழுநேரமும் இயங்க அவசியமில்லாமல் போகிறது. இதன் காரணமாக இந்தக் குளிர்மிகளை இயக்கத் தேவைப்படும் மின்சாரம் வழமையான குளிர்மிகளுக்குத் தேவையானதை விட 60% குறைவாகவே அவசியமாகிறது.

இந்த அடிப்படையில் உள்ளீடற்ற தளத்தைக் குளிர்விக்கும் பணியில் சாதாரண குளிர்மிகளுக்குப் பதிலாக புதிய மாற்று என்ற வகையில் சூரிய ஒளி (solar power) மூலம் நீரைக் கொதிக்க வைத்து அதனை வாயு கலந்த வேதியியல் கலவை மூலமாகக் குளிரூட்டும் புதிய உத்தி அறிமுகம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் கட்டடத்தை முழுமையாகக் குளிர்விக்க மட்டும் நான்கு நாட்கள் முழுமையாக இயங்கிய குளிர்மி அதன் பின்னர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே இயங்குமளவுக்கு எரிபொருள் சிக்கனம் அதாவது கிட்டத்தட்ட 75% மின்சாரத் தேவை குறைந்து விடுகிறது.

இது ஒரு புறமிருக்க மின்சாரத் தேவைகளைக் குறைக்க மின்சாரத்தில் இயங்காமல் இயற்கையான காற்றிலேயே இயங்கும் வாயுவெளியேற்று விசிறி (exhaust fan)கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. இத்தகைய விசிறிகள் காற்றின் ஈரத்தன்மையை(humidity) வெளியேற்ற கிடங்குகளில் (warehouse) மிகவும் அவசியம்.

இதைப் போன்றே குறைந்த மின்சாரத்தில் ஒளிவிடும் உயர்சக்தி கொண்ட விளக்குகளும் (low energy bulbs) புழக்கத்திற்கு வரத்துவங்கி விட்டன. கழிப்பறைகளில் வீணாகும் நீரை மறுசுழற்சி (re-cycling) முறையில் சுத்தப்படுத்தி அவற்றை தோட்டங்களைப் பராமரிக்கச் செய்யும் பழக்கமும் மெல்லத் தலைப்படுகிறது இதன் மூலம் தோட்டப் பராமரிப்பிற்காக மட்டும் விரயமாக்கப்படும் நீரின் தேவை முற்றாக இல்லாமல் செய்ய இயலும்.

இவ்வாறே தண்ணீர் அனாவசியமாக வீணாவதைக் குறைக்க புதிய முறைகளும் புதிய தொழில்நுட்பங்களும் மெல்லத் தலைதூக்கத் துவங்குகின்றன. கழிப்பறைகளில் குறிப்பாக ஆண்களின் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க வசதியான பீங்கான் கோப்பைகளைப் பார்த்திருக்கக் கூடும் (Urinals) ஒவ்வொருமுறை ஒருவர் சிறுநீர் கழித்ததும் அதை உடனே சுத்தம் செய்ய குறிப்பிட்ட அளவு நீர் செலவிடப்படுகிறது இது ஒரு வருடத்திற்கு ஒன்றரை லட்சம் லிட்டர் என்று கணக்கிலெடுக்கப்படுகிறது. ஒரு அலுவலகத்தில் இது போன்று மூன்று இருந்தால் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லிட்டர் நீர் சிறுநீரோடு கலந்து வீணாகப் போகிறது.இது ஒரு அலுவலகத்தில் மட்டும் சேகரிக்கப்படும் நீரின் அளவென்றால் ஒரு நகரம் முழுக்க சேமிக்கப்படும் நீரின் அளவை சற்று யோசித்துப் பாருங்கள். இப்படி பல கோடி லிட்டர் நீர்
விரயமாக்கப்படுவதைத் தடுக்க இப்போது நீர் இல்லாமலேயே கோப்பைகளைக் கழுவி சுத்தமாக்கும் புதிய கோப்பைகள் புழக்கத்திற்கு வரத் துவங்கியிருக்கின்றன.

ஒரு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் இந்தக் கோப்பைகளில் தீங்கு தராத இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்காத எளிய வேதிப்பொருள்கொண்ட அடைப்பான் ஒன்று பொருத்தப்பட்டாலே போதும் அதுவே கழிவுநீர்க்குழாயின் அடைப்புகளை அகற்றும் பொருளாகவும் செயல்படுவதால் பணியாளர்களுக்குத் தலைவலியும் மிச்சம். ஆனால் முக்கியமான கேள்வி ஒன்று எழும். சிறுநீர் கழித்து விட்டு அந்த இடம் கழுவப்படாமல் இருக்குமேயானால் உள்ளே நுழைபவர்களை அது மூர்ச்சையடையச் செய்து விடாதா என்ற கேள்விதானே அது?

அப்படி நிகழ வாய்ப்பில்லை ஏனெனில் சிறுநீரில் இருந்து வரும் துர்நாற்றமென்பது சிறுநீர் காற்றோடும் நீரோடும் கலப்பதால் அம்மோனியா ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் உருவாக்கம் பெறும்போது ஏற்படுவது. இங்கே சிறுநீர் நீரோடு கலக்க வாய்ப்பில்லாததால் அந்த சிக்கல் இல்லை அது போன்றே பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களின் சுகமான இருப்பிடமாக இருப்பது சிறுநீர் மற்றும் நீர் கலந்த பீங்கான் கோப்பைகள். நீரில்லாததால் பாக்டீரியாக்களும் இல்லை.

மட்டுமில்லாமல் சிறுநீர் கழித்ததும் நீர் வைத்து அலச வேண்டுமென்றால் அதற்கும் மின்சாரச் செலவு ஏற்படும் அந்தச் செலவும் இங்கே தடுக்கப்படுகிறதென்பதால் அதுவும் எரிசக்தி சேமிப்பாகவே கணக்கிலெடுக்கப்படுகிறது.

ஆக, எரிசக்தியையும் நீரையும் சேமிக்கும் பணியில் புதிய நுட்பங்களும் புதிய வசதிகளும் உட்படுத்தப்பட்டு கட்டடங்கள் புதிய பரிமாணங்களுக்குள்ளாகும் நிலை வந்திருக்கிறது (என்றாலும் மாண்புமிகு ஆற்காடு வீராசாமியைப்போல மிகச் சிறந்த எரிபொருள் சேமிப்பாளரை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காதென்பது வேறு விசயம்)

*நம் நாட்டில் பசுமைக் கட்டடங்கள்*

மேலை நாடுகளில் பசுமைக் கட்டடங்கள் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் வேளையில் இந்தப் பசுமைக் கட்டடங்களைக் குறித்த வரம்புகள் நமது தாயகத்தில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அடுத்த முப்பதாண்டுகளில் 15 கோடி பேர் ( நமது மக்கள்தொகையில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர்) நகரங்களை நோக்கி நகர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாயின், ஏற்கெனவே பிதுங்கி வழியும் நகரங்கள்
அங்கு வசிப்பவர்களுக்கும் புதிதாக வரவிருப்பவர்களுக்குமான அடிப்ப்டை கட்டுமான வசதிகளை (infra structures) மேம்படுத்த வேண்டியிருக்கும் – மனித வாழ்க்கைச் சூழலை (human ecology) பாதிக்காத வண்ணம்.

இவ்வாறு நிகழும்போது அனைவருக்கும் நீர், மின்சாரம், கழிவுகளை அகற்ற கட்டமைப்பு, சாலைகள், பாலங்கள் என்று கட்டவியலாளர்களின் மீது இந்த சமூகச் சுமை ஏற்றப்படுவது தவிர்க்க இயலாதது
இந்த இடத்தில்தான் பசுமை கட்டடம் என்ற கரு(concept) சற்றே மாறுபடுகிறது. மேலை நாடுகளில் பின்பற்றப்படும் பசுமை கட்டடங்களுக்கான அதே அடிப்படையைத்தான் இந்தியாவிலும் மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயற்கையானது.

காரணம் இன்று மேலை நாடுகள் நடைமுறைப்படுத்தும் பசுமை கட்டடங்களுக்கான விதிமுறைகள் ஏற்கெனவே 90 விழுக்காடு நகரமயமாக்கப்பட்ட சூழல்களின் அடிப்ப்டையில் உருவானவை. பெரும்பாலான மேலைநாடுகளில் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிய குடியேற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டன.எனவே அந்நாடுகளில் நிறைந்து விட்ட மனிதர்களுக்காக அடுக்ககங்களும்(apartments) , விரிவான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் பாலங்களும் சீருந்து நிறுத்துமிடங்களுமாகப் பெரும்பாலான நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற மேலை நாடுகளில் தட்ப வெப்பமும் இந்தியாவோடு ஒப்பிடும்போது மிக மிக வேறுபட்டவையாகவே இருக்கின்றன. மேலை நாடுகளில் கடும் குளிரும், கடும் வெப்பமும் இயல்பானவை. இவற்றை சமாளிக்கும் விதமாகவே காற்றுப்பதனி(air conditioner)களும், அறை வெம்மையூட்டி (room heaters) களும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், பெரும்பான்மையான இந்தியப் பகுதிகளில் இத்தகைய கடுமையான வெப்பநிலைகள் இல்லையென்றே சொல்லலாம். கோடை காலத்தில் மின் விசிறியும், குளிர் காலத்தில் கம்பளியுமே கூடப் போதுமானதென்ற நிலையே இங்கிருக்கிறது. எனவே, மேலை நாடுகளில் பின்பற்றப்படும் அதே விதிகள்தான் இங்கும்
தேவை என்ற நிலையிலிருந்து நாம் மீண்டாக வேண்டும்.

பசுமை கட்டடங்களுக்கான விதிமுறைகளை அப்படியே மேலைநாடுகளின் விதிப்படி ஒற்றியெடுக்காமல் இந்தியாவின் தனித்தன்மைக்கேற்றவாறு அதனுடைய வரம்புகளை அமைக்க வேண்டும். அதற்கு முழுமையான நில உபயோகம் குறித்த திட்டம் (land planning) மற்றும் விழிப்புணர்வு வேண்டும். நகரமயமாக்குதலைத் தவிர்த்து ஏராளமான நிலப்பரப்பு இருக்கும் கிராமங்களின் அருகிலேயே விரிவான சிறுநகரங்களை (satellite cities) உருவாக்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நில உபயோகத்தைச் சரிவர நிர்வாகம் செய்யாமலேயே பல குழப்பங்களும் நிகழ்கின்றன. உதாரணமாக புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்படும்போதே அதனைச் சுற்றிலும் அமைக்கப்பட வேண்டிய கட்டுமானங்களுக்கான நிலமும் சேர்த்தே உருவாக்கப்படுவதில்லை. இதன் காரணமாக தொழிற்பேட்டைகளைச் சுற்றியுள்ள தனியார் நிலங்களின் விலை மதிப்பு ஊகத்தின் அடிப்ப்டையில் ஊதிப் பெரிதாக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தவிர்ப்பதற்காகவே நில உபயோகம் குறித்த விழிப்புணர்வும், நகரமயமாக்குதல் குறித்த திறந்த அணுகுமுறையும் உருவாக்கப்பட வேண்டும்.

சிமெண்டு போன்ற வேதிக்கலவைகளின் உபயோகத்தைக் குறைப்பதே கூட பசுமை கட்டடங்களுக்கு வழிவகுக்கும். குறுக்குவெட்டாகக் காற்றோட்டம் (Cross ventilation) இருக்கும்படியான கட்டடங்களை வடிவமைப்பதன் மூலம் இயற்கையான காற்றோட்டம் வருவதற்கான வழிமுறைகளைச் செய்ய முடியும். அதிக உயரமுள்ள கட்டடங்களைக் கட்டுவதன் மூலம் மேலும் மேலும் கற்காரை காடுகள் (concrete
jungles) உருவாகுமே தவிர பசுமைக் கட்டடங்கள் உருவாக முடியாது.

பசுமையான கட்டடங்கள் அமைவதற்கு நாம் மீண்டும் சற்று பின்னோக்கி நகர்ந்துதானாக வேண்டும். ஆரம்ப காலத்தில் கட்டடங்கள் செய்ய உபயோகிக்கப்பட்ட கருங்கல், சுண்ணாம்பு, ஓடுகள், மூங்கில்கள் ஆகியவைகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.அதாவது வேதிக்கலவைகளற்ற இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டே கட்டடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இத்தகைய கட்டடங்கள் அதிக உயரம் கொண்டவையாக இல்லாமல் பளுதாங்கும் சுவர்களால் (load bearing walls) உருவாக்கப்படுவதாகவே இருக்கும் என்பதால் இத்தகைய கட்டடங்கள் படுக்கை நிலை
விரிவாக்கமாகவே (horizontal expansion) நிகழும். ஆனால், நகர மயமாக்கலில் நிலத்தின் உபயோகம் பெரும்பாலும் வணிகரீதியாக மட்டுமே தீர்மானிக்கப்படுவதால் செங்குத்தான விரிவாக்கம் (vertical expansion) நிகழவே வாய்ப்புகள் அதிகம். அதிக உயரமான கட்டடங்கள் என்பது பசுமை கட்ட்டங்கள் என்ற கருவிற்கே உலை வைப்பவையும் கூட என்று சொல்லலாம். ஆனால் நகரமயமாக்கலில் செங்குத்தான விரிவாக்கங்களான அடுக்கங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்பதால் உருவாக்கப்படும் கட்டடங்களிலாவது அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது கட்டடவியலாளர்களின் அடிப்ப்டைக் கடமையாகிறது.

நீர் விரயத்தைத் தவிர்க்க மெதுவாக ஒழுகும் குழாய்களை (low flow pipes) கழிப்பறைகளில் நிறுவுவதன் மூலமும் குறுக்குவெட்டாகக் காற்று உலாவருவது போன்ற யன்னலகளை அமைக்கும் வடிவமைப்பின் மூலமும், ஒவ்வொரு அடுக்ககத்திலும் மழைநீர் சேகரிப்பிற்கான கிணறுகளை அமைப்பதின் மூலமும், வேதிக்கலவைகள் தவிர்த்த சாந்து(plastering) மூலம் சுவர்களை அலங்கரிப்பதன் மூலமாகவும் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்த வேண்டும்.

*முடிவுரை*

அளவுக்கதிகமாக மின்சாரம் உபயோகிப்பது, நீரை விரயம் செய்வது, கழிவுநீரை தெருக்களில் தேங்க வைப்பது, மழை நீரை சேகரிக்காமல் இருப்பது காடுகளைக் கணக்கில்லாமல் அழிப்பது போன்ற எல்லா செயல்களுமே பசுமைச் சூழலுக்கு எதிரானவையே.

இன்றைக்கும் எல்லா மனிதருக்குள்ளும் இயறகையோடியைந்து வாழும் ஏக்கம் இருக்கவே செய்கிறது. ஆனால் அதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்த சிந்தனையும் அதனை நோக்கிய முனைப்பான செயல்பாடுகளும்தான் இன்னமும் உருவாகவில்லை. இந்நிலை மாறி பசுமையான பூமி உருவாகும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை?

Advertisements
Posted in 2010, அறிவியல், பசுமை கட்டடக்கலையியல் | 1 பின்னூட்டம்

மரபு சாரா ஆற்றல் வளம் – லதானந்த்

மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும்.

மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம்.

மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்..
 படிம எரிபொருள் ஆற்றல் (Fossil fuel energy)
 விறகு (Fire wood) மூலம் கிடைக்கும் ஆற்றல்
 நீர் ஆற்றல் (Hydraulic energy)
 அணு ஆற்றல் (Nuclear energy)

நிலக்கரி, பெட்ரோலியம், மற்றும் இயற்கை எரி வாயு ஆகியனவற்றைப் படிம எரிபொருள் ஆற்றல் தருவன எனக் குறிப்பிடலாம். பல கோடி ஆண்டுகளுக்கும் முன்னர் பூமியில் புதையுண்ட தாவரம் மற்றும் விலங்குகள், மக்கிப் போய்ச் சிதைவடைந்ததால் உண்டானதே படிம எரிபொருளாகும். இவை பூமியில் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. புதிதாக உற்பத்தி ஆக இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தொடர்ந்து இவற்றைப் பயன் படுத்திக் கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில் இவை தீர்ந்து போகலாம். மேலும் இவற்றையும், பல காலமாக எரிபொருளாகப் பயன்பட்டு வரும் விறகையும் பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியிடப்படுகிறது. இது சுற்றுச் சூழல் தூய்மைக் கேட்டினை உருவாக்கும். மேலும் புவி வெம்மை எனும் பெரும் கேட்டினையும் விளைவிக்கும். புவி வெப்பமடைந்தால் கடல் மட்டம் உயருதல், நிலப் பரப்புக்கள் நீரில் மூழ்குதல், பனிப் பாறைகள் உருகுதல், அமில மழை பொழிதல், பருவ நிலை மாற்றம் அடைதல், வெள்ளம், புயல் போன்றவற்றால் பேரிடர்கள் விளைதல் போன்ற பல தீங்குகள் நிகழும்.
நீர் மின்சக்தி உற்பத்தி செய்வதில், ஏராளமான பொருட் செலவுக்கு ஆளாவது, தகுதியான இடம் இல்லாதது, கட்டுமானத்தினால் சுற்றுச் சூழல் பாதிப்பு அடைவது, அதிகப்படியான இழப்பீடுகள் தர வேண்டியிருப்பது, உற்பத்தி செய்த மின் சக்தியைத் தொலை தூரங்களுக்குக் கொண்டு செல்வதால் இடைஞ்சல்களுக்கு ஆளாவது எனப் பல சிக்கல்கள் உள்ளன.

அணு உலைகள் ஏற்படுத்த மிக அதிகப் பொருட் செலவு ஆகும் என்பதோடு அமைப்பதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை காலம் ஆகும். யுரேனியம் போன்ற மூலப் பொருட்கள் தீர்ந்து விட்டால் அணு ஆற்றல் தடைப்படும். அணு உலைக் கழிவுகளில் உள்ள அணுக் கதிர் வீச்சு மிகக் கொடுமையாக மக்களைப் பாதிக்கக் கூடியது. அக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதும் மிகவும் கடினம். விபத்துக்கள் ஏற்படும்போது விளைவுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். அணு உலைகள் மற்றும் அணு உலைக் கழிவுகள் உள்ள இடங்களை மிக மிகக் கவனமாகப் பாதுகாக்கவும் வேண்டியிருக்கும்.
உலக அளவில், 1980ல் இருந்ததை விடத் தற்போது 45% ஆற்றல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2030 வாக்கில் இது 70% ஆக அதிகரிக்கக் கூடும்.

இந்தியாவைப் பொருத்த வரை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஏராளமான பொருட் செலவும் ஏற்படுகிறது. வரும் ஐந்தாண்டுகளில், தேவைகளை விட மின் உற்பத்தி 43,000 மெகாவாட் குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப் பட்டிருக்கிறது.

எனவே புதுப்பிக்கக் கூடிய வகையில், எந்நாளும் தீர்ந்து போகாதனவாகவும் (Renewable energy), சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதனவாகவும் உள்ள ஆற்றல்களைப் பயன்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம் எனலாம். இவ்வகையான பண்புகளை மரபு சாரா ஆற்றல்கள் (Non conventional energy) பெற்றுள்ளன.

மரபு சாரா ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்
 சூரிய ஆற்றல் (solar energy)
 காற்றின் ஆற்றல் (Wind energy)
 கடல் அலை ஆற்றல் (Sea wave energy)
 கடல் மட்ட ஆற்றல் (Tidal energy)
 புவி வெப்ப ஆற்றல் (Geo thermal energy)
 உயிரியல் வாயு ஆற்றல் (Bio gas energy )
 உயிரியல் பொருண்மை ஆற்றல் (Bio mass energy)
 உயிரியல் எரிபொருள் ஆற்றல் (Bio fuel)

சூரிய ஆற்றல்

சூரிய ஆற்றல் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டது. ஏராளமாக உள்ள சூரிய ஆற்றலில் மிகச் மிகச் சிறு அளவுதான் பயன் படுத்தப் படுகிறது.

சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் வழக்கம் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது.
தாவரங்களின் உணவுத் தயாரிப்பான ஒளிச் சேர்க்கைக்கு நீர், கார்பன்-டை-ஆக்ஸைடு, தாது உப்புக்கள் இவற்றுடன் மிக முக்கியமான இன்னொரு தேவை சூரிய ஒளியாகும். தாவரங்கள் உணவு தயாரிக்கா விட்டால் மனித குலத்துக்கே உணவு கிடைக்காது.

புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) மற்றும் கடல் நீர்மட்ட வேறுபாட்டு ஆற்றல் (tidal energy) ஆகிய இரண்டு ஆற்றல்களைத் தவிர ஏனைய மரபுசாரா ஆற்றல்கள் அனைத்துமே சூரிய ஆற்றலையே சார்ந்திருக்கின்றன.

சர்வ சாதாரணமாகப் பகலில் வீடுகளுக்குள் வெளிச்சம் அளிப்பது சூரிய ஒளியே ஆகும். இந்தியாவில் சராசரியாக ஓராண்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் நாட்களாக உள்ளன. நிலப் பகுதியில் மட்டும் கிடைக்கும் சூரிய ஆற்றலின் அளவு 5 ட்ரில்லியன் கிலோ வாட் ஆகும். தினசரி கிடைக்கும் இவ்வாற்றல், இடங்களைப் பொருத்து, சதுர மீட்டருக்கு 4 முதல் 7 கிலோ வாட் வரை இருக்கும். முறையாக சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்டால் நாட்டின் தேவையைப் போலப் பல மடங்கு மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்தே தயாரித்துக் கொள்ள முடியும். மொத்த மரபு சாரா ஆற்றல்கள் மூலம் இந்தியாவில்10.9% சக்தி பெறப்படுகிறது. சூரிய ஆற்றல் மூலம் பெறப்படும் சக்தி 1% மட்டுமே ஆகும். தற்போது இந்தியாவில் 18 மெகாவாட் அளவுக்கு சூரிய ஆற்றலில் இருந்து மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஜவஹர்லால் நேரு சூரியத் திட்டம் (Jawaharlal Nehru National Solar Mission) என்ற அமைப்பு ஜனவரி 2010ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 2013ல் 1000 மெகவாட்டும் 2022ல் 20 ஜிகாவாட்டும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் மரபு சாரா ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 4115 மெகாவாட் அளவில் உள்ளது. இது நாட்டின் இவ்வகை மின் உற்பத்தியில் 37% ஆகும். இரண்டு முறைகளில் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஃபோட்டோ வோல்டாய்க் (photovoltaic) என்னும் முறையிலேயோ அல்லது செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றல் (concentrated solar power) முறையிலேயோ இதைச் செய்ய இயலும். முதல் முறையில் ஒளி மின் (Photo electric) விளைவைப் பயன்படுத்தி சூரிய ஒளி மின் சக்தியாக மாற்றப் படுகிறது. இம்முறையில் சூரிய ஒளியானது ஒளிவாங்கித் தகடுகளில் (panels) உள்ள செலேனியம் என்னும் மூலகத்தின் மீது விழ வைக்கப்படுகிறது. அப்போது அம்மூலகத்தில் இருந்து எலெக்ட்ரான்கள் தூண்டப்பட்டுக் கிளர்ந்து மேலெழும்புகின்றன. இப்படிக் கிளர்ந்தெழும் எலக்ட்ரான்களின் தொடர் ஓட்டமே மின்சாரமாகிறது. இம்முறையில் சூரிய ஒளியில் 1% மட்டுமே மின்சக்தியாக மாறுகிறது.

இரண்டாம் முறையில் ஆடிகள் மூலம் பெரிய பரப்பில் உள்ள சூரிய ஒளியைக் குறுகிய ஒளிக் கற்றையாக மாற்றும் உத்தி பயன்படுத்தப் படுகிறது. செறிவூட்டப்பட்ட இவ்வொளிக் கற்றை மூலம் நீர் சூடாக்கப்பட்டு, வழக்கமான முறையில், டர்பைனகளைச் சுழலச் செய்து அவற்றுடன் இணைக்கப்பட்ட ஜனனி (ஜெனரேட்டர்) மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கண்ணாடிகள் அல்லது குழி ஆடிகள் அல்லது ஒளிக் கோபுரங்கள் எனப் பல வழிகளில் சூரிய ஒளி செறிவாக்கப்படுகிறது.

சூரியக்குளத்தின் மூலமும் மின்சாரம் தயாரிக்கலாம்.

சூரியக் குளம் என்பது ஒரு மீட்டரில் இருந்து 2 மீட்டர் வரை ஆழமுள்ள உப்பு நீர்க் குளமாகும். மேல் மட்டத்தில் இருந்து கீழே செல்லச் செல்லக் கரைந்திருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கப் பட்டிருக்கும்.
சூரியனின் ஆற்றலைத் தேக்கி வைக்கும் வேலையை சூரியக் குளம் செய்கிறது. பொதுவாக ஒரு நீர்நிலையின் மேல் சூரிய ஒளி படும்போது அது கீழ் மட்டம் வரை ஊடுருவி அங்கிருக்கும் தண்ணீரையும் சூடாக்கும். அப்படிச் சூடான நீர் இயற்பியல் விதிகளின் படி மேல் மட்டத்துக்கு வந்து வெளிப் புறத்தில் நிலவும் வெப்பத்தின் அளவுக்குச் சமமாகக் குறைந்து விடும். ஆனால் சூரியக் குளங்களில் மேல் மட்டத்தில் இருந்து கீழே செல்லச் செல்ல உப்பின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதால் அடர்த்தி கூடி எடை அதிகரித்துள்ள கீழ் மட்ட நீர், சூரியனின் கதிர்களால் வெப்பமேற்றப்பட்டிருக்கும் போதும் கூடுதல் எடை காரணமாக மேலெழும்ப இயலாது. இங்குள்ள நீரில் வெப்ப அளவு 900 வரை இருக்கும். இந்நீரை மிக வேகமாக வெளிக்கொணர்ந்து டர்பைன்கள் மீது பாய்ச்சி மின்சாரம் தயாரிக்கப்படும். பிறகு அதே நீர் குளத்தின் கீழ் மட்டத்தில் சேர்க்கப்பட்டு விடும். இம்மாதிரிக் குளம் அமைக்க பெரும் பரப்பு நிலமும், நல்ல சூரிய ஒளியும் விலை மலிவான உப்பும் போதும்.

மின்சாரம் தயாரிப்பதேயன்றி நீரைச் சூடாக்கவும், நீரை வடிகட்டவும், கிருமி நீக்கவும் செய்து குடிநீராக மாற்றவும், உப்பளங்களில் உப்பு தயாரிக்கவும், சமையல் செய்யவும், விளக்குகளை எரிய வைக்கவும், பம்புகள் விசிறிகள் போன்றவற்றை இயக்கவும், நீர் இறைக்கவும், தானியங்களை உலர்த்தவும், கோழிப் பண்ணைகளில் வெப்பம் அளிக்கவும், கோழி எச்சத்தை உலர்த்தவும், பழங்களின் சாறு பிழியும் இயந்திரங்களை இயக்கவும், நீச்சல் குளங்களில் நீரைச் சூடாக்கவும், சூரிய ஒளி பயனாகிறது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி கூடாரங்கள் அமைத்து அதில் வெப்ப நிலையை அதிகரித்துக் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெப்ப இருத்திகள் (thermal mass) சூரியனின் வெப்பத்தை ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. கற்கள், நீர், சிமென்ட் போன்றவற்றுக்கு இவ்வாற்றல் உண்டு. இவை முறையாக ஓர் இல்லத்தைச் சுற்றிப் பயன்படுத்தப் பட்டால் குளிர்ப் பகுதிகளில், இரவு நேரங்களில் மிதமான வெப்பம் கிடைக்கும்.

சூரிய ஆற்றல் மூலம் வேதியியல் மாற்றங்களையும் செய்யலாம். ஒளி மூலமும் வெப்பம் மூலம் வேதியியல் மாற்றங்கள் நடைபெறும். 1970களில் ஹைட்ரஜன் வாயு தயாரிப்பில் சூரிய ஆற்றல் பயன் படுத்தப்பட்டது. நீரை 2300 முதல் 26000 செல்ஸியஸ் வரையுள்ள வெப்பத்தில் சூடாக்கி ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரிக்க இயலும்.

செறிவூட்டப்பட்ட சூரிய ஒளியின் மூலம் ஸிர்கோனியா போன்ற கிரியா ஊக்கிகளின் முன்னிலையில் கார்பன் –டை-ஆக்ஸைடை, கார்பன் மோனாக்ஸைடாகவும் ஆக்ஸிஜனாகவும் பிரிக்க இயலும். இப்படிப் பிரிக்கப்பட்ட கார்பன் மோனாக்ஸைடு மூலம் மெதனால், கேசோலின் போன்ற எரிபொருட்கள் தயாரிக்க இயலும். சூரிய ஆற்றலால் கிடைக்கும் மின்சக்தியைப் பயன்படுத்திக் கார்களைம் படகுகளையும் இயக்கும் தொழில் நுட்பமும் உள்ளது.

1974ல் முதன் முதலாக ஆளில்லா விமானமான ஆஸ்ட்ரோ ஃப்ளைட் சன்ரைஸ் சூரிய ஆற்றலைக் கொண்டு பறந்தது. சூரிய ஆற்றல் கொண்டு வானில் பலூன்களில் பறந்து பயணம் செய்யச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாற்றலைக் கொண்டு விண்கலங்களைச் செலுத்தும் முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்

 தீர்ந்து போகாதது
 நீடித்திருப்பது (இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் சூரியனின் ஆயுள் இருக்கும்)
 திரும்பத் திரும்பப் பயன் படுத்தக் கூடியது
 வீட்டின் மொட்டை மாடிகளில் ஒளி வாங்கித் தகடுகளை (panel) எளிதில் பொருத்த முடியும்.
 உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எளிதில் சேமிக்க முடியும்.
 சூரியன் வானில் பிரகாசிக்காத நேரங்களிலும் சேமித்த மின்சக்தியைப் பயன்படுத்தலாம்.
 சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தாதது
 கார்கள் மற்றும் செயற்கைக் கோள்களிலும் எரிசக்தியாய்ப் பயன்படக் கூடியது
 சிக்கனமானது. மின்கட்டணச் செலவைக் குறைக்கிறது
 நீண்ட நாள் உழைக்கக் கூடியது. இவ்வாற்றல் அளிக்கக் கூடிய கருவிகளைத் தயாரிக்கும் சில நிறுவனங்கள் 25 ஆண்டு செயல்பாட்டு உத்திரவாதம் (warranty) அளிக்கின்றன.
 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் அதன் பிறகு பராமரிப்புச் செலவு மிகக் குறைவு
 வேறெந்த எரிபொருளும் தேவையில்லை
 நிர்மாணம் செய்ய எளிதானவை
 தேவைப்படும் இடங்களில் நிர்மாணிக்கலாம். தேவை ஏற்படும்போது ஒளி வாங்கித் தகடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதிகத் திறனையும் பெறலாம்.
 நிர்மாணத்திற்கு அரசு மானியம் அளிக்கிறது
 திறனோடு பயன் படுத்தப்பட்டால் நிர்மாணச் செலவு விரைவில் திரும்பக் கிடைத்து விடும்.
 அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டால் அம்மின்சாரத்தை விற்கவும் வாய்ப்புண்டு.
 புகை, நச்சு வாயுக்கள் போன்ற எதுவும் வெளிப்படாததால் உடல் நலத்துக்குத் தீங்கு பயக்காதது. புவி வெப்பம் மற்றும் அமில மழை போன்றவை ஏற்படக் காரணமாகாது.
 மின் வெட்டு ஏற்படாது
 ஒளி வாங்கித் தகடு தயாரிப்பு போன்றவற்றால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
 இரைச்சலோ, துர்மண வெளிப்பாடோ கிடையாது
 மண்ணெண்ணெய் விளக்குகள், மெழுகு வர்த்திகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சுவாசக் கோளாறுகளும் கண்பார்வைக் கோளாறுகளும் ஏற்படலாம். தீ விபத்துக்களும் ஏற்படலாம். சூரிய ஆற்றல் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் இவை போன்ற தீமைகள் நிகழா.

சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 சூரிய ஒளி வாங்கித் தகடுகளை நிறுவ அதிகச் செலவாகும்.
 முழுக்க முழுக்க சூரிய ஒளியினையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்
 அமைவிடம், சூரிய ஒளி, நாளொன்றில் சூரிய ஒளி பெறும் நேரம், ஓராண்டில் பெறும் காலம், பருவ நிலை மாற்றங்கள் மற்றும் புயல் போன்றவற்றால் சூரிய ஒளி மங்கும் போது குறைவாகவே ஆற்றல் கிடைக்கும்
 சூரிய ஒளிவாங்கித் தகடுகள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படும். அதனால் நிறுவுவதற்கு அதிக இடம் தேவைப்படும்
 ஏராளமான சூரிய ஒளி தொடர்ந்து கிடைக்கப் பெறும் இடங்களே இவ்வாற்றலைப் பெற உகந்தவை ஆகும்.
 கார்களில் பயன்படுத்தப்பட்டால் வேகமாகக் கார்களைச் செலுத்த இயலாது.
காற்றின் ஆற்றல்
காற்றில் பொதிந்துள்ள திறனை மின்சார உற்பத்தி போன்ற பல் வேறு பயனுள்ள செயல்களாக மாற்றுவதைக் காற்றின் ஆற்றல் எனலாம்.

சூரியனால் பூமி முழுவதும் ஒரே அளவு சூடாவதில்லை. பூமத்திய ரேகைப் பகுதி அதிகமாகவும் துருவப் பகுதிகள் குறைவாகவுமே சூடாக்கப் படுகின்றன. இதே போல தரைப் பரப்பு கடற் பரப்பினைக் காட்டிலும் எளிதில் சூடாகி எளிதில் குளிரும் இயல்புடையதாகும். அதிகமாகச் சூடேற்றப்படும் இடத்திலுள்ள காற்று வெப்பத்தின் காரணமாக அழுத்தம் குறைந்து லேசாகி மேலெழும்புகிறது. அந்த அழுத்தக் குறைவை ஈடுகட்ட, அழுத்தம் அதிகமான பகுதிகளில் இருந்து காற்று வேகமாகப் பாய்கிறது. இப்படிப் பாயும் காற்றின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்பட்டுப் படகுகளைச் செலுத்தவும் மரங்களை அறுக்கவும், தானியங்களை அரைக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஏறக் குறைய 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காற்றின் ஆற்றலைக் கொண்டு பாய்மரக் கப்பல்களைக் கடலில் செலுத்தத் துவங்கியிருந்தனர். ஆஃப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று தற்போது அறியப்படும் பகுதிகளில் கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே தானியங்களை அறைக்கவும், நீர் இறைக்கவும் காற்றின் ஆற்றல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 1930களில் விவசாயத்துக்கு நீர் இறைக்கும் பணியினைக் காற்றாலைகளே செய்துள்ளன. டென்மார்க், ஸ்பெயின் மற்றும் நமது இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவு இவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

காற்றினால் இயக்கப்பட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் இயந்திரம் காற்றாலை என அழைக்கப்படுகிறது. உயரமான மரம் அல்லது இரும்புக் கோபுரம் போன்றதொரு அமைப்புடன் அவற்றுக்குச் செங்குத்தாக சுழலக் கூடிய வகையில் காற்றாலைகளில் ’இறக்கைகள்’ இணைக்கப் பட்டிருக்கும். இந்த இறக்கைகளின் நீளம் 13 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை தேவைக்கு ஏற்றப்படி வடிவமைக்கப் படுகின்றன. காற்று இந்த இறக்கைகளின் மீது மோதி அவற்றைச் சுழல வைக்கும்போது அவை டர்பைன்கள் எனப்படும் உருளைகளைச் சுழலச் செய்யும். டர்பைன்களுடன் இணைக்கப் பட்டிருக்கும் ஜனனி (ஜெனரேட்டர்) மின் உற்பத்தியினைச் செய்யும். காற்றாலைகளில் ஒவ்வொரு டர்பைனும் மின்சாரச் சேகரிப்பு அமைப்புடனும் இணைக்கப்பட்டிருக்கும். துணை மின் நிலயத்தில் இந்த மின்சாரத்தின் வோல்டேஜ் ஒரு மின் மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) மூலம் அதிகரிக்கப்பட்டு, அதிக அளவு வோல்டேஜ் கொண்ட மின்சாரம், மின் பகிர்மான அமைப்புக்கு அனுப்பப்பட்டுப் பின்னர் விநியோகிக்கப் படும். பெரிய அளவில் உள்ள காற்றாலைகளில் தயாரிக்கப் படும் மின்சாரம் மின்மாற்றிகள் மூலம் கம்பிகளுக்குச் செலுத்தப்பட்டு விநியோகிக்கப் படுகின்றன. சிறிய அளவுக் காற்றாலைகள் ஒதுக்குப் புறமாக உள்ள பகுதிகளின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

காற்றாலைகளின் இடத் தேர்வு மிக இன்றியமையாதது. டர்பைன்களைத் தொடர்ந்து இயக்கத் தேவையான சீரான காற்றுள்ள இடமாகவும். உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விநியோகிக்கும் வசதிகள் நிரம்பியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. உற்பத்திப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இவ்வுயரத்தை இன்னும் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரையுள்ள காற்றடிக்கும் சாதகமான பருவ நிலைகளில் தினமும் 2,000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். நாளொன்றுக்குக் காற்றாலை ஒன்றில் இருந்து 1800 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்க இயலும். தற்போதைய நிலவரப்படி 225 கிலோவாட் திறனுள்ள காற்றாலை ஒன்றை நிறுவ 1,15,00,000-ரூபாய் செலவு ஆகும். ஒரு காற்றாலை அமைக்க 5 முதல் 10 சென்ட் வரையில் அமைந்துள்ள நிலப் பரப்பே போதுமானதாக இருக்கும். அனைத்து வகை ஆற்றல்களாலும் உலகத்துக்குக் கிடைக்கும் சராசரி மின் சக்தி 15 டெராவாட்டாகும். யூகத்தின் அடைப்படையில், உலகம் முழுவதும் காற்றின் ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் அதன் அளவு ஆண்டொன்றுக்கு 72 டெராவாட் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது 54,000 மில்லியன் டன் படிம ஆற்றல் (fossil fuel) எரிபொருளுக்குச் சமமாகும்.

தற்போது இந்திய நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 1.50 லட்சம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் அனைத்து வகையிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரம் 3% அளவாகும்.

நாட்டின் காற்றின் ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 55% ஆகும். தமிழ் நாட்டில் பல விதங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20% காற்றலைகள் மூலம் கிடைக்கிறது. ஏறக்குறைய இது 2000 மெகாவாட் திறனாகும்.
உலக நாடுகளில் காற்றின் ஆற்றல் பயன்பாட்டில் இந்தியா ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் இதில் முன்னணியில் உள்ளது. 1000 மெகாவாட் என்ற அளவில் காற்றாலைகளின் செயலாக்கத்தின் மூலம் இம்மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கிராமம் இந்தியாவில் அதிகமாகக் காற்றாலைகள் உள்ள இடங்களில் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 4,000 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.
கடலில் மிதவையாகக் காற்றாலைகளை அமைத்து அங்கு வீசும் காற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பது பற்றி நார்வே போன்ற நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகள் வெற்றி பெற்றால் இதர நாடுகளிலும் மிதவைக் காற்றாலை முறை நடைமுறைக்கு வரும். தமிழ்நாட்டிலும் கடற்கரை ஓரங்களில் காற்றாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
Wind Energy Association கூற்றுப்படி தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து ஆற்றல்களையும் விட காற்றின் ஆற்றலானது 20 % கூடுதலாகப் பயன்படுத்தப் பட்டால் பின்வரும் நன்மைகள் ஏற்படும்
 2030ம் ஆண்டுக்குள் புவி வெப்பமாவதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடு (greenhouse gas emissions) கணிசமாகக் குறையும்.

 4 ட்ரில்லியன் கேலன்கள் நீர் சேமிக்கப் படும்.
 இயற்கை எரி வாயுவின் விலை 12% வரை குறையும்.
 வேலை வாய்ப்புக்கள் அதிக அளவில் உருவாகும்.
 காற்றாலை உரிமையாளர்களுக்கு வாடகையாகக் கணிசமான தொகையும் அதன் மூலம் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு வரி மூலம் வருமானமும் பெருகும்.
 மொத்தப் பொருளாதார நடவடிக்கைகள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும்.

காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 காற்று முற்றிலும் இலவசமானது.
 ஏராளமான அளவில் நிலவுவது.
 தீர்ந்து போகாதது. இது திரும்பத் திரும்பத் பயன்படுத்தக் கூடிய ஆற்றலாகும்.
 மரபு சார்ந்த எந்த எரிபொருளும் பயன்படுத்தப் படுவதில்லை.
 பசுமை இல்ல வாயுக்கள் (Green house gases) எதையும் வெளியிடுவதில்லை. அதனால் புவி வெப்பமாதலுக்குக் காரணமாவதில்லை.
 நச்சுத் தன்மையுள்ள பொருட்களோ கதிர் வீச்சு உள்ள பொருட்களோ வெளியேற்றப் படுவதில்லை.
 சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்வதில்லை.
 காற்றாலை நிறுவக் குறைந்த அளவு இடமே போதும்.
 குக்கிராமங்கள் உள்பட நாட்டின் ஒதுக்குப் புறமான எந்தப் பகுதியிலும் காற்றாலைகளை நிறுவ இயலும்.
 தேவைக்குத் தகுந்த அளவுகளில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

 சூரிய ஆற்றலுடன் இணைத்துச் செயல்படும் விதத்திலும் வடிவமைக்க முடியும். அப்படி அமைக்கப்படும்போது நிலையான நீடித்த (Sustainable) விதத்தில் மின் உற்பத்தி இருக்கும். சான்றாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் என்னும் ஊராட்சியில் பகலில் சூரியனின் ஆற்றலைக் கொண்டும் இரவில் காற்றாலை மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இரவு பகல் முழுக்கத் தங்கு தடையின்றி மின் விநியோகம் நடைபெறுகிறது.

 உலகம் முழுவதிலும் காற்று வியாபித்திருப்பதால் எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டைக் காற்றுக்காக எதிர் நோக்க வேண்டியதில்லை.

 மரபு சார்ந்த ஆற்றல் கொண்டவையான பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் விறகு போன்றவற்றின் விலை எதிர்காலத்தில் இன்னமும் உயரக் கூடும். அப்போது காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் இன்னும் மலிவாகும்.

 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் போதும். பராமரிப்புச் செலவுகள் ஏதும் இல்லை அப்படி இருந்தாலும் மிக மிகக் குறைந்த அளவே ஆகும்.
 மரபு சார்ந்த இதர எரி பொருள் மூலப் பொருட்களைச் சேமிப்பதைப் போலக் காற்றைச் சேமிக்கும் அவசியம் இல்லை.
 காற்றாலையின் பாகங்களைத் தயாரிப்பதால் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தால் தொழில் வளமும் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.
 காற்றாலைகள் உள்ள பகுதிகளிலேயே விவசாயமும் கால்நடை மேய்ச்சலும் மேற்கொள்ளப் படலாம்.

காற்றின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 பல சமயங்களில் காற்றின் வேகம் டர்பைன்களை இயக்கும் அளவுக்கு வலுவானதாக இருப்பதில்லை. காற்றின் வேகம் குறைந்தது மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வீதத்திலாவது இருந்தால்தான் சீரான மின் உற்பத்தியை ஒரு காற்றாலையில் இருந்து பெற இயலும்.

 குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தி செய்ய, மரபு சார்ந்த எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் டர்பைன்களின் அளவைவிட அதிகம் டர்பைன்கள் தேவைப் படுகின்றன.
 துவக்கத்தில் நிர்மாணச் செலவு மிக அதிகம்.
 கட்டுமானம் செய்யப் படும்போது அருகாமையில் வன உயிரினங்கள் ஏதும் இருப்பின் அவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும்.
 காற்றாலை செயல் படும்போது எழும்பும் பேரொலி, ஒலிக் கேட்டினை உருவாக்கும்.
 கிராமப் புறங்களின் எழில் தோற்றம் பாதிக்கப்படும்.
 பல இடங்களில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புக் கிளம்பும்.
 காற்றின் அளவு எப்போதும் சீராக இருப்பதில்லை. குறிப்பிட்ட அளவு வேகத்துடன் குறிப்பிட்ட நேரம் காற்று வீசும் எனத் துல்லியமாகக் கணிக்க இயலாது.

 உற்பத்தி நிலையத்துக்கும் பயன்படுத்தும் இடங்களும் இடையில் அதிகப்படியான தொலைவு இருக்கும்போது புதிய துணை மின் நிலையங்களும் மின்சாரத்தைக் கடத்தும் கம்பிகளும் தேவைப்படும். இவை பெரும் பொருட் செலவை ஏற்படுத்துவன ஆகும்.

 காற்றாலைக்கான டர்பைன்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளால் ஓரளவு சுற்றுச் சூழல் தூய்மைக் கேடு அடைகிறது.

 ஒரு பெரிய காற்றாலை முழு வீச்சில் செயல்படும்போது அதிகப் படியாக 475 குடும்பங்களின் மின் தேவையை மட்டுமே ஈடுகட்ட இயலும். லட்சக் கணக்கான குடும்பங்கள் உள்ள ஊர்களுக்கு முழுமையாக மின் தேவையை ஈடுகட்ட இயலாது.

 மிகக் குறைந்த வேகத்தில் காற்று வீசினால் மின்சாரம் தயாரிக்க இயலாது. மிக அதிகமாக வீசினாலும் சேதத்தைத் தவிர்க்கக் காற்றாலையின் இயக்கம் நிறுத்தப்படும்.

 அதி வேகமாகச் சுழலும் காற்றாலையின் ‘இறக்கை’ களில் அகப்பட்டுப் பல பறவைகள் மற்றும் வௌவால்கள் உயிரிழக்க நேரிடும். வேகமாகச் சுழலும்போது காற்றாலையின் இறக்கைகள் தெளிவாகவும் தெரியாது.

 இறக்கைகளின் நிழல் விழுவதால் அருகாமையில் உள்ள தரையில் வளரும் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது.
 காற்றாலை செயல்படும்போது அதிர்வுகள் ஏற்படுவதாக மேலை நாடுகளில் பல வழக்குகளும் தொடரப் பட்டிருக்கின்றன
 காற்றலைகளின் அருகாமையில் உள்ள வீட்டு மனைகளின் விலை ஓரளவு குறைகிறது.
 மானாவாரி விளைபொருட்களின் விலையுயர்வு, கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக் குறை போன்றவையும் நிகழ வாய்ப்புண்டு.

கடல் ஆற்றல்

கடலின் ஆற்றலைப் பயனுள்ள வகையில் மாற்றி விடுவதையே கடல் ஆற்றல் என்கிறோம்.
1783 ம் ஆண்டில் கடல் அலைகளின் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்பெயின், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் மாவு அரைக்கும் நிலையங்கள் செயல்பட்டிருக்கின்றன. 2008ம் ஆண்டில்தான் கடல் ஆற்றலை முறையாக மாற்றுச் சக்தியாகச் செய்யும் தொழிலகம் போர்ச்சுக்கல் நாட்டில் துவங்கப்பட்டது.
1973ல் ஏற்பட்ட பெட்ரோலிய நெருக்கடியைத் தொடர்ந்து கடல் ஆற்றலைப் பயன்படுத்தப் பல நாடுகளும் ஆர்வம் காட்டின.

போர்ச்சுக்கீசிய நாட்டில் உள்ள அகுகாடவ்ரா கடல் ஆற்றல் நிறுவனம்தான் உலகில் வணிக ரீதியில் அமைக்கப்பட்ட முதல் கடல் ஆற்றல் நிறுவனம் ஆகும். ஜூலை 2008ல் தனது உற்பத்தியை இந்நிறுவனம் துவங்கியது.

உலகின் மொத்தக் கடற்கரைகளில் இருந்து 2 முதல் 3 மில்லியன் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொருத்த வரை 1982ம் ஆண்டு சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கல்லூரியில் (Indian Institute of Technology) கடற் பொறியியல் மையத்தின் (Ocean Engineering Centre) மூலம் கடல் ஆற்றலைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓர் ஆண்டில் இந்தியக் கடற்கரைகளில் ஒரு மீட்டருக்கு 5 மெகாவாட் முதல் 15 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 6000 மீட்டர் நீளமுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 60000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனத் தோராயமாக் கணித்திருக்கிறார்கள்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் கடற்கரையில் 150 மெகவாட் திறன் உள்ள மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. டர்பைன்கள் என்னும் உருளைகளை அதிவேகமாகச் சுழலச் செய்வதால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜன்னி (ஜெனரேட்டர்) என்னும் மின் உற்பத்தி சாதனத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்க இயலும் என்பதுதான் அடிப்படைக் கோட்பாடு. மைக்கேல் ஃபாரடேயின் மின்காந்த விதிப்படி சுழற்சியின் போது மின்சாரம் உற்பத்தியாகிறது. அந்த உருளைகளைச் சுழலச் செய்வதற்குத் தேவையான சக்தியினை அளிப்பதில்தான் கடலின் ஆற்றல் பலவிதமாகவும் பயன்படுகிறது.

கடல் அலை மூலம் நீரை மேலேற்றம் செய்து மின்சாரம் தயாரித்தல் (Sea wave energy I)

அலைகள் மோதும் போது சக்கரங்கள் அந்த ஆற்றலால் சுழற்றப்பட்டு உயரமான இடத்துக்குக் கடல் நீரை மேலேற்றம் (Pumping) செய்கின்றன. அங்கிருந்து குழாய்கள் மூலம் மிக வேகமாக டர்பைன்கள மீது பாய்ச்சப் படும் கடல்நீர் அசுர வேகத்தில் அந்த உருளைகளைச் சுழலச் செய்யும்போது வெளியாகும் மின்சக்தி மின் நிலையங்கள் மூலம் தேவைப்படும் இதர பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
டேப்சான்” முறை என்றும் ஒன்று உண்டு. இம்முறையில் உயரமான கடற்கரைப் பகுதியில் மிகப் பெரிய குளம் ஒன்று அமைக்கப்பட்டு அதிலிருந்து கடல் நீர் கீழே உள்ள பகுதிக்கு விழும்படி செய்யப்படும். பின்னர் நீர்வீழ்ச்சிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் வழக்கமான உத்தி கையாளப் பட்டு மின் உற்பத்தி செய்யப்படும்.

கடற்கரையில் மோதும் அலைகள் மூலம் மின்சாரம் தயாரித்தல் (Sea wave energy II)

கடல் அலைகள் கரையில் தொடர்ந்து அடிக்கின்றன அல்லவா? அந்த ஆற்றலை இயந்திர சக்தியாக மாற்றியும் மின்சாரம் தயாரிக்கலாம். கடலின் மேற்பரப்பில், கரையை நோக்கி வரும் அலையின் ஆற்றலை இயந்திர சக்தியாக மாற்றி உருளைகளைச் சுழல விட்டும், கீழ்ப் பரப்பில், கரைப் பகுதியிலிருந்து மீண்டும் கடலை நோக்கிச் செல்லும் அலைகள் மூலம் உருளைகளைச் சுழல விட்டும் இரு விதங்களில் மின்சாரம் தயாரிக்கலாம்.

இம்முறையில் டர்பைன்கள் ஒரு காற்று அறையுடன் இணைக்கப் பட்டிருக்கும். இச்சாதனங்களின் அடிப் பகுதி கடல் நீருக்குள் இருக்கும். அலைகள் சீறிப் பாய்ந்து கரையை நெருங்கும்போது கடல் நீர் இந்தக் காற்று அறைக்குள் புகுந்துவிடும். அது அந்த அறையினுள் இருக்கும் காற்றின் அழுத்தத்தை அதிகப் படுத்தும். அந்த அதிகப்படியான அழுத்தம் உருளைகளை அதி வேகத்தில் சுழலச் செய்யும். அப்போது உருளைகளுடன் இணைந்த ஜனனி, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. கடல் அலைகள் பின்வாங்கும்போது கடல் நீரும் கீழிறங்கிவிடும். அப்போது காற்று அந்த அறையினுள் நிறைந்துவிடும். மேற்படி அலைகள் மோதும்போது முதலில் விவரித்த படி மீண்டும் டர்பைன்கள் இயக்கப்படும். இப்படிக் கடல் நீரானது இயந்திரங்களின் பிஸ்டன் போலக் காற்றரைகளுக்குள் செயல்படுகிறது.

கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க ஆற்றல் (Tidal energy)

சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலின் மட்டம் ஏறி இறங்கும். இப்படிக் கடல் மட்டம் உயர்ந்து, எழும்பி, இறங்கும்போது வெளிப்படும் ஆற்றலைத்தான் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க ஆற்றல் என்கிறோம். இந்த ஆற்றலை டைடல் எனர்ஜி (Tidal energy) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

கடற் பரப்பில் இம்பவுண்ட்மெண்ட் (Impoundtment walls) எனப்படும் தடுப்புச் சுவர்கள் உருவாக்கப்படும். உயர் நீர் மட்டம் (High tide) இருக்கும் போது தானாகவே இரு சுவர்களுக்குமிடையே கடல் நீர் நிரம்பி விடும். குறை நீர் மட்டம் (Low tide) இருக்கும்போது இரு சுவர்களுக்கு இடையில் மட்டும் ஒரு நீர் உயரம் (Water column) ஏற்படும். சுவர்களின் வெளிப்புறப் பக்கவாட்டுப் பகுதிகளில் கடல்நீர் மட்டம் வடிந்து விடும். சுவர்களுக்கு இடையில் இருக்கும் இந்த நீர் உயரம் கீழே அதி வேகத்தில் பாய்ச்சப்பட்டு வழக்கம்போல உருளைகளைச் சுழலச் செய்து மின்சாரம் எடுக்கப்படும். இம்முறையில் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்க நீர்நிலைச் சக்தி, இயந்திர ஆற்றலாக (Mechanical energy) ஆக மாற்றம் செய்யப் படுகிறது.

கடல் நீரின் வெப்பம் (Ocean thermal energy)மூலம் மின்சாரம் தயாரித்தல்

கடல் நீர் மட்டங்களில் உள்ள வெப்ப வேறுபாட்டினைப் பயன்படுத்தியும் உருளைகளைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம். கடல் நீரின் மேல் மற்றும் கீழ் வெப்ப நிலை வேறுபாடு 250லிருந்து 300 செல்ஸியஸ் வரை உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் முறை இது. கடல் நீர்ப் பரப்பு சூரியனில் இருந்து வெப்ப சக்தியைப் பெற்றுத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இப்படிப்பட்ட வெப்ப நீர் இருக்கும் பகுதியில், குறைந்த அளவு வெப்பத்திலேயே எளிதில் ஆவியாகக் கூடிய அம்மோனியா போன்ற திரவ வாயுக்கள் ஓர் அழுத்தியின் (பம்ப்) மூலமாகச் செலுத்தப்படும். கடல் நீரின் வெப்பம் திரவ நிலையில் இருக்கும் பொருளைச் சூடாக்கும். அதனால் திரவ நிலையில் இருந்து ஆவி நிலைக்குச் செல்லும் வாயு, அழுத்தம் மிகக் கொண்டதாக மாறும். அந்த ஆவி மிக வேகமாகச் செலுத்தப்பட்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆவி நிலையில் இருக்கும் வாயு குளிர்ந்த நீரால் வெப்பம் தணியும் போது தனது பழைய திரவ நிலைக்கே மாறி ஏற்கனவே விவரித்ததைப் போல மீண்டும் சூடாகி மறுபடியும் டர்பைன்களை இயக்கிக் கொண்டே இருக்கும்.

இன்னொரு முறையில் கடல் நீரே சூடாக்கப் பட்டு, ஆவியாக மாற்றப்பட்டு டர்பைன்களை இயக்கும்.
மேற் சொன்ன தொழில் நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிப்பதுடன் இன்னும் கூடுதலான நுணுக்கம் சேர்த்துக் கடல் நீரிலிருந்து உப்புத் தன்மையை நீக்கிவிட்டுக் குடிநீராக்கும் நிலையங்களும் இருக்கின்றன. இவை கலப்பின நிலையங்கள் (Hybrid Plants) என்று அழைக்கப்படும்.

கடல் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 கடல் ஆற்றல் தீராதது
 நீடித்த நிலைத்த பயன் (Sustainable) அளிப்பது
 அலைகள் நீண்ட தூரம் தங்கள் ஆற்றலை இழக்காமல் ஆற்றல் தாங்கி வருவன
 கடல் ஆற்றல் முற்றிலும் இலவவசமானது.
 கழிவு வெளியேற்றம் இல்லாத செயல்முறை
 எரிபொருள் ஏதும் தேவையில்லை
 செயல்படுத்தவும் பராமரிக்கவும் அதிகச் செலவுகள் இல்லை
 கணிசமான அளவு மின் சக்தி தயாரிக்கலாம்.
 இதனால் வெளிப்படும் ஆற்றல் தூய்மையானது. சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்காதது.
 செயலாற்றத்தின் போது பசுமை இல்ல வாயுக்கள் எதையும் வெளியிடுவதில்லை.
 மரபு சார்ந்த ஆற்றலை அளிப்பனவற்றையே நம்பியிருக்கும் நிலையை மாற்றுகிறது.
 ஒரு முறை மின் உற்பத்திக் கருவிகளையும் செயல்படும் நிலையத்தையும் நிறுவி விட்டால் தொடர் செலவுகள் ஏதும் இல்லை.
 கடல் அலைகளின் போக்கை நாம் தீர்மானிக்க முடியும்.
 ஒரு முறை நிறுவப்பட்ட உற்பத்தி நிலையம் 75 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை செயல்படக் கூடும்.
 புயலின் விளைவாகக் கரையைத் தாக்கும் அலைகளில் இருந்து காக்கிறது.
கடல் ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்
 கடற்கரை இல்லாத பகுதிகளில் பயன்படுத்த இயலாது.
 கடல் வாழிடங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
 கருவிகளில் இருந்து நச்சுப் பொருட்கள் கசிகின்ற வாய்ப்புக்கள் உண்டு.
 கடல் மட்டத்துக்கு மேலும் கீழும் ஒலி மற்றும் ஒளிக் கேடுகள் ஏற்படும்.
 கப்பல் போக்குவரவு மற்றும் படகில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும்.
 அலைகளைத் தேக்கி வைப்பது சேறும் சகதியும் நிரம்பக் காரணமாகும்.
 உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்க வழிமுறைகள் தேவைப்படும்.
 செயலாக்கப் பகுதிகளில் நீரின் தன்மை மாறுபடக் கூடும்.
 கட்டுமான இடத்தில் பறவைகளுக்கு இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும்.
 கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்கள் மிகக் குறைவு
 சில முறைகளில், நாளொன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே உற்பத்தி நடைபெறும்.
 கட்டுமானத்துக்கருகில் மிகப் பெரிய கடற் பரப்பு தேவைப்படும்.
 கட்டுமானப் பொருட்கள் உப்பின் வேதியியற் கிரியையைச் சமாளிக்கக் கூடியவையாக இருந்தாக வேண்டும்.
 கட்டுமானப் பகுதிகளில் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்படும்.
 ஒரு சில இடங்களிலேயே தேவைப்படும் அளவுகளில் உச்ச நீச அலைகள் உள்ளதால் அந்த இடங்களில் மட்டுமே செயல்படுத்த முடியும்.
 மரபு சார்ந்த ஆற்றல் வெளிப்பாட்டுக்கான செலவை விடக் கூடுதல் செலவு பிடிக்கும் செயல் முறை. கட்டுமானச் செலவும் மிக அதிகம்.
 கடலுக்குள்ளேயே கட்டுமானங்கள் இருப்பதால் இன்றியமையாத பராமரிப்புச் சமயங்களில் சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
 கடலின் தரைப் பகுதியில் கட்டுமானங்கள் ஏற்படுத்துவது நுணுக்கமான தொழில்முறையுடன் கூடிய சிக்கலான நடவடிக்கையாகும்.
 தடுப்பணைகள் கட்டப்படுவதால் அலைகளின் உச்ச உயரம் மேலும் அதிகரிக்கலாம்.
 குளிர்ப் பகுதிகளில் நீர் பனிக்கட்டியாதல் போன்றவை நிகழ வாய்ப்புண்டு.
 மின் பயன்பாடு குறைகின்ற போதும் உற்பத்தி ஒரே அளவில்தான் இருக்கும்.
 கடல் வாழ் உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப்படக்கூடும். தடுப்புச் சுவர்கள் கடல்வாழ் உயிரினங்களின் இடப் பெயற்சிக்கு இடைஞ்சல் விளைவிக்கும். மீன்களின் உயிரிழப்பு 15% வரை ஏற்படலாம்.
 நிலவு- பூமி இயக்கச் செயல்பாட்டில் தொடர்ந்து குறுக்கீடு செய்வதால் பூமி சுழலும் வேகம் காலக் கிரமத்தில் குறையவும் வாய்ப்புண்டு எனத் தொலைநோக்கு விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 அலையடிப்பு மூலம் மின் உற்பத்தி செய்யும்போது உற்பத்தியானது அலைகளின் வேகத்தைப் பொருத்து மாறுபடும்.
 மிதக்கும் நிலையங்களுக்குக் கடும் புயல் போன்றவையின் தாக்குதலும் பெரிய அலைகளின் மோதலும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.
 கடற்கரைக்கு அருகாமையில் கடலின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்கள் கடலின் எழில் தோற்றத்தைப் பாதிக்கும்.

பூமி வெப்ப ஆற்றல்

பூமியில் பொதிந்திருக்கும் வெப்பத்தைத்தான் பூமியின் வெப்ப ஆற்றல் என்கிறோம். ஆங்கில வார்த்தையான ‘geothermal’ என்பது geo மற்றும் therme என்னும் இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவானதாகும். geo என்றால் பூமி என்றும் therme என்றால் வெப்பம் என்றும் பொருள். பூமியின் ஆழப் பகுதிகள் 4 பில்லியன் ஆண்டுகளாக அழுத்தப்பட்டதன் விளைவாக இந்த வெப்பம் உற்பத்தியாகி இருக்கிறது. பாறைகளில் இருக்கும் கதிர் வீச்சுள்ள மூலகங்களின் சிதைவுகள் தொடர்ந்து வெப்பத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பூமிக்கடியில் எப்போதும் வெப்பம் உண்டாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் பூமி கொதி நீரையும் நீராவியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அங்கிருக்கும் நீரின் அளவு குறையாமல் பூமிக்குள் ஊடுறுவும் மழைநீர் சமன் செய்து விடுகிறது.
பூமியின் மையத்தில் 60000 செல்ஸியஸ் வெப்பம் இருக்கும். பூமிக்குக் கீழே சில கிலோ மீட்டர்கள் ஆழத்திலேயே 2500 டிகிரி அளவுக்கு வெப்பம் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு 30- 50 மீட்டர் ஆழம் செல்லச் செல்ல 10 செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். இது இடத்துக்கு இடம் மாறுபடலாம்.
இவ்வாற்றலில் 4 வகைகள் உள்ளன.

 சுடுபாறைகள் மேலுள்ள கொதிநீரின் ஆற்றல்
 அழுத்தம் ஏற்றப்பட்ட உப்பு நீரின் ஆற்றல்
 சுடுபாறைகளின் ஆற்றல்
 எரிமலைக் குழம்பு ஆற்றல்

எரிமலை உள்ள பகுதிகளில் பாறைகள் உருகிய நிலையில் இருக்கும். அவை பூமிப் பரப்புக்கு அருகிலேயே இருக்கும். அந்த ஆற்றலையும் பயன்படுத்தலாம். பூமி வெப்ப ஆற்றல் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமையலுக்கும் அறைகளில் வெப்பத்தைக் கூட்டவும் பயன்பட்டிருக்கின்றது. ஃப்ரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டிலேயே இவ்வாற்றல் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் இவ்வாற்றல் மின் உற்பத்தியோடு வீடுகளின் வெப்ப நிலையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. பூமியின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முதல் நிலையம் இத்தாலியில் உள்ள லார்டெரெல்லோ பகுதியில் 4.7.1904ம் தேதி நிறுவப்பட்டது. இயற்கையிலேயே வென்னீர் ஊற்றுக்களும் சூடான காற்றும் வெளிப்படும் பகுதி அது. வெளியாகும் சூடான காற்றின் மூலம் சிறு டர்பைன்களை இயக்கி 5 மின்சார விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டன. அதன் பின்னர் டெவில்’ஸ் வேலி (Devil’s valley) பகுதியில் மின்நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்து நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இவ்வகை ஆற்றல் முக்கியமான ஆதாரம் ஆகும்.

உலக ஆற்றல் குழுமத்தின் (World Energy Council) அறிக்கையின்படி பலவிதமான ஆற்றல்கள் மூலமும் பெறப்படும் சக்தியினை ஒப்பிடும்போது அதில் 1% அளவே புவி வெப்பத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் இவ்வாற்றல் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் அளவு 8000 மெகாவாட்ஆகும்.

பூமியின் ஆழத்தில் கீழே உள்ள பாறைகள் நீரைச் சூடாக்க உதவுகின்றன. சில இடங்களில் பூமியைத் துளையிடும்போது அங்கே சுடு பாறைகளின் மேல் இயற்கையாகவே இருக்கும் நீர் மிக அழுத்தத்துடன் நீராவியாகி வெளிவரும். அதைத் தூய்மைப் படுத்தி டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கலாம். வீடுகளுக்கும் வெப்பம் அளிக்கலாம். நீராவி தூய்மைப் படுத்தப்படவில்லை யென்றால் அதிலுள்ள உப்புக்கள் டர்பைனில் படிந்து காலக் கிரமத்தில் செயலிழக்கச் செய்துவிடும்.

சில இடங்களில் பூமியைத் துளையிட்டு பூமிப் பர்ப்பிலிருந்து நீரைக் கீழே அழுத்தி (பம்ப் செய்து) நீராவியாக அது திரும்ப மேலே வரும்போது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள்.
பாறைகள் எந்த அளவுக்குச் சூடாக இருக்கிறது என்பதும் எந்த அளவுக்கு நீரை நாம் பாறைகள் மீது செலுத்துகிறோம் என்பதும் இவ்வாற்றலை நிர்ணயிக்கும் காரணிகளாகும். இந்தத் துளைகள் முதலில் நீரை உட்செலுத்தும் கிணறுகளாகவும் சுடுபாறைகளின் மேல் பட்டுத் திரும்பவும் நீர் வெளிப்படும் கிணறுகளாகவும் செயல்படுகின்றன. வெளி வரும் நீராவி டர்பைன்களை இயக்கவோ அல்லது குளிர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெப்பம் சேர்க்கவோ பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா உள்பட பல நாடுகள் பூமியின் வெப்பத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் மானியங்களையும் அளிக்க முன்வந்துள்ளன. இந்தியாவைப் பொருத்த வரை இதர மரபு சாரா ஆற்றல்களான காற்றின் ஆற்றல், கடல் ஆற்றல், சூரிய வெப்பம், உயிரியல் வாயு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவைப்போல 5 மடங்கு அதிகம் ஆற்றல் பொதிந்திருப்பினும், பூமியின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஆய்வுகளும் முயற்சிகளும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இன்னும் 192 பில்லியன் டன்கள் நிலக்கரியைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை நிலவுவது, அதிக அளவு நிர்மாணச் செலவுகள் ஏற்படும் என்பது போன்றவை இவ்வாற்றலை முழு வீச்சில் பயன்படுத்தாததற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இவாற்றலைப் பயன்படுத்தும் ஆய்வு முயற்சிகள் இந்தியாவில் 1970ல்மேற்கொள்ளப்பட்டன. இந்தியப் புவியியல் அளவை நிறுவனம் (Geological Survey of India) கிட்டத்தட்ட 350 இடங்கள் தகுதியானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் லடாக் பகுதியில் உள்ள பூகா பள்ளத்தாக்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இந்தியாவில் பின் வரும் 7 ஏழு பகுதிகளில் இவ்வாற்றலைப் பயன்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
 இமயமலைப் பகுதி
 சொஹானா
 மேற்குக் கடற்கரை
 கேம்பே
 ஸான் – நர்மதா- தபதி
 கோதாவரி
 மகாநதி

10,600 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தை இவ்வாற்றல் மூலம் பெறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்சார உற்பத்தி மட்டுமல்லாது புவி வெப்ப ஆற்றல் விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பயிர் வளர்ப்பு, கடல்வாழ் உயிரின வளர்ப்பு, மர அறுவை ஆலைகளில் அறுப்பு செய்யப்பட்ட மரங்களை உலர வைத்தல், காகித ஆலைகளில் உற்பத்தி, கருவிகளில் கிருமி நீக்கம் செய்வது, உணவுப் பொருட்களைப் பதப் படுத்துவது, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைத் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுப்பது போன்றவற்றிலும் பயன்படுகிறது.

பூமி வெப்ப ஆற்றலைப் பயன் படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீராதது
 திரும்பத் திரும்பப் பயன் படுத்தக் கூடியது.
 ஒரு முறை நிர்மாணித்து விட்டால் அதன் பிறகு பராமரிப்புச் செலவுகள் மிகக் குறைவு.
 தூய்மைக் கேட்டை ஏற்படுத்தாது
 அமில மழையை 97% வரை குறைக்க வல்லது
 நிர்மாணம் செய்யப் பெரிய அளவு இடப் பரப்புத் தேவையில்லை.
 எந்த எரிபொருளும் தேவையில்லை
 பசுமை இல்ல விளைவுகள் (Green house effect) இல்லை.
 இயற்கை வென்னீர் ஊற்றுகளில் நீராடி மகிழ்வது சுற்றுலாப் பயணிகளின் வழக்கம். இவ்வூற்று நீருக்கு மருத்துவ குணமிருப்பதாக நம்பப்படுகிறது.
 ஒரு நாளின் 24 மணிநேரமும் உறபத்தி தங்கு தடையின்றி நடைபெறும்.
 நிர்மாணிக்கப்பட்டு விட்டால் பராமரிப்புக்கான ஆற்றலைத் தானே உற்பத்தி செய்து கொள்ளும் இயல்புடையன.

இவ்வாற்றல் மூலம் செயல்படும் உற்பத்தி நிலையங்கள், மரபு சார்ந்த எரிபொருட்களான நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றைப் பயன்படுத்தி மின்சகதி உற்பத்தி செய்யும் நிலையங்களை விடக் கூடுதல் ஆயுள் கொண்டவை. சான்றாக 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட சில நிலையங்கள் 21ம் நூற்றாண்டிலும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன.

 சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தும்போது தேவைப்படும் ஒளிவாங்கிப் பலகைகளோ (solar panels) காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தும்போது தேவைப்படும் காற்றாலைக் கட்டுமானங்கள் போன்றவையோ தேவையில்லை. நேரடியாக வெப்பப் படுத்துவதற்கோ அல்லது மின்சாரம் தயாரிக்கவோ பயன்படுத்தலாம்.
 இப்படிக் கிடைக்கும் வென்னீர், மிகக் குளிரான பனிவிழும் பருவ நிலைகளில் பசுமைக் கூடாரங்களில் (Green houses) வளர்க்கப்படும் விவசாயப் பயிர்களுக்குத் தேவையான வெப்பம் அளிக்கப் பயன்படுத்தலாம். பனி பொழியும் சாலைகளிலும் நடைபாதைகளிலும் வெப்பமூட்டுவதற்கும் பயன்படுத்தலாம்.
 நிர்மாணச் செலவுத் தொகையை 2 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் உறபத்தி மூலம் திரும்பப் பெறலாம்.

பூமி வெப்ப ஆற்றலைப் பயன் படுத்துவதில் உள்ள குறைகள்

 பூமியின் வெப்ப ஆற்றலை வெளிக் கொண்டு வரும் இடங்களுக்கென சில குறிப்பிட்ட பண்புகள் உள்ளன. துளையிடும் இடத்தில் பூமியின் கீழ் சுடு பாறைகள் இருக்க வேண்டும். உள்ளே அழுத்தப்படும் நீரைச் சூடாக்கும் விதத்தில் அவை அமைந்திருக்க வேண்டும். இந்த இயல்புகள் அனைத்துப் பகுதிகளிலும் இருக்காது. சுடு பாறைகள் இருந்தாலும் அவற்றுக்கு மேலே எளிதில் துளையிடக் கூடிய அமைப்புள்ள பாறைகள் இருக்க வேண்டும். இந்த அமைப்பும் எல்லா இடங்களிலும் இருக்காது.

 வெளிவரும் கொதிநீர் மற்றும் நீராவியுடன் ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற தீமை தரும் வாயுக்களும் வெளியாகலாம்.

 போரான், ஆர்சனிக், ஆன்டிமொனி, பாதரசம், அம்மோனியா போன்ற சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் மூலகங்கள், வெளியேறும் நீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எளிதில் அழிக்கவும் முடியாது.

 இவ்வாற்றல் பெரும்பாலும் எரிமலைகளும் நில நடுக்கங்களும் நிரம்பிய பகுதிகளிலேயே அதிகம் பொதிந்திருக்கும். எனவே முதலீட்டாளர்கள் இத்திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். ஸ்விட்சர்லாந்தில் உள்ள பேசல் பகுதியில் பூமிக்கடியில் நீரை அழுத்தம் மூலம் செலுத்த ஆரம்பித்த முதல் ஆறு நாட்களிலேயே 10,000 எண்ணிக்கை அளவுக்கு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் நிலையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

 எதிர்பார்த்த இடத்தில் நீராவி கிடைக்கவில்லை என்றால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.
 சில சமயங்களில் கிணறுகள் ’வற்றிப் போக’ நேரிடலாம். அந்தச் சமயங்களிலும் உற்பத்தி நின்று போய்ப் பொருளாதார இழப்பு ஏற்படலாம்.
 சரியானபடி துளையிடப்படா விட்டால் தூய்மைக் கேடு ஏற்பட வாய்ப்புண்டு.

 ஒரு மெகாவாட் மணி (MW•h) அளவுள்ள மின்சாரம் தயாரிக்கும்போது 122 கிலோ கிராம் எடையுள்ள கார்பன் – டை – ஆக்ஸைடு வாயு வெளியேறுகிறது. (இது ஒரு தீமை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுவாகும். எனினும் மரபு சார்ந்த எரிபொருட்களால் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவுகளுடன் ஒப்பிட்டால் இது மிகக் குறைந்த அளவேயாகும்.)

 துளையிடுவதற்கு அதிகச் செலவு பிடிக்கும். மிக மிக ஆழத்தில் பணிகளை மேற்கொள்ளுவது சிக்கல் நிறைந்த நடைமுறையாகும்.

உயிரியல் வாயு (bio gas)

உயிரியல் வாயு என்பது மாட்டுச் சாணம், காய்கறிகளின் கழிவு, விவசாயக் கழிவு, கரும்புச் சக்கை, மனிதக் கழிவு போன்றவற்றைப் பயன் படுத்தி உற்பத்தி செய்யப்படும் வாயு ஆகும். மீத்தேன் வாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் சேர்ந்த கலவையே உயிரியல் வாயு ஆகும். ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் (anaerobic condition) கார்பன் கூட்டுப் பொருட்கள் சிதைவுறுவதால் உயிரியல் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.

13ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் மூடி வைக்கப்பட்ட சாக்கடைகளில் இருந்து சக்தி உற்பத்தி செய்ததைப் பற்றி மார்க்கோபோலோ என்ற யாத்ரீகர் குறிப்பிட்டுள்ளார். கிராமப் புறங்களுக்கான மிகச் சரியான மரபுசாரா ஆற்றல் தருவது உயிரியல் வாயு ஆகும். சிறு அளவில் உற்பத்தி செய்யப்பட்டால் வீடுகளில் சமையல் மற்றும் விளக்குகளை எரியவைத்தல் ஆகியனவற்றுக்குப் பயன்படும். மின்சார உற்பத்தி கிலோவாட் அளவுகளில் கிடைக்கும். அதிக அளவில் உற்பத்தி செய்து வாகனங்களை இயக்கவும் பயன்படுத்தலாம்.

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்த்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy), உயிரியல் வாயு உற்பத்தி நிலையம் அமைக்க மொத்தச் செலவில் 20% வரை மானியம் அளிக்கிறது. மாநில அரசும் 30% வரை மானியம் அளிக்கிறது.

மாட்டுச் சாணத்தின் மூலம் உயிரியல் வாயு தயாரித்தல்

உயிரியல் வாயு உற்பத்தி நிலையம் செங்கல் மணல் போன்றவை கொண்டு காற்றுப் புகா வண்ணம் அமைக்கப்பட்ட உறுதியான வட்ட வடிவமான கட்டுமானம் ஆகும். இதன் மேற்கூரை ஒரு வளைவான கூண்டு (dome) வடிவில் அமைக்கப் பட்டிருக்கும். பசுஞ் சாணமும் நீரும் 1:1 என்ற விகித்தில் கலந்து உருவாக்கப்பட்ட சாணக் குழம்பை இந்த நிலயத்துக்குள் செலுத்த ஓர் அமைப்பும், பயன் படுத்தப்பட்ட கழிவு வெளியேற்றப்பட இன்னோர் அமைப்பும் திறந்து மூடக் கூடிய வகையில் இருக்கும். மேற்கூரையில் சேரும் வாயுவினைச் சேகரிக்க அங்கும் ஒரு திருகான் (valve) பொருத்திய குழாய் இருக்கும். வெளி வரும் வாயுவினைத் தேவைப்பட்ட இடங்களுக்குக் குழாய் மூலம் கொண்டு செல்லலாம்.
சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும்போது இது கோபார் வாயு (gobar gas) எனப்பட்டது. சுமார் 18,000- ரூபாய் செலவு பிடிக்கும் இந்தக் கட்டுமானங்களுக்கு ”தீனபந்து” என இந்திய அரசு பெயரிட்டு 3, 500- ரூபாய் மானியமும் அளிக்கிறது. பொதுக் கழிவிடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சேரும் மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தியும் உயிரியல் எரிவாயு தயாரிக்கலாம்.

உயிரியல் வாயு பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்

 தீராதது
 வீட்டு உபயோகத்துக்கும் வாகனங்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
 சாணம் போன்ற கழிவுகளே எரிபொருளாக மாற்றப்படுகின்றன. அப்போது வெளிப்படும் துணைப் பொருட்கள் எருவாகப் பயன்படுகின்றன.
 மீத்தேன் வாயு, காற்று மண்டலத்தில் கலந்து விடாமல் தடுக்கப்பட்டுப் பயனுள்ள எரிபொருளாக மாற்றப் படுகிறது. பசுமை இல்ல வாயுவான மீத்தேன் காற்றில் கலந்தால் புவி வெப்பம் ஏற்படும்
 இவ்வாற்றல் பயன்படுத்தப் படும்போது நைட்ரஜன் நிலை நிறுத்தப்படுகிறது. அதாவது நைட்ரஸ் ஆக்ஸைடு உருவாகாமல் தடுக்கப்படுகிறது. நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவும் புவி வெம்மைக்குக் காரணமானது ஆகும்.
 உயிரியல் வாயுவை, உயிரியல் மீத்தேன் வாயுவாக மேம்படுத்தித் தேவையான பகுதிகளுக்கும் சிறந்த எரிபொருளாக அனுப்பலாம்.
 மரபு சார்ந்த எரிபொருட்களை விட விரைவில் உற்பத்தி செய்யலாம். அவற்றை விடக் குறைவாகவே கார்பன் வெளியேற்றம் கொண்டது.
 உயிரியல் வாயு உற்பத்திக் கலன்கள் தயாரிப்பதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
 விவசாய மேம்பாடும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
பாசிகளைக் (Algae) கொண்டு ஆக்ஸிஜன் அற்ற சூழலில் நொதித்தல் (fermentation) மூலம் ஹைட்ரஜன் வாயுவை நீரில் இருந்து பிரித்தெடுத்து உயிரியல் ஹைட்ரஜன் வாயு தயாரிக்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப் படுவதும் உண்டு.

உயிரியல் வாயு பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 இவ்வாற்றலுக்காகப் பயன்படுத்தப் பட்டுவிடுவதால், எருவாகப் பயன்படும் திடப் பொருட்களின் கொள்ளவு (volume) குறைகிறது.
 ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத் தன்மை கொண்ட வாயுக்களும் உற்பத்தியாகும்.உயிரியல் வாயுவுடன் வெளியாகும் வேறு சில வாயுக்கள் உற்பத்திக் கொள்கலன்களை அரிக்கும் தன்மை உடையவை.
 உயிரியல் வாயு தயாரிப்பின்போது கிடைக்கும் துணைப் பொருளான உரங்கள் தரமற்றவையாக இருந்தால் அவை இடப்படும் பயிர்கள் மூலம் தீமை தரும் விளைவுகள் ஏற்படும்.
 உற்பத்தியாகும் உயிரியல் வாயு, உற்பத்தி நிலையப் பயன்பாட்டுக்கே சிறிதளவு எடுத்துக் கொள்ளப்படும்.
 இடு பொருள் அளவையும், உயிரியல் வாயு பயன்பாட்டையும் பொறுத்துக் குறைந்த அளவு எரிசக்தியே கிடைக்கும்.
 உயிரியல் வாயு உற்பத்தி வீதத்தைக் குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ இயலாது.
 வாகன எரிபொருளாகப் பயன் படுத்த வேண்டுமென்றால் உயிரியல் வாயுவில் உள்ள நீராவி, கார்பன்டை-ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகியவை நீக்கப்பட வேண்டும். இதற்கு மிக அதிகமாகச் செலவு ஆகும்.
 எல்லா இடங்களிலும் மூலப் பொருட்கள் கிடைக்காது.
 மனிதக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும்போது அதைச் சமையலுக்குப் பயன்படுத்தச் சிலரிடம் தயக்கம் நிலவுகிறது

உயிரியற் பொருண்மை (Biomass) ஆற்றல்

உயிரியற் பொருண்மை என்பது சூரிய ஒளி, நீர், கார்பன்–டை-ஆக்ஸைடு மற்றும் சூரிய ஒளி கொண்டு பசுந் தாவரங்களால் தயாரிக்கப்படும் ஸ்டார்ச் நிரம்பிய இலை, தழை போன்ற பகுதிகள் அனைத்தையும் குறிப்பிடுவதாகும். இவைகளுடன் நெல்லின் உமி, தேங்காய் ஓடுகள், அறுவடைக்குப் பின்னர் கிடைக்கும் விவசாயப் பயிர்களின் கழிவுகள், சோளப் பயிரின் தண்டுகள், மரக் கிளைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்த்தி அமைச்சகத்தின் நிதியுதவியோடு அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமாக இருக்கும் உயிரியல் பொருண்மை மூலம் 487 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம் எனவும் சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 450 மெகாவாட் அளவுக்குத் தயாரிக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரியற் பொருண்மையிலிருந்து எரித்தல் மற்றும் வாயு உற்பத்தி ஆகிய இரு முறைகளில் சக்தியினைப் பெறலாம்.

எரித்தல் : முதலில் உயிரியற் பொருண்மையுடையவை முழுமையாக எரிக்கப்பட்டு நீரைச் சூடாக்கி வழக்கமான முறையில் டர்பைன்களைச் சுழல வைத்து ஜனனி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாகும். உள்ளாட்சி அமைப்புக்களில் இருந்து பெறப்படும் திடக் கழிவுகளில் கார்பன் கூட்டுப் பொருட்களை எரிப்பதன் மூலமும் கிடைக்கும் வெப்பம், நீரைச் சூடாக்கப் பயன் படுத்தப் பட்டு, நிராவி மூலம் வழக்கம் போல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாயு உற்பத்தி (Gasification) இம்முறையில் உயிரியல் பொருண்மையில் ஒரு பகுதி மட்டும் எரிக்கப்பட்டு கார்பன் மோனாக்ஸைடாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றப்பட்டுக் கருவிகளில் எரிபொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.

உயிரியல் பொருண்மை (Bio mass) ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்
 தீராதது
 திரும்பக் கிடைக்கக் கூடியது
 நேரடியாக எரிக்கப்படாமல் நொதித்தல் போன்ற முறைகள் கையாளப்படும்போது சுற்றுச் சூழல் தூய்மைக் கேடு மிகக் குறைந்த அளவிலேயே எற்படுகிறது.
 உயிரியல் பொருண்மை ஆற்றல் மூலம் கிடைக்கப் பெறும் எரி சாராயம் மற்றும் இதர எரிசக்தி தரும் பொருட்கள் ஆற்றல் வாய்ந்தவையாக இருப்பதோடு சீராக எரியும் தன்மையும் கொண்டவை.
 உலகெங்கிலும் கிடைக்கக் கூடியவை
 விவசாயத்தின் துணைப் பொருளாக உயிரியல் பொருண்மை உள்ளதால் விவசாயத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
 உயிரியல் பொருண்மைக்காகப் பயிர்கள் வளர்க்கப் படுவதால் அவற்றால் கார்பன்-டை-ஆக்ஸைடு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது.
 கழிவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு விடுவதால் அவை ஆக்கிரமித்திருந்த இடங்கள் வேறு வழிகளில் பயனாகும்.
 உயிரியல் பொருண்மை எரிக்கப்படும்போது வெளியாகும் கார்பன்-டை-அக்ஸைடு தாவரங்களால் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
 திடக் கழிவு மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கிறது.

உயிரியல் பொருண்மை ஆற்றலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 நேரடியாக எரிக்கும்போது சுற்றுச் சூழல் மாசடைகிறது. புவி வெப்பம் அதிகரிக்கிறது.
 உயிரியல் பொருண்மை மூலம் எரிபொருட்களை உற்பத்தி செய்யும்போதும், பயன்படுத்தும்போதும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற கார்பன் கூட்டுப் பொருட்களின் வாயு மண்டலத்தில் கலக்கின்றன. இவையும் புவி வெப்பமாவதற்குக் காரணங்களாகின்றன.
 உயிரியல் பொருண்மை உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் எரிபொருட்கள் தயாரிப்பதற்கும் அதிகச் செலவாகும்.
 சிறு அளவில் உற்பத்தி செய்யும்போது நிகர சக்தி இழக்கப்படும்.
 உயிரியல் பொருண்மைகளை உற்பத்தி செய்வதற்குச் சக்தி தேவைப் படும்.
 உயிரியல் பொருண்மை உற்பத்தியாகும் நிலங்கள் வீடுகட்டுதல், பண்ணைகள் அமைத்தல் போன்ற பல நோக்கங்களுக்கும் தேவைப்படும்.
 இவ்வாற்றல் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்ய அதிகச் செலவாகும்.
 உயிரியல் பொருண்மைப் பயிர்கள் பயிரிட்டு வளர்க்கவும், எரிபொருள் தயாரிக்கவும் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.
 உயிரியல் பொருண்மை எல்லா இடங்களிலும் தேவையான் அளவில் கிடைப்பதில்லை.
 உயிரியல் பொருண்மை பயன்படுத்த வாகனங்களின் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
 உயிரியல் பொருண்மை மூலம் எரிபொருட்கள் உற்பத்தி செய்யும்போது கிளம்பும் துர்மணம் நகரங்களுக்கு அருகில் இந்நிலையங்களை ஏறபடுத்தத் தடையாகத் உள்ளது. தொலைவில் உற்பத்தி செய்யப்பட்டால், தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை தூய்மைக் கேட்டை உருவாக்குகிறது.
 உயிரியல் பொருண்மை மூலம் உயிரியல் எரிபொருள் சுத்திகரிப்புக்கு அதிகச் செலவாகும்.
 உயிரியல் பொருண்மை மூலம் உயிரியல் எரிபொருள் தயாரிப்புக்காக, அதற்குத் தேவையான பயிர்களை விளைவிப்பதால் உணவுப் பொருட்களின் விளைச்சல் குறையும். விலைவாசி உயரும்.

உயிரியல் எரிபொருள் (Bio fuel)

உயிரியல் பொருண்மை ஆற்றலில் இருந்து கிடைக்கப் பெறும் எரி சக்தி உயிரியல் எரிபொருள் எனப்படுகிறது. ஆல்கஹால், எஸ்டர்கள், ஈதர்கள் போன்ற வேதியல் வடிவங்களில் உயிரியல் எரிபொருட்கள் இருக்கும். உயிரியல் எரிபொருட்களில் உயிரியல் டீசல் மற்றும் உயிரியல் எத்தனால் ஆகியன முக்கியமானவையாகும்.

உயிரியல் டீசல்

உயிரியல் டீசல் என்பது தாவர எண்ணெய், மிருகங்களின் கொழுப்பு போன்றவற்றை எரிசாராயத்துடன் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தித் தயாரிக்கப் படுவதாகும். பாசிகள், பூஞ்சக் காளான்கள், சோயா பீன்ஸ், காட்டாமணக்கு விதைகள், கடுகு எண்ணெய், பனை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்ற பல மூலப் பொருட்களில் இருந்து உயிரியல் டீசல் உற்பத்தி செயப்படுகிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 3,00,000 லிட்டர் உயிரியல் டீசல் தயாரிக்கும் திறன் கொண்ட 5 பெரிய நிலையங்களும், 30,000 லிட்டர் திறன் கொண்ட 4 நடுத்தர நிலையங்களும், 1000 முதல் 3000 லிட்டர் திறன் கொண்ட வகையில் பல சிறு நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இலகு ரக வாகனங்கள், கன ரக வாகனங்கள், தொடர் வண்டி போன்றவற்றில் உயிரியல் டீசல் எரிபொருளாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. விமானங்களில் பயன்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உயிரியல் டீசலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்

 சாதாரண டீசலைப் போலவே செயல்படும்.
 சாதாரண டீசலை விடக் குறைவாகவே சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு நிகழும்.
 சாதாரண டீசலை விடக் குறைவாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.
 சாதாரண டீசலுடனும் கலந்து உபயோகிக்கலாம்..
 சாதாரண டீசலை விட 78% குறைவாகவே கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவை வெளிவிடுகின்றன.
 சாதாரண டீசலை விட அதிக அளவில் எரி திறனும் மசகுத் தன்மையும் (lubrication) இருப்பதால் எஞ்சினின் செயல் திறன் அதிகமாகும்.
 மக்கிப் போகும் ஆற்றல் வாய்ந்தது. எனவே வெளியில் சிந்தும்போது நிலத்தையோ நிலத்தடி நீரையோ பாழாக்காது.
 அமில மழைக்குக் காரணமான கந்தகம் இதில் இல்லை.
 வாகனங்களின் எஞ்சினில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.
 நச்சுப்புகை வெளியேறாமல் தடுக்கும் கிரியாவூக்கி மாற்றிகளை (catalytic converter) பொருத்த இயலும்.
 எஞ்சின் நீண்ட காலம் செயல்படும்..
 பெட்ரோலிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களை விட எளிமையான அமைப்புக் கொண்டவை.

உயிரியல் டீசலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 சதாரண டீசலை விட விலை அதிகமானது.
 வெப்ப நிலை குறைவான பகுதிகளுக்கு ஏற்றதல்ல.
 குழாய்கள் மூலம் கொண்டு செல்ல இயலாது.
 நைட்ரஸ் ஆக்ஸைடு வெளிப்பாடு அதிகம்.
 ஒரு சில இடங்களில்மட்டுமே கிடைக்கிறது.
 டீசல் எஞ்சின்களில் மட்டுமே பயனாகும்.
 நீண்ட நாள் பயன்படுத்தினால் எரிபொருட் குழாய்களைப் பாதிக்கும்.
 ஈரப் பதத்தை ஈர்க்கும் தன்மையுடையது. அதனால் உறைந்து போதல், அரித்தல், குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துதல், நீர்த்துப் போதல் போன்றவை ஏற்படும்.
 நுண்ணுயிரிகள் வளர வாய்ப்புண்டு. இவையும் குழாய்களை அடைக்கச் செய்யும்.

உயிரியல் எத்தனால்

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த மக்காச் சோளம், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப் படுவது எத்தனால் ஆகும். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலமாகவும் எத்தனால் தயாரிக்கலாம். 1917ல் அலக்ஸாண்டர் கிரகாம் பெல், நிலக்கரிக்கும் பெட்ரோலியப் பொருட்களுக்கும் மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்தலாம் எனக் கண்டறிந்தார்.

உயிரியல் எத்தனாலைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள்

 மரபு சார்ந்த எரிபொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டளவைக் குறைக்கும்.
 திரும்பக் கிடைக்கக் கூடியது.
 முழுவதுமாக எரியக் கூடியது.
 கீழே சிந்தினால் எளிதில் மக்கி விடும். எளிதில் நீர்த்துப் போகும்.

உயிரியல் எத்தனாலைப் பயன்படுத்துவதில் உள்ள குறைகள்

 உயிரியல் எத்தனாலை உற்பத்தி செய்யக் கணிசமான சக்தி தேவைப்படும்.
 பெரிய அளவில் நிலப் பரப்புத் தேவைப்படும்.
 உயிரியல் எதனாலின் அளவு அதிகமாக உள்ள எரிபொருட்களைச் சாதாரண எரிபொருள் எஞ்சின்களில் பயன்படுத்தினால் துருப் பிடிக்க வாய்ப்புண்டு.
 எரிபொருட் பம்புகள் விரைவில் பழுதடையும்.
 எரிபொருள் இருப்பு மானிகள் (fuel quantity meters) தவறுதலான இருப்பைக் காட்டும் வாய்ப்புண்டு.

உலக அளவில், 1980ல் இருந்ததை விடத் தற்போது 45% ஆற்றல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2030 வாக்கில் இது 70% ஆக அதிகரிக்கக் கூடும்.

31.8.2010 நிலவரப்படி இந்தியாவில் 89,808 கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. இது மக்கள் தொகையில் 15.1 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.

தேவை ஏற்படும்போது மாற்று வழிக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். 19ம் நூற்றாண்டில உராய்வைத் தடுக்கும் எண்ணெயாகவும் விளக்குகளை எரிப்பதற்கான எண்ணெயாகவும் பயன்பட்டது திமிங்கல எண்ணெய். (Whale oil) காலக் கிரமத்தில் திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்து போய், அந்த எண்ணெய்க்கான பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் தாறுமாறாக உயர்ந்ததனால் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன் விளைவாக முதன் முதலில் வணிக ரீதியாகப் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு 1859ல் பென்சில்வேனியாவில் துவங்கியது.

மேற்படி நிகழ்வைப் போலவே, குறைந்து கொண்டே வரும் கையிருப்பு மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது போன்ற காரணிகள் மரபு சார்ந்த ஆற்றல்களுக்குப் பதில் மரபு சாரா ஆற்றல் வளங்களை நாம் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டிலிருந்தே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்களை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற இந்தியாவுக்கு மரபுசாரா ஆற்றல் வளங்கள் அருங் கொடையாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆற்றல்களைப் பெறுவதில் தன்னிறைவு அடைவதும் இந்தியா ஒரு வல்லரசாக மாறுவதற்கான அடிப்படைத் தேவையாகும்.

Posted in 2010, அறிவியல், மரபு சாரா ஆற்றல் வளம் | 1 பின்னூட்டம்

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – அனிதா மோகன்

இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்

“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.

வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.

இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அதில் பண்பட்ட மக்கள் மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.

இயற்கை பற்றாளர்

இயற்கை வேளாண்மை பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களை பற்றியும், அவர்களின் கருத்துகளைப் பற்றியும் இங்கு கட்டாயம் நினைவு கூற வேண்டும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் .இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பினார்.

அவர் தன் நூலில் இயற்கை வேளாண்மைக்கு என சில கொள்கைகளை கூறுகின்றார். அவை 
௧. எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
௨. பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
௩. அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
௪. அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
௫. இயந்திரங்களும் தேவை இல்லை

இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும், மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது .

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது,இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.

இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.

இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.

பறவைகளைப் பார்த்து பறக்க கற்றுக்கொண்டோம்
மீன்களைப் பார்த்து நீந்த கற்றுக்கொண்டோம்
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை கற்றுக்கொள்வோம்

இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களைஎடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும், மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.

நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.

பாரம்பரிய வேளாண்மை

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்னும் பழமொழிக்கேற்ப உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி ஆராய இங்கு முடியாததால் நம் தாய் திருநாடான இந்தியாவில் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் இக்கட்டுரையில் எடுத்தியம்பியிருக்கிறேன்.

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன் தங்கப்புதல்வர்கள், தவப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.

அதனால் தான் நமது முன்னால் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” எனப்புகழ்கின்றார். இந்திய மக்கள் தொகையில் 64சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.

“இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு”

– என்று முண்டாசு கவிஞன் பாரதியால் புகழப்பட்ட நம் நாட்டில் இயற்கை வேளாண்மை என்பது நாம் மூதாதையர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. நம் சங்க இலக்கிய நூல்கலான புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் கூட இயற்கை வேளாண்மை பற்றி பல குறிப்புகள் உள்ளன.
நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர், அதிகளவு மகசூல் பெற்றனர்.

தமிழ் மறையாம் திருக்குறளிலும் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”

-உழவன், ஒரு பலம் புழுதி கால்பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.

இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம்.

திருவள்ளுவர் உழவு எனும் அதிகாரத்திலேயே விவசாயம் பற்றிய பல விசயங்களை புரிய வைக்கின்றார்.

“ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”

– ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது” – எனும் குறலின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறிகிறோம், மேலும் வேளாண்மைக்கு எது சிறந்ததென ஒரு குறலின் மூலமே அறிகிறோம்.

ரிக் வேத காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயிர்களுக்கு வளம் ஊட்ட பசு மாட்டின் பால்,நெய்,தயிர்,கோமியம் மற்றும் வெண்ணை போன்றவற்றின் கலவையான பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் விதைகளை விதைக்க மூங்கில் விதைப்பான் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.


தேவை ஒரு மாற்றம்

“யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்களே அது போல விவசாயத்திலும் அதிக வளர்ச்சிகளை கொண்டிருந்த நம் நாட்டிலும் 1960-65 ஆம் ஆண்டுகளில் கடும் பட்டினி,பஞ்சம் ஏற்பட்டது.
மக்களின் பஞ்சத்தை போக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன, அதன் மூலம் நாம் பயிர் விளைச்சலில் தன்னிறைவு அடைந்தோம். ஆனால் நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.இதன் விளைவாக நாம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது.

பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.

இன்று விவசாயம் என்னும் பெயரில் பயிர்களுக்கு விஷச்சாயம் பூசும் பணி நடக்கின்றது. “சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு நம் மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.” வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.
“சென்றதினி மீளாது மூடரே” எனும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப கடந்தததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம். நம் வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டுமென்றால், வளம் குன்றிய மண்ணை அவர்கள் வசமாக்காமாலிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு, நிரந்தரதீர்வு நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிப்பதாகும்.
தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.

“தேசிய குற்ற ஆவண அமைப்பின் கணக்கெடுப்பின் படி 1997 லிருந்து 2007ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 1லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆகும்.

“பலகுடை நீழலும்தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்”

– அரசாளும் மன்னர்களே ஆனாலும் உலகுக்கு உணவு படைக்கும் விவசாயியின் குடையின் கீழ்தான் இருப்பர் என்றார் வள்ளுவர்.

அப்படி உயர்வாக புகழபெற்ற உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம் விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், ரசாயனங்களை நம்பியதாலும் தான். ஆனால் இயற்கை விவசாயத்தில் ரசாயனம் என்ற பேச்சிற்கே இடமில்லை.

செடி வளர்வதற்கு தேவையான தழைச்சத்து (நைட்ரஜன்) கிடைப்பதற்கு நாம் நவீன ரசாயானத்தை மையமாகக்கொண்ட விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை போடுகின்றோம். ரசாயன உரங்களில் உள்ள நைட்ரேட் மழைபெய்யும் காலங்களில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு நிலத்தடி நீரை அசுத்தப்படுத்துகிறது. இப்படி சுற்றுசூழலை மாசடைய செய்யும் வேலை இயற்கை வேளாண்மையில் இல்லவே இல்லை.

இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை. ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.

பயிர் சுழற்சிமுறை

நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து , அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.

இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.

பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தொமென்றால் , களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.

கலப்பு பயிர்களின் நன்மை

பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர்.இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலப்பு பயிராக பருத்தியை சாகுபடி செய்கின்றனர். பாசிப்பயறு, துவரை, மொச்சை, கேழ்விரகு, சோளம் , உளுந்து என பல பயிர்களுடன் கலந்து பருத்தியை விதைத்திருக்கின்றனர். இதன் மூலமாக பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் கட்டுப்படுத்தபட்டிருகின்றன, முற்றிலும் அழிக்கப்படுகின்றன. </p.

பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவயை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.

இயற்கை பூச்சிவிரட்டி

ஜெர்மனியை சேர்ந்த பால் முல்லர் என்பவர் 1942ம் வருடம் பூச்சிகளைக் கொள்வதற்காக டீடீபி பூச்சிக்கொல்லியை கண்டு பிடித்தார். பூச்சிகளில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன, சிலந்தி, ஊசித்தட்டான், மண்புழு, நண்டு, நத்தை ஆகியவை நன்மை செயும் பூச்சிகள் ஆகும். பச்சைக்காய் புழுக்கள், தரை வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், அசுவினி, வெள்ளை ஈ, கத்தாழை பூச்சி, குருத்துப்புழு, இடைக்கணு புழு ஆகியவை தீமை செய்யும் பூச்சிகள் ஆகும்.

நம் முன்னோர்கள் பூச்சிகளில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளைப்பற்றி அறிந்து இருந்தனர் ., ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது பூச்சிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எனவேஇயற்கை மூலிகைகளை வைத்தே பூச்சிகளை விரட்டினார்கள். அவர்கள் பயறுகளில் உள்ள பூச்சிகளைய் நீக்க மிளகாய்வற்றல், மிளகு, காய்ந்த வேப்பிலை போன்ற பொருட்களை உபயோகப்படுத்தினர்.

இன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் இப்பூச்சிகளின் தன்மையை அறிந்திருக்கின்றனர். அதனால் சில மகளிர் குழுக்கள் கூட தங்கள் குழுக்களுக்கு சிலந்தி, ஊசித்தட்டான் என நன்மை செயும் பூச்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இன்ரைய விவசாயிகள் மூலிகை பூச்சிவீரட்டியை பயன்படுத்திகின்றனர்.

மூலிகை பூச்சிவிரட்டி என்பது எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன் ,முருங்கை, ஆடதொடை ஆகியவற்றின் இலைகளை கைப்பிடி அளவு இடித்து 10லிட்டர் மாடு கோமியம் கலந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு ஊறவைத்து தயாரிப்பதாகும். மேலும் கத்திரிச்செடிகளுக்கு வேப்பங்கோட்டை கசாயம், பூண்டு கசாயம், வசம்பு கசாயம் போன்றவற்றை பூச்சிவீரட்டியாக பயன்படுத்துகின்றனர்.

கத்திரி விளைச்சலுக்கு காய்ப்புழு, அசூவினி, இழை சுருட்டு புழு போன்ற பிரச்சனைகள் வரும், இவற்றையெல்லாம் நீக்க வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு கரைசால் ஆகியவற்றால் தயாரான “பொன்னீம்” என்ற பூச்சிவீரட்டியை பயன்படுத்துகின்றனர். இந்த பொன்னீம் லயொலா கல்லூரியின் தயாரிப்பாகும்.

மூடாக்கு போடுதல்

இயற்கை விவசாயத்தின் முக்கியமான ஒன்று மூடாக்கு போடுதல். வைக்கோலை நெல் போன்ற பயிர்களின் மீது மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் பெருகுகின்றன, மண் அரிப்பு மற்றும் நீர் ஆவியாவததை தடுக்கின்றது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது.

பயிருக்கு தேவையான சதுக்களை அதிக மடங்கு கிடைக்க செய்கின்றது, மூடாக்கி போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தென்னந்தோப்பில் விழும் மட்டைகள், ஓழைகள் போன்றவற்றை எரிக்காமல் அவற்றை மரத்தை சுற்றி மூடாக்கி போட்டால் களைகள் கட்டுப்படும்.

நவீன விவசாய முறையை பின்பற்றும் விவசாயிகள் கரும்பு வெட்டும் பொழுது சோகைகளை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அந்த சோகைகளை முடக்கு போட்டு தண்ணீர் பாய்ச்சிடுவார்கள், இதனால் மொத்த சோகைகளும் மட்கி நல்லதோர் உரமாகும். மூடாக்கி போடுவதால் மகசூல் கூடுகிறது, தண்ணீர் செலவு குறைகிறது.

ஜீவாமிர்தம்

இயற்கை வேளாண்மையில் நம் விவசாயிகள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர்.
ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது.

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்த்ததின் நல்ல பயன்களை பற்றி விவசாயிகலுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.

“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்தத்தின் நற்பயன்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.

மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது.”1962ம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”.

மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன
ஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.

இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது.வயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு ஓட்டம் நல்லதொரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.
ஆட்டு ஓட்டம் என்பது வெள்ளாடு கோமியம், வெள்ளாடு எரு,பால், தயிர்,பசு நெய், இளநீர் ஆகியவற்றின் கலவையால் செய்யும் இயற்கை பொருளாகும்.

பாரம்பரிய விதைகள்

பாரம்பரிய விதைகள் உணவுக்காக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்பட்டது.பாரம்பரிய விதைகளை
பயன்படுத்துவதால் இரசாயன உரம் போடத்தேவை இல்லை. பூச்சிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா,மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.

நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாண்டனர்.தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு விதைகளை காய வைத்தனர் இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி அதன் மூலம் கால நிலைகளை அறிந்து இயற்கைக்கு ஏதுவாக விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர் .இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் தான்.நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்து கொண்டிருக்கிறோம்.

கண் இருந்தும் குருடராய் அயலான் காட்டிய தவறான வழியில் சென்று தரமற்ற விதைகளை நட்டதால் நாம் நம் நிலத்தை மாசு படுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து அதனை சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும் பாரம்பரிய விதைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர்.இவையெல்லாம் நன்மைக்கான மாற்றங்கள் ஆகும்.

தொழில்நுட்ப கருவிகள்

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.

கரும்புதோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட் . இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.

செடியில் இருந்து கடலையை பிரிதெடுக்கம் கருவியை புதுச்சேரியை சேர்ந்த H.M.அந்தோணி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.

மதுரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் கரும்புகளை வெட்ட கரும்பு வெட்டும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.

செல்போன் மூலம் பம்பு செட்டை இயக்கும் மென்பொருளை கோயம்புத்தூரைய் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் கண்டுபிடித்திருக்கிறார்.

இதனால் விவசாயிகள் மிகவும் பயன்பெறுகின்றனர்.

இப்படி புதுப்புது தொழில்நுட்ப கருவிகளை இயற்கை விவசாயத்தில் உபயோகப்படுத்தி பயன் பெறுவோம்.

முடிவுரை
“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்ககவோர் வழியில்லையே”

என்று வேதனையுற்றான் பாரதி. மக்களின் வேதனையை, அவர்களுக்கு வந்த சோதனையை நீக்க ஒரே வழி செலவு குறைந்த, வரவு நிறைந்த இயற்கை விவசாயத்தொழில்நுட்பமேயாகும்.

பசுமை புரட்சியின் தந்தை டாக்‌டர் எம்.எஸ் சுவாமிநாதன் கூட ‘நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம் தான் இனி சரிப்பட்டு வரும்’ என்று வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பசுமை விகடன் இதழ் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.

அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக இன்று நாம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர்.சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாக்கி விடும். இயற்கை வேளாண்மை வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு விடையாக “world watch Institute” 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுகளே ஆதாரமாகும். அதில் உலக உழவர்கள் அனைவரும் இன்றே இயற்கை விவசாயத்திற்கு மாறினால் வளர்ந்த நாடுகளில் விளைச்சல் இப்போது இருப்பதை காட்டிலும் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2 முதல் 4 மடங்கும் இருக்கும்” என்று கூறுகிறது. உலகில் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் , எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.

இயற்கை விவசாயம் பண்ணுவோம் – இன்று
இன்னல்களால் இம்சைபடும் நாம் – இனிமேல்
இன்பத்தை மட்டுமே அனுபவிப்போம்
இயற்கையின் போக்கில் செல்வோம்
இனிதே வாழ்வோம் !

Posted in 2010, அறிவியல், தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை | 1 பின்னூட்டம்

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை – டி வி இராதாகிருஷ்ணன்

எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.

ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.

ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.

ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)

(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)

இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.

இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)

இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.

அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.

இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.

இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.

ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.

நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.

வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)

இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.

ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.

இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

இன்று..

நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.

இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.

65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.

மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.

மரபணு மாற்று..

உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.

சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?

முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.

விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.

இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.

மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.

இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.

விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.

இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..

கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

Posted in 2010, அறிவியல், தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை | 1 பின்னூட்டம்

ஆப்பரேஷன் இந்தியா 2000 – சித்தூர் எஸ் முருகேசன்

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஏழ்மை -ஏழ்மைக்கு காரணம் தேசீய உற்பத்தியில் பெருவாரியான மக்களுக்கு பங்கு இல்லாமை, மற்றும் தேசீய வருமானத்தில் உண்மையான பங்கு இல்லாமைதாங்கறது என் முடிவு. அதுக்கு அதிரடி தீர்வுதான் தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை . இதற்கான என் அதிரடி திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மைங்கற தலைப்புல இங்கே தரேன்.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

என் திட்டத்தின் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000னு சொன்னேன்.. அதாவது 1986 ல் இந்த திட்டத்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு வந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. அதனால் தான் இதில் 2000ங்கற பேரை வச்சேன்.

இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:

ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.

முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன? ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய்.தனிமனித வருவாய் என்றால் என்ன?தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.

(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில். அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.

உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :

உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உயர்ந்து வரும் தேசீய வருமானத்தில் உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.

உற்பத்தி காரணிகள்:

உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,கூலி,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும். நாட்டில் ஆதிகாலம் முதல் நிலவிய சாதி அமைப்பினால் சமூகத்தின் மெஜாரிட்டி மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வி கிடைக்காது கூலிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் நிலமோ.முதலீடோ,நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வாய்ப்போ தகுதியோ இல்லை.

நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.வெறும் உடலுழைப்பை முதல் வைத்தவனுக்கு என்ன கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால பாதுகாப்போ,ஸ்கில்லோ,கல்வியோ இல்லாத வனுக்கு என்னத்தை..கூலி கிடைக்கும்? தேசீயவருமானத்தில் எந்த அளவுக்கு பங்கு கிடைக்கும்?

இரு வர்கங்கள் /உற்பத்தி காரணிகள் :

நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப்பட்டாளமாக நலிந்து வருகிறது.

நிலப்பங்கீடு:

உற்பத்திக் காரணிகளில் முக்கியமானதான நிலம் ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் பட வேண்டும். இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள்
மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் “தம்” “தில்” “அதிகாரம்” இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.

நேரிடை ஜனநாயகம்:

தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் “தம்” “தில்” “அதிகாரம்” உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்
பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.

கங்கை காவேரி இணைப்பு:

இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.

நிலங்கள் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு குத்தகைக்கு தரப்பட்டாலும் நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.

நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:

நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.

முயற்சிகள்:

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை.

அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல. (பாவம் மகராஜன் சமீபத்துல போய் சேர்ந்துட்டாரு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக)

சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது.”நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை”-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன்.

மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.

மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக்கொண்டேதானிருக்கிறேன்.

ஆந்திர முதல்வர் அலுவலகம்:(1997 முதல் 2004 அக்டோபர் வரை)
அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. தெ.தேசம் கட்சியின் தலைவரும் அவரே. அதே கட்சியை சேர்ந்த பாலயோகிதான் லோக்சபா சபாநாயகராக இருந்தார். மேலும் சந்திர பாபு மத்திய அரசில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த காலம் அது.

எனவே நான் இந்த திட்டம் குறித்த விவரங்களை தொடர்ந்து முதல்வர் அலுவலகத்துக்கு கூரியர்,பதிவு தபால் தந்தி,இ மெயில் இத்யாதி மூலம் அனுப்பி வந்தேன்.(இவற்றிற்கான ஆதாரங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன)

ஆனால் எனது தொடர்ந்த தபால்களுக்கு 2002 வரை முதல்வர் அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் இல்லை. அதாவது ஐந்து வருடங்கள் ஒன் வே ட்ராஃபிக். இந்த அழகுல சந்திரபாபு போஸ்ட் கார்ட் போடுங்க கிழிச்சுர்ரன்னு வசனம் வேற விட்டுக்கிட்டு இருந்தாரு. தூர்தர்ஷன்ல ப்ரஜலதோ முக்யமந்த்ரினு ஒரு ப்ரோக்ராம் வேற. எங்கே எரிஞ்சிருக்கும் பாருங்க.

மீடியா:

இது இப்படியெல்லாம் வேலைக்காகாதுன்னு லெட்டர் டு எடிட்டர் , அறிக்கைகள்னு ஆளுங்கட்சியை நல்லாவே கிழிக்க ஆரம்பிச்சேன். இதனோட உச்ச கட்டமா வார்த்தா – தெலுங்கு நாளிதழ் அரைப்பக்க அளவுக்கு என்னைபத்தி ஒரு ஸ்டோரியே பப்ளிஷ் பண்ணாய்ங்கன்னா பார்த்துக்கங்க. ஆனால் நம்ம தமிழ் மீடியா மட்டும் கண்டுக்கிடவே இல்லை.( மறுமலர்ச்சிங்கற முஸ்லீம் பத்திரிக்கையும்,ஜன சக்திங்கற கம்யூனிஸ்ட் பத்திரிக்கையும் மட்டும் வெளியிட்டாய்ங்க)

யூஸர் சார்ஜ்:

அப்போது முதல்வர் அரசு நிறுவனங்களில் யூஸர் சார்ஜ் முறையை அமல் படுத்தி வந்தார்.உ.ம். அரசு மருத்துவமனையில் ரூ.2 செலுத்தவேண்டும். இதை மனதில் வைத்து,முதல்வர் அலுவலகத்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூலம் அனுப்பிவைத்தேன்.. அது முதல்வர் அலுவலகத்துக்கு டெலிவரியும் ஆனது. பணம் பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் வரவில்லை. உடனே தபால் துறையை தொடர்பு
கொண்டு பணம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்யும் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பேமெண்ட் பெற்றேன்.

எதிர்கட்சி தலைவர்:

அப்போது டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருந்தார். அவருக்கு இந்த அவலத்தை கடிதம் மூலம் தெரிவித்தேன். காங்கிரஸ் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் கூட வந்தது. அவர்கள் முதல்வர் அலுவலகத்தை லேசாக குடைந்தார்களா என்ன தெரியாது.

மறுபடி முதல்வர் அலுவலகம்:

2002, ஆகஸ்ட் மாதம் முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்கொரு பதிவு தபால் வந்தது. அதில் நான் ஆந்திர முதல்வர் அலுவலக அலட்சியப்போக்கை குறித்து அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பிய புகாரின் ஃபேக்ஸ் பிரதி ( நானே சி.எம்.ஓக்கு அனுப்பியது) இருந்தது. அதன் மீது முதல்வரின் செயலர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். முதல்வர் முன் வைக்க தங்களது ப்ரப்போசலை உடனே அனுப்பவும்னு எழுதியிருந்தார்.

ஆகா வந்துருச்சுய்யா வந்துருச்சு ஆப்பரேஷன் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துருச்சுன்னு வடிவேலு பாணில புலம்பிக்கிட்டே திட்டத்தோட முழு விவரத்தை DTP பண்ண வச்சு பதிவு தபால்ல அனுப்பினேன். இதனோட உடனடி விளைவு என்னடான்னா..

சந்திரபாபு தெ.தேசம் கட்சியோட ஆனிவர்சரில ” நதிகள் இணைப்பால் தான் சுபிட்சம் சாத்தியம்”னு வசனம் விட்டதுதான். அதுவரை தன் அரசியல் வாழ்க்கைல நதிகளின் இணைப்பு பத்தி அவர் பேசினதே இல்லை.

நுகர்வோர் மன்றம்:

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த செய்தி தெலுங்கு தினசரிகளில் வெளிவந்ததையடுத்து “தங்கள் ஆலோசனைகளை உரிய வகையில் பயன்படுத்தி கொள்கிறோம் என்று முதல்வர் அலுவலகம் எனக்கு ஒரு கடிதம் போட்டு கை கழுவி கொண்டது. (அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிருச்சுங்கண்ணா)

நுகர்வோர் மன்ற நடுவர்கள் இந்த கேஸ்ல டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீசே இல்லைன்னு சரித்திர பூர்வமான தீர்ப்பை கொடுத்து கழட்டிவிட்டுட்டாய்ங்க.

மானில நுகர்வோர் மன்றம்:

இவிகளுக்கு அப்பீல் பண்ணேன். ஒடனே மாவட்ட மன்றம் கொடுத்த தீர்ப்போட ஒரிஜினலை அனுப்புங்கனு கேட்டாய்ங்க அனுப்பிட்டன். அது ஆரம்ப எழுத்தாளன் பத்திரிக்கை ஆஃபீசுக்கு அனுப்பின படைப்பா போச்சு.

டாக்டர் ஒய்.எஸ்:

இந்த பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருந்த காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி நட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். (இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போதே நான் சி.எம்.ஓ பத்தி புகார் செய்ததும் , காங்கிரஸ் சட்டமன்ற கட்சி ஆறுதல் சொல்லி போஸ்ட் கார்டு எழுதினதும் ஞா இருக்கலாம்)

இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு ஆயிரம் கனவுகளோட ஃபாக்ஸ், தபால், கூரியர், தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தேன். பதில் தான் கிடைக்கவில்லை. சந்திரபாபு காலத்து சி.எம்.ஓ அதிகாரிங்க அப்படியே கன்டின்யூ ஆயிட்டிருந்தாய்ங்க. எங்கே தங்களோட பவிசு தெரிஞ்சு போயிருமோன்னு என் கடிதங்களை சி.எம் பார்வைக்கு கொண்டுபோகலை.

சாகும்வரை உண்ணாவிரதம்:

2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் நான் என் வீட்லயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் பதறியடிச்சு வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

ஜஸ்ட் இமேஜின். புது அரசாங்கம் பதவியேற்று 100 நாள் ஆன உடனே அறிவிக்கப்பட்டு துவங்கின உண்ணாவிரதம் அதுவும் சாகும் வரை உண்ணாவிதம்னா பார்த்துக்கங்க. பயங்கர ப்ரஷர். ஆனாலும் சமாளிச்சேன்.

உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வந்தார். அவரது செல்போனில் எஸ்.பி என்னோட பேசினார். (அப்பல்லாம் சோத்துக்கே லாட்டரிண்ணே. இதுல சொந்த செல் ஃபோனுக்கெல்லாம் எங்கே பவிசு?) தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் என்னோட உண்ணாவிரத மேட்டர் குறித்தும் எழுதுவதாகவும், முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து நான்
உண்ணாவிரதத்தை முடிச்சேன்.

தகவலறியும் சட்டம்:

தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை தெரிஞ்சிக்கலாம்னு முயற்சி பண்ணேன் . சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.</p.

தகவல் அறியும் சட்டப்படி எனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். பதிலில்லை. கட்டணமாக இணைக்கப்பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தேன். பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிச்சேன். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?

மாநில ஆணையத்திற்கும்,மத்திய ஆணையத்திற்கும் உள்ள அதிகார வரம்பு ஒன்றே என்பதால் மாநில ஆணையத்தின் மேல் மத்திய ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாதாம். போங்கடாங்கொய்யாலன்னு விட்டுட்டன். ஆமா இந்த முயற்சிகள் இத்தோட ஏன் நின்னு போச்சுனு கேப்பிக. சொல்றேன்.

2004 அக்டோபர்ல 11 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எஸ்.பி உறுதி மொழி கொடுத்தும் ஒரு …ரும் நடக்கலை. தாளி ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதுன்னு 2005 ஏப்ரல்ல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை அனவுன்ஸ் பண்ணேன். ரிப்போர்ட்டர்ஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு புறப்படற சமயம் பி.சி.,எஸ்.சி,எஸ்.டி சங்கம் காரவுக வந்தாக.

கையிலருந்து மைக்கை வாங்கி ( ஸ்பீச்செல்லாம் கொடுத்தோமில்லை) ஆ.இ.2000 த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறதாவும், பாதயாத்திரையை கைவிட்டு பஸ்ல போறதா இருந்தா நாங்களும் வரோம்னு அறிவிச்சாய்ங்க.

கிடைச்ச ஆதரவை ஏன் விடறதுன்னு ட்ராப் ஆனேன். பஸ்ஸு யாத்திரை தான் பெண்டிங்ல நின்னு போச்சு.பாதயாத்திரைன்னா கடவுள் கொடுத்த கால்கள் போதும்.பஸ்ஸு யாத்திரைக்கு காசு வேணம்ல.

இதுமட்டுமில்லாம கிறிஸ்தவ பாதிரியார் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது பாவிகளே மனம் திரும்புங்கள்னிட்டு பிரச்சாரம் பண்றாப்ல இதை பத்தி பேசிக்கிட்டே இருந்தேன். பல பேரு ( நண்பர்கள் உட்பட) “மொதல்ல நீ பணக்காரனாக வழியப்பாரு அப்பாறம் இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆரும் பாசன நீர் பற்றாக்குறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபா பட்ஜெட்ல ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டாரு. விவசாயிகளின் மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம்னு செயல்படுத்த ஆரம்பிச்சாரு.

விவசாயமே வேஸ்டு ,விவசாயி மகனெல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கிடுங்கனு சொல்லிக்கிட்டிருந்த சந்திரபாபு ஒய்.எஸ்ஸை கிழிக்க ஆரம்பிச்சாரு. அந்த கிழிப்பை திருப்பியடிக்கவும், ஜலயக்னத்துக்கு தார்மீக ஆதரவை தரவும் தெலுங்குல ப்ளாக், மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை ஆரம்பிச்சு லோக்கல் பாலிட்டிக்ஸ்ல இறங்கி டைவர்ட் ஆயிட்டன்.

ஒய்.எஸ்ஸையும் சொம்மா சொல்லக்கூடாது ஜலயக்னம் மட்டுமில்லிங்கண்ணா ஏ.சி.பி ரெயிடுகளை மும்முரப்படுத்தறது, (கருப்புபண ஒழிப்பு) , தேர்வு செய்த மண்டலங்கள்ள கூட்டுறவு பண்ணை விவசாயம்னு ஆ.இ.2000 த்தை ஸ்மால் ஸ்கேல்ல அமல்படுத்திக்கிட்டிருந்தாரு.

ஒய்.எஸ். விபத்துல போனதுக்கப்பாறம் திரு திருனு முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்த திட்டத்தையும் ,இது தொடர்பா நான் செய்த முயற்சிகள்ளயும் ஏதேனும் தப்பு தவறு இருந்தா சொல்லுங்கண்ணா திருத்திக்கிடலாம். ஒரு கை கொடுங்க. இந்த பதிவை நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. மக்கள் மன்றத்துக்கு கொண்டு போகலாம். எனக்கும் ஒரு கமிட்மென்ட் வரும்.

Posted in 2010, அறிவியல் | 1 பின்னூட்டம்

தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும் – ஜெகதீசன் வீரநாதன்

தொடக்கவுரை

இயற்கை காட்டிய வழிமுறையின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவை பயன்படுத்தி, அறிவியல் மூலம் பெற்றுள்ளதே இன்று மனிதகுலம் பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலம் வரையிலும் மட்டுமல்லாது, நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப்போவது தகவல் தொடர்பு என்பதுவே.

அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, எளிமையான வாழ்க்கைக்கும் இந்தத் தகவல் தொடர்பு என்பதே அடிப்படையாகும். இந்தத் தகவல் தொடர்பின் துவக்கம், வளர்ச்சி, நடைமுறை, பயன்படுத்தும் கருவிகள் மற்றும் எதிர்கால நிலை ஆகியனபற்றி விரிவாகக் காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொருள்

தகவல் தொடர்பு என்றால் என்ன? – இதனை முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே இதுபற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இதில் “தகவல்” – “தொடர்பு” என்ற இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. தகவல் என்றால் ’பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி’ என்று பொருளாகும். தொடர்பு என்றால் ’இரு இடங்களை இணைப்பது; இணைப்பு’ என்று பொருளாகும்.
எனவே தகவல் தொடர்பு என்பதற்கு ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அமைப்பு – என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறை மற்றும் அதற்கான கருவிகளுக்குத் தகவல் தொடர்பு என்ற தொழில்நுட்பச் சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.

துவக்கம்

குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் துவங்கியது என்று உறுதியாகக் கூறமுடியாதவற்றுள் தகவல் தொடர்பின் துவக்கமும் அடங்குகிறது. மனிதகுலத்தில் பேச்சும் எழுத்தும் துவங்குவதற்கு முன்பாகவே தகவல் பரிமாற்றம் துவங்கிவிட்டது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அச்சு மற்றும் தகவல் தொடர்பின் துவக்கம் என்று கருதப்படுவது, கற்கால மனிதர்கள் வரைந்து வைத்துள்ள குகைச் சித்திரங்களாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக 15 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வரலாற்றிற்கு முந்தைய காலத்தில் மனிதன் நாகரீகம் எதுவும் அடையவில்லை; சாப்பிடுவது, உறங்குவது, இனப்பெருக்கம், சண்டை போடுவது போன்ற அடிப்படை செயல்பாடுகளை மட்டுமே செய்துவந்துள்ள, கடைபிடித்துள்ள அந்த நிலையிலும் தகவல் தொடர்பை துவங்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தான் அறிந்த ஒன்றை அல்லது பார்த்த ஒன்றை, அருகில் அல்லது தொலைவில் அல்லது இனிமேல் வரப்போகும் நபர்களுக்குத் தெரிவிப்பதற்காக வரையப்பட்டவையே குகை ஓவியங்கள் ஆகும். அதிசயிக்கத்தக்க அளவிற்கு அறிவியல் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும் உள்ள இந்த நாட்களிலும், ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றவைகளாகவும் இந்தக் குகைச் சித்திரங்கள் உள்ளன.
அடுத்து, வாய்வழியே ஒலி எழுப்பப் பழகிய மனிதன், ஒவ்வொரு செயலுக்கும் ஆ.. ஊ.. என்று ஒலி எழுப்பித் தகவல் பரிமாற்றத்தைத் துவக்கினான். இன்றும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இந்த ஒலி வழித்தகவல் பரிமாற்றத்தையே கடைபிடிக்கின்றன.

வரிவடிவத் தகவல் தொடர்பு

இன்றைக்கு சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் மனிதன் எழுத்துக்களை உருவாக்கியுள்ளான். கிமு 2500ம் ஆண்டுகளில் (அதாவது இன்றைக்கு சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக) எகிப்திய நாகரீகம்தான் பேச்சு ஒலியை வரிவடிவத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அன்றைய நாட்களில் அவர்கள், படவடிவ எழுத்துக்களை (ஹையரோக்லிஃபிக்) பயன்படுத்தியுள்ளனர். இன்று வரலாற்றாய்வாளர்கள் இந்த படவடிவ எழுத்துக்களைப் படித்தே எகிப்திய வரலாற்றை அறிந்து கொண்டுள்ளனர்.

எனவே, தகவல் தொடர்பில் முதல் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த படவடிவ எழுத்துக்கள் என்று குறிப்பிடலாம் அல்லவா?

இதன் பிறகு, நாகரீகங்களும் நாடுகளும் எழுத்துக்களை உருவாக்கியுள்ளன. என்றாலும் தகவல் தொடர்பிற்கு அந்த நாட்களில் மேலும் சில வழிமுறைகளும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதல் நிலையில் உள்ளது, தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டு செய்யப்பட்ட தகவல் பரிமாற்றமாகும். இன்று பயன்பாட்டில் உள்ள பேரிகைகள், மத்தளங்கள் போன்ற தோல் கருவிகளால் ஒலி எழுப்பப்பட்டது. மகிழ்ச்சி, ஆபத்து, போர், வரவேற்பு போன்ற நேரங்களிலெல்லாம் அந்த நிகழ்விற்கு ஏற்ற ஒலிகளை எழுப்ப இந்தத் தோல் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், குறுநில மன்னராக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இதுபோன்ற ஒரு வசதியை பயன்படுத்தியுள்ளதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். தனது நகரான பாஞ்சாலங்குறிச்சிக்கும், தான் வணங்கிய முருகக் கடவுளின் ஊரான திருச்செந்தூருக்கும் இடையே பெரிய மணிகளை நிறுவியுள்ளார். திருச்செந்தூர் கோவிலில் பூசை செய்யப்படும் நேரத்தில் மணியடிக்கப்படுகிறது. அந்த ஒலியைக் கேட்டு வரிசையாக உள்ள மணிகளை ஒலிக்கச் செய்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஒலி எழுப்பப்பட்டுள்ளது. கோவில் பூசையை அறிந்து கட்டபொம்மன், தனது பூசைகளைச் செய்துள்ளார். கோவில் பூசைபற்றிய தகவல் மணி ஒலி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் கோவில்களிலும், தேவாலயங்களில், மசூதிகளிலும் எழுப்பப்படும் ஒலி, ஊர்முழுக்கக் கேட்கிறது அல்லவா? கோவிலுக்கு வரமுடியாதவர்கள் அந்த நேரத்தில், இருந்த இடத்திலிருந்தே இறைவனை வழிபடவும் தகவல் தொடர்பு வழிமுறை கையாளப்படுகிறது.

கடிதப் போக்குவரத்து

சொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துக்கள் உருவாகியதும், தகவல் தொடர்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டன. அன்றைய நாட்களில், அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த துணி, ஓலை, தோல், மரத்துண்டு போன்ற தளங்களில் எழுத்துக்கள் எழுதப்பட்டு மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டன.

கடிதப் போக்குவரத்தில் முற்கால அரசர்கள் பயன்படுத்திய சிறப்பான தகவல் தொடர்பு சாதனம் புறாக்கள் ஆகும். இந்த அமைதிப் பறவையின் காலில் கட்டப்பட்டு அனுப்பப்படும் கடிதம், குறித்த நபருக்கு விரைவாகக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த புறாக்களைப் பயிற்றுவிப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர். சரியான வழியை கண்டுபிடித்து புறப்பட்ட இடத்திற்கு இந்தப் பறவைகள் வந்து சேர்வது இயற்கையின் விந்தைக்குரிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது; இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் பெயர் இல்லாத தபால் தலை ஒன்றைக் கண்டால் அது இங்கிலாந்து நாட்டினுடையது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஓரிடத்தில் சேகரிக்கப்படும் கடிதங்களை மற்றொரு இடத்திற்கு, நாட்டிற்குக் கொண்டு செல்ல, குதிரைகள், உந்து வண்டிகள், கப்பல்கள், புகை வண்டிகள் என்று எல்லாவிதமான போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டன. நவீன மின்னணுச் சாதனங்கள், தொலை தொடர்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் இந்தக் கடிதப் போக்குவரத்து இன்றும் உலகளவில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறையின் பங்களிப்பு

மனித நாகரிகம் வளர்ந்ததுடன், தகவல் பரிமாற்றத்தின் துவக்கமான வாய்மொழி என்பது எழுத்தாக மாறி அதிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை எழுதத் தொடங்கியபொழுது பல இடர்பாடுகள் ஏற்பட்டன. எழுத்துக்கள் காகிதம், துணி உள்பட ஏதேனும் ஒரு தளத்தில், மயிலிறகு, சீர்செய்யப்பட்ட மூங்கில் போன்ற கருவிகளை பயன்படுத்தி கையால் மட்டுமே எழுதப்பட்டன. ஒரு பிரதி எழுதி முடிக்க பல நாட்கள் தேவைப்பட்டன. எழுதி முடிக்கப்பட்ட பிறகு அதில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சரிசெய்வதற்கு மேலும் அதிக காலம் ஆயிற்று அல்லது பிழை நீக்கவே முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால், எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் விலை மிக அதிகமாக இருந்தது. பொதுமக்களுக்கு புத்தகம் என்பது கனவாகவே இருந்தது. அறிஞர்களின் கருத்துக்களும் மக்களிடையே பரவவில்லை.

அச்சுமுறை அறிமுகம் செய்யப்பட்டது. என்றாலும் துவக்க காலத்தில் கடினமான செயல்பாடுகளைக் கொண்டிருந்ததால் அச்சுமுறை விரைவாகப் பரவவில்லை. இதன் மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களும் விலை அதிகமாக இருந்தன.

14ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மானிய கொல்லர் ஜோஹன்னஸ் கூட்டன்பர்க் என்பவர் கண்டுபிடித்துக் கொடுத்த பிரித்தெடுக்கும் அச்சுமுறை மிகப் பெரிய மாற்றங்களைக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக அச்சுத்துறை உருவானது. அச்சிடுதல் என்பதன் மூலம் புத்தகங்கள் விரைவாகவும், அதிக எண்ணிக்கையிலும் உருவாக்கப்பட்டன. விலை மலிவாகவும் கொடுக்கப்பட்டன. மனித அறிவு வளரத் துவங்கியது.

அச்சுத்துறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளால், நீராவிக் கருவிகள், மின்சாரம், மின்னுற்பத்தி இயந்திரங்கள், மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொறியியல் துறையில் நவீன இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. எதிரீட்டு அச்சு முறை அறிமுகமானது.
கருத்தும், எண்ணமும், எழுத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகளால் வளர்ச்சியடைந்தன. உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் உள்ளூர் மக்கள் பேசிய மொழிகளில் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது பல்வேறு இதழ்களும் கொண்டுவரப்பட்டன. தகவல் தொடர்பு முறை என்பது எளிமையடையத் துவங்கியது இந்தக் காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மின்சாரம் தந்த அறிவியல் கருவிகள்

மனிதகுலத்திற்கு அறிவியல் கொடுத்த மிகப்பெரிய பரிசு மின்சாரம் என்ற சக்தியாகும். ஒரு அணுவின் மையத்தில் உள்ள உட்கருவைச் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறைத் தன்மை கொண்ட மின்னணுவின் நகர்தலே மின்சாரம் என்றழைக்கப்படுகிறது.

இயற்கை இன்றளவும் கொடுத்துவரும் உயர்நிலை மின்சாரமான மின்னல் என்பது வெளிப்படுத்திய சக்தியை ஆராய்ந்த மனித அறிவு கண்டுபிடித்ததே மின்உற்பத்தி இயந்திரங்களாகும். 1831ல் இங்கிலாந்து நாட்டின் அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே என்பார் காந்தம் மற்றும் உலோகக் கம்பி வடங்களை பயன்படுத்தி எளிமையான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிவகையை உருவாக்கிக் கொடுத்தார். மின்உற்பத்தி இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது; மேலும் மின்கலன், மின்கலன் தொகுதி போன்றவற்றில் சேமித்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

அறிவியல் என்பது மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் அநேகமாக இந்த மின்சாரம் என்ற சக்தியின் வழியே செயல்படும் விதத்திலேயே உருவாக்கப்படுகின்றன. இன்னும் சரியாக சொல்லப்போனால், இன்று உலகம் என்பதும் அதில் உள்ள மனிதகுலம் என்பதும் இந்த மின்சார சக்திக்கு அடிமையாகவே உள்ளனர். உலகில் அத்தனை வசதிகளையும் கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட மின்தடை இதனை உணர வைத்தது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் வாழப்பழகிவிட்டுள்ளனர். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையே உள்ளது. இது இல்லையென்றால் ஒரு மணிநேரம்கூட மனிதனால் வாழ இயலாது என்ற அளவிற்கு, இந்த மின்சாரத்தின் பயன்பாடு அமைந்துவிட்டது.

அந்த வகையில் இன்றைக்கு தொலைத் தொடர்பு என்பதில் பயன்படுத்தப்படும் கருவிகள், வழிமுறைகள் அனைத்திற்கும் அடிப்படை இந்த மின்சாரம் என்பதுவே என்றால் அது மிகையில்லை.

வானொலி மற்றும் தொலைக் காட்சி

எளிமையான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதும் புதிய கருவிகள் கண்டுபிடிப்பதும் விரைவாக நடந்தது எனலாம். அந்த வகையில் தொலை தூரத்தில் உள்ளவர்களுக்கு விரைவாக செய்தியை அனுப்பும் சங்கேதக் குறியீடுகளாலான தந்தி முறை உருவாக்கப்பட்டது. சாமுவேல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்த, அவர் பெயராலேயே குறிப்பிடப்பட்ட மோர்ஸ் முறை 20ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தந்தி என்பது தகவல் தொடர்பில் பெரிய மாற்றத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. பயன்பாட்டில் இருந்த காலத்தில் பெரிய அளவில் மதிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகவே இது இருந்தது. இதைப் பழகுவதற்கு பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டன. தற்பொழுதும் தந்தி என்ற தகவல் பரிமாற்ற முறை பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் வேகம் மிகமிகக் குறைவாகிப் போயுள்ளது.

ஒலி அலைகளை மின்காந்த அலையாக மாற்றி தொலைதூரத்திற்கு அனுப்பும் முறை உருவாக்கப்பட்டது. வான் வழியே அனுப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பெற்று ஒலி அலையாக மாற்றிக் கொடுத்த வானொலிப் பெட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன. 1826ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் உருவாக்கிய இந்த வானொலி தொழில்நுட்பம், 20ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பெரிய மாற்றத்தைக் கண்டது. அந்தப் பெரிய மாற்றத்தால், வானொலிப் பெட்டிகள் உருவத்தில் சிறியதாகிப் போயின. ஆம், அதுவரையிலும் பெரிய பெரிய காற்றில்லா குழல்களைப் பயன்படுத்தியே வானொலிப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 1950களில் வளர்ச்சியடைந்த மின்னணுத்துறை சின்னஞ்சிறிய உருவிலான மின்மப் பெருக்கிகளை உருவாக்கிக் கொடுத்தது. இவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வானொலிப் பெட்டிகளும் அந்தப் பெயரரேலயே – டிரான்சிஸ்டர் என்றே – அழைக்கப்பட்டன. இந்த மின்மப் பெருக்கி உருவில் சிறியதாக இருந்தாலும் ஆற்றலில் மிகப் பெரியதாக இருந்ததால், அதுவரையிலும் மேசையின் மீது வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருந்த வானொலிப் பெட்டியின் உருவம் சுருங்கி சட்டைப் பைக்குள் அடங்கும் அளவிற்கு வந்துவிட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட ஐசி என்று குறிப்பிடப்படும் ஒருங்கிணைந்த சில்லுகள், பண்பலை வரிசை போன்றவற்றால் வானொலிப் பெட்டி என்பது முற்றிலுமாக மாறிப்போய்விட்டது. சாவிக்கொத்து முனையாகவும், பேனா மூடியாகவும்கூட இவை தற்போது உருவாக்கப்படுகின்றன.

ஒலியலையை தொலைதூரத்திற்கு அனுப்ப உதவிய அறிவியல், ஒளியையும் அவ்வாறே மாற்றவும் செய்தது. 1926ல் இங்கிலாந்து நாட்டின் ஆய்வாளர் ஜான் லோகி பேர்டு தொலைக் காட்சிப் பெட்டியை உருவாக்கி செயல்படுத்திக் காட்டினார். இதனால் ஓசையாக மட்டும் கேட்கப்பட்டவற்றை, காட்சிகளாகவும் வண்ணத்திலும் பார்க்கவும் முடிந்தது. தொலைக் காட்சித் தொழில்நுட்பம் வளர்ந்து இன்று மக்கள் ஏறக்குறைய அதற்கு அடிமையாக இருக்கும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொலைபேசி மற்றும் தொலைக் கருவிகள்

காற்றுவழி அனுப்பப்பட்ட மின்காந்த அலையைப் பெற்று ஒலியலையாக மாற்றும் செயல்புரிந்த வானொலி தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. என்றாலும் இது ஒருவழித் தகவல் தெரிவிக்க மட்டுமே பயன்பட்டது. மறுமுனையிலிருந்து தகவல் பெறுவது இயலாததாக இருந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவாக, 1876ல் அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் என்ற அமெரிக்கர் கம்பிவழியாக இருமுனை தொடர்பை ஏற்படுத்திய தொலைபேசிக் கருவியை செயல்முறையாக இயக்கிக் காட்டினார். இது தொலைத் தொடர்பினை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இதன் தொடர்ச்சியாக தொலை அச்சு, தொலைநகல் போன்ற கருவிகளும் உருவாக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மேலும் வளர்ச்சியடைந்தது. கணினியின் வரவு மற்றும் அதன் தொழில்நுட்பம் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக, அறிவியல் மனிதகுலத்திற்குக் கொடுத்த அன்பளிப்பு கணினி தொழில்நுட்பமாகும். மனித மூளையால் உருவாக்கப்பட்ட, மனித மூளைக்கு வேலையை குறைத்த கருவி; அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்காக அறிவியல் உருவாக்கித் தந்த இயந்திரம். எண்ணியல் என்றழைக்கப்படும் இரு இலக்க முறை என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கணினி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
உடல் போன்ற, தொட்டு உணரும் தன்மை கொண்ட வன்பொருட்கள், உயிர் போன்ற கண்ணிற்கும் புலப்படாத மென்பொருள் ஆகிய இரண்டும் இணைந்ததே கணினி என்ற இயந்திரமாகும். இவை இரண்டையும் செயல்பட வைப்பது மின்சாரம் என்ற சக்தியாகும்.

மின்னணுக் கருவிகள் மற்றும் வேறுபல உறுப்புக்களால் உருவாக்கப்பட்டதே வன்பொருளாகும். மைய செயலகம், கணித்திரை, விசைப்பலகை, சுட்டுக்கருவி என்ற அடிப்படையான பகுதிகளுடன், ஒலிபெருக்கி, தலைத் தொகுதி, அச்சு இயந்திரம், ஒளி வருடி போன்ற துணை பகுதிகளும் சேர்ந்ததே ஒரு கணினி என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றுடன், நிலை வட்டு, பேனா வட்டு, நினைவக அட்டை படிப்பான் போன்ற பிரித்தெடுக்கும் இயக்கிகளும் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

தாய்ப் பலகை, ஒலிபெருக்கி, சிறு மின் விசிறி, மின்சுற்று அட்டைகள், இவற்றை இணைக்கப் பயன்படுத்தியுள்ள கம்பி வடங்கள் உட்பட பற்பல உறுப்புகளை பயன்படுத்தியே கணினியின் மைய செயலகம் உருவாக்கப்படுகிறது. இதில் சுட்டுக்கருவி, ஒளி வருடி, பேனா வட்டு உள்ளிட்ட துணைக் கருவிகளை இணைப்பதற்கான பல துறைகளும் கொடுக்கப்படுகின்றன.

கணினிகள் பல்வேறு வகைகளில் உருவாக்கப்படுகின்றன. மேசைக் கணினி, மடிக் கணினி, கையகக் கணினி என்பன பொதுவான பயன்பாட்டில் உள்ளன. கணினிகளில் பல்வேறு மென்பொருட்கள் நிறுவப்படுகின்றன. குறிப்பாக கணினிகளை செயல்படுத்துகின்ற செயற்பாடு பொறியமைவு என்ற மென்பொருள் அனைத்து கணினிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மேல், அந்தக் கணினியை பயன்படுத்துகின்றவர், தாம் செயல்படும் பகுதிக்கு ஏற்ற, தனது தேவைகளை செய்து முடிப்பதற்கு உதவுகின்ற மென்பொருட்களை தமது கணினியில் நிறுவிக் கொள்ளுகின்றார். அலுவலகப் பணிகளை செய்து முடிக்க எம்எஸ் ஆபீஸ் தொகுப்பு, கணினி வரைகலைப் பகுதிக்கான கோரல்டிரா, போட்டோஷாப், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர் போன்ற வரைகலை மென்பொருட்கள், பொறியியலாளர்களுக்கான ஆட்டோகேட் என்று அவரவரது துறைகளுக்கு ஏற்ற மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
தங்களது கணினிகளில் உரிய உரிமம் பெற்ற மென்பொருட்களை நிறுவுதலே முறையாகும். எனினும் ஆசிய நாடுகளில் பெரும்பாலும் கள்ளத்தனமாக நகலெடுக்கப்பட்ட மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு வேறுபல காரணங்களிருந்தாலும், முதன்மையானது மிக அதிகமான விலை என்பதுவேயாகும். இது மாற வேண்டும்.

கணினிகளின் பயன்பாடு

கணினியின் பயன்பாடு பற்றி, அவை அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில், இன்று பெருமளவில் பயன்பாட்டில் உள்ள சொந்தக் கணினி வகைகளின் தயாரிப்பாளர்களான ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது ‘உலகளவில் இந்தக் கணினிகள் மொத்தம் ஐந்திற்கு மட்டுமே தேவை இருக்கும்’.
அதாவது ஐந்தே ஐந்து கணினிகள் மட்டுமே உலகத்தில் பயன்படுத்தப்படும்; அதற்கு மேல் தேவையிருக்காது, பயன்படுத்தமாட்டார்கள் – என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடந்துள்ளது என்ன! மேற்கத்திய நாடுகளில் கணினி இல்லாத வீடே கிடையாது எனலாம். இந்தியா போன்ற நாடுகளிலும் பயன்பாடு பெருமளவு அதிகரித்து வருகிறது.

பொதுவாகக் கணினிகள் தனித் தனியாக ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சொந்தக் கணினி என்று குறிப்பிடுகின்றனர். வீடுகளில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இந்த வகையிலேயே கணினிகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறில்லாமல் ஒன்றுக்கொன்று கம்பி வடத்தால் இணைக்கப்பட்ட நிலையில் கணினிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றிற்கு பிணையக் கணினிகள் என்று பெயர். இணைக்கப்பட்டுள்ள பிணையக் கணினிகளில் ஒன்று மட்டும் புரவலராக அதாவது தலைமைக் கணினியாக செயல்படுகிறது. மற்ற கிளையன் கணினிகள் இந்தப் புரவலர் கணினியிலிருந்து தரவுகளைப் பெற்று செயல்படுகின்றன.

இந்தக் கணினிகளின் இணைப்பான பிணையக் கட்டமைப்பை நிர்வகிக்கத் தனியாக பிணைய நிர்வாகிகள் உள்ளனர். இந்த பிணையத் தொழில்நுட்பம் என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுகிறது. ஒரு அறைக்குள் செய்யப்படும் இணைப்புகளே பிணையம் என்றழைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தின், ஒரே கட்டிடத்திற்குள், பல மாடிகளில், பல அறைகளில் உள்ள கணினிகளின் இணைப்பு உள் பகுதி பிணையம் என்று குறிப்பிடப்படுகிறது. இவை அல்லாமல் குறிப்பிட்ட நிறுவனத்தின், பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்களில் உள்ள கணினிகளின் இணைப்பை உள் இணையம் என்று அழைக்கப்படுகிறது.
உலகளவில் பல்வேறு நாடுகள், நகரங்கள், அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் நிறுவப்பட்டுள்ள சொந்தக் கணினி மற்றும் பிணையக் கணினிகள் ஆகியவற்றை இணைக்கும் இணைப்பையே இணையம் என்று அழைக்கின்றோம்.

இணையம்

தற்போது உருவாக்கப்படும் கணினிகளில், வளர்ந்துள்ள கணினி தொழில்நுட்பத்தால், தொலைபேசி கம்பி வடத்தையும் இணைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கிடைத்த அரியதொரு பயன்பாடே இணையம் என்பதாகும்.

ஒலி மற்றும் ஒளியலைகளால் இயங்கியவை தொலைக்காட்சியும் வானொலியும் ஆகும். இரு இலக்கத் முறையில் உருவாக்கபட்டது கணினி தொழில்நுட்பம். கம்பி வடம் மற்றும் காற்றுவழி தொடர்பை கொடுத்தது தொலைபேசி இணைப்பு. இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டதே இணையத் தொழில்நுட்பமாகும்.

உலகத்தையே சுருக்கி நமது மேசைக்குக் கொண்டுவந்துவிட்ட அறிவியல் தந்த தொழில்நுட்பமே இணையம் என்பதாகும். இது 1960களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறைக்காக உருவாக்கப்பட்டதாகும். 1990களின் இடையில் இந்தத் தொழில்நுட்பம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளின் அடிப்படையையே மாற்றியமைத்து விட்டது இந்தத் தொழில்நுட்பம்.
உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள புரவலர் கணினிகளில் பதியப்பட்டுள்ள செய்திகளை, தரவுகளை விரைவாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்காக தோடுபொறிகள் இணையத்தில் கிடைக்கின்றன. உண்மையில் இவை இயந்திரங்கள் அல்ல; கட்டளை நிரல் என்று குறிப்பிடப்படும் இவையும் ஒரு கணினி தரவுகளைச் செய்முறைப்படுத்தும்படி செய்வதற்கான தொடர்வரிசை நிரல்களேயாகும்.

இணையம் வழங்கும் வசதிகள்

இணையம் மூலம் இரண்டு முதன்மையான வசதிகள் கிடைக்கின்றன. முதலாவது வலைதளப் பக்கங்கள் என்பதாகும். இரண்டாவதாக மின்னஞ்சல் என்பதுமாகும். இணையத்தில் உள்ள வையக விரிவு வலை என்பதில் தரப்படுபவை வலைதளங்களாகும். இவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் ஏராளமான செய்திகளைக் கொண்டுள்ளன. அந்தச் செய்திகளை வடிவமைத்துப் பக்கங்களாக கொடுத்துள்ளனர். இதனால் வலைதளம் என்பது பல பக்கங்களைக் கொண்டு ஒரு புத்தகம் போலவே காட்சியளிக்கிறது. ஒரு வலைதளத்தைத் திறப்பதற்கு அதற்கான முகவரி தேவை.

கணினியில் இந்த வலைதளப் பக்கங்களைத் திறந்துபார்ப்பதற்காக இணைய உலவி மென்பொருட்கள் கிடைக்கின்றன. அநேகமாக இவை அனைத்தும் இலவசமாகவேத் தரப்படுகின்றன. இவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐஈ என்று குறிப்பிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்பதும் நெட்ஸ்கேப் நாவிகேட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். எனினும் தற்போது பலதரப்பட்ட உலவிகள் கிடைக்கின்றன. தேவையானவற்றை நேரடியாக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக் கொள்ள முடிகிறது.

இணையம் என்பது மிகப்பெரிய நூலகம் போலவே காணப்படுகிறது. என்றாலும், நூலகத்தில் கிடைப்பதுபோல எழுத்துக்கள் மற்றும் படங்களால் ஆன செய்திகளை மட்டுமல்லாது, பல ஊடகம் என்ற நிலையில் தேவையான எதனையும் பெற முடிகிறது. ஒலி, ஒளி, சலனப்படம், அநேகமாக உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் செய்திகள், எல்லாவகையான ஒளிப் படங்கள் என்று அனைத்தும் இணையத்தின் வலைதளப் பக்கங்கள் வழியாகக் கிடைக்கின்றன.

இவை தவிர தற்போது இணையத்தில் மிகவும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளவை சமுதாய வலைத்தளங்களாகும். கட்டற்ற களஞ்சியமாகக் குறிப்பிடப்படும் விக்கிப்பீடியா, முகப்புத்தகம், வலைப்பதிவு போன்றவை ஏராளமான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பல்வேறு தகவல்களை ஒருசில நிமிடங்களில் உலகெங்கும் பரப்புவதில் இவை தனித்துவம் பெற்றும் திகழுகின்றன.

மின்னஞ்சல்

தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இணையம் வழியே கிடைக்கும் மின்னஞ்சல் வசதி என்றால் அது மிகையாகாது. ஒரு கடிதத்தை பல நாடுகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பவும், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட பல கடிதங்களை ஒரு நபருக்கு அனுப்பவும் வசதி உள்ளது. உலகிலேயே மிகவும் குறைவான செலவில், அதிக தூரத்தில் உள்ளவர்களுக்கும், மிகவும் விரைவாக அதாவது குறைவான நேரத்தில் சென்றடைவது இந்த மின்னஞ்சலின் சிறப்பாகும். இதன் வேகத்திற்கு முன்னால், முந்தைய கடித அஞ்சல் முறை நத்தை அஞ்சல் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமல்லாது, உலகளவில் ஏராளமான மொழிகளில் மின்னஞ்சல் மூலமாக கடிதங்களை அனுப்ப முடிகிறது.
இணையம் வழி தகவல் தொடர்பிற்காகவே தற்போது ஒருங்குறி எழுத்து முறை உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. கணினிக்கான செயற்பாடு பொறியமைவு மென்பொருளிலேயே இந்த ஒருங்குறி எழுத்துருக்கள் கொடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே தனியாக எழுத்துருக்களை நிறுவ வேண்டும் என்ற தேவையில்லை. இதனால் ஒரு மொழியில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படும் கடிதம், பெறுகின்ற இடத்தில், அந்த மொழிக்கான தனியான எழுத்துரு இல்லாத நிலையிலும் படிக்கப்படும் நிலையில் கிடைக்கின்றது.

செல்லும் இடமெல்லாம் செல்பேசிகள்

பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனித குலத்தில் பரவுவதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொண்டன. வானொலி பிரபலமாகி வரவேற்பைப் பெறுவதற்கு சுமார் 30 ஆண்டுகள் ஆயிற்று; ஒலி-ஒளி இணைந்து வழங்கிய தொலைக்காட்சிக்கோ 13 வருடங்களாயிற்று; கம்பிவழி தொலைக்காட்சித் தொடர்பு வசதி தொலைக்காட்சிப் பெட்டிகளை சென்றடைய 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது; இவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றைவிட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் உள்ள இணையம் அதற்கு எடுத்துக் கொண்டது வெறும் 5 வருடங்கள் மட்டுமேயாகும்.

எனினும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதால், இணையத்தையும் மிஞ்சிய தொழில்நுட்பம் ஒன்று அதனைவிட பெரிய எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆம்! வளர்ந்த நாடுகளின் மக்கள் எண்ணிக்கையில் 100 சதவீதத்திற்கும் அதிகமாகவும், வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக உள்ளது “செல்பேசி” எனும் சின்னஞ்சிறு கருவியாகும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் (2015க்குள்) உலக மக்கள் தொகையின் அளவைவிட அதிகமான செல்பேசிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இதன் மூலம், உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முதல் தொழில் நுட்பம் என்ற பெருமையை இது அடையப் போகிறது.

அறிமுகம் செய்யப்பட்டபோது, பேசுவது என்ற செயலுக்காக மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. மேலும் செலவு அதிகமான தொலைத் தொடர்பு வசதியாகவும் இருந்தது. துவக்க காலத்தில் வெளி அழைப்புகளுக்கு இந்திய பண மதிப்பில் சுமார் 16 ரூபாய்களும், வரும் அழைப்புகளுக்கு 10 ரூபாய்களும் கட்டணமாக இருந்தது. ஆம், நமக்கு வரும் அழைப்புகளுக்கும் நாம் தான் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. (அஞ்சல் வசதி துவங்கப்பட்ட காலத்தில், கடிதம் பெறுகின்றவரே கட்டணம் செலுத்தி பெறும் முறையே இருந்தது. அதனால் ஏற்பட்ட பல்வேறு தொல்லைகளின் முடிவாகவே தபால் தலைகள் உருவாக்கப்பட்டு, கடிதம் அனுப்புகின்றவரே கட்டணத்தையும் செலுத்தும் முறை வந்தது).
ஆனால் மிக வேகமாக மாற்றம் கண்ட இந்தத் தொழில்நுட்பம் இன்று செல்பேசிகளின் உருவத்தை மட்டுமல்லாது, செலவையும் குறைத்து விட்டது. ஆனால் நடைமுறையில் இன்று செல்பேசி என்ற இந்தச் சின்னஞ்சிறிய கருவியானது, தொலைபேசி வசதிக்காக மட்டும் பயன்படுத்துவது என்பது முடிந்துவிட்டது.

செல்பேசியின் மாறிவரும் உருவமும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியும்

மின்னணுவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கருவியே செல்பேசியாகும். அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை ஒன்றின்மீது மின்னணு உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. துவக்கத்தில் கம்பி வழி இணைப்பும் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், செல்பேசியின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகள் பொருத்தப்பட்டன. இதனால் நிறைய ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகளும் அவற்றிற்கிடையே, மின்மப் பெருக்கி, இருமுனையம், ஒளி உமிழும் இருமுனையம், தடுப்பான் (மின்தடை), மின்தேக்கி, தூண்டுவான் போன்றவையும் நிறைய அளவில் பொருத்தப்பட்டிருந்தன. இதனால் செல்பேசியின் அளவும், உருவமும் சற்றே பெரியதாகவே இருந்தது.
ஆனால் விரைவாக வளர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி, ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லுகளின் செயலை அதிகரித்து உருவத்தை சுருக்கியது. இதனால் பல சில்லுகள் பொருத்தப்பட்ட இடத்தில் ஒன்று அல்லது இரண்டு சில்லுகள் மட்டுமே போதும் என்ற நிலை ஏற்பட்டது. அத்துடன் மின்மப் பெருக்கி உள்ளிட்ட அனைத்து உறுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் செல்பேசியின் அளவு குறைந்து உருவம் சிறியதாகிப்போனது.

என்றாலும், புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு, செல்பேசியின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. பேசுவதற்கு மட்டுமிருந்த அதன் செயல் மாறிவிட்டது. பாடல்களை செவிமடுக்க, திரைப்படங்களை பார்க்க, திரைப்பட வல்லுநர்கள் குழு என்ற ஆங்கில சொற்றொடரின் குறும்பெயரான எம்பீஈஜி (எம்பெக்) என்பதில் 3,4 ஆகிய நிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

குறுஞ்செய்திகள் அனுப்ப முடிகிறது; பெற முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது செல்பேசிகள் வழியே இணைய வசதியும் கிடைக்கின்றது. வலைதளப் பக்கங்களை பார்வையிட முடிகிறது; மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடிகிறது. மூன்றாம் தலைமுறை அலைவரிசையின் உதவியுடன் நேரடியாக முகத்தைப் பார்த்து பேசிக்கொள்ளவும் முடிகிறது.

மெதுவாகத் துவங்கி, வேகமாக வளர்ந்து, விரைவாகப் பரவிவரும் செல்பேசித் தொழில்நுட்பத்தில் மாற்றங்களும் ஏராளமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றை முறையாக பயன்படுத்தி பலன் பெறுவதே நமது செயலாக உள்ளது.

தொலை தூரத்தில் இருந்த தொலைத் தொடர்பு வசதி என்பது இன்று மனிதனின் சட்டைப்பைக்குள் வைக்கப்பட்டுவிட்டது என்றுதான் குறிப்பிடவேண்டும். துவக்க காலத்தில் விலைக்கு விற்கப்பட்ட, செல்பேசிக்கு அடிப்படையான சந்தாதாரர் தகவமைவு (கூறு) அட்டைகள் தற்போது இலவசமாகவே கிடைக்கின்றன.

தலைமுறைகள் கடந்த தொழில்நுட்பங்கள்

மனித வாழ்க்கை முறையில் ஒரு தலைமுறை என்பது 30 ஆண்டுகளைக் குறிக்கும். ஆனால் தற்போதைய மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு தலைமுறை என்பது பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தை, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் 3 முதல் 5 ஆண்டுகளை மட்டுமே குறிக்கின்றது என்றே தோன்றுகிறது. முதல் தலைமுறை தொழில்நுட்பம் என்று குறிப்பிடப்படும் கம்பி வழி தொலைபேசி வசதி பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்தது. அதில் கம்பியில்லா இணைப்பும் கிடைத்தது.

ஆனால் 2ம் தலைமுறை கருவியாக, காற்றுவழி மின்காந்த அலை மூலம் தொடர்பை ஏற்படுத்தி செயல்பட்ட செல்பேசி உருவாக்கப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்கு உள்ளாக, 3ம் தலைமுறை அலைவரிசையும், அதனை பயன்படுத்தும் செல்பேசி கருவியும் உருவாக்கப்பட்டுவிட்டன. தற்போது நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. செல்பேசி வழியாக இணையம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன.

இதேபோல, தொலைக்காட்சிப் பெட்டி வழியாக இணையத் தொடர்பு கிடைக்கவும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. என்றாலும் கணினி வழியாகவும், செல்பேசி வழியாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது என்பது தொழில்நுட்ப வளர்ச்சியையே காட்டுகிறது.
கம்பிகள் மூலமாக தரைவழித் தொடர்பு, காற்றுவழித் தொடர்பு என்று வளர்ந்த தொழில்நுட்பம் இன்று பூமிக்கு வெளியே, வான்வெளியில் தனித்து நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் வழியே செயல்படுத்தப்படுகிறது. இதனால் நாடுவிட்டு நாடு என்பது மறைந்து கண்டம் விட்டு கண்டம் பரிமாற்றம் செய்து கொள்ளுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

வளர்ச்சியும் தொடர்ச்சியும்

சின்னஞ்சிறிய செல்பேசிக்குள் சிக்கலான பலசெயல்பாடுகள் உள்ளன. எங்கேயோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக காணமுடிகிறது. தொலைதூரத்தில் எங்கோ ஓரிடத்தில் பேசுகின்ற ஒருவரது உரையை செவிமடுக்க முடிகிறது. அறிவியல் கருவிகளால் நிகழ்த்தப்படும் இந்த அதிசயங்கள் எவ்வாறு நடக்கின்றன. இந்தக் கருவிகள் வானத்திலிருந்து ஏதேனும் இறைதூதுவர் கொடுத்ததா? இவற்றிற்கு வெளியே நின்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் ஒரு வேடிக்கை புரிகிறது.

சில காலத்திற்கு முன்பாக இந்தக் கருவிகள் எங்கே இருந்தன? யாரேனும் பதுக்கி வைத்திருந்தார்களா? ஒளித்து வைத்திருந்தார்களா? இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தக் கருவிகள் அனைத்தும் அவற்றிற்கான மூலப் பொருட்களாக, இயற்கையுடன் இணைந்திருந்தன. நிலத்திற்குள்ளிருந்து எடுக்கப்பட்ட தாது எண்ணெய், காற்று, காந்தம், இவற்றுடன் மின்சக்தி சேர்ந்து இன்று இந்தக் கருவிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன என்று கூறலாமல்லவா!

இதைத் தொடர்ந்து அடுத்த கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை? இவை எவ்வாறு வளர்ந்தன? யாராவது உரம் போட்டு தண்ணீர் ஊற்றினார்களா? அல்லது இயற்கையாகப் பெய்த மழையால் வளரும் காளானாக தானே வளர்ந்தனவா? இல்லை.

மனித அறிவு; தேடுதலில் ஆர்வம் கொண்ட மனித அறிவு இவற்றை உருவாக்கியது. துவக்க காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் செயல்படுத்த ஏராளமான ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் அந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்றைய நாட்களில் புதிய படைப்புகள் உருவாக்க மிகக் குறைவான நாட்களே தேவைப்படுகிறது. தொழில்நுட்ப ஆராய்ச்சி மிகுதியாக செய்யப்படுவதாலும், இதற்காகவென்றே பல குழுக்கள் திறம்பட செயல்படுவதாலும் கண்டுபிடிப்புகள் விரைவாகக் கிடைக்கின்றன. விபத்தாக நடந்த கண்டுபிடிப்புகள் அல்லாமல், உருவாக்கியே ஆகவேண்டும் என்று கண்டுபிடிப்புகள் செய்யப்படுகின்றன.

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது, தொலைத் தொடர்பு வளர்ச்சியாகும். அறிவியல் கட்டுரைகள், ஆராய்ச்சிகள் உடனுக்குடன் அறிஞர்களைச் சென்று சேருகிறது. தொலைபேசி, செல்பேசி, தொலைநகல், கணினி தொழில்நுட்பம், இணையம் என்று உருவாக்கப்பட்டுள்ள அத்தனை வசதிகளும் தாமதம் என்பதைத் தவிர்த்து வேகம் என்பதை கொடுத்துவிட்டன.

இதற்கு முடிவு என்பது உள்ளதா? தெரியவில்லை. மனிதனுக்கு போதும் என்பது அந்த நேரத்து உணவு ஒன்றில் மட்டுமே சொல்லப்படுகிறது. வேறு எதிலும் போதும் என்ற சொல் பயன்படுத்தப்படுவதே இல்லை. என்றாலும் இதனை நினைத்திருந்தால்…? தொலைபேசி போதும் என்றிருந்தால் இன்று செல்பேசி கிடைத்திருக்காது! வானொலி போதும் என்றிருந்தால் இன்று தொலைக்காட்சி கிடைத்திருக்காது! இப்படி பல கண்டுபிடிப்புகள், தங்களுக்கு அடுத்து உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகவே அமைந்துவருவது வியப்பிற்குரிய ஒன்றுதானே!

உதவியா? தொல்லையா?

சிந்தனைக்குரிய கேள்வியாகவே இது உள்ளது. கத்தி என்ற கருவி, அதனை பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து உதவியாகவோ தொல்லையாகவோ அமைகிறது அல்லவா? அதுவேதான் இன்றைய கண்டுபிடிப்புகள் எல்லாம். தொலைத் தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட செல்பேசிகள் நடைமுறையில் தொல்லையளிக்கும் கருவியாகக் கருதப்படுகிறது. இந்த வசதியே இல்லாத காலத்தில் வேலைகள், செயல்கள் விரைவாகவே நடைபெற்றன. தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இது, தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதால் செயல்பாடுகளைக் குறைத்துவிடுகிறது; வேலைக்குத் தொல்லையாகவும் அமைகிறது.

குறிப்பாக தொலைக்காட்சிகள் வழியாகக் காட்டப்படும் விளம்பரங்கள், செல்பேசிகளை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற போலியான தோற்றத்தைக் காட்டுகின்றன. மக்கள் இதனையே கடைபிடிக்கவும் செய்வது சற்றே கவலைக்குரிய தாகும். ஆனால், நேரமும் நாட்களும் முடிந்தபிறகு தொலைக்காட்சிப் பெட்டி தமக்குத் தொல்லை தரும் பெட்டியாக இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றனர். ஆனால், கடந்த கால நிகழ்வுகளிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ளாத மனிதன் மீண்டும் அந்தத் தொலைக்காட்சியை தொடர்ந்து பயன்படுத்துவது வேடிக்கையான செயலாகவே உள்ளது.
அறிவியல் தந்த எதுவும் நிச்சயமாக தொல்லைகளை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளே அந்தக் கருவியை வெற்றிகரமான ஒன்றாகவோ அல்லது தொல்லைதருவதாகவோ மாற்றுகிறது.

தொடரப்போகும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான துவக்கவுரை அல்லது இந்தக் கட்டுரைக்கான நிறைவுரை

குகைச் சுவற்றில் படமாக வரைந்து தகவல் தெரிவித்த மனிதன் இன்று செல்லும் இடம் எல்லாம் எளிதாகத் தொடர்பு கொள்ளும் செல்பேசிக் கருவியை பயன்படுத்துகின்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கண்டுபிடிப்பு என்பது மாறி, 100, 50, 10, 4, 1 ஆண்டுகளாகச் சுருங்கி இன்று தினந்தோறும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு அறிமுகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்றாலும் இது கவலைக்குரியதாகவே தோன்றுகிறது. இயற்கைக்கு மாறாக, எதிராக உருவாக்கப்படும் எது ஒன்றும் நிலைப்பதில்லை; அல்லது காலப்போக்கில் இயற்கையாலேயே அழிக்கப்பட்டும் விடுகிறது. மேலும் புதிதாகத் தரப்படும் கண்டுபிடிப்பு பழையதை கொன்றுவிடுகிறது. வானொலிப் பெட்டி, பேஜர் என்று குறிப்பிடப்படும் செய்திக் குறிப்பனுப்பிய கருவி, துவக்க கால செல்பேசிகள், கணினிகளில் பயன்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுக்கள், நெகிழ் வட்டுப் பெட்டிகள், குறுவட்டுக்கள், பழைய தட்டச்சு இயந்திரங்கள், கையால் அச்சுக் கோர்த்த அச்சு முறை, ஒலிநாடாக்கள், ஒளிக்காட்சி பேழைகள், ஒளிக்காட்சி பேழை இயக்கிகள், ஒலித்தட்டுகள், ஒலித்தட்டு இயக்கிகள், கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள், நிழற்படக் கருவிகள் என்று ஏராளமான முந்தைய தலைமுறைக் கருவிகள் இன்று கண்காட்சிகளிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாதல்லவா?
அந்த வகையில் இன்று பயன்பாட்டில் உள்ளவை நிச்சயம் நாளை நீக்கப்படவுள்ளன என்பது தெளிவாகிறது. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சியால் அந்த மாற்றமும் மாறுபட்டு அமைகிறது என்பது தெரிகின்றதல்லவா?

இயற்கை காட்டிய எதிரொலி இன்று பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்துவிட்டது. தகவல் தொடர்பு என்பது மனித நாகரீகத்தின் அடிப்படையாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ இன்று சாலையில் நடந்து செல்லும், எளிமையான, ஏழ்மையான மனிதர்களும் செல்பேசியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளனர்.

காற்றுவழியாக அனுப்பப்படும் செல்பேசிக்கான மின்காந்த அலைகள் மனித உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவருகிறது. இதன் முன்னோட்டமாக, சிட்டுக்குருவிகள் உட்பட சில உயிரினங்கள் பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதும் கவலைக்குரிய ஒன்றாகும். அதிகாலை வேளைகளில் இன்று கிராமத்து மரங்களில்கூட சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் இல்லாது போய்விட்டது.

ஒருபுறம் தகவல் தொடர்பு வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதகுலத்திற்கு வேகமான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. முகம்பார்த்து பேசும் வசதியை மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுத்துவிட்டது. அடுத்து வரப்போகும் அலைவரிசைகள் ஆளையே நேரில் நிறுத்தினாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் அது நிச்சயம் மற்ற உயிரினங்களின் அழிவிற்கும் ஆரம்பமாக அமையும் என்றும் சொல்லலாம். அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருந்த டைனோசார்களே ஏதோ ஒரு காரணத்தால் இந்த பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன. அப்படியென்றால், வெய்யில் கொஞ்சம் அதிகமாக அடித்தாலே தாங்காத மனிதனும் மற்ற உயிரினங்களும் இந்தப் பூமியில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கப்போகின்றன. தொலைத் தொடர்பு வசதிகளுக்காக நாம் தொலைத்துள்ளவையும் தொலைக்கப் போகின்றவையும் ஏராளம்!

இந்தத் தகவலை சற்றே பெரிய சத்தத்துடன் உலக அறிவியல் துறைக்கு எடுத்துச் சொல்லப்போகும் தகவல் தொடர்புக் கருவியை யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள்?

பயன்படுத்தியவை

நூல்கள்
1. விஸுவல் என்சைக்ளோபீடியா, ஆர்ஃபெஸ் புக்ஸ் லிமிடெட், யூகே, 2004
2. மணவை முஸ்தபா, கணினி களஞ்சியப் பேரகராதி, மணவை பப்பளிகேஷன், சென்னை
3. ஜென் ஏ. மிட்ெலர், ஜேம்ஸ் ஹோஸீ, கிரியேட்டிங் அண்டு அன்டர்ஸ்டேண்டிங் டிராயிங், க்ளென்கோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா, சென்னை
5. ஜெ. வீரநாதன், இணையத்தை அறிவோம், பாலாஜி கணினி வரைகைலப் பயிலகம், கோயம்புத்தூர்
6. பீட்டர் ஹாலிடே, கிரியேட்டிவ் லெட்டரிங் அண்டு காலிகிராஃபி, பிசிஏ, லண்டன்
7. த ஸ்டோரி ஆஃப் பிரிண்ட்மேக்கிங், கிங் ஃபிஸர் கைலடோஸ்கோப்ஸ், இங்கிலாந்து
8. ஜெ. வீரநாதன், செல்பேசி பழுது நீக்குதல், பாலாஜி கணினி வரைகைலப் பயிலகம், கோயம்புத்தூர்

வலைதளங்கள்
1. http://en.wikipedia.org/wiki/Telecommunication
2. http://en.wikipedia.org/wiki/History_of_telecommunication
3. http://www.sabah.edu.my/cc044.wcdd/introduction.html
4. http://www.indianetzone.com/42/history_indian_telecommunications.htm

கலைச் சொற்கள்
அச்சு இயந்திரம் – Printing Machine 7
அச்சுத்துறை – Prinitng Industry
அஞ்சல் சேவை – Postal Service
அணு – Atom
அருங்காட்சியகம் – Museum
ஆறாம் அறிவு – Sixth Sense
இணைய உலவி – Browser
இணையம் – Internet
இயக்கி – Driver
இரு இலக்க முறை – Binary Systems
இரு முனையம் – Diode
உட்கரு – Nucleus
உரிமம் – License
உள் இணையம் – Intranet
உள் பகுதி பிணையம் – Local Area Network
எண்ணியல் – Digital
எதிர்மறை – Negative
எதிரீட்டு அச்சு – Offset Printing
எழுத்துரு – Font
எழுதப்பட்ட புத்தகம் – Written Book
ஒருங்கிணைந்த மின்சுற்று சில்லு – Integrated Circuit Chip (IC)
ஒருங்குறி – Unicode
ஒலித்தட்டு இயக்கிகள் – Record Player
ஒலித்தட்டுகள் – Record Plates
ஒலிநாடாக்கள் – Audio Cassettes
ஒலிபெருக்கி – Speaker
ஒளி உமிழும் இருமுனையம் – Light Emitting Diode (LED)
ஒளி வருடி – Scanner
ஒளிக்காட்சி பேழை இயக்கிகள் – Video Cassettes Players
ஒளிக்காட்சி பேழைகள் – Video Cassettes
கட்டளை நிரல் – Programme
கடிதம் – Letter
கண்காட்சி – Exhibition
கணித்திரை – Computer Monitor
கணினி தொழில்நுட்பம் – Computer Technology
கணினி வரைகலை – Computer Graphics
கம்பி வழி இணைப்பு – Cable connections
கம்பிவழித் தொலைக்காட்சித் தொடர்பு – Cable TV Connection
கம்பி வடங்கள் – Cables
கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள் – Black & White Photos
கள்ளத்தனமாக நகலெடுக்கப்பட்ட மென்பொருட்கள் – Pirated Softwares
களஞ்சியம் – Encyclopaedia
காகிதம் – Paper
காந்தம் – Magnet
காற்றில்லா குழல் – Vaccum Tube
காற்றுவழித் தொடர்பு – Wireless Connection
கிளையன் கணினி – Client Computer
குகைச் சித்திரம் – Cave Drawings
குறுஞ்செய்தி – SMS
குறு மின் விசிறி – Micro Fan
குறுவட்டு – Compact Disk (CD)
கொல்லர் – Smith
கையகக் கணினி – Palm Top
கையால் அச்சுக் கோர்த்த அச்சு முறை – Hand Compose Prinitng
சந்தாதாரர் தகவமைவு (கூறு) அட்டை – SIM Card
சமுதாய வலைத்தளம் – Community Website
சுட்டுக்கருவி – Mouse
செயற்கைக் கோள் – Satellite
செயற்பாடு பொறியமைவு – Operating System
செய்திக் குறிப்பனுப்பிய கருவி – Pager
செய்தித்தாள் – News Paper
செல்பேசி – Cell Phone
சொந்தக் கணினி – Personal Computer
தகவல் – Information
தகவல் தொடர்பு – Communication
தட்டச்சு இயந்திரம் – Typewrittier
தடுப்பான் – Resistor
தந்தி – Telegram
தபால் தலை – Stamp
தரவு – Data
தலைத் தொகுதி – Head set / Head Phone
தலைமைக் கணினி – Server Computer
தாது எண்ணெய் – Crude Oil
தாய்ப் பலகை – Mother Board
திரைப்பட வல்லுநர்கள் குழு – Moving Pictures Expert Group
துறைகள் – Ports
தூண்டுவான் – Inductor
தொடர்பு – Connection
தொலை அச்சு – Tele Printer
தொலைக் காட்சிப் பெட்டி – Television
தொலைநகல் – Telefax
தொலைபேசிக் கருவி – Tele Phone
தோடுபொறிகள் – Search Engines
நத்தை அஞ்சல் – Snail Mail
நினைவக அட்டை படிப்பான் – Memory Card Reader
நிலை வட்டு – Hard Disk
நிழற்படக் கருவி – Camera
நெகிழ் வட்டு – Floppy
நெகிழ் வட்டுப் பெட்டி – Floppy Drive
படவடிவ எழுத்து – Hieroglyphs
பதிவிறக்கம் – Download
பண்பலை வரிசை – Frequency Modulation (FM)
பிணையக் கட்டமைப்பு – Network Systems
பிணையக் கணினிகள் – Net Computers
பிணைய நிர்வாகி – Net Administrator
பல ஊடகம் – Multimedia
பிரித்தெடுக்கும் அச்சுமுறை – Movable Printing Method
புரவலர் – Server
பேனா வட்டு – Pen Drive
பொறியியலாளர் – Engineer
போக்குவரத்து முறை – Transportaion System
மடிக் கணினி – Lap Top
மின்உற்பத்தி இயந்திரம் – Generator
மின்கலன் – Cell
மின்கலன் தொகுதி – Battery
மின்காந்த அலை – Magnetic Wave
மின்சாரம் – Electricity
மின்சுற்று அட்டைகள் – Circuit Board
மின்சுற்று வழிப்பலகை – Circuti Board
மின்தேக்கி – Capacitor
மின்னஞ்சல் – E-mail
மின்னணு – Electron
மின்னணு உறுப்பு – Electronic Components
மின்மப் பெருக்கி – Transistor
முகவரி – Address
முகப் புத்தகம் – Face Book
மூன்றாம் தலைமுறை அலைவரிசை – 3G Spectrum
மென்பொருள் – Software
மேசைக் கணினி – Desk Top Computer
மைய செயலகம் – Central Processing Unit
வரலாற்றிற்கு முந்தயை காலம் – Pre-historic Period
வரும் அழைப்பு – Incoming Call
வன்பொருட்கள் – Hardware
வலைதளப் பக்கங்கள் – Web Pages
வலைப்பதிவு – Blogg
வலைதளம் – Website
வானொலிப் பெட்டி – Radio
விசைப்பலகை – Key Board
வெளி அழைப்பு – Outgoing Call
வையக விரிவு வலை – World Wide Web (WWW)

Posted in 2010, அறிவியல், தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும், தமிழ் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை | 1 பின்னூட்டம்

எங்கும் சமநிலை – சந்திரசேகர்

அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை

உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக்(Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(BlackHoles) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள்,(சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பினால் தோன்றிய முதல் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயுதான் எங்கும் இருந்தது, இருக்கிறது. பெரு வெடிப்பின் வெப்பத்தினால் சேர்க்கையும் பிரிவும்( Fusion & Fission) ஏற்பட்டு ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பூமியும் அதன் பொருட்களும் அவ்வழித் தோற்றம்தான்.

பூமியும் அதிலுள்ள பொருட்களும் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும் புதிய பொருட்கள் தோன்றுவதும், பொருட்களின் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். எப்பொருளுக்கும் அழிவில்லை என்பதால் பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம் தோன்றியது. பொருட்களின் தோற்றமும், மாற்றமும், இயக்கமும் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தை ஆய்வோம்.

பொருட்களை ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் உலகில் மொத்தமே 92 பொருட்கள்தான் உள்ளன என்றும் அவற்றின் மாறுபட்ட கலவையினால் எண்ணிலடங்கா பொருட்கள் தோன்றின எனவும் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் தொடர்ச்சியினால் அந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர். உலகத்திலுள்ள 92 பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. . அவைகள் எலக்ட்ரான், புரோட்டான் எனவும் இவை இரண்டும் சேர்ந்து உருவானது நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

பொருட்களில் அந்த துகள்கள் அமைந்த விதத்தையும் கண்டறிந்து கூறினர். அதைக் கூறியவர்களில் பலர் இருந்தாலும் முக்கியமாகக் கருதப்படுபவர் நீல்ஸ் போர் என்பவராவர். ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அந்த நுண்ணிய துகள் பற்றிய கருத்துக் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் ( Bohr Model) இதுவரை எந்த மாற்றமும் ஏற்ப்டவில்லை. புத்தம் புதிதாக வந்த ஸ்ட்ரிங் கொள்கை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும் அதுவும் நீல்ஸ் போர் மாதிரியில் பெரிதாக எந்த மாற்றமும் எற்படுத்தப் போவதில்லை. ஆகவே அதை அடிப்படையாகக் கொண்டு தொடருவோம்.

இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் வரைந்து விளக்கிய அமைப்புக்கு பெயர் ”போர் மாடல்” எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலத்தில் சூரியனும், கிரகங்களும் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான், புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச்சுற்றிக் கொண்டே இருக்கின்றன.சுற்றிக் கொள்வதிலும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளன. அதை என்னவென்று அறிவோம்.

எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமைய்யா
நான் புட்டு புட்டு வைக்கப் போறேன் கேளய்யா
………..கவிஞர் வைரமுத்து.

எட்டு எட்டாக பிரித்துப் பார் என்று மனிதனின் வயதை புட்டு புட்டு வைத்தார். அவர் பார்த்த பார்வை வேறு . நாம் பார்க்கப் போகும் பார்வை வேறு. அவர் வாழ்க்கையைப் பார்த்தார், நாம் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். இந்த உலகம் மற்றும் பொருட்களையும் எட்டு எட்டாக பிரித்து ஆராயப் போகிறோம். நமது கவிஞருக்கு முன்பே எட்டின் மகத்துவம் எல்லோரையும் எட்டி விட்டது போலும்.

ஆங்கிலேயர்கள் இசையை சுரம் பிரிப்பது எட்டாகத்தான் பிரிக்கிறார்கள் (Octaves). சதுரங்க கட்டத்தில் கூட கட்டங்கள் எட்டுக்கு எட்டாகத்தான் உள்ளது. திசைகள் எட்டு. சித்திகள் எட்டு,
எதுகை மோனையுடன் எட்டு நட்டம் என்பார்கள். வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டு வரக்கூடாது என்பார்கள். இறந்தவருக்கு எட்டாம் நாள் காரியம் செய்வதை ”எட்டுக்கு” என்பார்கள்.

கம்ப்யூட்டரின் அடிப்படை மெமரி அளவு 1 பிட்டில் ஆரம்பித்து 64 பிட்டாக வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட எட்டு பிட்டுகளை அடுக்கிவைத்து கொண்டு அதைத்தான் மெமரியின் அளவுகோலான பைட் (Byte) என்று கூறுகிறார்கள். ஆக ஏதோ நன்மை தீமை எல்லா வகையிலும் எட்டு முக்கியத்துவம் அடைந்து விட்டது.

முதன் முதலாக 1789 இல் லாவாய்சியர் என்பவர், அதுவரை அறியப்பட்ட 33 மூலகங்களைப் (தனிமங்களை) பற்றி ஆய்ந்து தகவல் வெளியிட்டார். கண்டுபிடிக்கப் பட்ட அந்த மூலகங்களூக்குள் ஏதோ ஒரு வகையில் ஜாதி பிரிக்காவிட்டால் மனிதன் அவை முழுமை அடைந்ததாக நினைக்கமாட்டான் போலும். ஆகவே அவற்றையும் வகைப் படுத்த முதலில் மூன்று மூன்றாகப் (Triads) பிரித்துப் பார்த்தான். பின்னர் ஏழுஏழாக பிரித்தான் ஏழை அடிப் படையாக கொண்ட ஒருவித ஒற்றுமையைக் கொண்டு பிரித்தான்.. அதற்குப் பின் மூலகங்களின் இயல்பிற்கும் ஏழுக்கும் உள்ள தொடர்பு வலுப் பெற ஆரம்பித்தது. கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்கள் கொண்ட மூலகங்களாகப் பிரிக்கும் போது தங்களுக்குள்ளும் சில குழுக்கள், கூட்டங்கள், உள்ளதை காட்டிக் கொண்டன.

அதிலும் ஒவ்வொரு குழுவிலும் ஏழு வரை குணங்கள் படிப் படியாக தீவிரமாகி இருக்கக் கண்டனர். அந்த அடிப்படையில், இருக்கின்ற மூலகங்களை வரிசைப் படுத்தும் போது ஏழுக்கு அடுத்து, வரிசையில் முதலாவதாக அமையும் மூலகத்தினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் எட்டை அடிப்படையாக வைத்து பிரித்தவுடன் குழப்பங்கள் மறைந்துவிட்டது. உலகத்தில் இருக்கின்ற மூலகங்களை அதாவது தனிமங்களை எட்டு எட்டாக வகைப் படுத்தினர்.

மேலை நாட்டவரின் ஸ்வரங்கள் எட்டு (Octaves)என்பதாலும் எட்டை அடிப்படையாக கொண்டு மூலகங்களின் புதிய அட்டவணை (Periodic Table) தயார் செய்யப்பட்டதால் இந்த அட்டவணையை எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணை என்றனர்.

முதலில் அந்த எட்டாவது மூலகத்தை மனிதன் அடையாளம் கண்டு, பிரித்து வைக்க மிகவும் சிரமப் பட்டுவிட்டான். ஏனென்றால், அது எவ்வகை குணமும் காட்டவில்லை. அதுதான் ”நியான்” எனப்படும் வாயு. இதை அடையாளம் கண்ட பின் அதன் அண்ணன்மார்களை எளிதில் கண்டு கொண்டனர்.

இந்தியர் சுரத்தை ஏழாகப் பிரித்து சூன்யத்தை இடையில் செருகி இல்லாதது போல் தோன்றினலும் இருக்குமாறு ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று பகுத்து சப்த ஸ்வரங்கள் என்றான்.ஆக ஸ்வரங்களின் அடிப்படையிலும் அட்டவணை அமையப் பெற்றதாகக் கருதலாம்.

இந்த இடத்தில் மாண்ட்லீப் என்னும் ஆராய்ச்சியாளரைப் பற்றி கூறாவிட்டால் என்னுடைய உடம்பிலுள்ள ரசாயானத்திற்கு கூட கோபம் வந்துவிடும். உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படும் அந்த அட்டவணையை கண்டு பிடித்தவர் மாண்ட்லீவ் தான். அதுவரையிலும் உலகத்தில் கிட்டதட்ட அறுபது தனிமங்கள்தான் அறியப்பட்டிருந்தது.. இயற்கை தனது ரகசியங்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்டி விடாது போலும். ஏனென்றால், இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடிப்பதற்குள் ஏராளமானவர்கள் உடல், பொருள், உயிர் இழந்திருந்தனர்.

அந்த அட்டவணையை எட்டின் விதிப்படி இருக்கின்ற பொருட்களை மாண்ட்லீப் அமைத்ததும் எஞ்சியுள்ள பொருட்கள் அணைத்தும் தங்கள் தங்கள் இடங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு தாங்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளோம், எந்த கூட்டத்தை, மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள், என்ன குணநலன் உள்ளவர்கள் என்று பாட்டு பாட ஆரம்பித்து விட்டன. உன்மையில் அது ஒரு அற்புதமான மாயக்கட்டம் தான். இயற்கை மனம் திறந்து பேசிய சம்பவமாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இசைக்கு மயங்கி, இயற்கை தனது ரகசியத்தை உளறி விட்டதோ?. மாண்ட்லீவ் ”சரிகம” என்று ஆரம்பித்த உடன் இயற்கை மீதிப்பாட்டை பாடி முடித்து விட்டதோ?. அறிவியல் ஆர்வலர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வீட்டின், சுவற்றில் மாட்டி வைத்துக் கொள்ள வேண்டிய அட்டவணை. இந்த அட்டவணையை நன்றாகத் தெரிந்து கொண்டால் வேதியலில் பாதி தெரிந்து கொண்டதற்கு சமம். மாண்ட்லீவ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் பெயரை ஒரு தனிமமத்திற்கு சூட்டியுள்ளனர். அதன் பெயர் மாண்டிலீவினியம்.

அட்டவணை.

அணுவுக்குள் எலக்ட்ரான்கள் K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள வட்ட வடிவப் பாதைகளில் அதாவது அடுக்கு அடுக்கான கோள வடிவ அமைப்புகளில் சுற்றுகின்றன. ஒவ்வொரு கோளத்திற்க்கும் குறிபிட்ட எண்ணிக்கையில் தான் எலக்ட்ரான்கள் உள்ளன. அவை முறையே 2,8,18,32,32,32 ஆகும். வட்டப்பாதை ஒவ்வொன்றிலும் s,p,d,f என உட்பிரிவுகள் உள்ளன. உட்பிரிவில் முறையே 2,6,10,14 எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்கமுடியாது.

இங்கு அட்டவணையில் கடைசியாக வரும் செயற்கையில் உருவாக்கப் பட்ட லாரன்சியம் எனப்படும் தனிமத்தைப் பற்றி பார்ப்போம். இந்த தனிமத்தில் 103 எலக்ட்ரான்கள் உள்ளன. இந்த அணுவுக்குள் எலக்ட்ரான்கள், K,L,M,N,O,P, என்ற வரிசையில் அடுக்கடுக்காக அமைந்துள்ள வட்டப்பாதைகளில் அதாவது கோள அமைப்புகளிலுள்ள உள் வட்ட பாதைகளில் அமைந்த விதத்தை கீழே உள்ள அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் வரிசை முறையும் (Filling order) குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு நிரப்பும் வரிசை முறை மாறியுள்ளதை கவணிக்கவும் 05 க்குஅடுத்து 07என்றும் தொடர்ச்சியாக.மாறி மாறி வருகிறது.அதாவது 1, 2, 3, 4, 5, 7, 6, 8, 10, 13, 9, 11, 14, 17, 12, 15, 18,16 என்று வரிசை மாறி உள்ளது.அதைத்தான் எட்டை எட்டி விடும் அவசரம் என்கிறேன். கீழே உள்ள அட்டவணை ,மந்தவாயுக்களின் அணு அமைப்பை விளக்குகின்றது.

மேற்கண்ட அட்டவணைப்படி பொருட்களுடைய அணுவின் கடைசி அடுக்கு K அடுக்காக (ஷெல்) இருந்து அதில் 2 எலக்ட்ரான்களும், அல்லது கடைசி அடுக்கு L,M,N,O,P, ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்து அதில் 8 எலக்ட்ரான்களும் அமையப் பெற்றால் அவைகள் எந்த விதமான வினைகளிலும் ஈடுபடுவதில்லை. அவை ஒரு மாதிரியான ஆற்றல் சமநிலையை அடைந்து விடுகிறது. இதனால்தான் அவற்றை ஒரு விதத்தில் உயர்ந்த வாயுக்கள் என்றும் மற்றொரு விதத்தில் மந்தவாயுக்கள் என்றும் அழைக்கின்றனர். ஏனென்றால் இந்த மாதிரி கடைசி அடுக்கில் 8 எலக்ட்ரான்கள் அமைந்து விட்டால், அவைகள் எந்த வினைகளிலும் ஈடுபடுவதில்லை. ஆகவே அந்த சம நிலையை அடையவே பொருட்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கின்றன.

இதில் ஸெனான் எட்டை எட்டுவதற்கு காட்டும் அவசரத்தைஅந்த வரிசையைப் பார்த்தாலே புரியும். அதாவது N அடுக்கில் 32 எலக்ட்ரான்களை 2,6,10,14 என்ற வரிசையில் நிரப்பி விட்டுத்தான் அடுத்த O அடுக்குக்கு போக வேண்டும். ஆனால் எல்லாத் தனிமங்களும் 2,6,10 ஐ நிரப்பி விட்டு 14 ஐ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று அடுத்த O அடுக்கிற்கு சென்று எட்டை நிரப்பி விட்டு முக்தி நிலை அடைந்து விட போட்டி போடுகின்றன.

கடைசியில் ஸெனான்தான் வெற்றி பெறுகிறது.அதற்கு பின் வரும் தனிமங்களாகிய சீசியம், பேரியம் முதலில் Pஅடுக்கின் உள் 6s அடுக்கில் 2 எலக்ட்ரான்களை நிரப்பி பார்த்து விட்டு முயிற்சியை கைவிட்டன.அதற்கு பின் வந்து முயற்சி இல்லாமல் சிவனே என்று 4f ல் 14 ஐயும் நிரப்பியவர்களை லாந்தனைடுகள் என்று பெயரிட்டு சோம்பேறிகள் என்று தனியாக கட்டம் கட்டி வைத்து விட்டனர். அதற்கு பின் வருபவர்கள் 5d யில் 10ஐ நிரப்புகிறார்கள். பின் P அடுக்கிற்க்கான போட்டியை ஆரம்பிக்கின்றன. இந்த முறை வெற்றியை ரேடான் பெற்றது. இம்முறை 5f ல் கட்டம் கட்டப்பட்ட 14 பேருக்கு ஆக்டினைடுகள் எனப் பெயரிடப்பட்டது.

எட்டை எட்டி விட்டால் முக்தி நிலை, மோனநிலை, நிரந்தர அமைதி ஆகியவை கிட்டி விடும் என்பதற்கு ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், ஸெனான், ரேடான் ஆகிய மந்த வாயுக்களே உதாரணம். ஆற்றலின் சமநிலை ஏதோ ஒரு வகையில் எட்டினால் நிறுவப் படுகிறது. இவைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. உலகில் எந்த விதமான பொருட்களுடனும் இவைகள் கலப்பதில்லை. வேதியல் வினைகளுக்கு அப்பாற்பட்டவை. நிறைகுடம் கூத்தாடுவதில்லை என்பதற்கு சரியான உதாரணம். இவைகளுக்கு நிறம், மணம், சுவை விருப்பு, வெறுப்பு கிடையாது.முற்றும் துறந்த யோகிகள் போன்றவர்கள். உயர்ந்த நிலைப்புத் தன்மை பெற்றவை. மிகவும் குறைந்த அளவில் காணப்படுபவை. அணு நிலையில் (எப்படி முனிவர்கள் நிர்வாண நிலையில் காணப் படுவார்களோ அது போன்ற நிலையில்.) காணப்படுபவை.

அப்படி ஒரு மோன நிலை எய்துவதற்கான, எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயிற்சியில் தான் எத்தனை தில்லுமுல்லு, கூட்டணி, பொதுவுடைமை, வேற்றுமை, விட்டுக்கொடுத்தல், பிரித்தாளுதல் அடேங்கப்பா சொல்லி மாளாது. எட்டை எட்டி விடும் எலக்ட்ரான்களின் முயிற்சியில் ஏற்பட்டவைதான் நான், நீங்கள்,எனது எழுத்து, மாறுபட்ட பொருட்களின் உருவாக்கம், குறைந்தபட்ச நிலைப்புத் தன்மைக்கு ஏற்ற, பொருட்களின் இணைப்பு வகைகள், இயக்கம், காற்றோட்டம், நீரோட்டம், உயிரோட்டம் என கணக்கிலடங்காது. அதனால்தான் எட்டுக்குள்ளே உலகம் இருக்கிறது என்பதை நானும் ஆதரிக்கிறேன். பொருட்கள் எந்த நிலையில் இருந்தாலும் அமைதி நிலை அல்லது ஆற்றல் குறைந்த நிலையை எட்டிவிடும் வரை ஆற்றலை இழந்தோ, பெற்றோ சமநிலையை அடைவதற்க்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்த உலகில் எத்தனை வகையான பொருட்கள் உள்ளனவோ, கிட்டத்தட்ட அத்தனை வகையான யுக்திகளைப் பயன்படுத்தி எலக்ட்ரான்கள் எட்டை அடைகின்றன. எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு இருப்பது போல் இங்கும் ஆதிமூலமான ஹைட்ரஜனுக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது. ஹைட்ரஜன் மட்டும் தனது கடைசி K அடுக்கில் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் கொண்டுள்ளது. இரண்டு எலக்ட்ரான்கள் அதாவது கூடுதலாக ஒரு எலக்ட்ரான் கிடைத்தாலே ஹீலியம் அடைந்த மோன நிலையை பெற்றுவிடும். ஆகவே ஹைட்ரஜன் சாதாரணமாக அணு நிலையில் இருப்பதில்லை. மூலக்கூறு நிலையில் தான் காணப்படும். அதாவது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் தங்களது எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு ஒவ்வொன்றும் தனது கடைசி அடுக்கில் இரண்டு எலக்ட்ரான்கள் வருமாறு இணைந்து கொண்டு இரட்டையர்களாகவே திரிகின்றன.அதாவது குறைந்தபட்ச மோனநிலை அல்லது முக்தி நிலை அடைந்தாக காட்டிக் கொள்கின்றன. இதனால்தான் உலகத்தில் மந்த வாயுக்களைத் தவிர எதுவுமே அணு நிலையில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எட்டை எட்டி விடும் தத்துவத்தில்தான் இந்த அண்டத்தின் அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமான சூட்சுமம் அடங்கியுள்ளது.

நியானில் உள்ள எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் அமைப்பை ஆராய்ந்தால் எல்லாவற்றிற்குமான காரணம் கிடைத்துவிடும். இயற்கையின் முழுமை அதில்தான் இருக்கிறது.

ஆக்ஸிஸன் அணுவின் கடைசி அடுக்கான L அடுக்கில் ஆறு எலக்ட்ரான்கள் தான் உள்ளன. முக்தி நிலை அல்லது உன்னத நிலை அடைவதற்கு இன்னும் இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகிறது. ஆகவே ஒரு எலக்ட்ரான் உள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து தனது கடைசி அடுக்கில் எட்டு எலக்ட்ரான்கள் வருமாறு பார்த்துக் கொண்டு H2O என சொல்லப்படும் எளிதில் பிரிக்க முடியாத தண்ணீராக உருவானது. அந்த தண்ணீரின் சிறப்புக் குணமே திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளிலும் இப்பூமியில் காணப்படுவது தான். தண்ணீருக்கு இந்த ஒரு சிறப்புக் குணம் மட்டுமில்லை பல உண்டு. தண்ணீரின் சிறப்பு பற்றி நூறு காரணம் சொல்வேன் என்று வைரமுத்து ஏற்கனவே ஒரு கவிதை பாடியுள்ளார்.

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே.

முழுப்பாடலையும் கேட்டால் நீரின் பெருமை தெரியும்.

தண்ணீரானது திரவ நிலையில் இருக்கும் பொழுது குளிர்வித்தால் எல்லாப் பொருட்களும் கன அளவில் குறைந்துதான் திட நிலைக்கு மாறும்,ஆனால் தண்ணீர் மட்டும் 4 டிகிரி வரை சுருங்கி விட்டு பின் விரிவடைகிறது.அதனால் தான் திட நிலையில் உள்ள பனிக்கட்டி திரவ நிலையில் உள்ள நீரில் மிதக்கிறது.

அவ்வாறு மிதக்காவிட்டால் என்னவாகும்? ஒவ்வொரு குளிர் காலத்திலும் கடல் நீர் தொடர்ந்து பனிக்கட்டிகளாக மாறி கடலுக்கடியில் சென்று நிரந்தரமாக தங்கிவிடும். பூமியில் தட்ப வெட்ப மாற்றம் என்பது புறப்பரப்பு சம்பந்தப்பட்டது என்பதாலும் பூமியின் புறப்பரப்பில் ஏறக்குறைய 80 சதவீதத்தைக் கொண்ட கடல் விரைவில் பனிக்கட்டியாக மாறி முழ்கிக் கொண்டே இருப்பதால் கடல் முழுவதும் பனிக்கட்டியாக மாறி உயிரினம் வாழ அருகதை அற்றதாக மாறிவிடும். கடலுக்கடியில் சென்ற பனிக்கட்டி உருகுவதற்குள் அடுத்த குளிர்பருவகால பனிக்கட்டிகள் அதன் மீது படர்ந்து விடும். இவ்வாறு சிலவருடங்களில் கடல் முழுவதும் நீரோட்டமும் உயிரோட்டமும் இல்லாத பனிக்கட்டியாக மாறிவிடும்.

ஆனால் அப்படி மாறாமல் மேற்பரப்பு மட்டும் பனிக்கட்டியாய் மாறி வெப்பத்தைக் (அறிவியலில் வெப்பம் என்ற ஒரே சொல்தான் பயன் படுத்தப் படுகிறது.குளிர்ச்சியும் ஒரு வெப்ப நிலைதான்) கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல் பாதுகாக்கிறது. இந்த தன்மைக்கு, H2O மூலக்கூறுகளின் ஈர்ப்பும், அமையப்பட்ட விதமும் தான் காரணம்(Hydrogen Bonding)

இந்த நீரின் தனிப்பட்ட குணத்தினால் ( Anamalous behaviour of water) தான் பூமியில் உயிரினம் தோன்றி, நிலை பெற்றிருக்கிறது.

ஒரு ஆக்ஸிஸன் அணு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து H2O என சொல்லப்படும் தண்ணீர் உருவானது. இந்த மூன்று அணுக்களும் கூட்டணி முறையில் தங்களிடம் உள்ள எல்க்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் பொதுவில் பங்கிட்டு ஒவ்வொன்றும் தங்களுக்கு தேவையான எட்டை எட்டிவிடுகிறது. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை மிஞ்சிவிடும். ஹைட்ரஜன் ஒரு அணுவை கொடுத்து எட்டை எடுத்துக் கொள்கிறது. ஆக்ஸிஸன் ஆறு எலக்ட்ரான்களை பொதுவில் போட்டு பின்னர் எட்டை எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு தான் புளுரினும், ஹைட்ரஜனும் முறையே ஏழு, ஒன்று, எலக்ட்ரான்கள் தங்களது கடைசி அடுக்கில் உள்ளதால் இவையிரண்டும் சேர்ந்த கூட்டுப்பொருளாகிய ஹைட்ரஜன் புளுரைடு என்ற உலகிலேயே அதிகபட்ச பிணைப்பு கொண்ட பொருள் உருவாகிறது.

கார்பன் எனப்படும் கரி தனது கடைசி அடுக்கில் நான்கு எலக்ட்ரான்கள் உள்ளன. எட்டின் விதிப்படி தனது முக்தி நிலை அடைவதற்கு இன்னும் நான்கு எலக்ட்ரான்களை அடைய வேண்டும் அல்லது இழக்கவேண்டும். எட்டில் சரி பாதியாக இருப்பதால் இதுவே ஒரு சிறப்புத்தன்மை ஆகிவிட்டது. ஆகவே எல்லாவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி கார்பன் (தனக்குத்தானே கூட சேர்ந்து), உன்னால் இழந்தது பாதி, உன்னால் அடைந்தது பாதி என்று பாடிக்கொண்டே ஆக்ஸிசன், ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகியவற்றுடன் குறைந்தது 2 அணுக்களிலிருந்து 1000 அணுக்கள் வரை கூட ஒன்றாக இணைந்து இலட்சக்கணக்கான அங்ககக் கூட்டுப் பொருட்கள் உருவாயின. தாவரங்கள், மிருகங்கள், மனிதன் ஆகிய அனைத்தும் இந்த மாதிரியான அங்ககக் கூட்டுப் பொருட்களால் ஆனவையே. ஆகவே உயிரோட்டத்திற்கு கார்பன் ஆக்ஸிஸன், ஹைட்ரஜன், ஆகியவை மிகவும் முக்கியம் என்று தெரிகிறது. கார்பன் குடும்பத்திலுள்ள அண்ணன்மார்களாகிய சிலிக்கானும் ஜெர்மேனியமும் கடைசி அடுக்கில் நான்கு எலக்ட்ரான்களுடன் மனிதகுலத்திற்காக அதுவும் குறிப்பாக மின்னனுத் துறைக்காக மிகவும் பாடுபடுகிறார்கள்.

இவ்வாறு பொருட்கள் மூன்றுவிதமாக இணைகின்றன.
1) தங்களிடமுள்ள எலக்ட்ரான்களை விட்டுக்கொடுத்து ஒருவித இணைப்பும் (Electrovalent bond), இணைகின்றன. விட்டுக்கொடுத்து சேருவதில் பலம் அதிகம்
2)தங்களிடமுள்ளதை பங்கிட்டுக் கொண்டு ஒருவித இணைப்பும் (Covalent bond), இணைகின்றன. . ஆனால் பங்கிடுவதில் பலம் குறைவுதானே..
3)விட்டுக் கொடுக்காமலும் பங்கிடாமலும் பக்கத்து வீட்டுக்காரனைப் போன்ற பந்தமும் உண்டு (Weak bond like Hydrogen Bonding)

இவையெல்லாம சமநிலை எய்துவதற்கான ஏற்பாடுதான்.அது சரி இந்த சமநிலை எய்தும் ஏற்பாட்டில் உயிரினத்துக்கு என்ன வேலை? உயிர் எப்படி வந்தது?</p.

முதலில் பருப்பொருளுக்கு உயிர் வந்தது எப்படி? உயிர் என்றால் என்ன?.

அணுவிலிருந்து மிகவும் கடினமான(complex molecule) மூலக்கூறு நிலைக்கு மாறி ஒற்றை செல்லான பாரமசியமாக பரிணமித்து பின்னர் ஒற்றைசெல்கள் குழுக்களாக (வால்வாக்ஸ்) மாறி மீனாய், ஆமையாய், பன்றியாய், விலங்காய், வாமனனாய். மனிதனாய் மாறிய வரலாற்றில் கடினமான மூலக்கூறுக்கும் (complex molecule) ஒற்றை செல்லுக்கும் இடையில் தேடினால் உயிர்கிடைக்கும்.

உயிருக்கும் உயிரற்றதற்குமான எல்லைக்கோடு மிகவும் அகன்றது. குறுகிய முறையில் வரையறுத்துக் கூற முடியாது. இந்த எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு இயற்கை எடுத்துக் கொண்ட காலம் மிகவும் பெரியது. இயற்கை விட்டு வைத்த மிச்சங்களிலோ விடை இன்னும் கிடைக்கவில்லை. அதில் ஏதும் சூட்சுமம் பெரிதாக இருக்கப் போவதில்லை. ஆக முடிவில் தற்போதைய நிலைப்படி உயிரின் இலக்கணம் என்ன என்றால் தூண்டலுக்கு துலங்குவதும், இனப்பெருக்கம் செய்வதும், இம்மண்ணில் நிலைத்து இருப்பதற்குமான யுக்திடன் இருப்பதுமாகிய மூன்றுகுணங்களே.

அஸோஸ்பைரிலம், அடுமனை (bakery) ஈஸ்ட் ஆகியவற்றை உங்கள் கையில் கொடுத்து அவைகள் நுண் உயிரிகளா என்று கேட்டால் இல்லவே இல்லை பருப்பொருள் தான் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்வீர்கள். குருணை வடிவில் உள்ள இயக்கமற்ற மாவுப்பொருளை எப்படி உயிர்ப்பொருள் என்று கூறமுடியும். ஆனால் உன்மையில் அவைகள் நீரில் கலந்து, உறக்கம் கலைந்து, உயிர் பெற்றுவிடும் நுண் உயிரிகள்தான். இது எப்படி?. இதுமட்டுமா இவைகள் போன்று உயிரா? பொருளா? என்று விளங்கிக் கொள்ள முடியாத பல்லாயிரக் கணக்கான இரண்டும் கெட்டான்கள் இப்புவியில் ஏராளம் உள்ளது.

சார்லஸ் டார்வின் கூற்றுப்படி கடலில்தான் முதன் முதலில் உயிரோட்டம் தோன்றியது என்று எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள். உயிர்கள் தோன்றிய காலகட்டத்தில் கடல் நீர் இவ்வளவு உப்பாக இருந்திருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..அதிலும் டார்வினின் கனவுத்தீவான கலாபகாஸ் தீவுக்கருகில் தான் உயிர் உருவானதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஏனென்றால் அங்குதான் அதிக வெப்ப நிலையிலுள்ள எரிமலைக் குழம்பு, மற்றும் கந்தக வாயுக்கள், நீருடன் கலந்து மிகவும் சிக்கலான பிரம்மாண்டமான மூலக்கூறுகள் உருவாகி உயிர் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டது. எரிமலை, நன்னீர்கடல், மிதமான வெப்பம், காற்று ஆகியவையின் கலவைதான் உயிர்ப்பாகு உருவாகுவதற்கு முக்கியமான காரணிகள். உயிர் உருவான கதை இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை என்ற போதிலும் அறிந்து கொண்ட அறிவியல்படி அன்றாட அறிவை பயன்படுத்தி யூகித்துக் கொள்ள முடிகிறது. அது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுமுன் உயிர்ப் பொருட்களுக்கும் பருப்பொருட்களுக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்வோம்.

உயிர்ப்பொருளின் தன்மைகள்

தூண்டலுக்கு துலங்கல்,
வளர்சிதை மாற்றம்
இனப்பெருக்கம்.

இதில் முதலாவது குணத்தை பலவகையான இரசாயனப் பருப்பொருட்கள் கொண்டுள்ளன. .இயக்கம் என்பது சில வகை பொருட்களின் தன்மையாகும். அதற்கு ஈர்ப்பும் வெப்பமும் காரணமாகும். ஆனால் பருப்பொருள் உயிர்ப் பொருளாய் மாறுவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தின் அளவும், உருமாற்றங்களும் கணக்கிலடங்கா. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய அந்த இரண்டும் கெட்டான் நிலையிலுள்ள லட்சக் கணக்கான பொருட்களும் சாட்சிகளாக உள்ளன. இனபெருக்கம் ஒன்றுதான் உயிர்ப் பொருட்களின் தலையாய பண்பு. உயிரிகள் சர்வாதிகாரத்திற்கான யுத்தத்தை ஒற்றைச் செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்து விட்டன. ஆரம்பித்த உடன் இனப்பெருக்கத்தில் தீவிர அக்கறை கொண்டன. அதில் உருவானாதுதான் சிக்கலான அணுத்தொகுப்புகள்,( Complex Molecule ).

உயிரின் ஆரம்பம் படிகமாதல் அல்லது உறைதலில் தொடங்கியிருக்க வேண்டும். படிகமாதலில் தொடங்கி மனிதனாக உருமாறியுள்ளது. ஏனென்றால் இங்குதான் வெப்ப நிலைமாற்றத்தால் ஒன்றுபடுதல் ஒன்றுபடுதலில் நிறைவு நிலை அடைந்தவுடன், இரண்டுபடுதல், பின்னர் அடுக்கடுக்காக இரண்டுபடுதல், இணைதல், உருப்பெறுதல், உருமாறுதல் என்ற துலங்கலுடன் கூடிய மிகவும் அடிப்படையான இனபெருக்க நிகழ்வுகள் காணப்படுகின்றது. தூண்டலுக்கு துலங்கல் என்பதில் தான் உயிரின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

தூண்டலுக்கு துலங்கல் என்றால் என்னவென்று கொஞ்சம் தெளிவாக பார்ப்போம்.

1) ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுகிறீர்கள். சூடேற்றியதால் கோபமுற்ற பால் பொங்கி எழுந்து நெருப்பை அணைக்கிறது.பால் தப்பி பிழைத்து மிச்சமும் இருக்கிறது. பொங்குவதன் மர்மம் என்ன? முதலில் ஒரு காப்பு உறை தயாரிக்கிறது. அந்த உறையில் அடக்கப் பார்க்கிறது முடியவில்லை அடக்கிய வேகத்தில் பொங்குகிறது.

2) இப்பொழுது பாலுக்கு பதில் தண்ணீரை வைத்து சூடேற்றுகிறீர்கள்.சூடேற்றியதால் கோபமுற்ற நீர் கொதிக்கிறது ஆனால் பொங்கி எழுவில்லை. ஆகவே அப்பாவியாக ஆவியாய் மாறி அலைகிறது. பாலுடன் ஒப்பிடும் பொழுது வெப்பத்திற்கு கொதித்து எழுந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த நீர் குளிர்காலத்தில் கடலில் அமைதியாய் அஹிம்சை முறையில் மேற்பரப்பு மட்டும் பனிக்கட்டியாய் மாறி வெப்பத்தைக் கடத்தாத கவசம் (Thermal insulator) போல் மிதந்து கொண்டு கடல் நீர் முழுவதும் உறையாமல் கடலில் உள்ள உயிர்கள் உறையாமல் பாதுகாக்கிறது.

3) இப்பொழுது மண்ணென்னெயை வைத்து சூடேற்றுகிறீர்கள்.சூடேற்றியதால் கோபமுறவில்லை.மாறாக ஜோதியில் ஐக்கியமாகி,அதாவது தானும் நெருப்புடன் சேர்ந்து எரிந்து மறைந்து விடுகிறது.</p.

இதில் நான குறிப்பிட்ட சிறு பிள்ளைத்தனமான கோபதாபமெல்லாம் நமது மாத்தி யோசித்த கற்பனை. மற்றபடி நிலைமாறுதல் என்பதுதான் முக்கியம்.அதற்கு என்ன கதை சொன்னாலும் பொருந்தினால் சரிதான். ஒன்றை வைத்து ஒன்றை புரிந்து கொள்வது எளிது என்பதற்காக சொல்லப்பட்டது. அந்த நிலை மாற்றத்திற்கு பெயர்தான் துலங்கல். இங்கு வெப்பத்தினால் ஏற்பட்ட துலங்கல்தான். இதைப் போன்று ஒளி, ஒலி, நறுமணம், தொடுதல், ஆகியவற்றிற்கு வெவ்வேறு விதமாக எதிர் வினை புரியும் பொருட்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.உரசினால் பற்றிக் கொள்வது, தட்டினால் வெடிப்பது, ஒளியில் கறுப்பது, இருட்டில் ஒளிர்வது, தொட்டால் சுருங்குவது, பட்டால் அரிப்பது ஆக பட்டியலுக்குள் அடங்காத எண்ணிலடங்காத சமாச்சாரங்கள்.

பல்லாயிரக்கணக்கான பருப்பொருட்கள் தூண்டலின் போது பல்வேறு விதமாக எதிர்வினை புரிகின்றன. இது போன்ற பல்வேறு தூண்டுதல்களுடன் ஒத்த பொருட்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. பல மூலக்கூறுகள் இணைந்து ஒற்றை செல் உயிரிகள் உருவாகியுள்ளன.

பூமி என்ற ஆராய்ச்சி சாலையில் இயற்கை என்ற விஞ்ஞானி 1500 மில்லியன் வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய விஷயத்தை கடந்த மூன்றே வரிகளில் கூறிவிட்டேன். நான் ஏற்கனவே கூறியவாறு இதற்கெல்லாம் காரணம் எலக்ட்ரான்களின் முக்தி நிலைக்கான அல்லது சமநிலைக்கான போராட்டம் தான். ஒற்றை செல் உயிரிகள் ஏறத்தாழ இருபதாயிரம் வகைகள் தோன்றின.

அவைகளில் பிரதானமானவை அமீபா, பாரமசியம் யூக்ளினா, இன்புசோரியா ஆகியவை ஆகும். இயற்கை விட்டு வைத்த மிச்சங்களில், ஆற்றல் சமநிலைக்கு எனது வழிதான் சிறந்தது என உயிரிகள் செல்வதுதான் போராட்டமாகத் தெரிகிறது. தற்பொழுது உள்ள சில ஓரணுவுயிர்களில், சிலவற்றைப் பார்ப்போம்.

அமீபா நிறமற்ற பாகு உருண்டை போன்றது, திரவம் போன்றிருப்பதால் வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். புரோட்டோபிளாசம் என்ற உயிர்ப்பொருள் மற்றும் அல்புமென் கூழ்ப் பொருளால் ஆனது. இவைகள் உணவு உட்கொள்ளும்,மூச்சுவிடும், கழிவு வெளியேற்றும், தூண்டலுக்கு துலங்கும், கிளர்ச்சியுறும், இரண்டுபடுதலால் இனப்பெருக்கம் செய்யும். ஒளி ஊடுருவதால் கிளர்ச்சியுற்று இடம் பெயர்ந்தன. நாளடைவில் பாதுகாப்பிற்காக ஒரு உறைக்கும் ஏற்பாடு செய்தன.

இனப்பெருக்கத்தை மனிதனாக இருந்து கொண்டு கற்பிதம் செய்யக் கூடாது. இனப் பெருக்கத்தின் தேவை எண்ணிக்கை கூடுதலுக்கு ஏற்பட்டதுதான். ஆக அடிப்படையாக இரண்டுபடுதலில் தான் இனப் பெருக்கம் ஏற்பட்டது.

அமைதியான நீர் நிலைகளில் தண்ணீர் சில நேரங்களில் பச்சையாக ஒளிரும்.பச்சைக்கு காரணம் அதிலுள்ள யூக்ளினா எனப்படும் ஒற்றைச் செல் உயிரிகள் தான். தன் மீது உள்ள சிவப்பு புள்ளியினால் ஒளியை உணர்ந்து ஒளியை நோக்கி செல்லும். அதே போல் தன் மீது உள்ள பச்சையம் மற்றும் ஒளியின் உதவியால் கரியமில வாயுவை உட்கொள்கிறது. ஒளி இல்லாத இடத்திலும் அமீபா போல் உணவு உட்கொள்ளவும் முடியும். விலங்குகளும் தாவரங்களும், அழிந்து போன ஒரே பொது முன்னோர்களின் மூதாதையின் வழிவந்தவை என்பதற்கு யூக்ளினா ஒரு உயிருள்ள சான்று.

பாரமீசியம் நீரில் மிதக்கும் பல்வகைத் துணுக்குகளை உண்டு நீந்தி வாழ்கிறது.உடல் முழுவதாலும் ஆக்சிஸனை சுவாசிக்கிறது. (குறிப்பு: மனிதனும் உடல் முழுவதாலும் ஆக்ஸிஸனை சுவாசிக்கமுடியும் என வான்வெளி (Sky Divers) வித்தகர்கள் மூலம் நிரூபணம் ஆனது.) இருபத்துநான்கு மணி நேரத்தில் இளம் பாரமீசியங்கள் பிளவுற்று இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகள் கலவியிலா இனப்பெருக்கம், மற்றும் கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன.ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே கலவி இன்பத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியது பாரமீசியமே. முத்தம் கொடுக்கும் முறையில் உட்கரு பரிமாற்றத்தை நிகழ்த்தி கலப்பு முறையிலும் இனப்பெருக்கத்தை தொடங்கி பூமியில் நிலைத்திருக்கும் போராட்டத்தை ஒற்றை செல்லாக இருக்கும் போதே ஆரம்பித்த பாரமீசியமே வாழ்க!

கலவி இல்லா இனப்பெருக்கம் இருக்கும் போது ஏன் கலவி இனப் பெருக்கத்தை நாடின?கலவி இனப்பெருக்கத்தால் தோன்றியவைகளுக்கு தாங்குதிறன் அதிகமாக இருந்ததுதான் காரணம். ஒற்றை செல்லாக இருக்கும் பொழுதே இதையெல்லாம் உணர்ந்து கட்டளை(Traits) எழுதிவிட்டன. உலகின் முதல் புரோகிராமர்!!.

ஓரணுவுயிர்கள் உலகில் சுமார் 1000 மில்லியன் ஆண்டுகளாக வாழ்கின்றன.கடல் முழுவதும் பல்கிப் பெருகி பூமியை முழுவதுமாக ஆக்கிரமிக்க போட்டி ஏற்பட்டது. அவற்றில் எவை அதிக விரைவாக உணவைப் பெற்றும் ஆபத்திலிருந்து அதிக நிச்சயமாக விலகிச்சென்றும் வந்தனவோ, அவை உயிர் பிழைக்கவும் தங்கள் சிறப்பு இயல்புகளைச் சந்ததிகளுக்கு வழங்கவும் அதிக வாய்ப்புகள் பெற்றன. இவற்றில் ஒன்றை ஒன்று அழித்து, விழுங்கி, இணைத்து சற்றேக்குறைய 10000 உயிரிகள் இருக்கின்றன. இவைகளுக்குள்ளே ஒரு மறைமுக யுத்தம் ஒன்று நடந்து கொண்டுதான் இருந்தது. பொதுவான நோக்கம் உறுதிப்பாட்டை நோக்கிய சமநிலை. (Stablity through Equalibrium) .

இவற்றிலிருந்து பல்லுயிரணுப் பிராணிகள் எவ்வாறு தோன்றின என்பதற்கு வால்வாக்ஸ் எனப்படும் பிராணி சிறந்த எடுத்துக்காட்டாகும். வால்வாக்ஸ் ஒரு பச்சை உயிரணுவிலிருந்து பிறக்கிறது. இது ஒற்றை செல்லாக வாழ்க்கையை தொடங்கி தொகுப்பான அமைப்பில் வாழ்கிறது. இவைகளும் கலவியிலா இனப்பெருக்கம் தவிர கலவி இனப்பெருக்கமும் செய்கின்றன. இந்த உயிரணு பிளவுரும் போது பிளவுற்ற உயிரிகள் தனியாகப் பிரிந்துவிடாமல் சேர்ந்தே வாழ்கின்றன. அடுத்து அடுத்து நிகழும் பிளவுருதல் மூலம் தாய் உயிரணுவிலிருந்து நாளடைவில் 10,000 க்கும் மேற்க்கொண்ட உயிரணுக்கள் கொண்ட தொகுப்புயிர் உருவாகிறது.அப்போது அது குண்டூசித் தலை அளவான பச்சை உருண்டையாக தோற்றமளிக்கிறது.

இதில் முக்கியமாக கவணிக்க வேண்டிய விஷயம், தொகுப்புயிராக அமைந்தபின் உயிர்களின் வால் போன்ற கசைகள் (மயிர்க்கால்கள்) ஒத்திசைவுடன் அசைகின்றன. அதனால் தான் இயக்கத்தில் தடையில்லாமல் கூட்டமாக இயங்க முடிகிறது. ஒரே தொகுப்பாக மாறிய பின் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிக் கொள்வதில் முன்னோடியாகத் திகழ்கிறது. வால்வாக்ஸ் போன்ற தொகுப்புயிர்கள் பல்லுயிரணுப் பிராணிகளின் வளர்ச்சியில் முதல் கட்டமாக விளங்குகின்றன. ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கொள்கைக்கு அடித்தளம் அமைத்த வால்வாக்ஸை போற்றுவோம்.

வெப்ப நீர்நிலைகளில் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாழ்நிலை பல்லுயிரணுப் பிராணிகள்,கால இடைவெளியில் உயர்நிலை பல்லுயிரணுப் பிராணிகளாகிய ஹைட்ரா, கடற்பஞ்சுகள் என உருமாறி பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றன. எல்லா உயிரினங்களும் தங்கள் இனவிருத்தியை பல கோணங்களில், பல சூழ்நிலைகளில், கணக்கிட்டு வரையறுக்க முடியாத, ஆச்சரியப்பட வைக்ககூடிய, அதிர்ச்சியூட்டக்கூடிய, கோமாளித்தனமான பலமுறைகளில் செயல்படுத்துகின்றன. மேலும் இனவிருத்தியுடன் கூடிய அழியாத்தன்மைக்கும் ஏற்ற செயல்பாடுகளை கற்றுக் கொண்டு செயல் படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அவைகள் சிந்தித்து செயல் படுத்துவது இல்லை.
இங்கு தனிநபர் சிந்தனைக்குத் தேவையான மூளை அந்த வளராத பிரானிகளிடம் இல்லை. ஆகவே ஒட்டு மொத்தமாக, பரம்பரை பரம்பரையாக படிக்கும் பாடங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளை ரகசிய குறியீட்டு முறையில் சுருக்கமாகப் பதிந்து அந்தக் கட்டளைகளை அவைகளின் வாரிசுகள் கண்களை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டுமென்பதும் முன்னர் எழுதி வைத்த கட்டளையில் ஒன்று.
அம்மாதிரியான கட்டளைப்படி செயல்படும் ஒரு உயிரினத்தின் செயல்பாட்டை தனது கவிதையின் இடையில் செருகி காதலியை வர்ணிக்கும் வைரமுத்துவின் பாட்டொன்றைப் பார்ப்போம்.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
என்று ஆரம்பித்து

நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்

என்று பாடிச்செல்வார்.

பட்டுப் பூச்சிகள் எப்படி மோட்சம் பெறும். இதற்கான அறிவியல் தெரிந்தால்தான் புலவனின் கவிதை நுட்பம் நமக்குப் புரியும். பட்டுப் பூச்சி தனது முட்டைகளை முசுக் கொட்டை செடியின் இலையில் இட்டுவிட்டுச் சென்றுவிடும். சூரிய வெப்பத்தில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்து அந்த இலைகளையே அசுரப் பசியோடு தின்று.அசுரத்தோற்றம் அடைந்து விடுகிறது. ஆமாம் சுமார் 100 மடங்கு விசுவரூபம் எடுத்து, இந்த பாதுகாப்பற்ற புழு வடிவத்திலிருந்து விரைவில் கூட்டுப்புழு பருவத்துக்கு சென்று தான் தின்ற இலைகளை எல்லாம் பட்டு நூலாக்கி, நூலை கூடாக்கி, தனக்கு பாதுகாப்பு தேடிக்கொண்டு தன்னை ஒரு முழுப் பருவம் எய்த பூச்சியாக மாற்றிக் கொள்வதற்கு தேவையான காலத்திற்கான பாதுகாப்புக்கு பயன் படுத்திக் கொள்கிறது. பருவம் எய்தபின் அந்த நூலின் மகத்துவம் தெரியாமல் அதைக் கடித்து, வெட்டியெறிந்து விட்டு சுதந்திரமாக வெளியேறிவிடுகிறது.
தனது இனப் பெருக்கத்திற்கான பாதுகாப்பான வழியாக இதைத் தேர்ந்தெடுத்து செய்து வருகிறது. இன்றும் வாழ்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதன், அப்புழு, பூச்சியாக மாறி கூட்டைக் கடித்து நூலை சேதப் படுத்தி வெளியேறுமுன், அது போன்ற நூற்றுக்கணக்கான கூடுகளை வெந்நீரீல் போட்டு, புழுக்களை கொலை செய்து அந்த நூலை எடுத்து பட்டுச் சேலை செய்து பெண்களுக்கு தருகிறான்.
கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம் அடையாது என்பது வழக்கு.. ஏனென்றால் கொலைக்கு காரணமானவர்களை பழிதீர்க்க அலையுமாம். அவ்வாறு அலையும் உயிர்கள் தனது கொலைக்கு காரனமான நெய்தவன், மற்றும் அந்த பட்டு நூலால் நெய்யப்பட்ட சேலையைக் கட்டியிருக்கும் பெண் ஆகியோரை தேடி அலையும் போது அந்தநூலால் நெய்யப்பட்ட சேலையை அணிந்த பெண்ணை கண்டவுடன், இவ்வளவு அழகான பெண்ணுக்காகத்தான் நாம் கொலை செய்யப்பட்டோமா என அறிந்து, இந்த பெண்ணுக்கு என்றால் இன்னும் பத்து உயிர்களைக் கூட கொடுக்கலாம் என எண்ணி எல்லோரையும் மன்னித்து விடுவதால் அவைகள் மோட்சம் பெறுகிறதாம். ஆகா என்ன அழகான கற்பனை.

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்

ஆமாம் அந்த ஒவியங்கள் எல்லாம் ஒன்றை குறிப்பிடுவதை காணலாம். அவைகள் இரண்டு கண்கள் பெரிதாக உள்ள ஒரு கோரமூஞ்சியை நினைவுபடுத்துவதைக் காணலாம்.பெரும்பாலும் அவைகளின் தீவிர எதிரியான கழுகு அல்லது ஆந்தை முகத்தை நினைவுபடுத்தும். இதுவும் பிற ஊணுன்னிகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஏற்றப் பட்ட கட்டளைதான். இவ்வாறு தங்களுக்குள் பிறவியிலே தங்களது முன்னோர்களின் சூழ்நிலையினாலும், தேவைகளாலும், விருப்பத்தினாலும், ஒவ்வொரு தலைமுறையினாலும் உயிருடன் நிலைத்து வாழ செய்யப்பட்ட சிற்சிறு மாற்றங்களுடன் ஏற்றப்பட்ட கட்டளைப்(Traits) படி செய்கின்றன. இதில் சொந்த அறிவு துளி கூட கிடையாது எனவும் நிரூபித்துள்ளனர்.
உதாரனமாக குளவிகளின் இனப்பெருக்கத்தைப் பார்த்தோம் என்றால் இது தெளிவாகப் புரியும். அவைகள் நல்ல ஆரோக்கியமான புழுக்களை தேடி, அவற்றின் உடம்பில் முதலில் ஒரு திரவத்தை செலுத்தி அவை நீண்ட நாளைக்கு கெட்டுப் போகாதாவாறு செய்து பின் தனது முட்டையை அதன் உடலுக்குள் செலுத்தி அந்த புழுவை எடுத்து ஒரு பத்திரமான இடத்தில் வைத்து அதைச் சுற்றி ஒரு கான்கீரீட் போன்ற களிமண் கூடுகட்டி வைத்து விட்டு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணிச் சென்று விடுகிறது. முட்டை பொறித்து அந்த புழுவை உண்டு, புழு பருவத்திலிருந்து கூட்டுப் புழு பருவத்திற்கு மாறி பின் குளவியாக மாறி காண்கிரீட் பலமுள்ள அந்த கூட்டை தனது பற்களால் கடித்து உடைத்துவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையில்தான் அவைகளும் பன்னெடுங்காலமாக பூமியில் நிலைத்து இருக்கின்றன.

அதை தவறாகப் புரிந்து கொண்டு ஏதோ ஒரு புழுவை எடுத்து வந்து, கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றிவிடுவதாகத் தான் இன்னும் சிலர் நினைத்துக் கொடிருக்கின்றனர். இப்பொழுது இந்த களிமண் கூட்டிற்கு அடுத்து ஒரு மெல்லிய தாளினால் ஆன குப்பியை வைத்துப் பார்த்தனர். அவ்வளவு பலமுள்ள களிமண் கூட்டை கடித்து வெளியேறிய குளவிக்கு அந்த மெல்லியதாளை கடித்து வெளிவரமுடியாமல் இறந்து விட்டது.. ஏனென்றால் அது முயற்சிக்க வில்லை. காரணம் அதற்கான கட்டளை அதற்கு சொல்லப் படவில்லை. ஏதோ ஒரு வகையில் அந்தத் தாளை தெரியாமல் கிழித்து வெளியேறினால் அது கட்டளையாக அடுத்த தலைமுறைக்குப் பதியப் படும். ஆகவே இடர்ப்பாடுகளை சந்தித்து மீண்டு உயிர் வாழ்ந்தால்தான் அதைப் பற்றிய பதிவும், பாதுகாப்பும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆகவே சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

எண்ணிக்கைக்குத்தான் இனப்பெருக்கம் என்றால், பிளவுபடுதலில்தான் தேவை நிறைவேற்றப்படுகிறதே பின் ஏன் முட்டையின் தேவை?, ஆண், பென் என்ற பிரிவு?தாவரஙகளில் ஆண் பெண் என்ற பிரிவு இல்லையே அவைகளும் இன்றளவும் பூமியை ஆள்கின்றனவே?

ஒற்றைச்செல்லாக இருக்கும் பொழுதே கலவி இனப்பெருக்கத்தின் தேவையை உணர்ந்து கொண்டதால்தான் முட்டையின் தேவை நிலை பெற்றுவிட்டது. தாவரங்களில் ஆண்,பெண் இல்லாமல் இருந்ததுதான். அவைகள் தன்மகரந்த சேர்க்கையினால் இனப்பெருக்கம் செய்தாலும் அவைகளும் நாளடைவில் தாங்குதிறன்,மற்றும் நிலைத்துவாழும் (survival) பண்புகளுக்காக வண்டுகளுக்கு தேனை லஞ்சமாகக் கொடுத்து அயல் மகரந்த சேர்க்கையை பின்பற்ற ஆரம்பித்தன.

முன்னேறிய விலங்கினங்கள் எல்லாம் ஆண் பெண் பிரிவுகளாகப் பிரிந்து பின் சேர்ந்து இனத்தை பெருக்குகின்றன.இதில் பல இனங்கள் கலப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அவைகளின் அனுபவங்கள் திறன்கள் ஆகியவை மரபணுக்கள் மூலமாக கலந்துவிடும். மனிதனுக்கும் இந்த ஏற்பாடுதான் அதனால்தான் ஆண்,பெண் பிரிவு ஏற்பட்டது.

இவ்விதமான கலப்புக்கு வழி இல்லாததால்தான் அமெரிக்க பழங்குடிகள் 20 கோடி பேர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த ஐரோப்பியரின் தாங்குதிறனுக்கு எதிராக(அவர்கள் கொண்டு வந்த நோய்க்கும்தான்) தாக்குப் பிடிக்க முடியாமல் கிட்டதட்ட பெரும்பாண்மையினர் அழிந்தே போய்விட்டனர். அதே ஐரோப்பியர் இந்தியாவை விட்டு சுத்தமாக வெளியேறியதும் இந்தியரின் அதீத தாங்குதிறன்தான் காரணம்.

இருபாலினங்களையும் தன்னகத்தே கொண்ட, அதாவது ஆணாகவோ பெண்ணாகவோ வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் உயிரினங்களும் உண்டு. ஆனால் அவைகளினால் மேம்பட்ட வாரிசுகளை உருவாக்க முடியவில்லை என்பதால் அவைகள் பரவலாகக் காணப் படவில்லை.

ஆனாலும் இந்த ஆண்,பெண் பிரிப்பில் ஒரு தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஏதோ ஒரு சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒரே பாலினமாக அமைந்து விட 50% வாய்ப்புள்ளதே?

உயிரினங்கள் வாழ்ந்து கொண்டே தனது மேம்பட்ட சந்ததியினருக்கும், பூமியில் நிலைத்து இருப்பதற்குமான வழிகளை தன்னை அறியாமலே ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும், ஆராய்ச்சியின் முடிவுகளால் ஏற்படும் தீர்மானங்களை தன் மரபணுக்களில் ஏற்றிக் கொள்கின்றன என்பதும்தான் பரிணாமத்தின் வழிமுறைகள்.

ஆணும் பெண்னுமாகப் பிரிவதில் அவை எந்த வழிமுறைகளை பின்பற்றி ஒரு சமத்துவத்தை எட்டுகிறது என்பதுதான் என்னுடைய இந்த கட்டுரையின் முக்கியமான நோக்கம். நாம் மனித இனத்தை எடுத்துக் கொள்வோம். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து வாழும் முறை ஏற்பட்டதால், இந்த சூழ்நிலைக்கான தேவைகளும் திறன்களும் கட்டளைகளாகப் மரபணுவில் பதியப் படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் ”ஒரு அமைப்பில் ஆண்மைக்கும் பெண்மைக்கும் எப்பொழுதும் சமநிலை என்னவிலை கொடுத்தாவது நிலை நிறுத்தப் படுகிறது. இதுவும் ஒருவகையில் ஆற்றல் சமநிலைதான்”.

உதாரணமாக ஒரு குழுவின் மொத்த ஆண்,பெண் எண்ணிக்கைக்கு முதலிடமும், தன்னை நெருங்கிச் சுற்றியுள்ள ஆண்,பெண் எண்ணிக்கைக்கு அடுத்த இடமும் தன்னைச்சுற்றியுள்ள ஆண்,பெண் ஆளுமைக்கு மூண்றாமிடமும் கொடுத்து தேவையைக் கருதி ஆண்,பெண் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. அதற்கு தகுந்தவாறு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தீர்மாணிக்கப் படுகிறது. இது அவன் சார்ந்த குழுவின் தீர்மானம். அது தனி மனிதன் மீது அவனை அறியாமலே திணிக்கப்படுகிறது.

இதில் ஒரு அமைப்பு என்பதை ,குடும்பமாகவோ, குழுவாகவோ, நகரமாகவோ, நாடாகவோ கருதிக் கொள்ளலாம். இதில் எல்லாவற்றிலும் பங்கேற்பவன் நான் சொன்ன வரிசைப் படி முதலிடம் கொடுத்து பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கிறான்.

உதாரணமாக ஒரு புதிதாக திருமணமான தம்பதியரில் ஆண் அழகில் குறைவு அல்லது ஊனம் இருந்து பெண் அழகாக அமைந்து விட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் ஆண் தான் என் உறுதியாகக் கூறலாம். அல்லது முதலில் பிறக்கும் நான்கு குழந்தைகள் ஆண்தான்.

மாறாக ஆண் அழகாக பெண் சுமாராக இருந்தால் அனைத்தும் பெண் குழந்தைதான்.

இங்கு ஆண்மை,பெண்மையை தீர்மானிக்கும் காரணிகள்:
1 அழகு, 2.புகழ், 3.வீரம், 4.கோபம், 5.செல்வம், 6.ஆளுமை, 7.பொறுமை,8.பாலியல் ஈடுபாடு,9.குடும்பத்தில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் ஆண்,பெண் எண்ணிக்கை,
10.கர்வம்,11.நடை,உடை,பாவனை, 12.பாரம்பரியம்

நான் சொல்லும் கூற்றின் உண்மையை எங்கு வேண்டுமானாலும் சோதித்துப் பாருங்கள்.
சீருடை அணிந்த காவலர், ராணுவவீரர் இவர்களுக்கு அதிகபட்சமாக முதலில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தைதான்.

கமல்ஹாசன், ரஜினி நேரு, இந்திராகாந்தி, நான்.

இதை அறியாமல் மனிதன் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் காரணம் தெரியாமல் போராடுகிறான் செலவழிக்கிறான். மேலும் இதில் தப்பான கருதுகோளில் பெருமிதம் கொள்கிறான். ”ஆம்பளை சிங்கம் நான் எனக்கு ஒரு சிங்கக் குட்டிதான்(அதாவது ஆண் பிள்ளை) பிறக்கும்” என்று அறியாமல் வீரம் பேசுவார்கள். பெண் பிள்ளைகள் பெற்றவன் தான் உண்மையிலே ஆண்மை மிக்கவன்.

உதாரணமாக அடுத்த தலைமுறையிலிருந்து ஆண்கள்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த தலைமுறையினர் தீர்மானிக்க முடியாது.ஆனால் தேவைபடும் பொழுது மாற்றிக்கொள்ள முடியும். ஆண்களே கோபப்படாதீர்கள், இந்த மாற்றம் நீங்களும் மனது வைத்தால் தான் நடக்கும். அல்லது பெண்கள் தீவிரமாக எதிர்த்தால் வழி பிறக்கும்.

இன்னும் உங்களுக்கு சாதகமான விஷயம் ஒன்றும் உள்ளது. நான் தனிப்பட்ட விதத்தில் சேகரித்த தகவல் இது தான். பெரும்பாலான பெண்கள் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் பெண்ணாகத் தான் பிறக்க ஆசைப் படுகிறார்கள். அதிலும் என் மனைவிக்கோ நான்தான் கணவனாக வேண்டுமாம்.

ஆண்களின் கர்ப்பம் மூலம் தான் இனிமேல் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க முடியும் என்ற அழுத்தமான தேவையும், ஆழ்மண உணர்வோடு இருபாலரும் குறைந்தபட்சம் 5000 தலைமுறை வாழ்ந்தால்,சூழ்நிலையும் அந்தமாதிரி அமைந்து விட்டால் ஆண்களுக்கு கர்ப்பம் உறுதிதான்.

இது ஒவ்வொரு தலைமுறையும் சம்பந்தபட்ட விஷயம். தகவலின் முக்கியத்துவம், தன்மை ஆகியவை குறையாமல் அடுத்த தலைமுறைக்கு மரபணு மூலம் எடுத்து செல்லும் விதத்திலும், சூழ்நிலைக்கு தகுந்தவாறும் தான் மாற்றம் அமையும். ஏனென்றால் ஒவ்வொரு தலைமுறையிலும், 1) மரபணுவில் தகவலும், 2) செய்யப்பட்ட மாற்றமும், 3) தகவல் குறித்து செய்யப்பட வேண்டிய மாற்றமும் மிகமிகச் சிறிய அளவில் தான் பதியப்பட்டு, மேம்படுத்தப் படுகிறது. சூழ்நிலையில் அக்கறை மற்றும் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறைக்குத்தான் மாற்றத்திற்கான அதிக பங்களிப்பு இருக்கிறது.

எலக்ட்ரானின் எட்டை எட்டிவிட்டால் கிட்டிடும் சமநிலை நோக்கிய பயணத்தின் இடையே வேதியலில் சமநிலை (Equalibrium in chemical Equations) இயற்பியலில் சமநிலை (Rest state) குடும்பத்தில் ஆண்,பெண் சமநிலை,Sexual Equality in a system of Family), நீரோட்டத்தின் சமநிலைக்கான ஓட்டம் என்று எங்கும் சமநிலையை அறிவுறுத்தும் எலக்ட்ரான்களுக்கு முக்தி என்று கிட்டும்.

நன்றி.

Posted in 2010, அறிவியல், எங்கும் சமநிலை, தமிழ் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை | 1 பின்னூட்டம்